ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indo-Pakistan tensions escalate

தீவிரமாகிவரும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள்

By Wasantha Rupasinghe 
8 November 2016

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசமுள்ள சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில், நடைமுறையில் இருக்கும் எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டுப் பகுதி (LoC) இன் இரு புறங்களிலும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே புவிசார் அரசியல் பதட்டங்கள் சென்ற வார இறுதியில் அதிகரித்து வருகின்றது. கடந்த இரண்டு வாரங்களாக நடந்த இதுபோன்ற இராணுவ மோதல்களில் இரண்டு டஜனுக்கும் மேற்பட்டோர், அதிலும் பெரும்பாலும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்திய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவரின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சமீபத்திய தாக்குதலில் பாகிஸ்தானியரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் பூஞ்ச் மாகாண கிருஷ்ணா கட்டி துறையில் இரண்டு இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டு, மேலும் இரண்டு சிப்பாய்கள் மற்றும் மூன்று அப்பாவி பொது மக்களும் காயமடைந்தனர். இது தொடர்பாக, "இந்திய படையினரும் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறார்கள், அதனால் பாகிஸ்தான் இராணுவ சாவடிகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது" என்று லெப்டினென்ட் கேர்னல் மணிஷ் மேத்தா பெருமையுடன் அறிவித்தார்.

இந்திய உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோளிட்டு, "இந்திய இராணுவத்தின் விக்டர் சாவடியை பாகிஸ்தான் இலக்குவைத்து தாக்கிய அதேவேளையில், இந்திய துருப்புக்களின் பதிலடி துப்பாக்கிச் சூடு தாக்குதலினால் அவர்களுடைய கோப்ரா சாவடியில் தீப்பிடித்துக் கொண்டது. இந்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தானிலும் சில உயிர் இழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும் அதன் சரியான எண்ணிக்கையை அறிய இயலவில்லை" என்ற தகவலை ஒரு ஊடகம் வெளியிட்டது.

நான்கு நாட்கள் சிறு இடைவெளிக்கு பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பீரங்கித் தாக்குதல் நடந்தது. அதற்கு முந்தைய ஞாயிறன்று பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரின் "கேரான் பகுதியில்" நான்கு பாக்கிஸ்தான் இராணுவ சாவடிகள் அழிக்கப்பட்டபோது, "பெரும் உயிரிழப்புகள்" ஏற்பட்டது என்று இந்திய இராணுவம் தெரிவித்தது. அக்டோபர் 28 அன்று "பயங்கரவாத" ஊடுருவல்காரர்களால் இந்திய சிப்பாய் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த "பாரிய துப்பாக்கிச் சூடு தாக்குதல்" நிகழ்த்தப்பட்டு இருக்கலாம்.

அபாயகரமான மோதல்களை முன்னிலைப்படுத்தி எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்துவரும் தாக்குதல்கள் அணுஆயுதமேந்திய நாடுகளை போரின் விளிம்புக்கே இட்டுச் செல்கின்றது. ஜம்மு மற்றும் காஷ்மீர் இல் செப்டம்பர் 18 அன்று ஊரி இந்திய இராணுவத் தளம் மீது நிகழ்த்தப்பட்ட இஸ்லாமிய பிரிவினைவாதிகளின் தாக்குதல்களை குற்றம்கூறி, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் பாக்கிஸ்தானுக்கு எதிராக ஒரு கடும் இராணுவ பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இரு அரசாங்கங்களுமே பிற்போக்கு இனவாதத்தையும் மற்றும் இராணுவவாதத்தையும் கிளறிவிடுவது, துணைக் கண்டத்தில் வெடிக்கும் தன்மையுள்ள பதட்டங்களை உருவாக்குகின்றன. வேவுபார்ப்புக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இரு நாடுகளின் தலைநகரங்களிலிருந்து இராஜதந்திரிகளின் வெளியேற்றங்களும் மற்றும் மீளப்பெறுதல்களும் நிகழ்த்தப்பட்டன. இரண்டு நாடுகளுமே "உயர்ஸ்தானிகர்களை தற்காலிகமாக மீளஅழைக்கலாம்" என பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் டிரிபியூன் நவம்பர் 4 இல் அறிக்கை வெளியிட்டது.

கடந்த வியாழக்கிழமையன்று, ஒரு அசாதாரண நிகழ்வாக, பாக்கிஸ்தான் வெளியுறவு அலுவலகம் எட்டு இந்திய வெளியுறவு அதிகாரிகளை, ஆராய்ச்சி மற்றும் பகுப்பு அமைப்பு (RAW) மற்றும் இந்திய புலனாய்வுத் துறை (IB) போன்ற இழிபேர்போன இந்திய உளவுத்துறை நிறுவனங்களின் முகவர்கள் என முத்திரை குத்தியது. மேலும் செய்தி தொடர்பாளர் நபீஸ் ஜக்காரியா, "நீங்கள் அறிந்த வகையில், பாகிஸ்தானில், RAW மற்றும் IB ஆகிய இந்திய உளவுத்துறை நிறுவனங்களை சேர்ந்த பல இந்திய வெளியுறவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இராஜாங்க வெளியுறவுப் பணிகள் என்ற போர்வையில், தீவிரவாத ஒருங்கிணைப்பு மற்றும் சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது" என்பதை ஊடகத்தின் மூலம் தெரிவித்தார்.

"வேவு பார்த்தல், பலூசிஸ்தான் மற்றும் சிந்து இல் நாசவேலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்தல்," "சீனா பாகிஸ்தான் பொருளாதார இணைவழியை (CPEC) சதித்திட்டத்தின் மூலம் நாசப்படுத்துத்தல்," "கில்கிட்-பல்திஸ்தானில் அமைதியின்மை உருவாக்குதல்," "பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் உறவுகளுக்கு ஊறு விளைவித்தல்," "புனையப்பட்ட ஆதாரங்களுடன் பாகிஸ்தான் அரசை பயங்கரவாத ஆதரவு அரசாக சித்தரித்தல்," "குறுங்குழுவாதங்களை தூண்டுதல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் பாகிஸ்தானை அவமதித்தல்" பிரச்சாரம், "பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் (AJK) பகுதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளே காஷ்மீரின் சீரழிவுக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டுவது மற்றும் இந்தியா வசமுள்ள பாகிஸ்தான் (IOK) இன் சுய நிர்ணய உரிமைக்கான உள்நாட்டு இயக்கம் குறித்து சர்வதேச சமூகத்தை தவறுதலாக வழிநடத்துவது," போன்ற ஒரு நீண்ட குற்றச்சாட்டு பட்டியலை பாகிஸ்தான் நிர்வாகிகள் இந்தியாவின் மீது சுமத்துகின்றனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதை இந்திய பிரதம மந்திரி மோடியின் அரசாங்கம் எவ்விதத்திலும் ஒளிவுமறைவாக வைத்திருக்கவில்லை. இந்தியா வசமுள்ள காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவத்தின் மீது பாகிஸ்தானால் முன்வைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை மறுதலிக்க அந்த மாகாணத்தில் இஸ்லாமாபாத்தின் அட்டூழியங்களை இந்திய பிரதமர் மேற்கோள் காட்டுகிறார். மேலும், பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்காக, இராஜதந்திர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்கும் ஐ.நா. போன்ற சர்வதேச அரங்கில் பலூசிஸ்தான் விவகாரத்தை மோடி பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

மேற்கு சீனாவை பாகிஸ்தான் துறைமுக நகரம் குவாடார் உடன் இணைக்கும் வகையிலான இரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் குழாய் வழிகள் அடங்கிய ஒரு பிணையத்தினை அமைக்க காரணமாக இருக்கும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்துக்கு (CPEC) இந்தியா எதிர்ப்பாக உள்ளது. இந்திய உரிமை கோருதல்களுக்கு உட்பட்ட பகுதிகளான கில்கிட்-பல்திஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதிகளில் தான் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஊடறுத்து செல்கின்றது என்ற காரணத்தினால் எதிர்ப்பதாக புது தில்லி குறிப்பிடுகின்றது. ஆனால், இந்த வழித்தடம் பாகிஸ்தானுக்கும் மற்றும் அதன் மற்றொரு பிராந்திய போட்டியாளரான சீனாவுக்கும் பொருளாதார ஊட்டம் அளிக்கும் என்பதே இந்தியாவின் உண்மையான கவலையாகும்.

மோடி தலைமையில் இந்தியா, அமெரிக்கா உடன் இன்னும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு சீனக் கூட்டாளிகள் மற்றும் அதன் மூலோபாய கூட்டணிகளை சுற்றிவளைக்கும் சந்தர்ப்பத்தையே நாடுகிறது. சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் சீனாவிற்கு, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்து எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களை சீனா இறக்குமதி செய்து கொள்வதற்கான ஒரு மாற்று வழியையே ஏற்படுத்தி கொடுக்கிறது. சீனாவுடன் போர் மூளும் சந்தர்ப்பத்தின்போது மலாக்கா நீரிணை போன்ற முக்கியமான "நெருக்கமான புள்ளிகளில்" சீனா மீது கடல் முற்றுகையை சுமத்தவே பென்டகன் போர் திட்டமிடலாளர்கள் முன் ஊகிப்பு செய்து உள்ளார்கள்.

அக்டோபர் 27ல், பாகிஸ்தான் தூதரக ஊழியர் மெஹ்மூத் அக்தர் மீதான வேவுபார்ப்பு நடவடிக்கை குற்றச்சாட்டுக்களை இந்தியா அறிவித்ததன் எதிரொலியாக இராஜதந்திர மோதல்கள் இன்னும் தூண்டப்பட்டு உள்ளன. பாகிஸ்தான் உள்-சேவை புலனாய்வுத் துறையான (Inter-Service Intelligence - ISI) பாகிஸ்தானிய இராணுவ உளவு நிறுவனத்திற்கு "முக்கிய பாதுகாப்பு ஆவணங்களை" வழங்கியதாக குற்றஞ்சாட்டி தில்லி பொலிஸ் அக்தரை கைது செய்து உள்ளது. அவர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்திய அரசாங்கம் ஊரி தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான அதன் அச்சுறுத்தல் பிரச்சாரங்களை அமெரிக்க ஆதரவுடன் நிகழ்த்தி வருகிறது. வாஷிங்டனைப் பொறுத்தவரையில் அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" எனும் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக புது டில்லியை கருதுகிறது. இது, சீனாவின் செல்வாக்கினை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் அதன் உடனான போருக்கு தயாரிப்பு செய்யும் நோக்கங்களை கொண்ட ஒரு விரிவான மூலோபாயம் ஆகும். உலகளாவிய அணுசக்தி சந்தையில் இந்தியாவின் அணுகுதலுக்கு வழிவகுக்கும் விதமாக அமெரிக்கா இந்தியா உடன் ஒரு பொதுவான அணுசக்தி உடன்பாட்டை மேற்கொண்டது, நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வாய்ப்புக்களை அளிப்பது மற்றும் தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா பகுதிகளில் புது டில்லியின் மூலோபாய நலன்களுக்கு ஆதரவு அளிப்பது, என்ற வகைகளில் இந்தியாவின் மீது அமெரிக்கா முக்கிய சலுகைகளை பொழிந்து உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இருதரப்பினருக்கும் இடையே "பேச்சுவார்த்தை மூலமான ஒரு தீர்வுக்கு" முறையீடு செய்து "நிதானம் வேண்டும்" என்ற வகையிலான சம்பிரதாயமான அழைப்புக்களை அமெரிக்கா விடுக்கும் அதேவேளையில், "பயங்கரவாதத்திற்கு ஆதரவான" நாடு என பாகிஸ்தானை முத்திரைகுத்துவதன் மூலம் சர்வதேச அளவில் அதனை தனிமைப்படுத்தும் விதமாகவே இந்திய செயல்பாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இந்தியாவின் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் இஸ்லாமாபாத் பிரிவினைவாதக் குழுக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை அமெரிக்கா குற்றஞ்சாட்டியது மற்றும் செப்டம்பர் 28-29 பாகிஸ்தான் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இந்தியாவின் "நுட்பமான தாக்குதல்" என்று அழைக்கப்பட்ட நிகழ்வு உட்பட மோடி அரசாங்கத்தின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கும் ஆதரவு அளித்தது.

1947 இல் பிரிட்டிஷ் இந்தியாவின் வகுப்புவாத பிரிவினை மூலம் உருவாக்கப்பட்ட தெற்கு ஆசியாவின் தேசிய அரசு கட்டமைப்பின் முற்றுமுழுதான பிற்போக்குத் தன்மையையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே விரிவடைந்துவரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றது. தெற்கு ஆசியாவில் பல தசாப்தங்களாக காணப்படும் நீண்ட புவிசார் அரசியல் மோதல்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மூன்று அறிவிக்கப்பட்ட போர்களுக்கும், கணக்கில் அடங்காத போர் நெருக்கடிகளுக்கும் ஏற்கனவே வழிவகுத்தது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருக்கும் முழு போர் முனைப்பு, அமரிக்கா, சீனா மற்றும் அனைத்து அணுஆயுத சக்திகளையும் உள்ளிளுக்கும் ஒரு பேரழிவினை ஏற்படுத்தும் உலகளாவிய மோதலுக்கான தூண்டுதலை விளைவிக்கும்.