Print Version|Feedback
As anti-Trump protests spread, Democrats scramble to contain opposition
ட்ரம்ப்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பரவும் நிலையில், ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பை மட்டுப்படுத்த தட்டித் தடுமாறி திரிகின்றனர்
By Barry Grey
17 November 2016
வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் புதனன்று அமெரிக்கா முழுமையாக தொடர்ந்து பரவியவண்ணம் இருந்தது. ட்ரம்ப்-எதிர்ப்பு இயக்கத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் முன்னிலைக்கு வந்துள்ளனர், மில்லியன்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை திருப்பியனுப்புவதற்கான திட்டங்களுக்கு எதிராகவும் பாசிச ஆத்திரமூட்டலாளரான ஸ்டீபன் பானனை தனது தலைமை அரசியல் ஆலோசகராகவும் மூலோபாயவாதியாகவும் ட்ரம்ப் நியமித்துள்ளதற்கு எதிராகவும் அவர்கள் புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தினர்.
புதன்கிழமையன்று, புளோரிடாவின் மியாமி-டாடே கவுண்டியில் உள்ள குறைந்தது ஆறு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் இரண்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது சமுதாயங்களை “புகலிட நகரங்களாக”, அதாவது புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான திருப்பியனுப்பும் உத்தரவுகளை நடத்துவதற்கு அதிகாரிகள் மறுக்கத்தக்க பகுதிகளாக அறிவிக்கும்படி கோரி வகுப்புகளை புறக்கணித்தனர். சான் டியகோவில் உள்ள இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கூட வகுப்புகளை புறக்கணித்தனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில் வாஷிங்டன் டி.சி, நியூ யோர்க், சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடத்திய புறக்கணிப்பு போராட்டங்களைப் பின்பற்றி இது நடந்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவில் ஒரு முக்கியமான அரசியல் இயக்கம் அபிவிருத்தி காண்பதை சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வலது-சாரியான அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வருவதில் ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறையுமே தீவிரமயப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சென்ற வாரத்தில் மக்கள் வாக்குகளில் 1 மில்லியன் வாக்குகளுக்கும் அதிகமாய் தோற்றிருந்தாலும் ஜனாதிபதி தேர்வு சபையில் (Electoral College) வென்று அதிகாரத்தைப் பிடிக்கவிருக்கும் ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்கள் மீதான தனது போரை மறுஉறுதி செய்திருக்கிறார், உச்சநீதிமன்றத்தில் காலியாகவிருக்கும் இடத்தை கருக்கலைப்புக்கு எதிரான ஒரு கருத்துவெறியரைக் கொண்டு நிரப்ப உறுதிபூண்டிருக்கிறார், அத்துடன் சட்டம்-ஒழுங்கு பிற்போக்குவாதிகளையும் போர்வெறியர்களையும் கொண்டு தனது மந்திரிசபையை நிரப்பவிருப்பதையும் தெளிவாக்கியிருக்கிறார்.
ட்ரம்புக்கு எதிர்ப்பு பெருகும் நிலைக்கு முகம் கொடுக்கின்ற ஜனநாயகக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் தொடர்ந்தும் இணக்கத்தையும் “ஒற்றுமை”யையும் உபதேசித்து வருகிறார்கள். செனட் ஜனநாயகக் கட்சியினர் “குடியரசுக் கட்சியினருடன் தோளுடன் தோள் நின்று, உடன்பாடுள்ள விடயங்களில் விரைவில் ஜனாதிபதியாகவிருக்கும் ட்ரம்ப்புடன் சேர்ந்து வேலைசெய்வதற்கு” தயாராய் இருப்பதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செனட் சிறுபான்மை தலைவரான சார்ல்ஸ் சூமர் புதனன்று தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி ஜோ பைடன் வரவிருக்கும் நிர்வாகத்துக்கு தனது முழு ஆதரவை வழங்கியுள்ளார், புதன்கிழமையன்று, துணை ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் மைக் பென்ஸ் உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல் நாளிலேயே அனைத்தும் சரியான கரங்களில் இருக்கும் என்பதில் நம்பிக்கையுடன்” உள்ளதாக தெரிவித்தார். பென்ஸ் பதவியேற்ற பின்னர் அவருக்கு ஆலோசனை தேவைப்பட்டால் வழங்குவதற்கு தான் “24-7” தயாராய் இருப்பதாகவும் பைடென் கூறினார்.
ஹிலாரி கிளிண்டன், சென்ற வாரத்திலான தனது ஒப்புதல் உரைக்குப் பிந்தைய முதல் பொதுஇட பிரசன்னத்தில், குழந்தைகள் பாதுகாப்பு நிதி அமைப்பின் மாநாடு ஒன்றில் 20 நிமிடங்கள் பேசினார், அதில் அவர் ட்ரம்பைக் குறித்தோ அல்லது அவருக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள் குறித்தோ எதுவும் குறிப்பிடவில்லை.
அதேநேரத்தில், ஜனநாயகக் கட்சித் தலைமையின் ஒரு பிரிவு ஜனநாயகக் கட்சியின் நிலைகுலைந்திருக்கும் நம்பகத்தன்மையை மீட்சி செய்வது மற்றும் சமூக எதிர்ப்பின் வளர்ச்சியை மட்டுப்படுவது ஆகியவற்றுக்கான ஒரு முயற்சியில் ட்ரம்ப் குறித்து விமர்சனங்களைச் செய்து வருகிறது. எதிர்பார்க்கக் கூடிய வகையில், இந்த முயற்சியானது வேர்மாண்ட் செனட்டரான பேர்னி சாண்டர்ஸ் மற்றும் மசாசூட்ஸ் செனட்டரான எலிசபெத் வாரன் ஆகியோராலேயே தலைமை கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சாண்டர்ஸ், ஜனநாயகக் கட்சியின் ஒரு அடிப்படையான மறுமதிப்பீட்டுக்கு அழைப்புவிடுத்தார், புதனன்று ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் குறித்த ஒரு முக்கியமான உரையாகக் கூறப்படுகின்ற ஒன்றை அவர் வழங்கினார். வார இறுதியில் அவர் செய்திருந்த இணக்கமான கூற்றுகளின் ஒரு விளக்கவுரையாக அது மாறியது.
பொருளாதார துயரத்தில் இருக்கும் தொழிலாளர்களின் வாக்குகளைக் கைப்பற்றுவதற்காக பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் அளித்த வாய்ச்சவடால் வாக்குறுதிகளின் ஒரு பட்டியலை வாசித்த சாண்டர்ஸ், அதையெல்லாம் அவர் நிறைவேற்றுவாரா என்பது ஒரு பகிரங்கமான கேள்வியாக தொடர்வதாகத் தெரிவித்தார்.
அவர் கூறினார் : “அவர் வேடதாரியா அல்லது உண்மையானவரா என்பது தான் முதலில் தீர்க்கப்படவிருக்கின்ற பிரச்சினையாக இருக்கும், நாம் அதனை வெகு விரைவில் காணக்கூடியதாக இருக்கும்.” புதிய அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் என்பதில் ஏதோ சந்தேகம் இருப்பதைப் போல பேசுகிறார்!
“அளித்த வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருப்பவராக திரு.ட்ரம்ப் ஆவாரானால் அவருடன் சேர்ந்து வேலை செய்வதற்கு ஜனநாயகக் கட்சியினர் தயாராய் இருப்பார்கள் என்பதையே நீங்கள் கேபிடல் ஹில்லில் காணவிருக்கிறீர்கள்” என்று அவர் தொடர்ந்து கூறினார்.
வாரன், தனது பங்காக, ட்ரம்ப் தனது இடைமருவல் அணியை வங்கியாளர்கள் மற்றும் வோல் ஸ்டீரிட் மனிதர்களைக் கொண்டு நிரப்புவதை விமர்சனம் செய்து, செவ்வாய் தேதியிட்ட ஒரு கடிதத்தை அவருக்கு அனுப்பினார். அவர் எழுதினார்: ”பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களின் நலன்களை விடவும் உழைக்கும் குடும்பங்களின் நலன்களில் அக்கறை காட்டுவதற்கு, நீங்கள் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் உண்மையாக இருப்பீர்களா என்பதையே அமெரிக்க மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அந்த வாக்குறுதிகளின் படி நடப்பதற்கான நேரமாகும்.”
வோல் ஸ்டீரிட்டை நோக்கிய வாரனின் கண்டிப்பு தேர்ந்தெடுத்ததாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வரையிலும் இவர், வோல் ஸ்டீரிட் பிரச்சார நிதியின் பெரும்பான்மையை பெற்றிருந்தவரும் பெரும் வங்கிகளால் உரையாற்றுவதற்கான கட்டணமாக பத்து மில்லியன் கணக்கில் செலுத்தப் பெற்றவருமான கோடீஸ்வர அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு பிரச்சார உரைகள் நிகழ்த்தி வந்திருந்தார்.
வாரனும் சரி சாண்டர்ஸும் சரி, நாடெங்கிலும் நடந்து வருகின்ற ட்ரம்ப்-எதிர்ப்பு போராட்டங்களைக் குறித்து குறிப்பிடவும் கூட இல்லை.
தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கைக்கு மேம்பாடு அளிப்பதற்காக என்று கூறி ட்ரம்ப் நிர்வாகத்துடன் சேர்ந்து வேலைசெய்வதற்கு சாண்டர்ஸும், வாரனும் மிகவும் கவனம்செலுத்துவதில் ஏதேனும் உள்ளடக்கம் இருக்கிறது என்றால், பொருளாதார தேசியவாதம் மற்றும் வர்த்தகப் போர் - இவற்றுக்கான ஆதரவை தொழிற்சங்க அதிகாரத்துவமும் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது - ஆகிய ட்ரம்ப்பின் வேலைத்திட்டத்துடனான உடன்பாடே அதுவாகும். இது அமெரிக்கத் தொழிலாளர்களை ஏனைய நாடுகளின் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்தி அவர்களை தங்களின் “சொந்த” மேலதிகாரிகளின் பின்னால் நிறுத்துகின்ற ஒரு பிற்போக்குத்தனமான கொள்கையாகும்.
இந்த வெற்று பந்தாவானது, தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் அவர்கள் ட்ரம்ப் நிர்வாகம் ஒன்றிடம் முகம் கொடுக்கக் கூடிய தீவிரமான அபாயங்களுக்கு எதிராக அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக ஆக்குவதற்கும், சமூக எதிர்ப்பையும் ஆர்ப்பாட்டங்களையும் ஜனநாயகக் கட்சியின் வரம்புகளுக்குள்ளாக பராமரிப்பதற்கும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகும்.
தொழிலாளர்களும் இளைஞர்களும் மீண்டும் முட்டாளாக்கப்பட்டு விடக் கூடாது! ஜனநாயகக் கட்சியின் முதனிலைத் தேர்தலில், சாண்டர்ஸ் “பில்லியனர் வர்க்க”த்திற்கு எதிராக ஒரு “அரசியல் புரட்சி”க்கு அழைப்பு விடுத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை வென்றார். உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்ததைப் போல, தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக சாண்டர்ஸ் பேசவில்லை, மாறாக வீழ்ச்சி காணும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அதிகரித்துச் செல்லும் பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றால் விளைந்த கோபத்தை திசைதிருப்பவும் அது ஒரு சுயாதீனமான அரசியல் மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு வடிவத்தை எடுத்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும் முனைகின்ற ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்காகவே அவர் பேசினார்.
தனது ஆதரவை, வோல் ஸ்ட்ரீட்டின் தெரிவான கிளிண்டனுக்கு அளித்ததன் மூலமாக, சாண்டர்ஸ், உழைக்கும் மக்களின் பெரும் பிரிவுகளிடையே நிலவிய ஸ்தாபக-எதிர்ப்பு மனோநிலை வலதுகளால் கைப்பற்றிக் கொள்ளப்படுவதை உறுதிசெய்தார். இப்போது, ட்ரம்புக்கு எதிராக எதிர்ப்பு அபிவிருத்தி காண்கிற நிலையில், சாண்டர்ஸ் மறுபடியும் வேலியிட்ட எதிர்ப்பு வளையத்திற்காக முன்னே அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
முக்கியமான விடயமாக, சாண்டர்ஸ் செனட்டில் ஜனநாயகக் கட்சியின் தலைமைக்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைமையில் இருக்கும் வாரன் அதன் இணைத் தலைவராக உயர்த்தப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி அது இன்னும் வலது நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், தனக்கு ஒரு முக ஒப்பனை அளித்துக் கொள்ள முனைந்து கொண்டிருக்கிறது.
வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ/உளவு வளாகத்தின் இந்தக் கட்சியை, “இடது நோக்கித் தள்ளுவதன் மூலமாக” உழைக்கும் மக்களின் நலன்களுக்கு சேவை செய்யும்படி ஆக்க இயலக் கூடிய கட்சியாக முன்வைக்கிற அத்தனை முயற்சிகளும் மோசடியானவை ஆகும். தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் ஜனநாயகக் கட்சியுடன் ஒரு முழுமையான முறிவுக்குச் செல்ல வேண்டும், இருகட்சிகளும் பாதுகாத்து நிற்கின்ற முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் பாதையை எடுக்க வேண்டும் என்பதே ட்ரம்ப் தேர்வாகியிருப்பதன் மிக அடிப்படையான மற்றும் இன்றியமையாத படிப்பினை ஆகும்.