Print Version|Feedback
Sri Lankan workers and students discuss Trump’s election
இலங்கை தொழிலாளர்களும் மாணவர்களும் ட்ரம்ப் தேர்வானதைப் பற்றி கலந்துரையாடினர்
By our correspondents
29 November 2016
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் "ட்ரம்ப் தேர்வானதன் சர்வதேச தாக்கங்கள்" பற்றி நவம்பர் 30 அன்று கொழும்பில் நடத்தவுள்ள பொது கூட்டத்துக்காக, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஒரு விரிவான பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.
கடந்த மாதம் கொழும்பில் மண்டபம் நிறைந்த ஒரு கூட்டத்தில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட் இணைய வழியாக உரையாற்றினார். அதைத் தொடர்ந்தே ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றியின் உலகளாவிய தாக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது.
கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்வுக்கு வழிவகுத்த முக்கியமான அரசியல் காரணிகள் தெளிவுபடுத்தப்படும். குறிப்பாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் வணிகச் சார்பு தன்மை மற்றும் பல்வேறு போலி-இடது இயக்கங்களின் பங்கு பற்றி தெளிவுபடுத்தப்படும். பேச்சாளர்கள், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள பாரிய ஆபத்துக்கள் பற்றி விபரிப்பதோடு ஏகாதிபத்திய போர் அச்சுறத்தல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மீதான அதிகரித்து வரும் தாக்குதல்களை எதிர்க்க அவசியமான சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டங்கள் பற்றியும் விளக்குவர்.
அரசாங்க மற்றும் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சிகள் உட்பட, இலங்கை ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவும், ட்ரம்ப்பின் ஆதரவுக்கு அழைப்புவிடுக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும், ட்ரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கத் தயார் என்பதை கூறியுள்ளனர். சிங்கள தீவிரவாத குழுக்கள் ட்ரம்ப்பின் தேர்வால் பலமடைந்துள்ளதோடு அவரது வெற்றியை சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை தூண்டிவிட பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றன.
அரசியல் ஸ்தாபகம் மற்றும் செய்தி ஊடகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்பங்களின் மத்தியிலும், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்களுடன் பிரச்சினைகளை கலந்துரையாடுவதில் ஆர்வமாக இருந்தனர். ட்ரம்ப்பின் வெற்றியில் பிரதிபலித்துள்ள சர்வதேச மாற்றங்கள் பற்றி பேச விரும்பியதுடன் அமெரிக்க தேர்தல் முடிவுகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகளும் எழுப்பினர்.
சோ.ச.க. உறுப்பினர்கள் கொழும்பில் தொழிலாள வர்க்க புறநகர் பகுதியான ஒபயசேகரபுறவில் பிரச்சாரம் செய்தனர்.
ஒரு எழுத்தரான ரம்யா, கூறியதாவது: "ட்ரம்ப் மிகவும் ஊழல் மிக்க தொழிலதிபர். அமெரிக்காவில் சமத்துவமின்மை அவரது ஆட்சியின் கீழ் தாங்க முடியாதளவு அதிகரிக்கும் என்பதை புரிந்து கொள்ள அது போதுமானது. உலகம் முழுவதும் அனைத்து தொழிலாளர்களும் இன்று எதிர்கொள்ளும் யதார்த்தம் இதுவே."
அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் "அமெரிக்கத் தேர்தல் பற்றிய செய்திகளில் சிறு சிறு பகுதிகளைத் தவிர வேறு ஒன்றையும் நாம் காணவில்லை. ஒரு யுவதியாக, இது போன்ற முக்கியமான வெளியுறவு விவகாரங்கள் பற்றிய ஒரு அறிவுசார் கலந்துரையாடலை வேறு எங்கும் நான் காணவில்லை," என்று அவர் விளக்கினார்.
கொடூரமான வேலை நிலைமைகள் மற்றும் வேலை நேரம் நீடிக்கப்படுவதனாலும் பெரும்பாலான மக்கள் அறிவார்ந்த அல்லது அழகியல் விஷயங்களுக்கு நேரம் செலவிட முடியாது உள்ளனர் என்றும் ரம்யா கூறினார். "இது மிக கடுமையான சூழ்நிலை தான். மக்கள் இருள் மற்றும் அறியாமைக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றனர்," என்றார் ரம்யா.
டி.பி. குமார,
டி.பி. குமார, ஒரு அரசாங்க அச்சக தொழிலாளி: "ஊடகங்கள் கிளின்டனின் தவிர்க்க முடியாத வெற்றி பற்றி சித்தரித்தன. நான் ட்ரம்ப் வெற்றி பெற்றதை கேள்விபட்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன். எவ்வாறெனினும், ஹிலாரி அல்லது ட்ரம்ப் -இருவரும் அமெரிக்காவிலும் வேறெங்கிலும் சாதாரண மனிதர்களுக்கு தீங்கானவர்கள்... இலங்கையிலும் அதே தான். புதிய [சிறிசேன-விக்கிரமசிங்க] அரசாங்கத்தை கொண்டு வந்ததன் விளைவுதான் என்ன? மக்கள் அதே முறையில் அல்லது அதைவிட இன்னும் மோசமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறனர்."
குமார அனைத்து பெரிய கட்சிகளின் மீதும் அதிருப்தி கொண்டிருந்தார். உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் மற்றொரு உலக போர் அச்சுறுத்தல் பற்றி விளக்கிய போது, அவர் கூறியதாவது: "உங்களுடன் பேசிய பிறகு, இப்போது நான் அதன் உண்மையான காரணத்தை புரிந்துகொண்டேன். மற்றொரு உலகப் போர் ஆபத்து உள்ளது. அந்த அச்சுறுத்தல் ட்ரம்ப் ஆட்சியின் கீழ் தீவிரப்படுத்தப்படும் என்று நான் நினைக்கிறேன்."
மாணவர்கள் மத்தியில் பிரச்சாரத்தின் போது பல கேள்விகள் எழுந்தன.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் சில சர்வதேச உறவுகள் பற்றி கற்கும் மாணவர்கள் மத்தியில் இருந்த ஆஷா கூறியதாவது: "அமெரிக்க ஏகாதிபத்தியம் பல நாடுகளில் மக்களுக்கு மிகப்பெரிய துன்பங்களை ஏற்படுத்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஒபாமா அவற்றை விரிவாக்கினார் ட்ரம்ப் அவற்றை உக்கிரமாக்குவார்."
குழுவில் மற்றொரு மாணவியான இரேஷா முன்வந்து கேள்வியெழுப்பினார்: "ட்ரம்ப், வலுவான அசையாத முடிவுகளை எடுத்து உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஒழிக்க ஒரு கடுமையான கொள்கையை பின்பற்றும் ஒரு மனிதனாக நாம் நினைக்க முடியாது?” மிகவும் அதிர்ச்சியான ஈவிரக்கமற்ற பயங்கரவாத தாக்குதல்களை உண்மையில் மேற்கொண்டிருப்பது அமெரிக்காவே, அது தனது பூகோள மூலோபாய நலன்களுக்காக ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத குழுக்களை பயன்படுத்தி வருகின்றது என்பதை பிரச்சாரகர்கள் விளக்கினர்.
இரேஷாவும் மற்ற மாணவிகளும் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.
இரேஷா மற்றொரு கேள்வியை எழுப்பினார்: "ட்ரம்ப் ஒரு ஜனநாயகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இப்போ என்ன செய்ய முடியும்?" ட்ரம்ப்புக்கு அல்லது ட்ரம்ப் அமெரிக்க மக்கள் மீதும் உலகின் மீதும் தினிக்கக் கூடிய அழிவை நிறுத்துவதற்கு எந்த முதலாளித்துவ மாற்றீடும் இல்லை என்று பிரச்சாரகர்கள் விளக்கினார். உலகளாவிய போர் மற்றும் பாசிச அபாயத்தை தோற்கடிக்க கூடிய ஒரே ஒரு சக்தி சோசலிச முன்னோக்கை ஆயுதமாகக் கொண்ட சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே.
சதுரங்க
இறுதி ஆண்டு மருத்துவ பீட மாணவன் சதுரங்க, ட்ரம்ப்பின் வேலைத் திட்டத்தின் பாசிச தன்மை, குறிப்பாக அவரது குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளை பற்றி கவலை வெளிப்படுத்தினார். "அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது சபதம் எடுத்துக்கொண்டதை செயல்படுத்தினால், அமெரிக்காவில் குடியேறிய மக்கள் புதிய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் தொந்தரவை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்."
சதுரங்க, ஐ.எஸ்.ஐ.எஸ். உருவாக்கத்தில் அது வாஷிங்டனின் ஆதரவில் அமைந்தது என்பதை வாசித்ததாக அவர் பிரச்சாரகர்களிடம் கூறினார். "இப்போது எனக்கு தெளிவாகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இத்தகைய மூலோபாயங்கள் மற்றொரு உலக போரை சாத்தியமாக்குகிறது என எனக்கு தெளிவாக தெரிகிறது, எதுவும் ட்ரம்ப்பின் கீழ் மாற்றப்படாது. ஆனால் நாம் எப்படி உலக சக்திகளால் தொடுக்கப்படும் ஒரு போரை நிறுத்த முடியும்" என அவர் கேட்டார். தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் பிரச்சாரம் பற்றி ஒரு நீண்ட கலந்துரையாடல் அங்கு நடந்தது.
ஒரு பெண் முஸ்லீம் மாணவி தெரிவித்ததாவது: "இதுவரை மற்ற நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளே உலக அரசியல் அரங்கின் மையத்திற்கு வந்துள்ளது. ஆனால், இந்த தேர்தல், அமெரிக்க சமூகத்தில் உள்ள நெருக்கடியை உலகம் முழுவதுக்கும் காட்டியுள்ளது. அமெரிக்க மக்கள் அவர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்ப்பதை விரும்புகின்றனர், ஏனைய நாடுகளுடன் போர் நடத்துவதை அவர்கள் விரும்பவில்லை என நான் நினைக்கிறேன்."
மற்றொரு மாணவி, ட்ரம்ப் பாசிசத்துக்கு அழைப்பு விடுப்பதையும் அவரது "இஸ்லாமிய எதிர்ப்பைப்" பற்றி தனது கவலைகளை வெளிப்படுத்தினர். அவர் கூறியதாவது: "அவர் உலகம் முழுவதும் பிரச்சினைகளை உருவாக்குவார். ட்ரம்ப் மத்திய கிழக்கில் போர்களை நிறுத்துவார் என்று நான் நினைக்கவில்லை. அநேகமாக அவர் மேலும் கொடூரமாக அவற்றைத் தொடர்வார். ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால், அவர் நாட்டுக்குள் தங்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும் தனது சொந்த மக்களின் அழுத்தத்தை எதிர்கொள்வார்."
சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகருடனான கலந்துரையாடலில் பிரதீப்
ஒரு முகாமைத்துவ மாணவனான பிரதீப், ஆரம்பத்தில், ட்ரம்ப்பின் வெற்றியை சுரண்டிக்கொள்ளும் தேசியவாத பிரச்சாரத்தின் ஆதரவை பிரதிபலித்தார். சில கலந்துரையாடலின் பின்னர், அவர் கூறியதாவது: "இதற்கு முன் நான் பெற்றிராத உங்கள் விளக்கத்தினால் நான் இப்போது தெளிவாகியுள்ளேன். இனம், மதம், வகுப்பு மற்றும் பாலினம் அல்லது வேறு எந்த வகை சமுதாயத்தின் அடிப்படை பிரிவுகளுக்கும் அப்பால், மற்றும் எந்தவொரு அரசியல் கட்சியின் கொள்கைகளுக்கும் அப்பால், சமுதாயத்தில் அடிப்படைப் பிளவு வர்க்கப் பிளவே," என்றார்.
உலக சோசலிச வலைத் தளத்தின் வழக்கமான வாசகரும் பல்கலைக்கழக பட்டதாரிமான ஒருவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றிய உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வுக்கு பாராட்டைத் தெரிவித்தார். "நான் தேர்தல் பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் பல கட்டுரைகளை படித்தேன்," என்று அவர் கூறினார். "நான் உலக சோசலிச வலைத் தளம் தவிர்ந்த வேறு எங்கும் ஜனாதிபதி தேர்தலில் பற்றிய அந்தளவு பரந்த மற்றும் அறிவியல் ஆய்வை காணவில்லை."