Print Version|Feedback
Sri Lanka: Deeside plantation workers form action committee
இலங்கை: டீசைட் தோட்டத் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுவொன்றை அமைத்தனர்
By our correspondents
4 November 2016
மஸ்கெலியா கிளனியூஜி பெருந்தோட்டத்தின் டீசைட் பிரிவு தொழிலாளர்கள் 1,000 ரூபா நாள் சம்பளத்துக்காக, இலங்கை முழுவதும் உள்ள தோட்டத் தொழிலாளர்களை இணைத்துக்கொண்டு தங்களது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அக்டோபர் 26 அன்று ஒரு நடவடிக்கை குழுவை அமைத்தனர்.
தொழிற்சங்கங்கள் உற்பத்தி திறனுடன் முடிச்சுப் போட்டு 730 ரூபா (5 அமெரிக்க டாலர்) நாள் சம்பளத்துக்காக முதலாளிகளுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட பின்னரே டீசைட் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தனர். ஒரு சுயாதீனமான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அவர்களது முடிவு, தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு தீர்க்கமான முன்நகர்வாகும்.
இலங்கையில் உள்ள தொழிலாளர்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரான தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் ஊதியங்கள், வேலைகள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சமீப ஆண்டுகளில் ஒரு தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக, தொழிலாளர்கள் உலக பொருளாதார மற்றும் பூகோள-அரசியல் பதட்டங்களால் உருவாக்கப்பட்ட தேயிலை சந்தையிலான சுருக்கத்தின் காரணமாக வேலைச் சுமையை அதிகரிக்க தோட்ட நிறுவனங்கள் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்த்து வந்துள்ளனர்.
முதலாளிகளின் ஈவு இரக்கமற்ற சுரண்டல் திட்டங்களை திணிக்க தொழில்துறை பொலிஸ்காரனாக தொழிற்சங்கங்கள் செயல்படுவதை கண்ட தொழிலாளர்கள் மத்தியில், தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்புக்கள் சம்பந்தமாக பலமான எதிர்ப்பு வளர்ச்சி கண்டு வருகிறது.
தொழிலாளர்களை அடமானம் வைக்கும் முந்தைய ஒப்பந்தங்கள் போலவே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசும் (ஜ.தொ.கா.) ஒப்பந்தத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. தொழிலாளர் தேசிய சங்கம், ஜ.தொ.கா., ம.ம.மு. மற்றும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தற்போதைய அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கும் அதேவேளை, இ.தொ.கா. மற்றும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் முந்தைய நிர்வாகங்களை ஆதரித்தன.
தொழிற்சங்க தலைவர்கள், கடந்த 18 மாதங்களாக, முந்தைய உடன்பாடு காலாவதியான பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளுடனும், தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதனால் செப்டம்பர் 26 வேலை நிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி வெடித்தன.
தொழிலாள வர்க்கத்தின் புதிய வடிவிலான அமைப்பின் தேவை பற்றிய புரிதலலை வளர்க்க சோசலிச சமத்துவக் கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும் ஒரு முக்கிய பங்கை வகித்தன. "இலங்கை தோட்டத் தொழிலாளர் போராட்டம்: நடவடிக்கை குழுக்களை கட்டயெழுப்பு! சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடு!" என்ற சோசலிச சமத்துவக் கட்சி அறிக்கை, சம்பளப் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே விநியோகிக்கப்பட்டதோடு, தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பரந்த ஆதரவைப் பெற்றது.
கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர் வெடித்த எதிர்ப்பு, தொழிற்சங்கங்களில் இருந்து பிரிவதுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது என சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது. அது போராட்டத்தை தொழிலாளர்களின் சொந்த கைகளில் எடுத்துக்கொள்ள, தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமான புதிய அமைப்புக்களை கட்டயெழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்த நடவடிக்கை குழு, சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்கள் மற்றும் டீசைட் தொழிலாளர்கள் குழுவினர் இடையே பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னரே உருவாக்கப்பட்டது. வரலாற்று ரீதியில் சீரழிந்து போயுள்ள, காலங்கடந்த மற்றும் பிற்போக்குத்தனமான தொழிற்சங்கங்களுக்கு எதிராக, புதிய ஜனநாயக வடிவிலான அமைப்பை கட்டியெழுப்புதல் என்ற அடைப்படையில், நடவடிக்கை குழுக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டிய முன்னோக்கு இந்த கலந்துரையாடல்களில் தெளிவுபடுத்தப்பட்டது.
சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, ஏகமனதாக குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்ட்ட அதேவேளை, டீசைட் தொழிலாளர்கள் தங்களுக்குள்ளேயே செயலாளரையும் ஏனைய குழுத் தலைவர்களையும் தேர்ந்தெடுத்தனர்.
அதைத் தொடர்ந்த கலந்துரையாடலின் விளைவாக, சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் -கீழ் பிரசுரிக்கப்பட்டுள்ள- ஒரு அறைகூவல் வரையப்பட்டதுடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் முழு உள்ளடக்கமும் இன்னமும் தொழிலாளர்களுக்கு தெரியாது. ஆனாலும், அது உற்பத்தித் திறனை அதிகரிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளதனால், முதலாளிகளும் அரசாங்கமும் அதை தமக்கான ஒரு பெரிய வெற்றியாக பெருமைபட்டுக்கொள்கின்றனர்.
ஒப்பந்தத்தின் குற்றவியல் தன்மையும் தாக்குதல்களை தோற்கடிக்க நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டியதன் அவசியமும் பெருகிய முறையில் வெளிப்பட்டு வருகின்றன. அக்டோபர் 18 ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர், மறு நாள் முதலாளிகள் வேலையை விரைவுபடுத்த தொடங்கினர்.
கடந்த வாரம் அக்கரப்பத்தனை ஹென்போல்ட் தோட்டத்தில், தேயிலை கொழுந்து பறிக்கும் இலக்கு 16 கிலோவில் இருந்து 18 வரை அதிகரிக்கப்பட்டது. அதன் ஆக்ரா பிரிவில் இந்த இலக்கு 16 கிலோவில் இருந்து 22 வரை அதிகரிக்கப்பட்டது. டீசைட் தோட்டத்தில் ஆண் தொழிலாளர்கள் அக்டோபர் 22 அன்று வேலைக்கு வந்தபோது, முதலாளிகள் அவர்களுக்கு வேலை கொடுக்க மறுத்தனர்.
இந்த ஒப்பந்தத்தின் படி, தொழிற்சங்க தலைவர்களின் உடன்பாட்டுடன் எந்த தோட்டத்திலும் இலக்குகளை அதிகரிக்கலாம் மற்றும் அவர்கள் சந்தேகமின்றி அவ்வாறு செய்ய முதலாளிகளுக்கு உதவுவர்.
அக்டோபர் 27, பிரதமர் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வழங்கிய பொருளாதார அறிக்கை, இந்த தாக்குதல்கள் அரசாங்கத்தின் கொள்கைகளில் இருந்தே தோன்றுகின்றன என்பதை தெளிவாக்குகின்றது. அவர், தேயிலை மற்றும் இறப்பர் விலை வீழ்ச்சியின் காரணமாக, இலங்கை விவசாய ஏற்றுமதிகள் சரிந்துள்ளன, சில தோட்டங்கள் "நன்கு செயல்படவில்லை" என்று கூறினார்.
விக்கிரமசிங்க, பிராந்திய தோட்டங்களில் "திறமையான" தொழில்முனைவு வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு, புதிய மூலதனம் உள்வருவதற்கு அனுமதிப்பதன் மூலம் மறு சீரமைக்கப்படும் என்று கூறினார். இதன் அர்த்தம், "நன்கு செயல்படாத" தோட்டங்கள் மூடிப்பட வேண்டும் அல்லது "திறமையான தொழில் முனைவுக்கு” ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதாகும்.
அரசாங்கமானது தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் முழு ஆதரவுடன் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான ஒட்டு மொத்த தாக்குதலுக்கு தயாராகி வருவதை இது தெளிவாக்குகிறது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைகளை துடைத்துக்கட்டி வேலை விரைவுபடுத்தலை திணிக்கும் திட்டங்களுக்கு எதிராகப் போராட, டீசைட் தொழிலாளர்களை போலவே, சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும்.
***
அக்டோபர் 26, பின்வரும் ஆரம்ப அறிக்கை டீசைட் தொழிலாளர் நடவடிக்கை குழுவால் வெளியிடப்பட்டது:
போராடும் தொழிலாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்
உற்பத்தி திறனுடன் இணைக்கப்பட்ட மோசமான ஊதிய சூத்திரங்களுக்கு உடன்பட்டு புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதுடன், செப்டம்பர் 26 முதல் 1,000 ரூபா நாள் சம்பளம் கோரி நாம் முன்னெடுத்த போராட்டம் புதிய திருப்பத்துக்கு வந்துள்ளது.
தொழிற்சங்க தலைவர்களால் முதலாளிகளுடன் கையெழுத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவதில் உள்ள உண்மையான உள்ளடக்கம் பற்றி எங்களில் எவருக்கும் தெரியாது. இந்த ஒப்பந்தமானது தோட்ட நிர்வாகங்கள், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களும் சேர்ந்து செய்த ஒரு இரகசிய சதியின் விளைவாகும்.
ஊடகங்கள் மூலம் கசிந்த தகவல்களின்படி, ஒரு தொழிலாளியின் நாள் சம்பளம் 110 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் 450 ரூபாவில் இருந்து 500 வரை அதிகரித்துள்ளது. தேயிலை விலைக்கேற்ற கொடுப்பனவு 30 ரூபாயிலேயே தேங்கி நிற்கிறது. வரவுக்கான கொடுப்பனவு 140 ரூபாவில் இருந்து 60 வரை குறைக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை பெறுவதற்காக ஒரு தொழிலாளி மாதம் குறைந்தது 25 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும்.
140 ரூபா உற்பத்தி ஊக்குவிப்புத் தொகை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை தோட்டத்தின் கொழுந்து பறிக்கும் இலக்கை எட்டினால் மட்டுமே கோரமுடியும். தோட்டங்களுக்கு இடையில் இலக்குகள் வேறுபட்டாலும், அவை தொழிற்சங்கத் தலைவர்களின் உடன்பாட்டிற்கு ஏற்ப விரிவாக்கப்பட முடியும்.
பழைய ஊதிய முறையின் கீழ் சுரண்டப்பட்ட உழைப்புடன் ஒப்பிடுகையில், இது ஊதிய வெட்டே ஆகும், அதிகரிப்பு அல்ல.
அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் இந்த சம்பள ஒப்பந்தத்தை கடுமையாக நிராகரிக்க வேண்டும். நாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அல்லது அதை ஆதரித்த தொழிற்சங்கங்க அதிகாரத்துவங்களை வெறுமனே நிராகரித்து அல்லது கண்டனம் செய்து அவற்றில் இருந்து முறித்துக்கொள்ளக் கூடாது, மாறாக, ஒழுங்கான சம்பளம் மற்றும் பிற தேவைகளுக்கான போராட்டத்தை எங்கள் கைக்குள் எடுக்க வேண்டும்.
மஸ்கெலியாவில் டீசைட் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களாகிய நாம், எங்கள் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த நடவடிக்கை குழுவொன்றை அமைத்துள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
நடவடிக்கை குழு மூலம் எமது சம்பள உயர்வு கோரிக்கை வெற்றிகொள்ளும் பொருட்டு, எமக்கு ஒரு முன்னோக்கும் வேலைத்திட்டமும் வேண்டும். தொழிற்சங்கங்கள், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்களை தோற்கடிக்கும் நோக்கம் கொண்ட அரசியல் முன்னோக்கு எமக்கு அவசியம். இந்த வேலைத்திட்டத்தை நடவடிக்கை குழுவில் கலந்துரையாடி ஏற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். நாம் சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாட எதிர்பார்க்கிறோம்.
எங்கள் நடவடிக்கை குழு தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமானதாகும். அதன் பிரதிநிதிகள் தொழிலாளர்களின் ஜனநாயக வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். எமது கோரிக்கைகள் மற்றும் போராட்ட வழிமுறைகள் குழுவிற்குள் ஜனநாயக கலந்துரையாடலின் மூலம் தீர்மானிக்கப்படும்.
எங்கள் நடவடிக்கை குழுவில் இணையுமாறு கிளனியூஜி தோட்டத்தின் டீசைட் பிரிவு தொழிலாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு தோட்டங்களில் உள்ள அனைத்து தொழிலாள தோழர்களுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அனைத்து நடவடிக்கை குழுக்களையும் ஐக்கியப்படுத்தும் ஒரு மத்திய குழு ஊடாக நமது போராட்டத்தை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும்.
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு வெற்றி கிட்டட்டும்!
தொழிலாளர் நடவடிக்கை குழு
டீசைட் தோட்டம்,
மஸ்கெலியா
26 அக்டோபர் 2016