Print Version|Feedback
Class struggle in US intensifies on eve of election
தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்காவில் வர்க்க போராட்டம் தீவிரமடைகிறது
Jerry White
4 November 2016
செவ்வாய்கிழமை தேசிய தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்காவின் பல பாகங்களில் பல துறை சார்ந்த பரந்த தொழிலாளர்களிடையே ஒரு கணிசமான எண்ணிக்கையில் வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன. பிலடெல்பியாவில் அண்மித்து 5,000 போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் வேலை வெளிநடப்பு மிகப்பெரிய நடவடிக்கையாகும். இப்போது அதன் ஐந்தாம் நாளில் உள்ள இந்த வேலைநிறுத்தம் அந்நாட்டின் ஆறாவது மிகப் பெரிய பொதுத்துறை போக்குவரத்து அமைப்புமுறையை முடக்கி, 1.5 மில்லியன் மக்கள் வாழும் அந்நகரை நடைமுறையளவில் ஸ்தம்பிக்க செய்துள்ளது.
தொழிலாளர்களின் பையில் இருந்து கொடுக்கப்படும் மருத்துவ செலவுகளில், பதினொரு மடங்கு உயர்வுக்கான தென்கிழக்கு பென்சில்வேனியா போக்குவரத்து ஆணையத்தின் (Southeastern Pennsylvania Transportation Authority - SEPTA) கோரிக்கையே இந்த வேலைநிறுத்தத்தில் பிரதான பிரச்சினையாகும்.
சம்பளம் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஐந்தாவது வாரத்தில் உள்ள பீட்டர்ஸ்பேர்க் சிம்பொனி இசைக்குழு கலைஞர்கள்; மருத்துவ மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக போராடி வரும் நியூ யோர்க் மாகாண மற்றும் ஓஹியோ இன் Momentive Performance Materials ஆலையின் 700 இரசாயனத்துறை தொழிலாளர்கள்; மற்றும் கூடுதலான நஷ்டஈடு மற்றும் வேலையிட நிலைமைகளைக் கோரி வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் இன் 300 வீடியோ விளையாட்டுக்கு குரல் கொடுக்கும் தொழிலாளர்கள் ஆகியோர் இப்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஏனைய தொழிலாளர்கள் ஆவர்.
இதற்கும் கூடுதலாக, இந்தியானா மற்றும் நியூ யோர்க் மாகாணத்தில் விமான துணைப்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஹனிவெல் இன்டர்நேஷனல் கோரிய மருத்துவக் காப்பீட்டு விட்டுகொடுப்புகளை சுமார் 400 தொழிலாளர்கள் நிராகரித்ததும், நடைமுறைப்படுத்தப்பட்ட கதவடைப்பின் ஏழாவது மாதத்தில் உள்ளனர்.
இன்னும் பல சமீபத்திய வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்கங்களால் முறிக்கப்பட்டன. ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அவற்றின் [தொழிற்சங்கங்களது] ஊக்குவிப்பு பிரச்சார ஆர்வத்திலிருந்து முறித்துக் கொண்டு எழுந்த, வெளிநடப்புக்களை அவை எவ்வளவு விரைவில் எங்கெல்லாம் சாத்தியமோ அவற்றைத் தடுக்க முயன்று வருகின்றன.
மினிசோடாவில் பென்சில்வேனியாவின் அரசு பல்கலைக்கழக ஆசிரிய அங்கத்தவர்கள், ஓஹியோவில் லிப்பே கிளாஸ் தொழிலாளர்கள், கென்டக்கியில் ஜிம் பீம் விஸ்கி தொழிலாளர்கள், மாசசூசெட்ஸ் இல் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் தேனீர் விடுதி தொழிலாளர்கள் என கடந்த பல வாரங்களாக இவர்களது வேலைநிறுத்தங்களை தொழிற்சங்கங்கள் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன. இந்த வெளிநடப்புகள், இந்தாண்டின் தொடக்கத்தில் 40,000 வெரிஜோன் தொலைதொடர்பு தொழிலாளர்களது வேலைநிறுத்தத்தை பின்தொடர்ந்து வந்தவையாகும்.
95,000 கலிபோர்னியா அரசு பணியாளர்கள், யுனெடெட் பார்சல் சர்வீஸ் விமான பழுது நீக்கும் பொறியாளர்கள், கென்டக்கியில் ஜெனரல் எலெக்ட்ரிக் உபகரண தொழிலாளர்கள், ஓஹியோ மற்றும் இலினோய் இல் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட ஏனைய ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் விரைவிலேயே வேலைநிறுத்தத்தில் இறங்க உள்ளனர்.
அமெரிக்காவில் தொழிலாள வர்க்க போராட்டங்கள் அதிகரித்திருப்பதானது, கடந்த மாதம் தென் கொரியாவில் பத்தாயிரக் கணக்கான வாகனத் தொழிலாளர்கள், இரயில் தொழிலாளர்கள் மற்றும் மருத்துவத்துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தங்கள் மற்றும் சீனாவில் சாதனையளவிலான வேலைநிறுத்தங்கள் உட்பட சர்வதேச அளவில் வர்க்க போராட்ட அதிகரிப்புடன் பொருந்தி உள்ளது.
வேலைநிறுத்த மட்டங்களுக்கும் செல்வவள திரட்சிக்கும் இடையிலான இடைத்தொடர்பு, 1948-2014
தொழிற்சங்கங்கள் வர்க்க போராட்டத்தை செயற்கையாக ஒடுக்கியதால், அதுவும் வேலைநிறுத்தங்களை இரண்டாம் உலக போர் முடிந்ததற்குப் பிந்தைய மிகக் குறைந்த மட்டத்தில் ஒபாமா பதவி காலத்தின்போது இவை வைத்திருந்த நிலையில், இது 2008 நிதியியல் பொறிவுக்குப் பின்னர் பெருநிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகளை மறுசீரமைக்கவும் மற்றும் அவற்றினது தொழிலாளர் செலவுகளைக் குறைக்கவும் அனுமதித்துள்ளது. மருத்துவ மற்றும் ஓய்வூதிய செலவுகளைத் தொழிலாளர்களின் முதுகில் சுமத்தியமை மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை நிரந்தரமற்ற தொழிலாளர்களாக மாற்றியமை ஆகியவையும் இதில் சேரும்.
தொழிலாளர்கள் பையிலிருந்து மருத்துவக் காப்பீட்டுக்கான செலவுகளை அதிகரிக்க வேண்டுமென்ற பெருநிறுவன கோரிக்கைகளுக்கான எதிர்ப்பே, நடைமுறையளவில் இந்த சகல போராட்டங்களிலும் இழையோடும் ஒரு பொதுவான அம்சமாக உள்ளது. மருத்துவச் செலவை நிறுவனங்களிடமிருந்து தொழிலாளர்கள் மீது சுமத்தியமை, வெளியேறவிருக்கும் இந்த நிர்வாகத்தின் மத்திய உள்நாட்டு "சாதனையான" ஒபாமாகேர் கொண்டு வரப்பட்டதுடன் சேர்ந்து பக்கவாட்டில் தீவிரமாக நடத்தப்பட்டது.
கெய்சர் குடும்ப அறக்கட்டளையின் (Kaiser Family Foundation) ஒரு ஆய்வின்படி, அமெரிக்காவில் மாதாந்திர காப்பீட்டு தொகை 3.4 சதவீத அளவிற்கும் மற்றும் பிடித்தங்கள் 12 சதவீத அளவிற்கும் கடந்த ஆண்டு உயர்ந்தன, இவை அண்மித்து ஒரு தசாப்தமாக நிஜமான கூலிகளில் வீழ்ச்சி அல்லது தேக்கமடைவு என்பதை பின்தொடர்ந்து சம்பளங்களில் சராசரியாக 3 சதவீதத்திற்கும் அதிகமானதைக் கூடுதலாக விழுங்கி விடுகின்றன. மற்றொரு ஆய்வு, அதிக-பிடித்தம் கொண்ட காப்பீட்டு திட்டங்களில் பதிவு செய்யப்பட்ட பணியாளர்களின் பங்கு, கடந்த ஐந்தாண்டுகளுக்கும் அதிகமான காலத்தில், இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்து 29 சதவீதத்தை, அல்லது 50 மில்லியன் தொழிலாளர்களை எட்டியுள்ளது எனக் காட்டுகிறது.
2002 மற்றும் 2005 க்கு இடையே அடிமட்டத்திலிருந்த 90 சதவீத அமெரிக்கர்களின் ஆண்டு வருமானம் வெறும் 4.5 சதவீதம் மட்டுமே உயர்ந்தது, அதேவேளையில் மேலே 1 சதவீதத்தினரின் வருவாய் 22.7 சதவீதம் அளவிற்கு உயர்ந்ததாக பொருளாதார கொள்கை பயிலகம் குறிப்பிடுகிறது. ஒபாமா நிர்வாகத்தின் கீழ், “மீட்சி" என்றழைக்கப்பட்டது தொடங்கியதற்குப் பின்னர் இருந்து 90 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்களின் வருவாய் ஆதாயங்கள் மேலே ஒரு சதவீதத்தினருக்கே சென்று சேர்ந்துள்ளது.
அமெரிக்காவில் நடுத்தர குடும்பங்களின் நிஜமான வருமானம்
இதற்கிடையே உத்தியோகபூர்வ வறுமை விகிதமான 125 சதவீதத்திற்கு கீழ் உள்ள அமெரிக்கர்களின் சதவீதம், புஷ் ஜனாதிபதி பதவிக்காலத்தின் போது விட ஒபாமாவின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துள்ளது.
ஒரு மில்லியனரும் நீண்டகால அரசியல்வாதியுமான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக ஒரு பில்லியனிய நில/கட்டிட பேர அதிபர் டோனால்ட் ட்ரம்ப் ஐ போட்டியில் நிறுத்தியுள்ள ஒரு தேர்தலுக்கு முன்னதாக, இதுதான் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் நிலைமையாக உள்ளது. முதலாளித்துவ அமைப்புமுறையின் இந்த வலதுசாரி பாதுகாவலர்களில் எவரும் உழைக்கும் மக்களின் சமூக தேவைகளை பூர்த்தி செய்யும் எந்தவித கொள்கைகளையும் வழங்கப் போவதில்லை.
பொருளாதார பாதுகாப்பின்மை, வறுமை, இராணுவவாதம் மற்றும் போரின் வளர்ச்சி என பரந்த பெருந்திரளான உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் நிஜமான பிரச்சினைகளை தவிர்த்துவிடுவதற்காகவே, இத்தேர்தல்கள் மிகவும் தரங்குறைந்த மடத்தில் நடத்தப்படுகின்றன.
உழைக்கும் மக்களின் நிஜமான உணர்வுகள் இப்போதைய இந்த அரசியல் அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் வெளிப்பாட்டைக் காண முடியாது. மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் மற்றும் இளைஞர்களும் முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் வோல் ஸ்ட்ரீட் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில் அவர்கள் பேர்ணி சாண்டர்ஸ் க்கு வாக்களித்தபோது, ஆளும் உயரடுக்கு அதிர்ந்து போய் பீதியுற்றது. பொய்யாக மற்றும் எரிச்சலூட்டும் விதத்தில் ஒரு "ஜனநாயக சோசலிச" பிரச்சாரமாக முன்வைக்கப்பட்ட ஒன்றுக்கு கிடைத்த 13 மில்லியன் வாக்குகள், பக்கவாட்டில் அபிவிருத்தி அடைந்து வரும் தொழிலாள வர்க்க போராட்டத்தின் மீள்வரவுடன் சேர்ந்து, நனவின் ஓர் ஆழ்ந்த இடதை நோக்கிய திருப்பத்தை பிரதிபலித்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிலாளர்களின் பங்கு, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் குறைந்த மட்டத்திற்கு சரிந்துள்ளது
நிதியியல்-பெருநிறுவன உயரடுக்கின் விருப்பத்திற்குரிய வேட்பாளரான கிளிண்டனை சாண்டர்ஸ் ஆமோதித்து, பரபரப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டமை, சமூக எதிர்ப்பை ஜனநாயக கட்சியின் முட்டுச்சந்துக்குள் திருப்பி விடுவதற்கான ஆளும் உயரடுக்கின் ஒரு கருவியாக அவரது பிற்போக்குத்தனமான பாத்திரத்தை முற்றிலுமாக அம்பலப்படுத்தியது. அவர், பொருளாதாரரீதியில் பேரழிவுக்கு உள்ளானவர்களது சமூக மனக்குறைகளை சுரண்டுவதற்கும் மற்றும் அதிருப்தியை ஒரு பிற்போக்குத்தனமான தேசியவாத திசையில் திருப்புவதற்கும் ட்ரம்ப் க்கு ஒரு தங்குதடையில்லா பாதையை வழங்கியதில் ஒரு மத்திய பாத்திரம் வகித்துள்ளார்.
சாண்டர்ஸ் சரணடைந்ததன் ஆதாயத்தையும் மற்றும் சுயதிருப்தி கொண்ட பிற்போக்குத்தனமான தாராளவாத மற்றும் போலி-இடது அடுக்கின் ஆதரவையும் பெற்று, கிளிண்டன் அவரது இன மற்றும் ஆண்/பெண் பாகுபாடு அரசியலை ஊக்குவிக்கும் முயற்சியை இரட்டிப்பாக்கி உள்ளார், மற்றும் "வெள்ளையின தொழிலாள வர்க்கத்தின்" இனவாதம் என்று கூறப்படுவதற்கு ட்ரம்ப் இன் ஆதரவை அங்கீகரிக்கிறார்.
வர்க்கப் போராட்டமே இதுபோன்ற பொய்களை மிகப் பெரியளவில் அம்பலப்படுத்தும். எல்லாவிதமான இனங்கள் மற்றும் தேசியங்களின் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டத்தின் ஆரம்ப எழுச்சிகள், மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, சமூகம் "இரண்டு மிகப் பெரிய எதிர்விரோத முகாம்களாக, ஒன்றையொன்று நேரடியாக எதிர்கொள்ளும் இரண்டு மிகப்பெரிய வர்க்கங்களாக" பிளவுபட்டுள்ளது என்ற அடிப்படை உண்மையையே எடுத்துக்காட்டுகிறது.
சாண்டர்ஸ் க்கான பாரிய ஆதரவில் ஆரம்ப வெளிப்பாட்டைக் கண்ட அரசியல் தீவிரப்படல் மறைந்துவிடவில்லை. அது, வெளிநாடுகளில் அமெரிக்க இராணுவ வன்முறையையும் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களையும் தீவிரப்படுத்த உள்ள ஒரு புதிய நிர்வாகத்தின் கீழ் இன்னும் தீவிரமடைய உள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும் மற்றும் இளைஞர்களும் சோசலிசம் மீது அதிகரித்து வரும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். நமது கட்சியும் மற்றும் நமது வேட்பாளர்கள் —ஜனாதிபதி வேட்பாளர் ஜெர்ரி வைட் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் நைல்ஸ் நிமூத்— மட்டுமே வரவிருக்கின்ற வர்க்க போராட்டங்களுக்கு ஒரு முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை வழங்க, போர், சமூக சமத்துவமின்மை, சர்வாதிகார அபாயம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான மற்றும் சோசலிசத்திற்கான ஒரு அரசியல் போராட்டத்தில் ஒவ்வொரு போராட்டத்தையும் ஐக்கியப்படுத்தும் ஒரு புதிய அரசியல் தலைமையைக் கட்டியெழுப்ப போராடி வருகின்றனர்.