Print Version|Feedback
NATO announces largest troop deployments against Russia since Cold War
நேட்டோ ரஷ்யாவிற்கு எதிராக பனிப்போருக்குப் பிந்தைய மிகப் பெரிய துருப்பு நிலைநிறுத்தல்களை அறிவிக்கிறது
By Alex Lantier
8 November 2016
ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்காக வரவிருக்கும் மாதங்களில் நூறாயிரக் கணக்கான துருப்புகளை நேட்டோ ஆயத்த நிலையில் வைத்திருக்குமென உயர்மட்ட நேட்டோ அதிகாரிகள் திங்களன்று லண்டனின் டைம்ஸ் க்கு தெரிவித்தனர்.
அமெரிக்க தலைமையிலான இந்த இராணுவ கூட்டணி ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரட்டுவதற்காக பத்தாயிரக் கணக்கான இறுதியில் நூறாயிரக் கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான எண்ணிக்கையில் படைகளை அணித்திரட்டுவதை வேகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன் இப்போதைய 5,000 பலமான அவசரகால விடையிறுப்பு படைக்கு அப்பாற்பட்டு, நேட்டோ அதன் "இப்போதைய விடையிறுப்பு படையை" 40,000 ஆக மும்மடங்காக்கி வருவதுடன், நூறாயிரக் கணக்கான துருப்புகளை உயர் எச்சரிக்கை மட்டங்களில் நிறுத்தி வருகிறது.
டைம்ஸ் எழுதியது, “வெளியேறவிருக்கும் நேட்டோவிற்கான பிரிட்டனின் நிரந்தர பிரதிநிதி சேர் ஆடம் வெஸ்ட் கூறுகையில் 300,000 வரையிலான இராணுவ சிப்பாய்களது விடையிறுப்பு நேரத்தை சுமார் இரண்டு மாதங்களுள்ளாக வேகப்படுத்துவது நோக்கமாக இருக்கலாமென அவர் கருதுவதாக தெரிவித்தார்.”
நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் கூறுகையில், “நாங்கள் எதை தொடர்-நடவடிக்கை படைகள் (follow-on forces) என்று குறிப்பிடுகிறோமோ… அதை ஏற்பாடு செய்து வருகிறோம். அங்கே நேட்டோ கூட்டாளிகளின் ஆயுதப்படைகளில் நிறைய எண்ணிக்கையிலானவர்கள் இருக்கிறார்கள். ஒரு சிறிய கால அவகாசத்தில் அவர்களில் நிறையப் பேரை எவ்வாறு தயார்படுத்தலாமென நாங்கள் பார்த்து வருகிறோம்,” என்றார். டைம்ஸ் செய்தியின்படி, “கூட்டணியின் மூன்று மில்லியன் சிப்பாய்கள், மாலுமிகள், விமானிகள் மற்றும் கடற்படை வீரர்களில் பலரது தயார்நிலையை மேம்படுத்துவதற்கான" வழிவகைகளை நேட்டோ பரந்தளவில் பரிசீலித்து வருகிறது என்பதை ஸ்டொல்டென்பேர்க் விளங்கப்படுத்தினார்.
ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, பனிப்போர் முடிவுக்கு வந்ததற்குப் பின்னர், இந்த மிகப்பெரிய நிலைநிறுத்தல்களின் இலக்கில் வைக்கப்பட்டிருப்பது ரஷ்யாவாகும்.
“பல ஆண்டுகளாக கணிசமானளவில் இராணுவ ஆயத்தப்படுத்தல்களை நடைமுறைப்படுத்தி, நிஜமான அர்த்தத்தில் 2000 க்குப் பின்னர் இருந்து பாதுகாப்பு செலவினங்களை மும்மடங்காக்கி; புதிய இராணுவ தகைமைகளை அபிவிருத்தி செய்து; அவற்றின் படைகளைப் பயிற்றுவித்தும் அண்டைநாடுகளுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பிரயோகித்தும் உள்ள மிகவும் ஆக்ரோஷமான ஒரு ரஷ்யாவை நாம் கண்டுள்ளோம்,” என்று ஸ்டொல்டென்பேர்க் தெரிவித்தார். “நேட்டோ கூட்டாளிகள் மத்தியில் ஐரோப்பாவில் ரஷ்யா பிரச்சாரம் செய்து வருவதையும் நாம் பார்க்கிறோம், துல்லியமாக இந்த காரணத்தினால் தான் நேட்டோ விடையிறுப்பு காட்டுகிறது. நாம் பனிப்போர் முடிந்ததற்குப் பின்னர் நமது கூட்டு பாதுகாப்பை மிகப்பெரியளவில் கூடுதலாக பலப்படுத்தி விடையிறுத்துள்ளோம்,” என்றார்.
இத்தகைய அறிக்கைகள், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் மக்களின் முதுகுக்குப் பின்னால் நேட்டோ எவ்வாறு ரஷ்யாவிற்கு எதிராக ஒரு மூர்க்கமான போருக்குத் தொடர்ந்து திட்டமிட்டு வந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. அனைத்திற்கும் மேலாக, அமெரிக்காவின் தேர்தல் முடிவும் மற்றும் ஐரோப்பிய நேட்டோ நாடுகளில் நடக்கவிருக்கும் 2017 தேர்தல்களின் முடிவும் என்னவாக இருந்தாலும், பெண்டகன் மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளது தலைமை தளபதிகளது இராணுவ ஆயத்தப்படுத்தல்கள் மற்றும் போர் தயாரிப்புகள் இன்னும் முன்னோக்கியே செல்ல இருக்கின்றன.
ஐரோப்பாவில் ரஷ்ய "பிரச்சாரம்" மீதான ஸ்டொல்டென்பேர்க்கின் தெளிவற்ற தாக்குதல், ஸ்டொல்டென்பேர்க் போன்ற நேட்டோவின் மற்றும் மேற்கின் அதிகாரிகளால் ஊக்குவிக்கப்படும் ரஷ்ய-விரோத பிரச்சாரம் மீது மக்களது நம்பிக்கையின்மை, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் உள்ளுணர்வாகவே நிலவும் போர் எதிர்ப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டுகிறது.
மோதலை ரஷ்யாவே தொடங்கும் ஒரு சூழலில் கூட, கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு அணுஆயுத பிரயோகமில்லா போரில் நேட்டோ பங்கெடுப்பதற்கு பரந்த சர்வதேச எதிர்ப்பு இருப்பதைக் கடந்த ஆண்டு பியூ (Pew) கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. இத்தகைய பாசாங்குத்தனமான நிலைமைகளின் கீழ், ஜேர்மனியர்களில் 58 சதவீதத்தினர், பிரெஞ்சு மக்களில் 53 சதவீதத்தினர், மற்றும் இத்தாலியர்களில் 51 சதவீதத்தினர் ரஷ்யாவிற்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் எதிர்க்கின்றனர். கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்ய படைகளை தாக்குவதென்ற நேட்டோவின் முடிவு, அணுஆயுத போருக்கு இட்டுச் செல்லும் என்று கருத்துக்கணிப்பாளர்கள் குறிப்பிட்டிருந்தால், ஐயத்திற்கிடமின்றி, அக்கருத்துக்கணிப்பில் போருக்கு எதிரான எதிர்ப்பு இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும்.
இந்த எதிர்ப்பானது, சோவியத் காலகட்டத்திற்குப் பிந்தைய ஏகாதிபத்திய மத்திய கிழக்கு போர்கள் மீதான ஆழ்ந்த அதிருப்தியிலும் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் இரண்டு உலக போர்களின் நினைவுகளிலும் வேரூன்றியுள்ளது.
ஐரோப்பாவில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் போர் குறித்த பிரதான அச்சுறுத்தல் ரஷ்யாவிலிருந்து வரவில்லை, மாறாக நேட்டோ நாடுகளில் இருந்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில், நேட்டோவின் ஏகாதிபத்திய சக்திகள் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் குண்டுவீசி நாடுகள் மீது படையெடுத்துள்ளன. ஐரோப்பாவிற்குள்ளேயே, அவை 1990 களின் பால்கன் போர்களில் சேர்பியா மற்றும் கொசோவொ மீது குண்டுவீசியதுடன், நேட்டோவின் எல்லைகளை கிழக்கில் நூறு மைல் கணக்கில் விரிவாக்கின மற்றும் 2014 இல் உக்ரேனில் ரஷ்ய-ஆதரவு அரசாங்கத்தை கவிழ்க்க ஒரு வன்முறையான, பாசிசவாத தலைமையிலான பதவிக்கவிழ்ப்பை ஆதரித்தன.
நேட்டோ கொள்கையின் ஆக்ரோஷ தன்மை மீண்டுமொரு முறை கடந்த வெள்ளியன்று வெளிப்பட்டது, அப்போது NBC News அறிவிக்கையில், அமெரிக்க இணையவழி போர்முறை பிரிவுகள் ரஷ்ய மின்துறை, இணையம் மற்றும் இராணுவ வலையமைப்புகளை ஊடுருவியதாக குறிப்பிட்டது. “அதற்கு அவசியமென அமெரிக்கா கருதினால் இரகசிய அமெரிக்க இணையவழி ஆயுதங்களால் தாக்குதலுக்கு உள்ளாகும்" விதத்தில் இப்போது இவை உள்ளதாக NBC அறிவித்தது.
அச்செய்தியில் எடுத்துக்காட்டப்பட்ட நடவடிக்கைகளை ரஷ்ய அதிகாரிகள் கண்டித்தனர், ஒபாமாவின் வெள்ளை மாளிகை அவ்விடயத்தில் மவுனமாக இருந்தது. ரஷ்ய வெளியுறவு அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறுகையில், “அமெரிக்க நிர்வாகத்திலிருந்து எந்த உத்தியோகபூர்வ எதிர்வினையும் வரவில்லை என்றால், அமெரிக்காவில் அரசு இணைய பயங்கரவாதம் இருக்கிறது என்பதே அதன் அர்த்தம். அமெரிக்க ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட தாக்குதலின் அச்சுறுத்தல்கள் நடந்தால், வாஷிங்டனை மாஸ்கோ குற்றஞ்சாட்டுவது நியாயமானதே என்றாகும்,” என்றார்.
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதன் புவிசார் மூலோபாயரீதியில் பேரழிவுகரமான விளைவுகள் முன்பு எப்போதையும் விட அதிக வெளிப்படையாக தெரிகின்றன. நேட்டோ துருப்புகளைக் கொண்டோ அல்லது பால்டிக் குடியரசுகளில் இருந்து போலாந்து, உக்ரேன் மற்றும் ரோமானிய வரையில் நீண்ட ஒரு புவியியல் பாதையில் நிறுத்தப்பட்டுள்ள பினாமி படைகளைக் கொண்டோ —ரஷ்ய எல்லைகளில் இருந்து குறைந்த தூரத்தில் அல்லது அங்கிருந்தே— ரஷ்யாவிற்கு எதிராக இப்போது, ஓர் அணுஆயுத மோதலாக தீவிரமடையக்கூடிய, நேட்டோவின் ஒரு மிகப்பெரும் போர் வெடிக்கக் காத்திருக்கிறது.
ரஷ்ய இராணுவத்தால் ஐரோப்பா மீது திடீரென ஒரு சாதாரண படையெடுப்பை எதிர்கொள்வதற்கு நேட்டோவின் திட்டங்களானது தற்காப்பு தயாரிப்புகள் கிடையாது என்பதையே ஸ்டொல்டென்பேர்க் கருத்துக்களைக் குறித்த ஓர் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுபோன்றவொரு சூழலில், நேட்டோவின் "தொடர் நடவடிக்கை" படைகளை அணிதிரட்ட 60 இல் இருந்து 180 நாட்களாகும் என்பதால் அவற்றின் பரந்த படைப்பிரிவுகளைத் தோற்கடிக்கும் வகையில், ரஷ்ய டாங்கி அணிவரிசை நேட்டோவின் பல்வேறு அவசரகால விடையிறுப்பு படைகளின் சில ஆயிர அல்லது பத்தாயிரக் கணக்கான துருப்புகளை நிர்மூலமாக்கிவிடும்.
இதற்கு பதிலாக, “தொடர் நடவடிக்கை படைகளின்” அடுக்குகளை அடுத்தடுத்து அணிதிரட்டுவதற்கான திட்டம், நேட்டோவின் கூட்டு இராணுவ பலத்தை படிப்படியாக இன்னும் நிறைய அதிகரிப்பதன் மூலமாக ஒரு நெருக்கடி நிலைமையில் ரஷ்யாவை அச்சுறுத்த அதை அனுமதிக்குமென உத்தேசிக்கப்படுகிறது. நேட்டோவின் கூட்டு இராணுவ பலம், அதன் 28 அங்கத்துவ நாடுகளுக்கு இடையே பிளவுகள் இருந்தாலும், ரஷ்யாவின் பலத்தை ஒன்றுமில்லாததாக ஆக்கிவிடுகிறது. ரஷ்யாவின் 145 மில்லியன் மக்கள்தொகை, நேட்டோ நாடுகளது 906 மில்லியன் மக்கள்தொகையை விட மிகவும் குறைவானது.
நேட்டோ திட்டநிரலின் ஆக்ரோஷமான குணாம்சம், லித்துவேனியா, லாட்வியா மற்றும் எஸ்தோனியாவின் பால்டிக் குடியரசுகளது இராணுவ நிலைமைகள் குறித்து கடந்த மாதம் சிஐஏ உடன் தொடர்புபட்ட ராண்ட் பெருநிறுவன சிந்தனைக்குழாம் (Rand Corporation think tank) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பால்டிக் குடியரசில் நேட்டோ நிலைநிறுத்தி உள்ள சிறிய இராணுவ படைகள் "ஒரு பேரழிவுகரமான போரை தடுப்பதற்கு பதிலாக, ஒரு பேரழிவுகரமான போரை வரவேற்கின்றன" என்று ராண்ட் எழுதியது. ரஷ்ய படைகள், உண்மையில் அவை படையெடுப்பு நடத்தினால், அண்ணளவாக 60 மணி நேரத்தில் இந்நாடுகளைக் கைப்பற்றிவிடும்.
இந்த அடிப்படையில், அந்த சிந்தனைக் குழாம் குறிப்பிடுகையில், பால்டிக் குடியரசுகளில், நடைமுறையளவில் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் இன் நுழைவாயிலில், ஒரு பரந்த நேட்டோ இராணுவ கட்டமைப்பைத் தொடங்க அழைப்புவிடுத்தது. அது "பால்டிக் நாடுகள் வேகமாக கைப்பற்றப்படுவதைத் தடுக்க … மூன்று கனரக கவச படைப்பிரிவுகள் உட்பட சுமார் ஏழு படைப்பிரிவுகளது ஒரு படையுடன் —விமான பலம், நிலத்திலிருந்து தாக்குவதற்கான குண்டுகள், மற்றும் நிலத்தில் ஏனைய உதவி தளவாடங்களை போதுமானளவிற்கு உதவிக்கு வைத்திருக்க வேண்டும் மற்றும் விரோதங்கள் தொடங்கியதுமே சண்டையிடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்,” என்றது எழுதியது. நேட்டோ நாடுகளுக்கு இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2.7 பில்லியன் டாலர் செலவு பிடிக்கும்.
நேட்டோ நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக அவற்றின் அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்துகின்ற நிலையில், நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலேயே கூட அங்கே அதிகரித்தளவில் கசப்பான மோதல்கள் உள்ளன. புரூசெல்ஸ் இல் கடந்த மாதம் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் வாஷிங்டன் ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடையாணைகளுக்கு அழைப்புவிடுத்த நிலையில், இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சி அதை வெளிப்படையாகவே எதிர்த்தார், மேலும் பேர்லின் மற்றும் பாரீஸ் அதிகாரிகள் ஒரு சுயாதீனமான ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கு அழைப்புவிடுக்கின்ற வேளையில் ஜேர்மனி மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பதட்டங்கள் ஆழமடைந்து வருகின்றன.
ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க-தலைமையிலான அதிகரித்த இராணுவ ஆத்திரமூட்டல்களுக்கான சாத்தியக்கூறுகள் ஐரோப்பாவிற்குள் பதட்டங்களை கூர்மையாக்கி வருகிறது. “கிளிண்டன் அல்லது ட்ரம்ப் யார் வென்றாலும், ஜேர்மனியை பொறுத்த வரையில் விடயங்கள் அசௌகரியமாக இருக்கும்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் ஜேர்மன் செய்தியிதழ் Der Spiegel, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க-தலைமையிலான ஓர் ஆக்ரோஷ கொள்கையின் நீண்டகால விளைவுகளைக் குறித்து எச்சரித்தது, அதில் அது வெள்ளை மாளிகையை அவ்விரு வேட்பாளர்களில் யார் கைப்பற்றினால் அதை சார்ந்தில்லாமல் இது நடக்குமென அனுமானித்திருந்தது.
“உங்களுக்கு புட்டினிடம் இருந்து, (அணுஆயுத) அமெரிக்க பாதுகாப்பு வேண்டுமென்றால், நீங்கள் நிறைய பணம் செலுத்த வேண்டும் அல்லது உங்களை நீங்களே மீள்-ஆயுதமயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கும்" என்று அப்பத்திரிகை குறிப்பிட்டது.