Print Version|Feedback
Political warfare explodes in Washington
வாஷிங்டனில் அரசியல் போர் வெடிக்கிறது
Patrick Martin and Barry Grey
31 October 2016
தேர்தலுக்கு வெறும் ஒரு வாரத்திற்கு முன்னதாக, அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசைப் பீடித்துள்ள நெருக்கடியானது, கட்டுக்கடங்காத மற்றும் கசப்பான உள்முரண்பாடுகளால் எடுத்துக்காட்டப்பட்டவாறு, பகிரங்க அரசியல் போராக வெடித்துள்ளது.
ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணையில் புதிய "புலனாய்வு நடவடிக்கைகளை" குறிப்பிட்டு, மத்திய புலனாய்வுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கோமெ கடந்த வெள்ளியன்று காங்கிரஸிற்கு எழுதிய கடிதமே கூட இந்த நெருக்கடியின் ஒரு வெளிப்பாடாகும், இது அடியிலுள்ள பதட்டங்களை கொதிநிலைக்கு கொண்டு வந்துள்ளது. இது மத்திய புலனாய்வுத்துறைக்கு உள்ளேயும் மற்றும், மிகப் பரந்தளவில், ஒட்டுமொத்தமாக தேசிய பாதுகாப்பு எந்திரத்திற்குள்ளேயே கூட கொந்தளித்துக் கொண்டிருக்கும் முரண்பாடுகளை அம்பலப்படுத்தி உள்ளது.
சொல்லப்போனால் கிளிண்டன் வெளியுறவுத்துறை செயலராக இருந்த போது அவர் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு ஒரு தனியார் மின்னஞ்சல் சர்வரை பயன்படுத்தியது மீதான FBI இன் முந்தைய புலனாய்வுக்கு "பொருத்தமாக தெரியும்" ஒரு புதிய மின்னஞ்சல் தொகுப்பை FBI மீளாய்வு செய்யவில்லை என்பதை கோமெ இன் இயல்புக்கு முரண்பட்ட அக்கடிதம் ஒப்புக்கொண்டது. "இந்த ஆவணங்கள் முக்கியமானதாக இருக்குமா இல்லையா என்பதை" அந்த அமைப்பு "இன்னும் மதிப்பிடவில்லை" என்றவர் எழுதினார். தேர்தலுக்கு வெறும் பதினொரு நாள் இருக்கையில் இந்த புதிய மின்னஞ்சல்களின் கண்டுபிடிப்பை ஒரு பொதுப் பிரச்சினையாக உருவாக்குவதென்ற கோமெ இன் முடிவை இந்த வியப்பூட்டும் ஒப்புதல் மிகவும் அசாதாரணமானதாக ஆக்குகிறது.
இவ்வாரயிறுதியில் மிகத் துரிதமான பல தொடர் அபிவிருத்திகளில் ஒன்றாக, நீதித்துறை அதிகாரிகள் அறிவிக்கையில் தேர்தலுக்கு முந்தைய 60 நாட்களுக்குள் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கும் ஒருவரைப் பாதிக்கக்கூடிய வகையில் நீதித்துறை அல்லது FBI நடவடிக்கை இருக்கக்கூடாது என்ற ஒரு நீண்டகால கோட்பாட்டை அது மீறுகிறது என்று வாதிட்டு, அக்கடிதத்தை அனுப்பிய கோமெ இன் முடிவை அவர்கள் எதிர்ப்பதாக தெரிவித்தனர்.
கிளிண்டன் பிரச்சாரத்தில் உள்ளவர்களும் மற்றும் காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் அக்கடிதம் வெளியிடப்பட்ட நேரத்திற்காக கோமெ ஐ விளாசினார்கள். புளோரிடாவின் டேனோனா பீச் பிரச்சார பேரணி ஒன்றில் கிளிண்டன் கூறுகையில், கோமெ இன் நடவடிக்கை "விசித்திரமானது என்பது மட்டுமல்ல, அது முன்நடந்திராததுமாகும்,” என்றார். கிளிண்டன் ஒரு தனியார் மின்னஞ்சல் சர்வரைப் பயன்படுத்தியதற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் எந்த அடித்தளமும் கிடையாது என்று கடந்த ஜூலையில் கோமெ தீர்மானகரமாக இருந்ததை எதிர்த்த காங்கிரஸில் உள்ள குடியரசு கட்சி தலைவர்களைச் சமாதானப்படுத்தும் ஒரு முயற்சியே இக்கடிதம் என்று எடுத்துரைக்கும் விதத்தில், “FBI இயக்குனர் கோமெ, கட்சியினரின் அழுத்தத்திற்கு அடிபணிந்துவிட்டார்,” என்று கிளிண்டன் ட்வீட் செய்தார்.
ஒரு தேர்தல் முடிவில் செல்வாக்கு செலுத்தும் விதத்தில் அரசு பணியாளர்கள் அவர்களது உத்தியோக பதவிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தை அவர் மீறிவிட்டதாக கூறி செனட் சபையின் ஜனநாயக கட்சி சிறுபான்மையினர் தலைவர் ஹாரி ரெய்ட் கோமெ க்கு ஒரு கடிதம் அனுப்பினார். “இந்நடவடிக்கைகள் ஹாட்ச் சட்டத்தை மீறியிருக்கலாம் என்பதில் என் அலுவலகம் தீர்மானகரமாக உள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இதை நான் எழுதுகிறேன்,” என்றார். “கட்சி சார்பான உங்களது நடவடிக்கை மூலமாக, நீங்கள் அச்சட்டத்தை உடைத்திருக்கலாம்,” என்றார்.
கோமெ "மிக முக்கியமான தகவலைக் கையாள்வதில் கவலைக்குரிய விதத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்காட்டி" உள்ளார், “ஒரு அரசியல் கட்சியை விட மற்றொன்றுக்கு உதவும் தெளிவான உள்நோக்கம் இதில் தெரிகிறது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார், இது ஏனென்றால் கிளிண்டன் மின்னஞ்சல்கள் மீது FBI இன் புதிய ஆர்வத்தை அவர் பகிரங்கப்படுத்தினாலும், ரஷ்ய அரசு அதிகாரிகளுடன் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டோனால்டு ட்ரம்ப் ஐ தொடர்புபடுத்தும் தகவல்களாக ரெய்ட் குறிப்பிடும் "வெடிப்பார்ந்த தகவல்கள்" மீது அவர் மௌனமாக இருந்துவிட்டார் என்பதனால் ஆகும்.
பெருநிறுவனங்கள் மற்றும் வியாபார அமைப்புகளுடன் இலாப நோக்க உரையாடல்களில் ஈடுபடுவதற்கு கிளிண்டன் அறக்கட்டளையை பில் கிளிண்டன் பயன்படுத்தியமை மீதான அதிர்ச்சியூட்டும் தகவல்களை உள்ளடக்கிய, பிரச்சார தலைவர் ஜோன் பொடெஸ்டா அனுப்பிய மற்றும் பெற்ற பத்தாயிரக் கணக்கான மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை விக்கிலீக்ஸ் பிரசுரித்ததற்கு, கிளிண்டன் பிரச்சாரத்தின் பிரதான விடையிறுப்பாக இருந்துள்ள ரஷ்யாவைக் குறைகூறுவதிலே தான் இங்கே ரெய்ட் உம் தஞ்சமடைகிறார். கிளிண்டனைச் சேதப்படுத்த மற்றும் ட்ரம்ப் க்கு உதவுவதற்காக ரஷ்ய அரசு உளவாளிகளால் மின்னஞ்சல்கள் ஊடுருவப்பட்டதாகவும், பின்னர் விக்கிலீக்ஸ் க்கு வழங்கப்பட்டதாகவும் கூறி, பிரச்சார செய்தி தொடர்பாளர்கள் அம்மின்னஞ்சல்களின் உள்ளடக்கத்தைக் குறித்து விவாதிக்க மறுத்துள்ளனர்.
கிளிண்டனின் மிக நெருங்கிய உதவியாளரான ஹூமா அபெத் உடன் உறவை முறித்துக் கொண்ட அவர் கணவரும் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினருமான Anthony Weiner இன் மடிக்கணினியில் இருந்து பெறப்பட்ட 650,000 மின்னஞ்சல்கள் மொத்தத்தையும் ஆராய்வதற்கு இப்போது FBI ஓர் உத்தரவாணை பெற்றுள்ளதாக ஞாயிறன்று NBC News குறிப்பிட்டது. ஒரு பருவ வயதடையாத பெண்ணுக்கு வெளிப்படையாக பாலியல்ரீதியான செய்திகள் அனுப்பிய குற்றச்சாட்டுக்களுக்காக Weiner மத்தியப் புலனாய்வுத்துறையின் விசாரணையின் கீழ் உள்ளார்.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஞாயிறன்று மதியம் அதன் வலைத் தளத்தில் வெளியிட்ட ஒரு செய்தியில், காங்கிரஸிற்கு கோமெ எழுதிய கடிதம் மீது FBI க்குள் நிலவும் வெடிப்பார்ந்த உள்நெருக்கடி குறித்த விபரங்களை வழங்கியது. இந்த விபரங்களின்படி பார்த்தால், அங்கே மத்திய புலனாய்வுத்துறைக்குள்ளும் மற்றும் FBI மற்றும் நீதித்துறைக்கும் இடையேயும் கிளிண்டன் மின்னஞ்சல் விசாரணை மீது மட்டுமல்ல, மாறாக கிளிண்டன் அறக்கட்டளை செயல்பாடுகளில் நான்கு FBI கள அதிகாரிகள் (நியூ யோர்க், வாஷிங்டன் டி.சி., லோஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அர்கன்சாஸ் இன் லிட்டில் ராக்) சம்பந்தப்பட்ட வெவ்வேறு விசாரணைகள் மீதும் ஒரு கடுமையான மோதல் நிலவுகிறது.
எட்டு மாதங்களுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னர், FBI முகவர்கள் அந்த அறக்கட்டளை மீது மிகத் தீவிர விசாரணைக்கான திட்டங்களை நீதித்துறையில் உள்ள தொழில்ரீதியிலான வழக்கறிஞர்களின் முன்வைத்தனர், போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற அடித்தளத்தில் அந்த முன்மொழிவுகள் முடக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தனர். இருப்பினும் FBI அலுவலகங்கள் அவற்றினது விசாரணைகளைத் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், ஜூலையில் கிளிண்டன் மின்னஞ்சல் விசாரணை இதனுடன் சேர்ந்ததும் அவை தீவிரமடைந்தன.
FBI க்குள் இருக்கும் ஒரு கணிசமான குழுவினர், ஹிலாரி மற்றும் பில் கிளிண்டன் பாகத்தில் நடந்த குற்றகரமான நடவடிக்கைகளை உயர்மட்ட FBI அதிகாரிகள் மூடிமறைக்கிறார்கள் என்பதையோ, அல்லது ஹிலாரி கிண்டனின் ஜனாதிபதி பதவிக்கான பிரச்சாரத்தைப் பலவீனப்படுத்த அம்முகமையின் ஆதாரநபர்களைப் பயன்படுத்துவதற்கு FBI உடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் அரசியல்ரீதியில் உந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையோ, அல்லது இவ்விரண்டு விடயத்தையுமே கூட நம்பவில்லை என்று ஜேர்னல் செய்தி குறிப்பிடுகிறது.
மத்திய புலனாய்வுத்துறை மற்றும் நீதித்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் இத்தகைய முயற்சிகளை எதிர்த்த போது, அதை தொடர்ந்து பகிரங்கமான கருத்து வேறுபாடுகள் எழுந்தன, இது வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் க்கு கசியவிடப்பட்ட கசிவுகளில் வெளிப்பட்டதுடன் அவை FBI இன் துணை இயக்குனர் Andrew McCabe ஐ மைய இலக்கில் வைத்திருந்தன, இவர் மனைவி கடந்த ஆண்டு வெர்ஜீனியாவில் மாகாண செனட் க்கான ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வாகாமல் தோல்வியடைந்தவராவார். FBI நிர்வாகிகள் மூலமாக கூடுதல் கசிவுகளினூடாக ஏதேனும் வழியில் தகவல் பகிரங்கமாகி விடும் என்று அவர் நம்பியதாலேயே கோமெ காங்கிரஸ் க்கு கடிதம் அனுப்பியதாக சில பத்திரிகை செய்திகள் குறிப்பிடுகின்றன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வாஷிங்டனைச் சுற்றி நடந்துவரும் பகிரங்கமான இந்த போர்முறையானது, முதலாளித்துவ தேர்தல்களின் பாரம்பரிய கட்டமைப்பிற்குள் கட்டுப்படுத்தி வைக்க முடியாதளவிற்கு ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் மற்றும் அரசு எந்திரமும் ஆழமான மற்றும் கசப்பான மோதல்களால் மற்றும் பதட்டங்களால் அழுகி போயுள்ளன என்பதையே எடுத்துக்காட்டுகிறது. பொருளாதார, புவிசார் அரசியல், உள்நாட்டு அரசியல் மற்றும் சமூக முன்னணிகளின் நெருக்கடிகளும் இவற்றில் ஒருங்கிணைவது இத்தகைய பதட்டங்களுக்கு இன்னும் எரியூட்டுகின்றன.
2008 வோல்ட் ஸ்ட்ரீட் பொறிவுக்கு எட்டாண்டுகளுக்கு அதிகமான பின்னரும் அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரம் மந்தநிலையில் சிக்கியுள்ளது, மேலும் வங்கிகளுக்கு முட்டுக்கொடுப்பதற்காக மற்றும் பங்குச் சந்தை விலைகளை உந்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மத்திய வங்கி கொள்கைகள் ஒரு புதிய நிதியியல் பேரழிவுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன என்ற அச்சங்களும் அதிகரித்து வருகின்றன. சுய-பாணியிலான "சோசலிசவாதி" பேர்ணி சாண்டர்ஸ் இன் வோல் ஸ்ட்ரீட் எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் டோனால்ட் ட்ரம்ப் இன் "அமெரிக்காவே முதலில்" எனும் போலி-வெகுஜனவாத பிரச்சாரம் ஆகியவற்றிற்கு வெவ்வேறு வழியில் கிடைத்த பெரும் ஆதரிவில் பிரதிபலித்தவாறு, இந்த பொருளாதார நெருக்கடி சமூக கோபத்தை எரியூட்டி வருவதுடன் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையையுமே அன்னியப்படுத்தி உள்ளது.
இருப்பதைந்து ஆண்டு கால முடிவில்லாத போர்கள் மற்றும் பதினைந்து ஆண்டுகால "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஆகியவை மத்தியக் கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளதுடன், இது ரஷ்யா மற்றும் சீனா போன்ற போட்டியாளர்களிடம் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பிடியை இழந்து வருகிறது என்ற பயங்களை மட்டுமே ஆளும் வர்க்கத்தினுள் உயர்த்தி உள்ளது. குறிப்பாக சிரியாவில் அமெரிக்க கொள்கையின் குழப்பநிலை, அமெரிக்க கொள்கை மீது கசப்பான கருத்து முரண்பாடுகளுக்கும் மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களுக்கும், மேலும் சிரியாவில் மட்டுமல்ல, மத்தியக் கிழக்கு எங்கிலும் மிகப்பெரியளவில் இராணுவ வன்முறையைத் தீவிரப்படுத்துவதற்கான கோரிக்கைகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. இவற்றுடன் ரஷ்யா மற்றும் சீனா உடனான மிகவும் ஆக்ரோஷமான மோதல்களுக்கான ஒருங்கிணைந்த அழைப்புகளும் உள்ளன.
இத்தகைய கருத்து மோதல்கள் அதே பிற்போக்குத்தனமான ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு கன்னைகளால் தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால் நடத்தப்பட்டு வருகின்றன என்பதே மிகப்பெரும் அபாயமாகும். தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் மற்றும் புரட்சிகர சக்தியாக தலையீடு செய்து, சகல முதலாளித்துவ வர்க்க கட்சிகள் மற்றும் கன்னைகளுக்கு எதிராக அதன் சொந்த நலன்களுக்காக போராடாவிட்டால், இந்நெருக்கடியானது, தவிர்க்கவியலாமல் உள்நாட்டில் இன்னும் கூடுதலான வலதுசாரி கொள்கைகள் மற்றும் வெளிநாடுகளில் இன்னும் பரந்த போர்களுடன், வேறுவழியின்றி ஒரு புதிய உலக போருக்கு இட்டுச் செல்வதில் போய் முடியும்.
இந்த முதலாளித்துவ இருகட்சி ஆட்சிமுறை வெறுமனே இரண்டு பிற்போக்குத்தனமான மாற்றீடுகளை மட்டுமே வழங்குகின்றன: ஒருவர், இராணுவ செலவினங்கள் மற்றும் சர்வாதிகார ஆட்சி முறைகளைப் பாரியளவில் அதிகரிக்க முறையிடும் பாசிசவாத பில்லியனியர் ட்ரம்ப், மற்றவர், ஒபாமா நிர்வாகத்தின் வலதுசாரி கொள்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தக் கூடிய, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்கு ஆதரவான கோடீஸ்வரர் கிளிண்டன்.
ஆளும் உயரடுக்கின் சகல கன்னைகளும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கங்களை உழைக்கும் மக்களிடமிருந்து மூடிமறைப்பதில் உடன்பட்டுள்ளன. சமூக நெருக்கடி மற்றும் போர் அபாயம் குறித்த எந்தவிதமான ஆழ்ந்த விவாதமும் இன்றி ஊடங்களோ, முதலாளித்துவ தேர்தல் பிரச்சாரத்தின் தரந்தாழ்ந்த குணாம்சத்தை, அடுத்தடுத்த பாலியல் மோசடிகள் மற்றும் ரஷ்ய-விரோத பிரச்சாரத்தின் மீது பரபரப்பூட்டுவதிலேயே மூழ்கடிக்கின்றன.
தேர்தல் நாளின் வாக்குச்சீட்டுக்கள் எண்ணப்படுவதற்கு முன்னரே, ஏற்கனவே தொடங்கிவிட்ட அரசியல் கொந்தளிப்புகளுக்கு தொழிலாள வர்க்கத்தைத் தயாரிப்பு செய்யவே சோசலிச சமத்துவக் கட்சி (SEP) 2016 தேர்தல்களில் நுழைந்தது. முதலாளித்துவ பிரச்சாரங்கள் நெருக்கடியை மூடிமறைக்கவும் மற்றும் உழைக்கும் மக்களை நிராயுதபாணியாக்கவும் நோக்கம் கொண்டுள்ளன என்பதை நமது ஜனாதிபதி வேட்பாளர் ஜெர்ரி வைட் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் நைல்ஸ் நிமூத் உம் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் அடிப்படையில் வாக்குகளுக்காக கிடையாது, மாறாக வரவிருக்கும் மிகப்பெரிய போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவது குறித்ததாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை செயலூக்கத்துடன் ஆதரிக்குமாறு உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனைவரையும் நாம் கேட்டுக் கொள்கிறோம். இழப்பதற்கு சிறிதும் நேரமில்லை. சமூக சமத்துவமின்மை, அரசியல் ஒடுக்குமுறை மற்றும் போருக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுப்பது அவசியமாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் நவம்பர் 5 சனிக்கிழமையன்று "முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்" என்ற தலைப்பில் டெட்ராய்டின் வைய்ன் மாகாண பல்கலைக்கழகத்தில் ஒரு மாநாட்டை நடத்தவிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டு சோசலிசத்திற்காக போராடும் அடிப்படையில் தேசியளவிலும் சர்வதேச அளவிலும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான அரசியல் அடித்தளத்தை அமைப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும். இம்மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டு, இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.