Print Version|Feedback
Broad turnout for “Socialism vs. Capitalism and War” conference in Detroit
டெட்ராய்டில் நடந்த “முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்" மாநாடு பரந்த எண்ணிக்கையானோரை கொண்டிருந்தது
By Kate Randall
7 November 2016
சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பும் நவம்பர் 5, சனிக்கிழமையன்று, "முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்" என்ற தலைப்பில் டெட்ராய்டில் ஒரு மாநாட்டை நடத்தின.
இம்மாநாட்டில் பலர் கலந்து கொண்டனர். அமெரிக்கா மற்றும் கனடா எங்கிலும் இருந்து பயணம் செய்து சுமார் 200 தொழிலாளர்களும் இளைஞர்களும் நேரில் வந்திருந்தனர். இதில் கலிபோர்னியா, லூசியானா, நியூ யோர்க், பென்சில்வேனியா, இலினோய், மினிசோட்டா, வெர்ஜீனியா மற்றும் மிச்சிகன் இல் இருந்து வந்திருந்த கணிசமான பிரதிநிதிகளும் உள்ளடங்குவர். கலந்து கொண்ட இளைஞர்களில் பலர், சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொண்டவர்களாவர்.
போருக்கு எதிரான நவம்பர் 5 ஆம் தேதி மாநாடு
அமெரிக்காவிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் கிளைகளும் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியிலுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினது கட்சிகளும் நாடெங்கிலும் மற்றும் உலகின் ஏனைய இடங்களிலும் உள்ள அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்காக அவர்கள் இணையவழியில் அந்நிகழ்வில் கலந்து கொள்ள ஒளிபரப்புச்செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கோஸ்டா ரிகா, பிரேசில், ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, துருக்கி, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் இருந்தும் பங்கேற்புகள் இருந்தன.
மாநாட்டில் ஜோசப் கிஷோர் உரையாற்றுகிறார்
சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் ஜோசப் கிஷோர் மாநாட்டைத் தொடங்கி வைத்து குறிப்பிடுகையில், ஹிலாரி கிளிண்டன் மற்றும் டோனால்ட் ட்ரம்ப் க்கு இடையிலான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்னதாக இது நடக்கிறது என்றார். தேர்தல் பிரச்சாரம் "அருவருக்கத்தக்க, தரங்குறைந்த முறைகேட்டின் புதிய ஆழங்களுக்குள் மூழ்கி" இருப்பதை குறிப்பிட்ட அவர் தொடர்ந்து கூறுகையில், “தேர்தலின் முடிவு -ஒருவேளை தெளிவான முடிவு தெரிகின்ற பட்சத்தில்- இன்னும் தெரியவில்லை தான். எனினும் அடுத்த நிர்வாகத்தின் கொள்கைகள் நன்றாக தெரியும்: அது கிளிண்டன் தலைமையில் ஆகட்டும் அல்லது ட்ரம்ப் தலைமையில் ஆகட்டும், அமெரிக்கா வெளிநாடுகள் மீது போரையும் மற்றும் உள்நாட்டில் அரசியல் பிற்போக்குத்தனத்தையும் விரிவாக்க பரந்தளவில் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து விரிவடைந்து செல்கின்ற உலகளாவியப் போர் அபாய உள்ளடக்கத்தில் இந்த மாநாட்டை அமர்த்தி விளக்கமளித்த கிஷோர், “இந்தக் கூட்டத்திற்கு வெளியே, ஏகாதிபத்தியப் போருக்கு எதிராய் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதற்கான எந்த ஒழுங்கமைந்த முயற்சியும் இருக்கவில்லை என்பது ஒரு அசாதாரணமான அரசியல் உண்மையாகும்” என தெரிவித்தார்.
ஆண்ட்ரே டேமன்
சமூக சமத்துவத்திற்கான இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் தேசிய செயலர் ஆண்ட்ரே டேமன், “உலகளாவிய நெருக்கடியும், உலக போர் அபாயமும்" என்ற அவரது முதல் அறிக்கையை இம்மாநாட்டில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் 15 ஆண்டுகால "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" உட்பட, கடந்த கால் நூற்றாண்டாக நடக்கும் முடிவில்லா போர்களை ஆய்வுக்குட்படுத்தியது. ரஷ்யா மற்றும் சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் அமெரிக்காவினது நகர்வுகளையும் மற்றும் கொரிய போருக்குப் பின்னர் கண்டிராத வன்முறை மற்றும் படுகொலை மட்டங்களுடன் மிகப் பெரியளவில் தேசிய-அரசுகளை சம்பந்தப்படுத்தும் ஒரு போரின் தாக்கங்கள் குறித்து மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்து வரும் விவாதங்களையும் டேமன் திறனாய்வு செய்தார்.
ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் ஜேம்ஸ் கோகன், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய துணை செயலாளர் கிறிஸ்தோப் வாண்டியர் மற்றும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொது செயலாளர் விஜே டயஸ் ஆகியோரும் சீனாவிற்கு எதிரான போர் உந்துதல், ஐரோப்பிய நெருக்கடி மற்றும் ஜேர்மனியின் மீள்இராணுவமயமாக்கம் குறித்தும், அணுஆயுதமேந்திய நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தீவிரமடைந்து வரும் முழு அளவிலான போர் அபாயம் குறித்தும் பலமான பங்களிப்பை வழங்கினார்கள்.
கிறிஸ்தோப் வாண்டியர்
பிரதான அறிக்கைகளில் ஒன்றில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜெர்ரி வைட், தேர்தல் பிரச்சாரத்தின் அனுபவங்களை நினைவுகூர்ந்தார். நயோமி ஸ்பென்சரும் [மேற்கு வெர்ஜினியா பிரதிநிதிகள் சபைக்கான வேட்பாளர்], நைல்ஸ் நிமுத்தும் [அமெரிக்க துணை ஜனாதிபதிக்கான வேட்பாளர்] மற்றும் நானும் தொழிற்சாலைத் தொழிலாளர்களுடனும், சுரங்கத் தொழிலாளர்களுடனும், ஆசிரியர்களுடனும், வேலைநிறுத்தத்தில் இறங்கிய செவிலிகளுடனும், மற்றும் நாடெங்கிலும் உள்ள கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடனும் நடத்திய ஏராளமான சந்திப்புகளிலும் எண்ணற்ற விவாதங்களிலும், போர் மீதும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் பைத்தியக்காரத்தனமான வெறிக்காக பகுத்தறிவற்ற வகையில் மில்லியன் கணக்கான உயிர்களும் ட்ரில்லியன் கணக்கான டாலர்களும் பலிகொடுக்கப்படுவதன் மீதும் ஒரு உண்மையான வெறுப்பு நிலவுவதை நாங்கள் கண்டோம்.
“உண்மையான சோசலிசத்தின் மீது பெருகுகின்ற ஆர்வமும், சமூகத்தின் செல்வத்தை உற்பத்தி செய்கின்ற தொழிலாள வர்க்கமே அதனைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு உணர்வும் ஒவ்வொரு இடத்திலும் காணக்கூடியதாய் இருக்கிறது.” என்றார்.
மாநாட்டில் ஜெர்ரி வைட் உரையாற்றுகிறார்
வேலைகள், சம்பளங்கள், மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சமத்துவமின்மையால் தூண்டிவிடப்பட்டுள்ள தொழிலாளர்களது போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை வைட் குறிப்பிட்டார். சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம், "அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் நம்முன் வரவிருக்கின்ற போராட்டங்களுக்குத் தலைமையைத் தயார் செய்ய" போராடியதை அவர் குறிப்பிட்டார்.
சோசலிச சமத்துவக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான நைல்ஸ் நிமூத், ஜனநாயகக் கட்சியின் முதனிலைத் தேர்தல்களின் சமயத்தில் வேர்மாண்ட் செனட்டரான பேர்ணி சாண்டர்ஸ் நடத்திய பிரச்சாரத்தின் அரசியல் படிப்பினைகளின் மீது தனது கவனத்தைக் குவித்தார். “நடைமுறையில் இருக்கும் முதலாளித்துவ நடைமுறைகளுக்கு ஒரு சவாலை அவர் பிரதிநித்துவம் செய்ததாகக் கருதி” ஆரம்பத்தில் அவரது ஆதரவாளர்களாக இருந்த பலரையும் நாடு முழுவதிலும் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டங்களில் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
”‘பில்லியனர் வர்க்கத்திற்கு’ எதிரான ‘அரசியல் புரட்சி’ குறித்த சாண்டர்ஸின் வாய்வீச்சானது, சமூக சமத்துவமின்மையின் மீதும், செல்வந்தர்கள், சமூகத்தின் மீது மேலாதிக்கம் செய்வதன் மீதும் நிலவுகின்ற ஆழமான கோபத்திற்கு முறையீடு செய்வதைக் கணக்குப்போட்ட விண்ணப்பமாக இருந்தது.” எவ்வாறிருப்பினும் முடிவில், “இப்போது பல்கலைக்கழக வளாகங்களில் பிரச்சார வலம்வரும் சாண்டர்ஸ், கிளிண்டன் என்ன செய்யவிருக்கிறார் என்பதைக் குறித்து எதுவும் கூறாமலேயே, அவருக்கு வாக்களிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.”
“சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் அனுபவத்திலிருந்து தொழிலாளர்கள் மிகவும் தொலைநோக்கான முடிவுகளை எடுத்தாக வேண்டும்" அத்துடன் "முதலாளித்துவத்தை நேரடியாக சவால் செய்யாமல், தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற நெருக்கடிக்கான ஒரு தீர்வுக்கு நம்பிக்கை வைக்கின்ற நடைமுறைவாத அரசியலின் ஒட்டுமொத்த வகையறாவையும்" அவர்கள் நிராகரிக்க வேண்டுமென்று கூறி நிமூத் நிறைவு செய்தார்.
பிரதிநிதிகள் சபைக்கான மேற்கு வெர்ஜீனியாவின் 16 வது மாவட்டத்தின் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் நயோமி ஸ்பென்சர் பேசுகையில், அந்நாட்டு பிராந்தியங்களின் மிக மோசமான சமூக நிலைமைகளை, ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களும் தாராளவாதிகளும் பிற்போக்குத்தனமாக மற்றும் இனவாதமாக சித்தரிப்பதைக் குறித்து உரையாற்றினார். தொழிலாளர்கள் வெள்ளை இனத்தவராக இருந்தால் அவர்களது நிறத்தின் காரணமாக "தனிச்சலுகை கொண்டவர்களாக" ஆகி விடுகிறார்கள் என்று கூறப்படும் கருத்தை அவர் கண்டனம் செய்தார்.
மேற்கு வெர்ஜீனியா பல ஆண்டுகளாக கடுமையான நிதிஒதுக்கீட்டுப் பற்றாக்குறையில் சிக்கி இருப்பதையும், சமூகங்கள் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்ட அவர், “பிரச்சினைகள், பொதுவாக வளர்ந்துவரும் நாடுகளுடன் குறிப்பாக தொடர்புடையனவாக இருக்கின்றன, பூமியிலேயே செல்வந்த நாடாக இருப்பதாகக் கூறப்படுவதுடன் தொடர்புடையனவாக இல்லை” என்றார். அவர் பிரச்சாரம், கிளிண்டன் மற்றும் ட்ரம்ப் தவிர வேறு வாய்ப்பைக் காணவியலாமல், ஒரு மாற்றீட்டை எதிர்நோக்கி இருப்பவர்களுடன் உணர்வு ரீதியாக ஒருமித்து ஒலித்தது என்றவர் குறிப்பிட்டார்.
நயோமி ஸ்பென்சர் உரையாற்றுகிறார்
தேசியரீதியில், இனரீதியில் மற்றும் பாலியல்ரீதியில் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்கான அத்தனை முயற்சிகளுக்கும் எதிரான விதத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த வேண்டியதன் அவசியமே மாநாட்டின் பிரதான கருத்துருவாக இருந்தது. தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் சகல பிரிவுகளிடையேயும் வர்க்க பிரச்சினைகளே மேலோங்கி உள்ளன என்பதை எடுத்துக்காட்டும் வகையில், மாநாட்டில் கணிசமான அளவிற்கு ஆபிரிக்க அமெரிக்க இளைஞர்கள் மற்றும் பெண்களும் கலந்து கொண்டிருந்தார்கள். அடையாள அரசியலை எதிர்த்தும் மற்றும் எல்லா இனங்களுக்குமான ஒரு பொதுவான இயக்கத்திற்கு அழைப்புவிடுத்து பேச்சாளர்கள் பேசியபோது, அவை உற்சாகத்துடன் கரகோஷங்களை பெற்றன.
சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு தலைவருமான டேவிட் நோர்த், “ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டத்தின் மூலோபாயம்: வரலாற்றில் இருந்தான படிப்பினைகள்” என்ற தலைப்பில் அம்மாநாட்டின் இறுதி பகுதியின் பிரதான பேச்சாளராக இருந்தார்.
அணுஆயுத உலக போர் அச்சுறுத்தல் குறித்து குறிப்பிட்டு நோர்த் கூறினார், “'இந்த பேரழிவை எவ்வாறு நாம் தடுக்கப் போகிறோம்?' என்றவொரு கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் இருக்குமென நான் அனுமானிக்கிறேன் … உண்மையில், இந்த அபாயத்தின் விரிவெல்லை, எத்தனை உண்மையாக நின்று கொண்டிருக்கிறது என்பதற்கும், இருந்தும் கூட தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கையினரிடையே தாங்கள் முகம்கொடுத்துக் கொண்டிருப்பதைக் குறித்து குறைந்த அளவிலேயே விழிப்புணர்வு இருக்கிறது என்பதற்கும் இடையிலான இடைவெளிதான் மிகப்பெரும் அபாயமாக இருக்கிறது என்பதை நாம் வலியுறுத்தி வந்திருக்கிறோம். இந்த ஆழ்ந்த முரண்பாடு, எப்படி வெற்றி காணப்படப் போகிறது?”
சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் நயோமி ஸ்பென்சர், நைல்ஸ் நிமூத் மற்றும் ஜெர்ரி வைட் கருத்து கூறுபவர்களைக் கவனிக்கின்றனர்
முதலாம் உலக போர் மற்றும் ரஷ்ய புரட்சியின் படிப்பினைகளை நோர்த் சுட்டிக் காட்டினார். முதலாம் ஏகாதிபத்திய போருக்கு முன்வந்த காலத்தின் போது ஒப்பீட்டளவில் வி. ஐ. லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி தனிமைப்படுத்தப்பட்டு இருந்த போதினும், உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையில் நிலவும் பொருத்தமின்மையானது தவிர்க்கவியலாமல் வரலாற்றில் மாபெரும் புரட்சிகர எழுச்சியை கொண்டு வரும் என்பதில் இருவருமே முழுத்தீர்மானகரமான உறுதி கொண்டிருந்தனர் என்பதை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.
நடப்புத் தேர்தலானது, நம்பமுடியாத மட்டத்திற்கு வெகுஜன பிரமை விலகல், அந்நியப்படல் மற்றும் கோபத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்று நோர்த் கூறினார். வெற்றிபெறுவது எவராயினும், இது மறைந்து விடப்போவதில்லை. “ஏதோவொன்று நோய்வாய்ப்பட்டு அழுகிப்போய் கிடக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிகிறது. அரசியல் தீவிரப்படலின் ஒரு புதிய காலகட்டத்தை நாம் காணவிருக்கிறோம்.”
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இறுதி பகுப்பாய்வில், அரசியல் தீவிரப்படலுக்கான உந்துசக்தியானது இந்த அமைப்புமுறைக்கு உள்ளேயே உள்ள புறநிலை முரண்பாடுகளில் இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். நாடெங்கிலும், ஒவ்வொரு மாகாணத்திலும், முடிந்த அளவுக்கு பரந்த அளவிலும் மற்றும் சமரசமற்ற வகையிலும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நோக்கித் திரும்புவதும், போருக்கு எதிரான போராட்டத்திற்கான ஒரு மூலோபாயத்தை அவர்கள் முன் வைப்பதுமே எங்கள் பணியாக நாங்கள் காண்கிறோம்.”
“சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தீர்மானத்தைக் குறிப்பிட்டு, நோர்த் குறிப்பிடுகையில், போருக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்; அது முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிசமாக இருக்க வேண்டும்; அது சுயாதீனமாகவும், முதலாளித்துவ வர்க்கத்தின் சகல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு விரோதமாகவும் இருக்க வேண்டும்; அது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பாரிய பலத்தை அணிதிரட்டுவதாக, சர்வதேச தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.