Print Version|Feedback
Trump’s popular vote deficit may approach two million
ட்ரம்ப் வெகுஜன வாக்குகளில் இரண்டு மில்லியன் குறைவாக பெற்றிருக்கூடும்
By Patrick Martin and David North
12 November 2016
ஜனாதிபதி தேர்தலில் இன்னும் ஏறக்குறைய ஐந்து மில்லியன் வாக்குகள் எண்ண வேண்டியிருப்பதாக வியாழனன்று மதியம் கலிபோர்னியா மாநில அதிகாரிகளும் மற்றும் உள்ளாட்சி அரசு அதிகாரிகளும் தெரிவித்தனர். நவம்பர் 8 க்கு முன்பே வந்திருந்த தபால் வாக்குகளும் மற்றும் இடம்பெயர்ந்து சென்றதால் வேறுதொகுதியில் வாக்களிக்க சென்ற வாக்காளர்கள் செலுத்திய வாக்குகளும் இதில் உள்ளடங்கும்.
ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் இதுவரையில் கலிபோர்னியா வாக்கெடுப்பில் வென்றுள்ள 62 சதவீத பெரும்பான்மையோடு நீடித்திருந்தால், எண்ணப்படாத எல்லா வாக்குகளும் எண்ணப்படுகையில் அவரது இப்போதைய 400,000 என்ற கிடைத்த வாக்குகளின் அளவை ஏறக்குறைய இரண்டு மில்லியனுக்கு உயர்த்தக்கூடும்.
இடம்மாறி வாக்களித்தவர்களது வாக்குகள், குறைந்த வருவாய் பெறுபவர்களிடமிருந்தும் மற்றும் சிறுபான்மை தொழிலாள வர்க்க மாவட்டங்களில் விகிதாசாரமற்ற வீதத்தில் வாக்களிக்கப்பட்டவை என்பதால், இது மிக குறைந்த மதிப்பீடாகவே இருக்கும். அம்மாவட்டங்களில் கிளிண்டன் 90 சதவீதத்தை அணுகும் விளிம்பில் முன்னேறிக் கொண்டிருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளும் மற்றும் சான் டியோகோ மாகாணத்தில் 600,000 வாக்குகளும் எண்ண வேண்டியுள்ளது. கிளிண்டன் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் 80 சதவீதத்தை விட அதிகமான வாக்குகளும் மற்றும் சான் டியோகோ இல் அண்மித்து 60 சதவீத வாக்குகளும் வென்றார்.
இதன் அர்த்தம், ஜனாதிபதி தேர்வுக்குழு (Electoral college) வாக்குகளால் டோனால்ட் ட்ரம்ப் வசம் தோற்ற கிளிண்டனின், வெகுஜன வாக்கு வித்தியாசம், கடந்த அரை நூற்றாண்டில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் வென்ற குறைந்தபட்சம் மூன்று வெற்றியாளர்களை விட அதிகமாக இருக்கக்கூடும். ஜோன் எஃப். கென்னடி 1960 இல் ரிச்சார்ட் நிக்சனை 112,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். நிக்சன் 1968 இல் ஹூபேர்ட் ஹம்ப்ரே ஐ 510,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்; 1976 தேர்தலில் ஜிம்மி கார்ட்டர் ஜெரால்ட் ஃபோர்டை 1.7 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
2000 இல் அல் கோர் இன் வெகுஜன வாக்கு வித்தியாசத்தை விட கிளிண்டனினது நான்கு மடங்கு அதிகமாக இருக்கக்கூடும். ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை விட கோர் 540,000 வெகுஜன வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார், புளோரிடா வாக்குகளது மறுஎண்ணிக்கையை நிறுத்துவதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதும் தான் அவர் தேர்தல் பலப்பரீட்சையில் தோற்றார்.
இதுவரையில் ஊடகங்கள் கிளிண்டனின் வெகுஜன வாக்கு வித்தியாசம் குறித்து ஏறத்தாழ எதுவுமே குறிப்பிடவில்லை. நியூ யோர்க் டைம்ஸ் இன் இணையவழி பதிப்பில் டேவிட் லியோன் ஹார்ட் எழுதிய கருத்துக்கள் மட்டுமே தேசிய பதிப்பில் வந்துள்ள ஒரே குறிப்புரையாக உள்ளது, அத்துடன் கலிபோர்னியாவை மையமாக கொண்ட ஊடகங்களில் அவ்வபோது செய்திகள் வந்தன.
ட்ரம்ப் இன் மொத்த வாக்குகள் 2012 இல் மிட் ரோம்னி மற்றும் 2004 இல் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆகிய குடியரசு கட்சியினர் வென்றதைக் காட்டிலும் குறைவு என்பதோடு, 2008 இல் ஜோன் மெக்கெய்ன் பத்து மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் பராக் ஒபாமாவிடம் தோற்ற போது அவர் பெற்றிருந்த மொத்த வாக்குகளை விட மிகச் சிறியளவே அதிகமாகும்.
கிடைத்த வாக்குகளில் கிளிண்டன் அதிகமாக பெற்றுள்ளது பற்றி எந்தளவிற்கு மிகவும் பரவலாக அறியப்படுகிறதோ, அந்தளவிற்கு ஜனாதிபதியாக ட்ரம்ப் மேலுயர்த்தப்படுவது அரசியல்ரீதியில் சட்டரீதியற்றதென பார்க்கப்படும்.
உண்மையில் ஜனாதிபதி தேர்தல் வெற்றியானது பண்டைய கால ஜனாதிபதி தேர்வுக்குழுவின் வாக்கு ஒதுக்கீடு மூலமாகவே தீர்மானிக்கப்படுகிறது என்பது நன்கறியப்பட்டதாகும். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றின் முதல் 211 ஆண்டுகளில், அதாவது 1789 மற்றும் 2000 க்கு இடையே, வெகுஜன வாக்குகளை இழந்த வேட்பாளர்கள் மூன்று சந்தர்ப்பங்களில் மட்டுமே ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளனர்.
முதலில் 1824 இல் நடந்தது, அப்போதைய நான்முனை போட்டிக்குப் பின்னர் அதில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்கு போதிய வாக்குகளைப் பெறாததால், பிரதிநிதிகள் சபை ஜோன் குவின்சி ஆடம்ஸ் க்கு ஜனாதிபதி பதவியை வழங்கியது. வெகுஜன வாக்குகளை வென்றிருந்த ஆண்ட்ரூ ஜாக்சனுக்கு வெள்ளை மாளிகையை மறுத்த "ஊழல் நிறைந்த பேரம்பேசல்கள்" மீது மக்களிடையே அங்கே பாரியளவில் சீற்றம் இருந்தது. ஆடம்ஸ் இன் பதவிக் காலம் மதிப்பிழந்திருந்தது, பின்னர் 1828 தேர்தலில் ஜாக்சன் அவரை தோற்கடித்தார்.
1876 இல், ஜனநாயக கட்சி வேட்பாளர் சாமுவேல் டில்டென் குடியரசு கட்சி வேட்பாளர் ரூதர்போர்ட் ஹேயெஸ் ஐ விட அண்ணளவாக 250,000 வாக்குகள் கூடுதலாக பெற்றார், ஆனால் ஜனாதிபதி தேர்வுக்குழுவிடம் இருந்து தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியிருந்தார். பல மாத கால ஆழ்ந்த பேரம்பேசல்களுக்குப் பின்னர், ஜனநாயக கட்சியினர் வெள்ளை மாளிகையில் ஹேயெஸ் ஐ அமர்த்துவதை ஏற்றுக் கொண்டனர். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி கட்சியினர் குடியரசு கட்சியினரிடம் இருந்து ஓர் ஆழ்ந்த அரசியல் விட்டுக்கொடுப்பை பெற்றிருந்தனர்: அதாவது தெற்கில் இருந்து மத்திய துருப்புகளை திரும்ப பெறுவதாகும். இது நடைமுறையளவில் உள்நாட்டு போருக்குப் பிந்தைய மறுக்கட்டமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது.
1888 இல், ஜனாதிபதி குரோவர் க்ளீவ்லாந்து அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான முயற்சியில் அவரது குடியரசு கட்சி எதிர்ப்பாளர் பென்ஜமின் ஹாரீசனிடம் தோற்றார். இந்த விடயத்தில், குடியரசு கட்சி வேட்பாளர் ஜனாதிபதி கிளீவ்லாந்தை விட அண்ணளவாக 80,000 வாக்குகள் குறைவாக பெற்றிருந்தார், ஆனால் ஜனாதிபதி தேர்வுக் குழுவிடமிருந்து (Electoral College) ஒரு கணிசமான பெரும்பான்மையை வென்று ஹாரீசன் வெள்ளை மாளிகையில் நுழைந்தார், ஆனால் உண்மை என்னவென்றால் ஒப்பீட்டளவில் சிறிய வித்தியாசத்தில் என்றாலும் கூட அவரது அரசியல் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் அவர் மக்களின் வாக்குகளை இழந்திருந்தார். கிளீவ்லாந்து 1892 தேர்தலில் அவரை தோற்கடித்தார்.
1888 இல் கிளீவ்லாந்தின் தோல்விக்கு பின்னர் 112 ஆண்டுகளாக, வெற்றி பெற்ற ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் அவரது போட்டியாளரை விட கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்தனர். இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும், ஜனாதிபதி தேர்வுக் குழுவின் முடிவுகள் வெகுஜன வாக்குகளது முடிவுகளை வழிமொழிந்தன.
ஆனால் கடந்த ஐந்து தேர்தல்களில் இரண்டில், புஷ் மற்றும் ட்ரம்ப் ஆகிய குடியரசு கட்சி வேட்பாளர்கள் ஜெயித்திருந்தாலும், இவர்கள் மக்களின் வாக்குகளை இழந்தவர்களாவர்.
2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் கணிசமானளவிற்கு வெகுஜன வாக்கு பற்றாக்குறையில் இருந்தால்: அண்ணளவாக 500,000 வாக்குகள். ட்ரம்ப் இன் விடயத்தில், இந்த பற்றாக்குறை 1.5 மற்றும் 2 மில்லியன் வாக்குகளுக்கு இடையே நெருங்கக்கூடும் என்ற நிலையில், இது வெறுமனே ஒரு வினோதமான முரண்பாடு என்று பார்க்க முடியாதவாறு, எல்லாவிதத்திலும் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
மக்களின் வாக்குகளில் ட்ரம்ப் தோல்வியின் அளவு, தேர்தல் முடிவு பற்றி ஜனநாயகக் கட்சி அதன் விடையிறுப்பில் காட்டுகின்ற அரசியல் கோழைத்தனத்தை அடிக்கோடிடுகிறது. இத்தகைய சூழலில், ட்ரம்ப் க்கு தேர்வுக்குழு வாக்கு பெரும்பான்மை உள்ள காரணத்தினாலேயே ட்ரம்ப் ஓவர் மாளிகையில் ஜனாதிபதி அலுவலக ஆசனத்தில் அமரும் உரிமையைப் பெற்றுள்ளார் என்று ட்ரம்ப் ஐ ஏற்றுக் கொள்வதைத் தவிர ஜனநாயக கட்சியினருக்கு வேறு அரசியல் கடமைப்பாடு இல்லை என்பதாக உள்ளது.
ஒபாமா நிர்வாகமும் ஜனநாயக கட்சியும், ட்ரம்ப் இன் அதிகாரம் மற்றும் செல்வாக்கை கட்டமைக்க விரைந்து கொண்டிருப்பதை நியாயப்படுத்த எதுவுமே இல்லை. மக்களின் வாக்குகளில் முன்பில்லாதளவில் அவர் தோற்றிருப்பதால் அவரது பிற்போக்குத்தனமான திட்டநிரலுக்கு அதிகாரம் கோரும் எவ்வித உரிமையையும் அவர் தெளிவாக இழந்துள்ளார் என்பதை அப்பட்டமாக குறிப்பிட்டு, ஒபாமாவும் சரி அல்லது கிளிண்டனும் சரி, ட்ரம்ப் க்கு ஓர் எச்சரிக்கை விடுக்கவில்லை. நாடெங்கிலும் ட்ரம்ப் வெற்றியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகையில், அவர்களது மவுனம் மிகவும் குற்றகரமாக உள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் ஏமாற்றுத்தனமான சட்டப்பூர்வத்தன்மை, அதன் அரசியல் அங்கலட்சணம் தெளிவாகி வருவதால் இன்னும் பலவீனமடைகிறது. வெள்ளியன்று, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதியும் மற்றும் கிறிஸ்துவ அடிப்படைவாதியுமான மைக் பென்ஸை ட்ரம்ப் தலைவராக பொறுப்பேற்க செய்தும், ரூடி கிலானி மற்றும் நியுட் ஜின்ங்ரிச் போன்ற அதிதீவிர வலது பிரமுகர்களைத் துணை தலைவர்களாக நியமித்தும், மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் மற்றும் அவரது மருமகனை இடைக்கால செயற்குழுவில் பெயரிட்டும், அவரது இடைக்காலக் குழுவை மாற்றியமைத்தார். வெள்ளை மாளிகை ட்ரம்ப் குடும்ப நிறுவனத்தின் மற்றொரு கிளையாக மாற இருக்கிறது!
கிளிண்டனுக்காக அந்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த ஜனநாயக கட்சி தலைவர், ஜனாதிபதி ஒபாமா அப்பெண்மணி பெற்ற மக்களின் வாக்கு வெற்றி குறித்து ஒன்றுமே கூறவில்லை என்பதோடு, சுமூகமாகவும் சமாதானமாகவும் அதிகாரத்தை ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சியினருக்கு மாறுவதை உறுதிப்படுத்த அவர் தீர்மானகரமாக இருப்பதை மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளார்.
தேர்வுக்குழு மூலமாக கிளிண்டன் ஜெயித்திருந்து, வெகுஜன வாக்குகளில் ட்ரம்ப் மிகப் பெரிய வித்தியாசத்தைப் பெற்று பாத்திரங்கள் தலைகீழாக மாறியிருந்தால், குடியரசு கட்சி மிகவும் வேறு விதமாக நடந்திருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்குமா?
இரண்டு வலது-சாரி முதலாளித்துவ கட்சிகளில் எப்போதுமே மிகவும் இரக்கமற்று ஆக்ரோஷமாக இருந்துள்ள குடியரசு கட்சியினர், ஒரு கிளிண்டன் வெற்றியை தேர்வுக்குழுவினது "மோசடியாக" மற்றும் ஜனநாயக விரோதமானதாக கண்டித்து, ஜனாதிபதி பதவியை அவர் துறக்க வேண்டுமென கோரியிருப்பார்கள் மற்றும் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பவர்கள் அவர்களது மாநிலங்களில் வாக்களிப்பதைத் தவிர்க்குமாறும் மற்றும் தேசியளவிலான வாக்கு எண்ணிக்கையில் வெளிப்பட்டவாறு "மக்களின் விருப்பத்திற்கு" இணங்குமாறும் பிரச்சாரம் செய்திருப்பார்கள், அத்துடன் புதிய ஜனாதிபதிக்கு இடையூறுகள் மற்றும் பதவி நீக்க விசாரணையைக் கொண்டு அச்சுறுத்தி இருப்பார்கள்.
கிளிண்டனை ஆதரித்த இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளின் பிரிவுகளும் மற்றும் ஜனநாயக கட்சியினரும் ட்ரம்ப் மந்திரிசபையில் செல்வாக்கு செலுத்துவதற்கு அழுத்தமளிக்கக்கூடிய ஒரு பகுதி, வெளியுறவு கொள்கையாகும். அவர்கள் கிளிண்டன் தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த, ரஷ்யாவை நோக்கிய ஆக்ரோஷமான மனோபாவத்திலிருந்து ஒரு பின்வாங்கலை பார்க்க விரும்பவில்லை.
மிகவும் சக்தி வாய்ந்த ஜனநாயகக் கட்சியினராக விரைவிலேயே தேர்ந்தெடுக்கப்படவுள்ள கலிபோர்னியா ஆளுனர் ஜெர்ரி பிரௌன், மக்கள் தொகை அதிகமாகவுள்ள அவரது மாநிலத்தில் ட்ரம்ப் இன் பிரமாண்ட தோல்வி குறித்து ஒன்றும் கூறவில்லை. மில்லியனுக்கும் அதிகமான கலிபோர்னியா பிரஜைகளையும் அவர்களுடன் அவர்களது குடும்பங்களையும், அத்துடன் ஆவணமில்லா புலம்பெயர்ந்தோரையும் பாரியளவில் வெளியேற்றுவது குறித்து ட்ரம்ப் அச்சுறுத்தி உள்ளார், இவர்களது எண்ணிக்கை கலிபோர்னியாவில் மில்லியன்களில் உள்ளது.
மீண்டும், ஒருவேளை பாத்திரங்கள் மாறியிருந்தால், ஒரு சிறுபான்மை ஜனாதிபதியாக கிளிண்டன் பதவியேற்றிருந்தால், குடியரசு கட்சி ஆளுநர்கள் அவர்களது எதிர்ப்பைக் காட்ட கைகளை உயர்த்தி இருப்பார்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் எதிர்ப்பை அவர்கள் சட்டவிரோதமானதென்றும், ஒடுக்குமுறையானதென்றும் அறிவித்திருப்பார்கள். இவ்வாறுதான் ஏற்கனவே ஒபாமாவின் கீழ் குடியரசு கட்சியினரிடையே நடந்தது.