Print Version|Feedback
Steve Bannon: A fascist in the White House
ஸ்டீவ் பானன்: வெள்ளை மாளிகையில் ஒரு பாசிசவாதி
By Tom Carter
15 November 2016
ஞாயிறன்று, ஜனாதிபதிக்கு “தலைமை மூலோபாய மற்றும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர்” பதவிக்கு ஸ்டீவ் பானன் ஐ ட்ரம்ப் நியமிப்பதாக அறிவித்தார். இது ஒபாமா நிர்வாகத்தில் முன்னர் ஜோன் போடெஸ்டா வகித்த பதவியுடன் தொடர்புடையதாகும்.
ஒரு பாசிச அவதூறு பரப்புபவரை ஜனாதிபதியின் தலைமை மூலோபாய வல்லுநராகப் பணியாற்ற நியமிப்பதானது, இனவாத, அதி-வலது மற்றும் மத அடிப்படைவாத நபர்களை ட்ரம்ப் நிர்வாகத்தில் உயர் பதவிகளுக்கு உள்கொண்டுவருவதற்கான “வெள்ளை மாளிகையின் மேற்கு பிரிவு கழிவுகளூடாக” பாதை திறந்துவிடுகின்றது.
பானன் ஒரு பாசிஸ்ட், அந்த முத்திரைக்கு முழுமையாக பொருத்தமுடையவர். ஒரு அரசியல் செயற்பாட்டாளர் என்ற வகையில், பானன் அவதூறு பரப்புவதில், ஆத்திரமூட்டுவதில் மற்றும் ஒருவருக்கு எதிராக ஒருவரை தூண்டிவிடுவதிலும் சிறப்புத்தேர்தர்ச்சி பெற்றவர். அவரது வலைத் தளமான Breitbart News, வெள்ளை தேசியவாதிகள், யூத எதிர்ப்பாளர்கள், மற்றும் “வலது-மாற்று” என்று அழைக்கப்படுவர்களுக்கு ஒரு மேடையாக திகழ்கிறது. தனது சொந்த சுயசரிதை ஊடாக, அமெரிக்க அரசியல், பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் உள்ள அனைத்து பிற்போக்குகளையும் கிட்டத்தட்ட ஒன்றாக இணைப்பதை நிர்வகிக்கக்கூடிய ஒருவராவார்.
பானன் அவரது வாழ்க்கைத் தொழிலை அமெரிக்க கடற்படையில் பசிபிக் பிரிவில் “நீர்மூழ்கி மேல்தள யுத்தத்திற்கான அலுவராக ஆரம்பித்தார், மற்றும் பென்டகனில் கடற்படை நடவடிக்கைகளின் தலைமைக்கு சிறப்பு உதவியாளராக பணியாற்றினார்.
இராணுவத்தை விட்டுவிலகியதும், முதலீட்டு வங்கியான கோல்ட்மன் ஷாக்ஸில் ஒரு பொறுப்பை வகித்தார், அங்கு “ஒன்றிணைத்தல் மற்றும் கையேற்றல்” துறையில் அவர் பணியாற்றினார். “குரோதமான கையகப்படுத்தல்” என்பதன் உச்சத்தில், குறுகியகால இலாபத்திற்காக, பல்வேறு சட்டப் புனைவுகளையும் பரிவர்த்தனை கட்டமைப்பையும் பயன்படுத்தி இந்த துறையானது பெருநிறுவனங்களை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து சூறையாடுவதில் தேர்ச்சி பெற்றது. உடனடியாக செல்வந்தரானதும், 1990ல் பானன் தனது சொந்த முதலீட்டு வங்கி “Bannon & Co.,” வை நிறுவினார், அதன்மூலம் அவர் ஒரே பேரத்தில் Seinfeld உள்பட ஐந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டார்.
அங்கிருந்து பானன் ஹாலிவூட்டுக்குள் நுழைய வழிசெய்து கொண்டார், அங்கு அவர் பெரிய முக்கியத்துவத்தை வகிக்க முடியவில்லை. 2004ல் பானன், றொனால்ட் றேகனை பற்றிய கம்யூனிச எதிர்ப்பு ஆவணப்படம்: In the Face of Evil எடுத்தார். ஹாலிவூட்டில் சேர்ந்ததிலிருந்து தொடர்ந்து வெள்ளை மாளிகையில் வீற்றிருந்த அவரது வருடங்கள் வரை, றேகனின் முழுவாழ்க்கையையும் கம்யூனிச “தீங்குகளுக்கு” எதிரான ஒரு தனிப்பட்ட போராட்டமாக சித்திரிக்கும் வகையில், இப்படம் தோற்றத்தை ஏற்படுத்தும். இன்னொரு படம், மிகைப்படுத்தி தலைப்பிடப்பட்ட Battle for America (2010), Tea Party கட்சியை பாராட்டுகிறது. இன்னொன்றான Occupy Unmasked, வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின் முகாம்களை கற்பழிப்பு, போதை மருந்து பயன்படுத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டும் அபாயகரமான இடங்களாக வெறித்தனமான மற்றும் பெரிதும் விசித்திரமான கற்பனைகளுடன் காட்டியது.
“பானன் ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளில், உருவகம் மிகவும் நேரடியாக காட்டப்படுவது இல்லை” என்று ஜோசுவா கிரீன், பிசினஸ் வீக் கிற்காக எழுதினார். “அவரது படங்கள் சிங்கங்கள் அனாதரவான மான் குட்டிகளைத் தாக்கும், தரையினின்று வெடித்துக்கிளம்பி முளைவிட்டு புகழ்பெற்று பூப்பது போன்ற அடிப்பதிவுகளுடன் கடுமையாக இருக்கும்.”
இந்தப் பிரச்சாரத்தின் பின்னே உள்ள மனிதன் ஆழ்ந்த சிடுமூஞ்சித்தனம் கொண்டவன். பானன், கிரீனுக்கு அளித்த நேர்காணலில், “எனக்கு, வாஷிங்டன் D.C. சற்றே தொழில்முறை மல்யுத்தம் போலாகும்” என்றார். “நான் சியாட்டிலில் வளர்ந்தபோது, பொதுமக்கள் பார்க்கும் இடங்களில், சேனல் 13 இல் மல்யுத்தத்தை பார்ப்பேன். முதலில் நான் நினைத்தேன், ‘அந்த அளவு ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதால் இந்தப் பேர்வழிகள் ஒருவரையொருவர் வெறுப்பவர்களாக இருக்கவேண்டும் என்று. ஆனால் இறுதியில்தான், அவர்களை தொழில்முறை வணிகப் பங்காளிகள் என உணர்ந்தேன்.”
பானன், மார்ச் 2012 லிருந்து ஆகஸ்ட் 2016 வரை Breitbart News-ன் நிர்வாக தலைவராகப் பணியாற்றினார். அதனை அவர் “வலதுசாரி-மாற்று” என்று கூறப்படுவதுடன் வெளிப்படையாய் ஐக்கியத்தை உணர்த்தும் ஒரு வெறுப்பூட்டு நிலையாக மாற்றினார். பின்னர், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் “பலதிறப் படைத்தலைவர்” ஆவதற்கும் அந்தப் பொறுப்பை விட்டகன்றார்.
பானனின் Breitbart வலைத் தளத்தில் வெளியிட்ப்பட்ட “வலது-மாற்றுக்கு ஸ்தாபக பழமைவாதிகளின் வழிகாட்டி” என்று தலைப்பிடப்பட்ட கட்டுரை, பாசிச தத்துவத்தை வெளிப்படையாக தழுவிக்கொள்வது ஒரு குறிப்பிடத்தக்க தன்மையாகும்: “மாற்று வலதின் மூலங்களை பல்வேறு வகையாய் ஒஸ்வால்ட் ஷ்பெங்லர், H.L.மென்கன், யூலியஸ் இவோலா, சாம் பிரான்சிஸ் போன்ற சிந்தனையாளர்களிடமும், Pat Buchanan இன் ஜனாதிபதிக்கான தேர்தல் பிரச்சாரத்தைச் சூழ எழுந்த பாலியோ பழமைவாத (paleoconservative) இயக்கத்திலும் காணமுடியும். பிரெஞ்சு புதிய வலது, வலதுசாரி-மாற்றின் பல தலைவர்களுக்கு ஊக்கமூட்டும் மூலமாய் பயன்படுகிறது.”
ஷ்பெங்லர் மற்றும் இவோலா ஜேர்மன் மற்றும் இத்தாலிய பாசிசத்திற்கான சுற்றிவளைத்துக்கூறும் சொற்களாகும். ஷ்பெங்லர் நாஜிச தத்துவத்தின் மீது ஒரு ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தார், அதனுள்ளே அவரது Blut und Boden (இரத்தமும் மண்ணும்) என்ற கருத்தியல் ஒன்றிணைந்த கூறாக இருந்தது. இவோலாவின் 1941 இனவாத விமர்சனமான, “இனம் பற்றிய ஆய்வு கொள்கை” (“Synthesis of the Doctrine of Race”) இவோலாவை தனிப்பட்ட முறையில் வரவழைத்து சந்திக்கும் அளவுக்கு முசோலினியிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர், முசோலினி இவோலா Sangue e Spirito (இரத்தமும் உயிரும்) என்ற இதழை வெளியிடுவதற்கு உதவினார்.
பானன் தலைமையின் கீழ் Breitbart News இருபத்தி நான்கு மணிநேரமும் இழிவுகளின் ஊற்றாய் வேலைசெய்தது. இந்த “செய்தி” முகாமையால் வெளியிடப்பட்ட கட்டுரைகள் அந்த அளவு வெறுப்பு மணம் வீசுவதாகவும் அவற்றின் உள்ளடக்கத்தை அப்பலப்படுத்துவதை தேவையற்றதாக கருதுமளவிற்கு தப்பெண்ணம் கொண்டதாக இருந்தது.
தலைப்புச் செய்திகள் “முஸ்லிம் கற்பழிப்பு கலாச்சாரம்” மற்றும் “பாரிய முஸ்லிம் புலம்பெயர்வு” பற்றி ஊளையிட்டன. “இந்த புலம்பெயர்ந்தோரை கொண்டு வந்ததன் மூலம், நாம் அமெரிக்க அகதிகள் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறோம்” என ஒரு கட்டுரை அறிவிக்கின்றது. “திரளான” முஸ்லிம்கள் செப்டம்பர் 11 தாக்குதல்களை கொண்டாடி இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. பில் கிறிஸ்டோல் ஒரு “யூத ஓடுகாலி” எனக் குற்றம் சாட்டப்பட்டார். மற்ற தலைப்புச் செய்திகளில் “பால்மாறிகள்” மற்றும் ஒரு “பால்மாறுவதை வெறுக்கும் எந்திரம்” என்று குறிக்கப்பட்டன. இன்னொரு தலைப்புச் செய்தி “பிள்ளை பெறக் கட்டுப்பாடு பெண்களை கவர்ச்சியில்லாதவராகவும் பைத்தியக்காரராகவும் ஆக்குகிறது” என்று குறிப்பிடுகின்றது.
Breitbart பல்வேறு வலதுசாரி சதி தத்துவங்களைப் பிரகடனம் செய்வதற்கான ஒரு மேடையாகவும் பயன்படுகிறது. ஹிலாரி கிளிண்டன் முஸ்லிம் சகோதரத்துவத்துடன் அணிசேர்ந்தார் எனக் குற்றம் சாட்டப்படுகிறார். கிளிண்டன் உதவியாளர் கூமா அபேடின் அவ்வம்மையாரின் தோற்றத்திற்காக “உலக பயங்கரவாத அடையாளத்துடன்” தொடர்புகள் கொண்ட “சவுதி உளவாளி” என குற்றம்சாட்டப்படுகிறார்.
பானன் சொந்த எழுத்துக்கள் இரத்தமும் கௌரவமும் பற்றிய பிற்போக்கு இராணுவவாத தனிச்சொற்களுடன் பிணைந்துள்ளன. மே மாதத்தில், பானன் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் அணுகுண்டு போட்டதைப் புகழ்ந்து ஒபாமாவிற்கு ஒரு கடிதம் எழுதினார், ஜப்பான் மீதான ஆக்கிரமிப்பில் இறந்திருக்க கூடிய அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் பேசுவதாக கூறிக்கொண்டு, போர்க் குற்றங்களுக்கு ஒபாமா “மன்னிப்பு” கேட்டதாக, பானன் (பொய்யாக) குற்றம்சாட்டி, ஒபாமா “கௌரவத்தின் சிறு துண்டையும்” கொண்டிருக்கவில்லை என்று அறிவித்தார்.
முன்னாள் கு கிளக்ஸ் க்ளான் தலைவர் டேவிட் டியூக் வானொலி நிகழ்ச்சி நடாத்துபவரும் ஒரு நாஜி ஆதரவாளருமான டொன் அட்வோ உடனான ஒரு நேர்காணலில், பென்னோன் ட்ரம்ப்பின் தலைமை மூலோபாய வல்லுனராக நியமனம் செய்தமையை கொண்டாடினார். பென்னோன் நியமன செய்திகளுக்கு பதிலிறுத்து, “நாம் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதாக தோன்றுகிறது” என்று அட்வோ குறிப்பிட்டார். டியூக் அதனை ஆமோதித்தார்.
பானனின் தனிப்பட்ட யூத எதிர்ப்பு தப்பெண்ணங்கள் அவரது முன்னாள் இரண்டாவது மனைவியான மெரி லூயிஸ் பிக்கார்ட்டினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1996 ஜனவரியில், அவரது மனைவியை இழிவாக நடத்தியமை, வீட்டு வன்முறை, அடித்தல் மற்றும் சாட்சியம் சொல்லவிடாது கேட்டல் ஆகிய கீழ்நடத்தைகளுக்காக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
பாலியல் ஊழல்கள் பானனின் சிறப்பம்சங்களுள் மற்றமொன்று. இந்த ஆண்டு சகோதரத்துவ விருந்தை அடுத்து பாலியல் தாக்குதலுக்காக தண்டனை பெற்ற ஸ்டான்போர்ட் மாணவர் புரோக் டியூமர்க்கான வழங்கப்பட்ட கடுமையற்ற தண்டனைக்கு எதிரான பிற்போக்கு பிரச்சாரத்திற்கு தனது முழு ஆதரவையும் அளித்தார். பானனின் பக்க சார்புடைய தலைப்புச் செய்தி, “ஸ்டான்போர்ட் கற்பழிப்பு வழக்கு: கடுமையற்ற தண்டனை மீது பொதுமக்கள் ஆவேசம்” என்று இருந்தது. மிக அண்மைய அந்தோனி வெய்னர் சம்பந்தப்பட்ட “பாலியல் படங்கள்” அவதூறிலும் பானனின் கைவரிசை இருந்தது.
அவதூறு பரப்புபவர் மற்றும் இனவாத வெறுப்பை தூண்டுபவர் என்ற வகையில், பானன் நாஜி ஆதரவாளர் யூலியுஸ் ஸ்ரைஷர் அளவுக்கு வேறு எந்த வரலாற்று நபர்களையும் நினைவு கூரவில்லை. இந்த ஒப்பீடு எற்கனவே குடியரசுக் கட்சி மூலோபாயவாதி ரிக் வில்சன் மற்றும் அதேபோல பல்வேறு செய்தியாளர்கள் மற்றும் கருத்துரைப்பாளர்களாலும் செய்யப்பட்டது. வில்சன் ஒரு நேர்காணலில், Breitbart News ஐ “உண்மையில் இன்றுள்ள சட்டபூர்வமான பழமைவாத ஊடக வெளியீட்டிற்கும் மேலான 1930களில் ஜேர்மனியில் வெளிவந்த Der Stürmer இதழை போல் செயல்படுகிறது” என விவரித்தார். வில்சன் ட்ரம்ப்பை “Breitbart கருத்துப் பகுதியின் மனித அவதாரமாக விளக்கினார்: கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்திலும் முட்டாள் தன்மை, கொச்சை, இனவாதம், யூத எதிர்ப்பு மற்றும் மோசமான தன்மை உள்ளவர்” என்றார்.
Der Stürme வெளியீட்டாளர் ஸ்ரைஷர், “அவரது 25 ஆண்டுகால யூதர்களுக்கு எதிரான பேச்சு, எழுத்து மற்றும் பரப்புரை” இவற்றுக்காக மனித சமுதாயத்திற்கு எதிரான போர்க் குற்றங்களில் உடந்தையாய் இருந்தது பற்றிய நூரெம்பேர்க் விசாரணைகளில் குற்றவாளியாக கண்டறியப்பட்டார். தீர்ப்பு பின்வருமாறு தொடர்ந்தது, “அவரது பேச்சுக்களிலும் கட்டுரைகளிலும், வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம், பல்வேறு யூதவிரோத வைரஸ்களை ஜேர்மனியர் மனதில் தொற்றச்செய்து, செயலூக்கத்துடன் ஆட்களைக் களையெடுப்பதற்கு ஜேர்மன் மக்களைத் தூண்டி விட்டது.”
பாராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், மற்றும் பேர்னி சாண்டர்ஸ் போன்ற பிரமுகர்கள் உட்பட ஜனநாயகக் கட்சியானது, அதன் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்புக்களை தணிப்பதற்கும் மக்களை “ட்ரம்ப்பிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு” கேட்டுக் கொண்டு, ட்ரம்ப் “உடன் வேலைசெய்ய” உறுதி அளிப்பதற்கும் தற்போது அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. மற்றொரு புறம், மில்லியன் கணக்கான மக்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னேற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஆழமான ஆபத்துக்களை உணர்கின்றனர். வெளியேறும் நிர்வாகத்தால் அந்தளவு எச்சரிக்கை ஒலி கொடுக்கப்படாமல் வெஸ்ட் விங்கில் பானன் போன்ற நபர்களை நுழையவிடலானது, குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையில் ஒத்திசைவு இருக்கிறது என்ற உண்மையை சுட்டிக்காட்டி, அமெரிக்க அரசியலில் வலது புறத்திற்கு ஒரு திடீர் நகர்வு ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.