Print Version|Feedback
Obama seeks to placate concerns over Trump in final tour of Europe
ஐரோப்பாவிற்கான இறுதி சுற்றுப்பயணத்தில் ஒபாமா ட்ரம்ப் மீதான கவலைகளைச் சமாதானப்படுத்த முனைகிறார்
By Peter Schwarz
18 November 2016
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இறுதி ஐரோப்பிய சுற்றுப்பயணம் அரசியல் சமாதானப்படுத்தல் மற்றும் பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சிகளால் குணாம்சப்பட்டுள்ளது. வெளியேறவிருக்கும் இந்த அமெரிக்க ஜனாதிபதி, அவருக்கடுத்து பதவிக்கு வரவிருக்கின்ற டொனால்ட் ட்ரம்ப் மீதான அச்சங்களைச் சமாதானப்படுத்தவும், அவருடனான நெருக்கமான உறவுகளை ஊக்குவிக்கும் அடிப்படையில் அமெரிக்க மேலாதிக்க நேட்டோவின் அடித்தளத்தை மிக முக்கிய இராணுவ கூட்டணியாக தக்க வைக்கவும் முயன்று வருகிறார்.
ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கல், ஜேர்மன் தலைமையின் கீழ் ஒரு பலமான ஐரோப்பாவினது தலைவராக ஆகக் கூடியவர் என்றவர் கருதுவதால், ஒபாமா மேர்க்கெலை சார்ந்துள்ளார். அவர் பதவிக்கு அடுத்து வரவிருக்கின்றவரை ஒபாமா பெருமைப்படுத்துவது, ஜேர்மன் நாளிதழ் Süddeutsche Zeitung அவரை டொனால்ட் ட்ரம்ப் இன் "பத்திரிகை செய்தி தொடர்பாளர்" என்று வர்ணிக்கும் அளவிற்கு மிகவும் வெளிப்படையாக உள்ளது.
கிரீஸில் ஒரு சிறிய நிறுத்தத்தின் போது, அவர் சிக்கன கொள்கைகளுக்காக ஆழமாக வெறுக்கப்படும் கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் க்கு அவரது ஆதரவை வழங்கியதுடன், கப்பல் முதலாளியும் பில்லியனருமான Stavros Niarchos க்கு சொந்தமான கலாச்சார மையத்தில் ஓர் உரை நிகழ்த்திய பின்னர், ஒபாமா புதனன்று மாலை பேர்லின் வந்தடைந்து மேர்க்கெல் உடன் மூன்ற மணி நேர உணவு விருந்தில் கலந்து கொண்டார்.
வியாழக்கிழமையும் முழுவதுமாக ஒபாமா அவரது ஜேர்மன் விருந்து ஏற்பாட்டாளருடன் இருந்தார். சான்சிலர் அலுவலகத்தில் நடந்த ஓர் உத்தியோகபூர்வ கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பும், Der Spiegel மற்றும் அரசு ஒளிபரப்பு ஸ்தாபனம் ARD உடனான நேர்காணல்களும் நடந்தன. ஒபாமா வெள்ளியன்று முன்நண்பகல் புறப்படுவதற்கு முன்னதாக, அன்றைய காலை கூட்டத்தில் அவருடன் கலந்து கொள்வதற்கு பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு, பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே, இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சி மற்றும் ஸ்பானிஷ் பிரதம மந்திரி மரீனோ ரஜோய் ஆகியோர் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
“அட்லாண்டிக் இடையிலான நாடுகளது உறவுகளின் எதிர்காலம்" என்று தலைப்பிட்டு வியாழனன்று ஒபாமா மற்றும் மேர்க்கெல் கூட்டாக எழுதிய கட்டுரை ஒன்று Wirtschaftswoche இதழில் வெளியானது. அதில் ஜேர்மனி மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான நெருக்கமான உறவு புகழப்பட்டிருந்தது. இந்த நட்புறவு "சட்டத்தின் ஆட்சியின் கீழ் ஒரு பலமான ஜனநாயகத்தால் மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்படக் கூடிய தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கு நமது கூட்டு கடமைப்பாட்டை அடிப்படையாக" கொண்டிருந்தது.
அக்கட்டுரை சர்வதேச சட்டத்தின் உலகளாவிய அங்கீகரிப்பை "ஸ்திரப்பாடு மற்றும் செல்வ செழிப்புக்கான ஒரு முன்நிபந்தனையாக", அத்துடன் "மனித மதிப்புகளுக்கான நமது ஆழ்ந்த மரியாதை,” “நமது பூமண்டலத்தைப் பாதுகாத்தல்" மற்றும் ஏனைய "பொதுவான மதிப்புகளையும்" கையாண்டிருந்தது. பின்னர் அது அறிவிக்கையில், “அது மிகவும் பாதிப்பேற்படுத்துவதை நாம் கையாள்வது குறித்ததாகும், அதுவே நமது மதிப்புகளின் உண்மையான பலத்தை தீர்மானிக்கின்றது,” என்று குறிப்பிட்டது.
இத்தகைய பிசுபிசுப்பான மற்றும் பாசாங்குத்தனமான வார்த்தை பிரயோகங்கள், நேட்டோ மற்றும் மத்திய கிழக்கு போர்களைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. “நாம் ஒட்டுமொத்தமாக யூரோ-அட்லாண்ட் பகுதியின் பாதுகாப்பைப் பேண விரும்புகிறோம் என்பதாலேயே நமது நாடுகள் வடக்கு அட்லாண்டிக் கூட்டணிக்குள் (நேட்டோ) கூட்டு பாதுகாப்புக்கு கடமைப்பட்டுள்ளன. நமது குடிமக்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதாலும், சுதந்திரத்திற்கு எதிரான எதிரிகளிடம் நமது வாழ்வின் போக்கை நாம் தியாகம் செய்ய முடியாது என்பதாலும், ISIL ஐ எதிர்கொள்வதற்கான உலகளாவிய கூட்டணி உட்பட பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் நெருக்கமாக கூடி இயங்குகிறோம்,” என்று அது குறிப்பிட்டது.
அவரை அடுத்து வரவிருப்பவரும் இதே போக்கை ஆதரிப்பதாக ஒபாமா பேர்லினில் தயக்கமின்றி குறிப்பிட்டார். வலதுசாரி அதிதீவிர ஸ்டீபன் பானனை தலைமை மூலோபாயவாதி பதவியில் ட்ரம்ப் நியமித்திருப்பதும் மற்றும் UKIP தலைவர் நைஜல் ஃபாராஜ் உடனான சந்திப்பே ஐரோப்பிய அரசியல்வாதி உடனான அவர் முதல் சந்திப்பாக இருக்குமென்ற அவரது முடிவும் துல்லியமாக எதிர்விதமானதை எடுத்துக்காட்டவில்லையா என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட போது, ஒபாமா, "எனது சிந்தனை எப்போதுமே சாதகமானது,” என்று பதிலளித்தார். இதுதான் அவர் வாழ்க்கை அவருக்குக் கற்றுத் தந்திருக்கிறது. “பதவியின் உள்ளார்ந்த கடமைப்பாடு" ட்ரம்ப் க்கு இடமளிக்கும். இதில் அவருக்கு உதவ அவரால் ஆனமட்டும் அனைத்தும் செய்யவிருப்பதாக ஒபாமா தெரிவித்தார்.
ஒபாமா சான்சிலர் மேர்க்கெல் மீது பாராட்டுக்களையும், புகழுரைகளையும் பொழிந்தார். அவர் அப்பெண்மணியின் பலமான தலைமையை புகழ்ந்துரைத்ததுடன், உக்ரேன் நெருக்கடி மற்றும் சிரியா விவகாரத்தில் அவர் அமெரிக்காவுக்கு நெருக்கமாக ஒத்துழைத்ததாக தெரிவித்தார். நான்காவது முறையாக மேர்க்கெல் பதவி ஏற்பதை அவர் ஆதரிப்பாரா என்று வினவியபோது, மற்றொரு நாட்டு அரசியலில் அவர் தலையிடுவதில்லை என்று தெரிவித்த ஒபாமா, ஆனால் போட்டியிடுவதென்று மேர்க்கெல் முடிவெடுத்து, தான் வாக்களிப்பதாக இருந்தால், அவருக்கே அவர் வாக்களிப்பதாக தெரிவித்தார்.
ஆனால் ட்ரம்ப் அதுபோன்றவொரு போக்கை உண்மையில் ஆதரிக்கிறார் என்று அமெரிக்க-சார்பு ஊடக நிறுவனங்களை சமாதானப்படுத்தக் கூட அவர் சிரமப்பட்டார். Süddeutsche Zeitung பத்திரிகை வியாழனன்று எழுதுகையில், “இது, சமீபத்திய நாட்களில் என்ன நடந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளாத ஒருவர் பேசுவதைப் போலுள்ளது,” என்று குறிப்பிட்டு, ஒபாமாவின் ஏதென்ஸ் உரையை அப்பத்திரிகை உதறியது. அப்பத்திரிகை அதை "நல்லதொரு மழுப்பலாக" வர்ணித்ததுடன், ட்ரம்ப் இன் வளர்ச்சியை தடுக்க தகைமையற்றவராக நிரூபணமான அமெரிக்க ஜனாதிபதி "தன்னைத்தானே அவரது இறுதி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் ஐரோப்பாவின் மிகப் பெரிய ஏமாற்றுக்காரர், [கிரேக்க] பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் க்கு அடுத்து காண்கிறார்,” என்று குறிப்பிட்டது.
சுவிட்சர்லாந்தில் செயிண்ட். காலென் இல் சர்வதேச அரசியல் படிப்பிப்பவரும் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் ஆலோசனைக் குழு அங்கத்தவருமான ஜேம்ஸ் டபிள்யு. டேவிஸ் எழுதிய ஒரு கருத்துரையை அதே பத்திரிகை பதிப்பித்தது. அவர் ஐரோப்பாவில் நிலவும் கொந்தளிப்பான அச்சத்தை வர்ணிக்கையில், “ஏற்கனவே பலவீனமாக கருதப்படும் உலக ஒழுங்கிலிருந்து அடிப்படையான ஏதோவொன்று உடைந்து கொண்டிருக்கிறது,” என்றார். கடந்த காலத்தில், சகல அமெரிக்க "அரசாங்கங்களும், அது ஜனநாயகக் கட்சி தலைமையில் ஆகட்டும் அல்லது குடியரசுக் கட்சி தலைமையில் ஆகட்டும், சுதந்திர சந்தைகள் மற்றும் கூட்டு பாதுகாப்பின் அடிப்படை கோட்பாடுகளை அங்கீகரித்திருந்தன.” வெள்ளை மாளிகையின் ஒரு ஜனாதிபதி ஒருபோதும் "அமெரிக்க தலைமையிலான ஒழுங்கமைப்பின் அடிப்படை தூண்களைக் குறித்து பகிரங்கமாக கேள்வி எழுப்பியதில்லலை … ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அதை செய்துள்ளார்.”
அவர்களது கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில், ஒபாமாவும் மேர்க்கெலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்தினர், ட்ரம்ப் வெற்றியால் இதன் உடைவு தீவிரமடையக்கூடும். பிரிட்டன் வெளியேறுவதற்கான வெகுஜன வாக்கெடுப்பின் வெற்றியைக் கொண்டாடிய வலதுசாரி தேசியவாத சக்திகள், ஐரோப்பா எங்கிலும் வளர்ந்து வருகின்றன.
இத்தாலியில், மரியோ ரென்சி அரசாங்கம் டிசம்பர் தொடக்கத்தில் ஓர் அரசியலமைப்பு வெகுஜன வாக்கெடுப்பு வரவிருக்கின்ற நிலையில் இப்போது உயிர்பிழைப்பிற்கான போராட்டத்தில் உள்ளது. புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்ப்பவர்கள் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரியாவிலும் ஜனாதிபதி தேர்தல் நடக்கும், அதில் தீவிர வலது FPÖ வேட்பாளர் நோர்பேர்ட் ஹோபர் ஜெயிப்பதற்கான பலமான சாத்தியக்கூறுகள் உள்ளது. பிரான்சில், அடுத்தாண்டு வசந்தத்தின் தொடக்கத்தில் வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல்களில் தேசிய முன்னணியின் மரீன் லு பென் பெரிதும் மேலுயரலாம்.
அமெரிக்காவில் போலவே, இத்தகைய வலதுசாரி வெகுஜனவாத சக்திகளின் வளர்ச்சியானது ஒருபுறம் ஸ்தாபக கட்சிகள் மீது அதிகரித்துவரும் கோபம், மற்றும் மறுபுறம் ஒரு முற்போக்கான மாற்றீடு இல்லாததன் விளைவாகும். ஆளும் உயரடுக்குகள், சமூக கோபத்தை ஒரு பிற்போக்குத்தனமான முட்டுச்சந்துக்குள் திருப்பி விடக்கூடிய தீவிர வலது கட்சிகளைக் கண்டு அஞ்சுவதை விட ஒரு சுயாதீனமான, முதலாளித்துவ-எதிர்ப்பு திசையில் அபிவிருத்தி அடைந்து வரும் சமூக எதிர்ப்புக்கு மிகவும் அதிகமாக அஞ்சுகின்றன. அவை அவற்றிற்குள் வெறுமனே தந்திரோபாய கருத்து வேறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ளன. இதனால் தான் ஐரோப்பாவில் ட்ரம்ப் உடனான கூட்டுறவுக்கு ஒபாமா ஆலோசனை வழங்குகிறார்.