Print Version|Feedback
From “political revolution” to collaboration: Sanders and Warren pledge to work with Trump
“அரசியல் புரட்சி” என்றதில் இருந்து ஒத்துழைப்புக்கு: சாண்டர்சும், வாரனும் ட்ரம்ப்புடன் சேர்ந்து வேலைசெய்வதற்கு உறுதியளிக்கின்றனர்
Patrick Martin and Joseph Kishore
14 November 2016
அமெரிக்காவில் ஏககாலத்தில் இரண்டு அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் நடைபெற்று வருகின்றன.
முதலாவதாய், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் அதிவலது அரசாங்கம் ஒன்றை நடத்தக்கூடிய மனிதர்களை பதவிகளுக்காக துரிதமாக ஒன்றுசேர்த்துக் கொண்டிருப்பது ; Breitbart News இன் தலைவரான ஸ்டீபன் பானன் தனது தலைமை மூலோபாயவாதியாக செயல்படவிருப்பதாக அவர் அறிவித்திருப்பதில் இது மிக முக்கியமான விதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இனவாத மற்றும் பாசிச அமைப்புகளுடன் நன்கறிந்த தொடர்புகள் கொண்ட ஒரு மனிதரை வருங்கால ட்ரம்ப் நிர்வாகத்தில் பரந்த அதிகாரம் உள்ள ஒரு பதவியில் இது அமர்த்தவிருக்கிறது.
ஞாயிறன்று இரவு ஒளிபரப்பான “60 நிமிடங்கள்” நிகழ்ச்சியின் நேர்காணலில், ட்ரம்ப், ஆவணங்கள் இல்லாத மூன்று மில்லியன் குடியேற்றவாசிகளை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் தனது விருப்பத்தைத் தெரிவித்ததோடு, கருக்கலைப்பு உரிமைகளின் பகிரங்க எதிரிகளை நீதிமன்றங்களின் உயர்பதவிகளில் தான் அமர்த்தவிருப்பதையும் தேர்தலில் தனது போட்டியாளராக இருந்த ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக வழக்கு விசாரணையை யோசிக்கவிருப்பதையும் கூட அறிவித்திருந்தார் என்பதைக் கொண்டு பார்க்கும்போது, இந்த நடவடிக்கையானது இன்னும் பயங்கரமான ஒரு முன்னறிகுறியாக இருக்கிறது.
இரண்டாவதாய், இந்த அபிவிருத்திகளையெல்லாம் கண்டுகொள்ளாமல், நடக்கக் கூடாத எதுவும் நடந்து விடவில்லை என்பதைப் போல ஜனநாயகக் கட்சியும் மற்றும் ஊடகங்களும் கவலையின்றி நடந்து கொள்கின்றன. அமெரிக்க வரலாற்றில் ஒருபோதும் கண்டிராததைப் போன்ற ஒரு அரசாங்கத்தை இயல்பானதாய் காட்ட அவை முயற்சி செய்கின்றன. செவ்வாயன்று தேர்தலைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஒபாமா “நீங்கள் வெற்றிகரமாய் செயல்பட எங்களால் உதவக்கூடிய ஒவ்வொன்றையும்” செய்யவிருப்பதாக ட்ரம்ப்பிடம் கூறினார். ஹிலாரி கிளிண்டனும் இதேபோன்றதொரு பிரமாண உறுதியளித்தார், ட்ரம்ப் “அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஒரு வெற்றிகரமான ஜனாதிபதியாக இருப்பார்” என்று நம்புவதாக அவர் கூறினார்.
அதிவலதிடம் அரசியல் சரணாகதி அடைகின்ற இந்த நடவடிக்கையானது நியூயோர்க் டைம்ஸின் பத்திகளது பக்கத்திலும் அதனைத் தொடர்ந்து CBS இன் “Face the Nation” தொலைக்காட்சி நேர்காணலிலும் பேர்னி சாண்டர்ஸ் அளித்த பதிலிறுப்பில் தனது மிகவும் பரிதாபகரமான மற்றும் வெறுப்பூட்டும் வெளிப்பாட்டைக் கண்டது. “பில்லியனர் வர்க்க”த்திற்கு எதிரான ஒரு “அரசியல் புரட்சி”க்கு தான் தலைமை கொடுத்துக் கொண்டிருப்பதாக பிரகடனம் செய்த நிலையில் இருந்து வெட்கக்கேடான விதத்தில் கிளிண்டனுக்கு சரணாகதி அடைந்த நிலைக்கும், டொனால்ட் ட்ரம்ப் உடன் சேர்ந்து வேலைசெய்ய உறுதியளிக்கும் நிலைக்கும் அவர் சென்றிருக்கிறார்.
டைம்ஸ் கட்டுரையில் சாண்டர்ஸ் அறிவிக்கிறார்: “ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் சரியாகவே கூறுகிறார். அமெரிக்க மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் அவர் அவர்களுக்கு என்னவிதமான மாற்றத்தை வழங்கப் போகிறார்? உழைக்கும் குடும்பங்களில் பலவும் உணரப்படுகின்ற பொருளாதார வலிக்குப் பொறுப்பான இந்த நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களை எதிர்த்து நிற்கும் தைரியம் அவருக்கு இருக்கிறதா, அல்லது பெரும்பான்மையினரின் கோபத்தை சிறுபான்மையினருக்கும், குடியேறியவர்களுக்கும், ஏழைகளுக்கும் மற்றும் திக்கற்றவர்களுக்கும் எதிராய் அவர் திருப்பப் போகிறாரா?”
”உழைக்கும் மக்களுக்கு ஒரு மேம்பட்ட வாழ்க்கையை உருவாக்குவதற்கு” ட்ரம்ப் முனைகின்ற மட்டத்திற்கு “தனித்தனி பிரச்சினை ரீதியாக அவருடன் இணைந்து நாங்கள் வேலை செய்வோம்” என்று “Face the Nation” நேர்காணலில் சாண்டர்ஸ் கூறினார். ட்ரம்பை நோக்கி நேரடியாக பேசிய அவர், “உழைக்கும் குடும்பங்களின் காவலனாக இருப்பது குறித்து நீங்கள் பேசினீர்கள் - நல்லது, இப்போது செயலில் காட்டுங்கள். உங்கள் வாய்வீச்சு பெரியதாகவே இருந்தது, இப்போது ஏதாவது செய்யப் பாருங்கள்” என்றார்.
சாண்டர்ஸின் ஒட்டுமொத்த நிலையுமே அபத்தமாக இருக்கிறது. ட்ரம்ப் எதை பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதிலோ என்ன விதமான அரசாங்கத்திற்கு அவர் தலைமை கொடுக்கவிருக்கிறார் என்பதிலோ எந்த சந்தேகமும் இல்லை. பெருநிறுவனங்களுக்கு வரிகளை வெட்டுவதற்கும், கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கும், சமூக வேலைத்திட்டங்களை வெட்டுவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கும், இராணுவத்தை பரந்த அளவில் விரிவுபடுத்துவதற்கும் அத்துடன் ஜனநாயக உரிமைகளில் எஞ்சியிருப்பதை அழிப்பதற்கும் அவர் உறுதிபூண்டிருக்கிறார். “உழைக்கும் மக்களுக்கு ஒரு மேம்பட்ட வாழ்க்கையை உருவாக்குவதற்கான” கொள்கைகளை ட்ரம்ப் அமல்படுத்துவாரா என்பதான கேள்விகளை எழுப்புவதென்பது பிரமைகளை விதைக்கின்ற அதேநேரத்தில் ட்ரம்புக்கு அவரது பிற்போக்குத்தனமான அரசாங்கத்தைத் தயாரித்துக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்குகிறது.
ட்ரம்பின் முன்னால் சாண்டர்ஸ் தவழ்வதானது அவரது எல்லையற்ற சந்தர்ப்பவாதத்தையும், ஜனநாயகக் கட்சியின் முதனிலைத் தேர்தலிலான அவரது பிரச்சாரத்தின் உண்மையான நோக்கம் இரண்டையும் அம்பலப்படுத்துவதாய் இருக்கிறது. சாண்டர்ஸ் உண்மையிலேயே அக்கறை கொண்டவராக இருந்திருந்தால், அவர் தொழிலாள வர்க்கத்திற்கு அது முகம் கொடுக்கும் அதீத ஆபத்துகள் குறித்து எச்சரித்திருப்பார் என்பதோடு வரவிருக்கும் நிர்வாகத்தை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை அதனுடன் ஒத்துழைக்கவும் போவதில்லை என்பதைத் தெளிவாக்கியிருப்பார். ட்ரம்ப் தயாரிப்பு செய்து வரும் கொள்கைகள் எதனையும் செயல்படுத்துவதற்கான மக்கள் உத்தரவு அவருக்குக் கிட்டவில்லை என்பதை ட்ரம்ப் வெகுஜன வாக்களிப்பில் தோற்று விட்டிருந்தார் என்ற உண்மையைக் கொண்டு அவர் சுட்டிக்காட்டியிருப்பார்.
அரசியல் சரணாகதிக்கும் அப்பால், ட்ரம்ப்புடன் சாண்டர்ஸின் கூட்டணி உத்தேசமானது ஒரு பொதுவான பொருளாதாரத் திட்டநிரலுடன் தொடர்புபட்டிருக்கிறது. சாண்டர்ஸ் தனது முதனிலைத் தேர்தல் பிரச்சாரத்தின் சமயத்தில், ஜனநாயகக் கட்சி, ட்ரம்ப்பின் தேசியவாத மற்றும் பொருளாதார பாதுகாப்புவாத கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு வலியுறுத்தியிருந்தார். தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் உருக்குலைந்ததற்கு, முதலாளித்துவ அமைப்பு முறையின் மீதான எந்த விமர்சனத்தில் இருந்தும் விலகி, உலகமயமாக்கம் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் மீது அவர் பழிகூறினார். அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களின் கோபத்தை, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களை சுரண்டும் மிகப்பெரும் நிறுவனங்களுக்கு எதிராய் செலுத்தாமல் மாறாக சீனா, மெக்சிகோ மற்றும் பிற நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களுக்கு எதிராய் செலுத்துவதை இது நோக்கமாய் கொண்டிருந்தது.
இதே கருத்தாக்கங்கள் ஜனநாயகக் கட்சியின் “இடது” கன்னையின் இன்னொரு தலைவரான மசாசூட்ஸ் செனட்டர் எலிசபெத் வாரனின் கருத்துக்களிலும் எதிரொலித்தன. புதனன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், வாரன், “ட்ரம்ப் உழைக்கும் மக்களுக்கான நமது பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு வாக்குறுதியளித்துள்ளார், இந்தப் பணியில் நமது வேறுபாடுகளைத் தள்ளி வைத்து விட்டு அவருடன் இணைந்து வேலை செய்வதற்கு நான் தயாராய் இருக்கிறேன்.”
வாஷிங்டனில் கூடிய AFL-CIO நிர்வாகக் குழு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய உரையில், குறிப்பாக வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் பொருளாதார தேசியவாதத்தை ஊக்குவிப்பது ஆகியவற்றில், குடியரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துடன் உடன்பாடு காண சாத்தியம் கொண்ட புள்ளிகளை வாரன் பட்டியலிட்டார். UAW தலைவரான டென்னிஸ் வில்லியம்சின் வார்த்தைகளில் கூறுவதானால், ட்ரம்ப்புடன் “பொதுவான ஒரு களத்தைக் காண்பதற்கான” ஒரு “பெரும் வாய்ப்பினை” தொழிற்சங்கங்கள் கண்டதாக AFL-CIO இன் தலைவரான ரிச்சார்ட் ட்ரம்கா மற்றும் வில்லியம்சின் கருத்துக்களைத் தொடர்ந்து வாரனின் கருத்துகள் வந்திருக்கின்றன.
இந்த அரசியல் மறுநிலைப்படுத்தல் நடந்து கொண்டிருக்கும் அதேநேரத்தில், மூன்றாவதாய் ஒரு நிகழ்ச்சிப்போக்கும் நடந்து கொண்டிருக்கிறது. ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்வது என்ன என்பதில் எந்த சந்தேகமும் தங்களுக்கு இல்லை என்பதை பத்தாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் நின்று தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்களது கோபமும் ஆவேசமும் - ஜனநாயகக் கட்சியின் முன்னிலைத் தலைவர்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக அமைதியாக இருக்கிறார்கள், அல்லது தங்களை தள்ளி நிறுத்திக் கொள்கிறார்கள் அல்லது போராட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்ற நிலையில் - அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக எந்த வெளிப்பாட்டையும் காணவியலாது இருக்கிறது.
ஜனநாயகக் கட்சியானது குடியரசுக் கட்சிக்கு சளைக்காத விதத்தில் வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு கட்சியாகும். அதற்கு குடியரசுக் கட்சி மற்றும் ட்ரம்புடன் கொண்டிருக்கக் கூடிய எந்த தந்திரோபாய வேறுபாடுகளை விடவும் அதிகமான கவலை எதிர்ப்பைக் கிளப்பி விடுவதன் பின்விளைவுகள் குறித்து இருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் காணும் அடிப்படையான பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது அதில் பங்கேற்கும் பலரும் இன்னும் கூட ஜனநாயகக் கட்சியின் பாத்திரத்தில் பிரமைகளை வெளிப்படுத்துகின்றனர் என்பது தான். உண்மையில், ஒபாமா மற்றும் ஹிலாரி தொடங்கி சாண்டர்ஸ் மற்றும் வாரன் வரையிலும் ஜனநாயகக் கட்சி தான் ட்ரம்ப் தேர்வானதற்கான அரசியல் பொறுப்பைத் தாங்கி நிற்கிறது என்பதுடன், வெளிநாட்டில் போர் மற்றும் சொந்த நாட்டில் பிற்போக்குத்தனம் என்ற ஒரு கொள்கையை அமல்படுத்துவதில் அவருடன் சேர்ந்து வேலைசெய்வதற்கு தான் விருப்பத்துடன் இருப்பதையும் அது இப்போது தெளிவாக்கிக் கொண்டிருக்கிறது.
வரவிருக்கும் மாதங்களில், ட்ரம்புக்கு வாக்களித்தவர்களும் உள்ளிட்ட தொழிலாளர்கள் தாங்கள் எதற்கு முகம்கொடுத்திருக்கிறோம் என்பதை உணரும்போது, வெகுஜன கோபம் பெருகிச் செல்லவிருக்கிறது. ட்ரம்ப்புக்கான எதிர்ப்பு ஜனநாயகக் கட்சியின் மூலமாகவோ அல்லது அதனுடனான கூட்டணி மூலமாகவோ ஒழுங்கமைக்கப்பட முடியாது, மாறாக அதனுடனும் அதன் அத்தனை அரசியல் முகவர்களுடனும், அத்துடன் அது பாதுகாக்கின்ற முதலாளித்துவ அமைப்புமுறையுடனும் தாட்சண்யமற்ற விதத்திலும் சமரசமற்ற விதத்திலும் முறித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே ஒழுங்கமைக்கப்பட முடியும்.