Print Version|Feedback
From monster to Mr. President-Elect: Democrats grovel before Trump
அரக்கன் என்றதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.ஜனாதிபதி என்பதற்கு: ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப்பின் முன்னால் தவழ்கின்றனர்
Andre Damon
11 November 2016
டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நாளுக்குள்ளாக, ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவருக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதற்கு அசாதாரண வேகத்தில் இயங்கினர்.
வியாழனன்று ஜனாதிபதி பராக் ஒபாமா நட்புரீதியான 90 நிமிட சந்திப்புக்கு ட்ரம்ப்பை வெள்ளைமாளிகைக்கு அழைப்பு விடுத்தார். அதன்பின்னர் “ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் வெற்றிகரமாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையான ஒரு உருமாற்றத்திற்கு வழிசெய்ய முயற்சிப்பதே வரவிருக்கும் இரண்டு மாதங்களில் தனது முதன்மை முன்னுரிமை” என்று அவர் அறிவித்தார். ட்ரம்பிடம் பேசுகையில் அவர் மேலும் கூறினார், “ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் உங்களிடம் நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன், நீங்கள் வெற்றிகரமாக செயல்படுவதில் உங்களுக்கு உதவக் கூடிய ஒவ்வொன்றையும் செய்வதற்கே நாங்கள் இனி விருப்பமாக இருக்கப் போகிறோம்- ஏனென்றால் நீங்கள் வெற்றி பெற்றால் தான் நாடு வெற்றி காண்கிறது.”
ஒபாமாவின் அறிவிப்பு, வெகு சில நாட்களுக்கு முன்பாக அவர் விடுத்திருந்த அறிக்கைகளுக்கு முரண்பட்டதாய் இருக்கிறது. ட்ரம்ப் “தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவராகத் தென்படுகிறார்” என்றும் ஜனாதிபதியாக இருப்பதற்கு “தெரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கும் அவசியமான உண்மைகளும் கூட அவருக்குத் தெரியவில்லை” என்றும் அப்போது அவர் திட்டவட்டமாய் கூறியிருந்தார். ட்ரம்ப் “உழைக்கும் மக்களைக் குறித்து கொஞ்சமும் கவலை காட்டாமலேயே இந்த பூமியில் தனது 70 வருடங்களைச் செலவிட்டிருந்தார்” என்றும் அவர் கூறியிருந்தார்.
அவையெல்லாம் தேர்தல் நாளன்று ஜனநாயகக் கட்சி படுதோல்வி அடைவதற்கு முன்பு கூறப்பட்டவை. இப்போதோ ட்ரம்ப் “வெற்றிகரமாக” செயல்படுவதை உறுதிசெய்வதே தனது அதிகப்பட்ச முன்னுரிமை என்று அறிவிக்கிறார்.
ஒபாமாவின் கருத்துக்களை தொடர்ந்து புதனன்று ஹிலாரி கிளிண்டன், “அமெரிக்கர்கள் அனைவருக்குமான வெற்றிகரமான ஜனாதிபதியாக [ட்ரம்ப்] இருப்பார்” என்று தான் நம்புவதாக அறிக்கை வெளியிட்டார். சோசலிஸ்டாக காட்டிக்கொண்ட செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் தனது சொந்த மண்டியிடும் அறிக்கையை வெளியிட்டார், அதில் அறிவித்திருந்தார்: “இந்த நாட்டின் உழைக்கும் மக்களது குடும்பங்களின் வாழ்க்கைகளை மேம்படுத்துகின்ற கொள்கைகளை பின்பற்றுவதில் திரு.ட்ரம்ப் முக்கியத்துவம் அளித்து இயங்குகின்ற மட்டத்திற்கு, நானும் மற்ற முற்போக்கினரும் அவருடன் சேர்ந்து வேலை செய்வதற்கு தயாராய் இருக்கிறோம்.”
ஜனாதிபதி ட்ரம்புக்கும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரு எதிர்க்கட்சியாக செயல்படவிருக்கும் நடிப்பு எதனையும் இத்தகைய அறிவிப்புகள் மூலமாக ஜனநாயகக் கட்சியினர் கைவிட்டு வருகின்றனர்.
அமெரிக்க அரசியலின் ஒரு பாதைமாற்றத்தைக் குறிப்பதாக இருக்கும்வகையில் ஒரு மனிதர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஜனநாயகக் கட்சியின் முன்னிலைப் பிரமுகர்களிடம் இருந்து ஆதரவுப் பிரகடனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரத்துக்கு வந்து கொண்டிருப்பது பாசிச குணமுடைய ஒரு அதிவலது அரசாங்கம். ஒரு அதிவலது மற்றும் பாசிச ஊடக நிறுவனமான Breitbart News இன் தலைவரான ஸ்டீபன் பனான் (Stephen Bannon) ஐ, ட்ரம்ப் தனது அலுவலக ஊழியர்களது தலைவராக நியமிக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது முதன்மை ஆலோசகர்களாகவும் கேபினட் குழுவில் இடம்பெறும் வாய்ப்புக் கொண்டவர்களிலும் முன்னாள் நியூயோர்க் மேயரான ருடோல்ப் கிலானி (Rudolf Giuliani) மற்றும் நியூ ஜெர்சியின் ஆளுநரான கிறிஸ் கிறிஸ்டி (Chris Christie) போன்ற பிற்போக்கு ஆளுமைகள் இடம்பெறுகின்றனர்.
அதிகார மாற்றத்திற்கு இயல்புநிலையின் ஒரு ஒளிவட்டத்தைக் கொடுப்பதற்கு அவசரம் காட்டுகின்ற ஜனநாயகக் கட்சியினரும் ஊடகங்களும் இத்தேர்தலின் மிகவும் திகைக்க வைக்கும் கூறுகள் குறித்து ஒரு கவனமான மவுனத்தைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர்.
வாக்களிப்பு கணிசமாக வீழ்ச்சி கண்டிருந்தமை, ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஒரு பிரதான காரணியாக இருந்ததை ஒருவரும் குறிப்பிடுவதில்லை. வெள்ளை தொழிலாள வர்க்க வாக்காளர்கள் ட்ரம்புக்கு பின்னால் அணிவகுத்தமை “அதிகரித்திருந்தது” குறித்த ஊடகங்களின் பேச்சுக்கள் அத்தனையும் ஒருபக்கம் இருந்தாலும், உண்மையில் குடியரசுக் கட்சியின் இந்த வேட்பாளர் 2012 தேர்தலில் ஒபாமாவிடம் தோற்ற மிட் ரோம்னி பெற்றதை விடவும் 1 மில்லியன் வாக்குகள் குறைவாகவே பெற்றிருந்தார். இரண்டாவது முறையாக தேர்வான தேர்தலில் ஒபாமா 2008 இல் தான் பெற்றதை விடவும் கணிசமான அளவில் குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தார் என்ற நிலையில், அதனை விடவும் 6 மில்லியன் குறைவான வாக்குகளையே ஹிலாரி கிளிண்டன் வென்றுள்ளார். அத்துடன் மக்கள் வாக்குகளில் கூட ட்ரம்ப் தோல்வி கண்டிருந்தார் என்ற அசாதாரணமான உண்மை ஏறக்குறைய கண்டுகொள்ளப்படவில்லை. கிளிண்டன் தேசிய அளவில் அதிக சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார் என்றாலும், அவர் தேர்தல் கல்லூரி - இது தனித்தனி மாநிலங்களிலான வெற்றிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிக்கலான மற்றும் ஜனநாயகவிரோதமான விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும் - வழிமுறையின் படி தோல்வி கண்டிருந்தார். ஒட்டுமொத்த வாக்குகளில், ஒரு பெரும்பான்மையை கூட விட்டுவிடுவோம், ஒரு பன்முகத்தன்மையைக் கூட பெறமுடியாத ட்ரம்ப் அதிகாரத்தில் அமரவிருக்கிறார்.
அமெரிக்காவின் ஒட்டுமொத்த 240 ஆண்டுகால வரலாற்றில், ஐந்து தேர்தல்களில் மட்டுமே ஆட்சிக்குவந்த ஜனாதிபதி மக்கள் வாக்களிப்பில் வெற்றி கண்டிருக்கவில்லை. 1876 இல் இது நடந்தபோது, குடியரசுக் கட்சியின் ரூதர்போர்டு பி.ஹேயஸ் ஜனநாயகக் கட்சியின் சாமுவேல் ஜே.டில்டனைக் காட்டிலும் குறைந்த வாக்குகளையே பெற்றிருந்த நிலையிலும் ஜனாதிபதியானார். இந்த முடிவினால் விளைந்த அரசியல் மோதல் எவ்வளவு தீவிரமாக இருந்ததென்றால், தெற்கில் இருந்து கூட்டரசாங்கத்தின் துருப்புகளை திரும்பப் பெறுவதன் மூலமாக உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய மறுகட்டுமானத்தை திறம்பட முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உடன்பட்ட பின்னர்தான் குடியரசுக் கட்சியினரால் வெள்ளை மாளிகையை பிடிக்க முடிந்தது.
1888 இல் வாக்குகள் பிரிவு கண்டு, குரோவர் கிளீவ்லண்ட் பெஞ்சமின் ஹாரிசனிடம் தோற்றபோது, அடுத்த 112 ஆண்டுகளுக்கு தேர்தல் கல்லூரி வாக்குகளில் வென்றவர் தான் மக்கள் வாக்கு சதவீதத்திலும் வெற்றி கண்டுவந்தார். 21 ஆம் நூற்றாண்டில், இந்த விநோதம் இரண்டுமுறை இப்போது நடந்து விட்டிருக்கிறது - 2000 த்திலும் பின் 2016 இலும். முந்தைய சந்தர்ப்பத்தில், ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு புளோரிடாவில் வாக்குகளை மீண்டும் எண்ணுவதை நிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தலையிடுவது அவசியமாய் இருந்தது.
ஹிலாரி கிளிண்டனின் இடத்தில் ட்ரம்ப் இருந்திருந்தார் என்றால், நிச்சயமாக அவர் தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு நிறைய அவகாசம் எடுத்துக் கொண்டிருப்பார். அவரது ஒப்புதல் உரை வந்திருந்தால் கூட அதில் அவர் மக்கள் வாக்கெடுப்பை தான் வென்றிருப்பதாகவும் “சூழ்ச்சிக்காரரான ஹிலாரி” அதிகாரத்திற்கு உரிமைகோர முடியாது என்றும் வலியுறுத்துவதாக அது இருந்திருக்கும்.
வாக்காளர்களின் பெரும்பான்மையினர் ட்ரம்ப்பையே தேர்வு செய்திருப்பதை ஒப்புக்கொள்ளுமாறும் இணக்கமாகச் செல்லுமாறும் ஹிலாரி கிளிண்டனை வலியுறுத்துவதாக ஊடகச் செய்திகள் இருந்திருக்கும். உச்சநீதி மன்றத்திற்கான தெரிவாக ஒபாமாவின் பெயரை கிளிண்டன் திரும்பப் பெற்று விட்டார் என்றும் மறைந்த அண்டோனின் ஸ்காலியாவின் இடத்திற்கு வேறு பெயரை சிபாரிசு செய்வதற்கு குடியரசுக் கட்சியினரை அழைத்திருக்கிறார் என்றுமான “இப்போதைய செய்தி”யை CNN அறிவிப்பதை ஒருவர் எளிதாகக் கற்பனை செய்து பார்க்கலாம்.
ஆனால் ஜனநாயகக் கட்சியினரோ நேரெதிரானதை செய்திருக்கின்றனர்.
இந்த தலைகீழான திருப்பத்தின் பின்னால் இருப்பது என்ன? “நாமெல்லாம் உண்மையில் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது ஒரு போட்டி விளையாட்டுக்காரர்களின் சார்பான பூசல்தான்”, அதாவது ஒரே பள்ளியின் வீரர்களுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு சோதனைப் போட்டி மட்டுமே என்று புதன்கிழமை தான் அறிவித்த சமயத்தில் வெறும் வார்த்தைகளை விடவும் ஆத்மார்த்தமாக தான் கூறியதாக ஜனாதிபதி ஒபாமா கூறினார்.
அமெரிக்காவிடம் உண்மையாகவே ஒரு எதிர்க்கட்சி அரசியல் அமைப்புமுறை கிடையாது. ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையிலான, கிளிண்டனுக்கும் ட்ரம்ப்புக்கும் இடையிலான பிளவுகள் அனைத்தும், முழுமையான ஒரு தந்திரோபாய குணாம்சம் கொண்டவையே. இவர்கள் அனைவருமே அதே அடிப்படையான நலன்களையே - அரசியல் அமைப்புமுறையைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள பெருநிறுவன மற்றும் நிதிப் பிரபுத்துவத்தின் நலன்கள் - பாதுகாத்து நிற்கின்றனர்.
இந்தக் கட்டமைப்புக்குள்ளாக, ஜனநாயகக் கட்சி தான் எப்போதும் கூடுதல் இணக்கமானதாக கூடுதலாய் விட்டுக்கொடுத்து செல்வதாக இருக்கின்ற கட்சியாகும், ஏனென்றால் உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதாய் பேர்னி சாண்டர்ஸ் போன்றவர்கள் உள்ளிட்டவர்களது வாய்வீச்சான கூற்றுக்கள் எல்லாமே முழுக்கவும் வெறுமையானவையும் நேர்மையற்றவையும் ஆகும். ட்ரம்ப் மற்றும் அவர் முன்நிறுத்துகின்ற அபாயங்களின் விடயத்தில் ஒரு முழுமையான மெத்தனத்தின் கூறு ஒன்று நிலவுகிறது என்றால், அந்த அபாயம் ஜனநாயகக் கட்சியினருக்கோ அல்லது அவர்கள் சார்புபடுத்தக்கூடிய சலுகைபெற்ற சமூக சக்திகளுக்கோ இல்லை மாறாக தொழிலாள வர்க்கத்திற்குத் தான் என்ற உண்மையில் இருந்தே அது எழுகிறது.
வெகுஜன கோபத்தைக் கட்டுப்படுத்துவது தான் ஜனநாயகக் கட்சியின் முதன்மையான கவலையாக இருக்கிறது. ட்ரம்ப்பை சுற்றி அவர்கள் வட்டமடிப்பதென்பது எல்லாவற்றுக்கும் மேல், வரவிருக்கும் அரசாங்கத்தை மட்டுமின்றி முதலாளித்துவ அமைப்புமுறைக்கே அச்சுறுத்தலாய் இருக்கக் கூடிய வெகுஜன எதிர்ப்பு எழுவதில் அவர்கள் காணக்கூடிய அபாயத்திற்கு பதிலிறுப்பே ஆகும்.
ஒபாமா, கிளிண்டன், சாண்டர்ஸ் மற்றும் குழுவினர் ட்ரம்புக்கு முன்னாள் மண்டியிட்டு தங்கள் விசுவாசத்தை உறுதியளித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட, நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் தொழிலாளர்களும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் வரவிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்டங்களது ஒரு மங்கலான மற்றும் அரசியல்ரீதியாக தனிப்பட்ட ஒரு சோறுப் பதமே ஆகும்.
2016 தேர்தலின் படிப்பினைகள் கற்றுக்கொள்ளப்பட வேண்டும், போர் மற்றும் சிக்கன நடவடிக்கைக்கான எதிர்ப்பை, ஜனநாயகக் கட்சியின் அரசியல் எலும்புக்கூட்டுடன் கட்டிப்போட நடக்கின்ற அத்தனை முயற்சிகளும் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே இன்றியமையாததாகும். ஜனநாயகக் கட்சியை “பின்னால் இழுப்பதோ” அல்லது அதனை இடதுபக்கமாய் தள்ளுவதோ அல்ல நமது பணி - அந்த மோசடியான முன்னோக்கின் தவிர்க்கமுடியாத முடிவு என்னவாக இருக்கும் என்பது சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் பிற்போக்குத்தனமான முடிவில் ஏற்கனவே விளங்கப்படுத்தப்பட்டு விட்டிருக்கிறது - மாறாக பெருவணிகத்தின் இரண்டு கட்சிகளிடம் இருந்தும் முதலாளித்துவ அரசியலின் அத்தனை வடிவங்களில் இருந்தும் முறித்துக் கொள்வதும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான சோசலிச மற்றும் சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதுமே ஆகும்.