Print Version|Feedback
One month to the US presidential election—what lies ahead
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கையில் — அடுத்து வரவிருப்பது என்ன
Patrick Martin
8 October 2016
இன்னும் ஒருமாதம் இருக்கையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரமானது உண்மையில் விவரிக்க முடியாத அளவுக்கு அந்த அளவு தரம்தாழ்ந்தும் தகாதமொழியிலுமான ஒரு மட்டத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஞாயிறு இரவு அன்று பரஸ்பரம் சேற்றைவாரி இறைப்பதையும் தூற்றிக்கொள்வதையும் தேசிய அளவில் ஒளிபரப்ப பயிற்சி நடந்துகொண்டிருக்கையில் இரண்டாவது ஜனாதிபதி விவாதத்தில் பல முக்கியமான விடயங்கள் கவனமாக தவிர்க்கப்பட்டுவிடுகிறது.
பாதிக்கு மேற்பட்ட மக்களால் வெறுத்தொதுக்கப்படும் இரு பிரதான வேட்பாளர்களான, ஜனநாயகக் கட்சியாளர் ஹிலாரி கிளிண்டனும் குடியரசுக் கட்சியாளர் டொனால்ட் ட்ரம்பும், நவீனகால அமெரிக்க வரலாற்றில் மிகவும் மதிப்பிழந்த நபர்களாக இருப்பதுடன் இருவரும் சுயநலம்கொண்ட பொய்யர் என்று சரியாகவே பார்க்கப்படுகின்றனர். ஒருவர் குருட்டுப் பிடிவாதம் கொண்ட பாசிச வாய்வீச்சாளர், இன்னொருவர் வோல் ஸ்ட்ரீட் இனதும் இராணுவ உளவு சாதனத்தினதும் அடியாள் ஆவார்.
பிரச்சாரத்தின் இறுதி மாதத்தில், ஜனநாயகக் கட்சிக்கு வழக்கமாய் வக்காலத்து வாங்கும் தொழிற்சங்கங்கள், நியூயோர்க் டைம்ஸ் முதல் நேஷன் இதழ்வரையிலான தாராளவாத ஊடக ஆசிரியத் தலையங்கம் எழுதுவோர், அடையாள அரசியலின் உயர் நடுத்தர வர்க்க ஆதரவாளர்கள் ஆகியோர் ட்ரம்பை கிளிண்டன் தோற்கடிப்பது மட்டுமே அமெரிக்க ஜனநாயகம் குலைந்துபோவதிலிருந்து தடுக்கும் என்று தமது கூற்றுக்களை இரட்டிப்பாக்குவர்.
நேஷன், கிளிண்டனை அங்கீகரித்து இந்தவாரம் வெளியிட்ட, அதன் கணிக்கக்கூடிய மிகைமதிப்பீடு செய்யும் அதன் ஆசிரியர் தலையங்க அறிக்கையில் முவைத்தது போல, முன்னாள் வெளிவிவகாரச் செயலருக்கு சாதகமான விஷயத்தை “இரண்டே வார்த்தைகளில் தொகுத்துக்கூற முடியும்: அது, “டொனால்ட் ட்ரம்ப்”. நம்பத்தகுந்த குடியரசுக் கட்சி ஆதரவு செய்தித்தாள்கள் கூட ட்ரம்ப்பை தேர்ந்தெடுத்தல் அமெரிக்காவில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அழிவுகரமான தாக்குதலைச் செய்யும் என்று எச்சரிக்கையுடன் மணி அடித்தனர். அட்லாண்டிக் இதழ், கிளிண்டன் மீதான அதன் அங்கீகரிப்பை அதன் வரலாற்றில் ஜனாதிபதி வேட்பாளருக்கான மூன்றாவது தடவையானது என்று கூறும் அளவுக்கு சென்றது. அதாவது 1964ல் பாரி கோல்ட்வாட்டருக்கு எதிராக லிண்டன் ஜோன்சனை ஆதரித்தது, 1860ல் ஆபிரகாம் லிங்கனை ஆதரித்தது.
அமெரிக்க ஜனநாயகம் நொருங்கும் நிலையில் இருந்தால், வாக்குக்கணிப்பில் தற்போது குறுகிய வித்தியாசத்தில் கிளிண்டனை விட மன்ஹாட்டன் ரியல் எஸ்டேட் மற்றும் கேசினோ சூதாட்ட பில்லியனரின் தேர்தல் பிரச்சாரம் பின்தங்கி இருப்பது மிகவும் ஆழமான காரணங்களால்தான் என்பதை கட்டாயம் சொல்லியாக வேண்டும். இந்த ஆசிரியர் தலையங்க புத்திசாலிகள் இந்த நெருக்கடியின் காரணங்களை தங்களின் வாசகர்களுக்கு விளங்க முயற்சிக்கவில்லை ட்ரம்பை விடவும் கிளிண்டனை தேர்ந்தெடுப்பது எவ்வாறு நிகழவுள்ள வீழ்ச்சியிருந்து நாட்டை காக்கும் என்று நம்பச்செய்ய அறிவார்ந்த ரீதியாக விளக்கம் எதையும் அவர்கள் முன்வைக்கவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தில் ஒவ்வொருநாளும் வேட்பாளர்கள் பேசுவதற்கும் வெள்ளை மாளிகையில் அடுத்து பதவிக்கு வருபவர் யாரென அடையாளம் காணப்படல் ஒருமுறை தீர்க்கப்பட்டதும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளுக்கும் இடையில் பேரளவில் இடைவெளி உள்ளது. ஞாயிறு விவாதத்தில் அக்கறையுடன் விவாதிப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும், குறிப்பிட விரும்பாத மூன்று பிரதான விடயங்கள் இங்கே உள்ளன. அவை:
முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் உலக நெருக்கடி:
வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டிறுதிக் கூட்டம் முன்னே நடக்கவுள்ள நிலையில், அதனால் வழங்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, உலகப் பொருளாதாரத்தின் நிதி அல்லாத துறைகளில் உள்ள கடனானது 2000க்குப் பின்னர் இருந்து பெயரளவிலானதில் இரட்டிப்பாகியுள்ளது, கடந்த ஆண்டு 152 ட்ரில்லியன் டாலர்கள் தள்ளாடும் நிலைக்கு சென்றுவிட்டது, இது உலக மொத்த உற்பத்தியை விடவும் 225 சதவீதம் அதிகம் ஆகும். பலவீனமான வங்கிக் கட்டமைப்பு மற்றும் பிரதான வல்லரசுகளுக்கிடையில் கூர்மையடைந்துவரும் வர்த்தக பதட்டங்களுடனும் சேர்ந்து, தாங்க முடியாத இந்த குமிழியானது 2008 மாதிரியிலான சந்தை நெருக்கடியை உருவாக்கும். இன்னும் பெரிய அளவில்கூட, ஒரு உலக மந்தநிலைக்கு இட்டுச்செல்லக் கூடும் என்பது அதிகரித்தளவில் சாத்தியமானதாக உள்ளது.
ரஷ்யாவையும் சீனாவையும் நோக்கிய அமெரிக்காவின் போர் உந்தல்:
வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, சிரியாவில் குடிமக்கள் மீதான ரஷ்ய குண்டுவீச்சு என்று கூறப்படுவதை போர்க்குற்றச்சாட்டு என முன்வைப்பதுடன், உத்தியோகபூர்வ அமெரிக்க அரசாங்க அறிக்கை, அரச வாக்களிக்கும் முறையினுள்ளும் மற்றும் ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் கணினிகளுக்குள்ளும் திருட்டுத்தனமாக உட்புகுந்ததாக ரஷ்யாவை குற்றம் சுமத்திய அதேவேளை, ஒபாமா நிர்வாகமானது வெள்ளிக்கிழமை அன்று ரஷ்யா மீது அவதுறூ மற்றும் கண்டனப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அதேவேளை, பென்டகன் தென்சீனக் கடலில் கடற் திட்டுக்களை சீனா ஆக்கிரமித்துள்ளது தொடர்பாக அதன் மீது இராணுவ அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. அடுத்த அமெரிக்க ஜனாதிபதி, ஒரு அல்லது இரு அணுவாயுத வல்லரசுகளுடன் ஒரு போரின் விளிம்பில் நிற்கையில் பதவிப்பொறுப்பை எடுப்பார்.
அமெரிக்காவில் தீவிரப்படும் வர்க்கப் போராட்டம்:
ஒபாமா நிர்வாகத்தின் “வெற்றிகள்” என்று சொல்லப்படுவதின் தொடர்ச்சியாளர் தான் என்று கிளிண்டன் பிரச்சாரம் செய்யும் அதேவேளை, ட்ரம்ப் தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டினரின் துயரார்ந்த பொருளாதார நிலைமைகளைப் பற்றி சுட்டிக்காட்டினார். அவர்கள் மனநிறைவைப் பரப்பினாலும் சரி அல்லது எச்சரிக்கைமணி அடித்தாலும் சரி, இரு வேட்பாளர்களுமே சமூகத்தின் கீழே இருந்து வரும் இயக்கத்திற்கு முற்றிலும் குரோதமானவர்கள். ட்ரம்ப் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கு கடும் பலப்பிரயோகத்துடன் “சட்டம் ஒழுங்கு” பிரயோகிக்கப்பட வேண்டும் எனக் கோரினார். மறுபக்கத்தில் கிளிண்டன், வேலைகளையும் சம்பளங்களையும் பாதுகாக்கும் எந்த போராட்டத்தையும், சதிசெய்யும் தொழிற்சங்கங்களுடனும் மற்றும் நாள்தோறும் தொழிலாளர் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் பொலீசைக் கட்டுப்படுத்தும் நகர்ப்புற அரசியல் எந்திரங்களுடனும் கூட்டுவைத்துள்ளார்.
உலக முதலாளித்துவத்தின் நிலைமுறிவாகவும், அனைத்து பிரதான நாடுகளிலும் சமூக சமநிலைகளின் பொறிவினாலும், தொகுத்துக் காட்டப்படும் இந்த நிகழ்ச்சிப்போக்குகள்தான், தாராளவாத தலையங்க எழுத்தாளர்களிடமிருந்து அதிகரித்தவகையில் பதட்டமிக்க மற்றும் எச்சரிக்கை மிக்க அறிவித்தல்கள் வருவதற்கும் காரணமாகும். அடித்தளமானது உண்மையில் அவர்களின் காலுக்கடியில் நகர்கிறது, ட்ரம்ப்பின் தனிநபர் பண்பின் காரணமாக அல்ல. அவர் ஒட்டுமொத்த நிலைமுறிவின் நச்சுத்தன்மை கொண்ட அறிகுறி மட்டுமே. அவர்களின் உண்மையான அச்சம் எல்லாம் இரு அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் அவர்கள் பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிராக கீழிருந்து ஒரு வெடிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான்.
வாக்களிப்பதற்கு முன்னான இறுதி வாரங்களில் இல்லாவிட்டாலும், நவம்பர் 8 க்குப் பின்னர் வெடிக்க இருக்கும் பெரும் நிகழ்வுகளுக்காக உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் தயார் செய்யும் பொருட்டு சோசலிச சமத்துவக் கட்சியானது தேர்தலில் நிற்கிறது. எமது வேட்பாளர்கள், ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் ஜெர்ரி வைட்டும் உதவி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நைல்ஸ் நிமூத்தும், முதலாளித்துவ வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரமானது, நெருக்கடியின் அதிகரிப்பை மறைப்பதையும், உழைக்கும் மக்களை நிராயுதபாணி ஆக்குவதையுமே நோக்கமாக கொண்டுள்ளது என எச்சரிக்கின்றனர்.
இன்றிலிருந்து இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது, வைட்டுக்கும் நிமூத்திற்கும் வாக்களிக்குமாறு எமது ஆதரவாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். இருப்பினும் எமது பிரச்சாரம் அடிப்படையில் வாக்குகள் பற்றியது அல்ல, மாறாக எதிர்வரவிருக்கும் போராட்டங்களுக்கு தலைமை கொடுக்க ஒரு அரசியல் கட்சியை கட்டுவது பற்றிய பிரச்சினை ஆகும். சோசலிசக் கட்சியில் சேர்ந்து, சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஈடுபடுங்கள். போருக்கு எதிராகவும் அதனை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகவும் ஒரு இயக்கத்தை ஒழுங்கு செய்யவும், எம்முன்னே உள்ள பணிகளுக்கு தயார் செய்யவும், சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பும் டிட்ராயிட்டில் நவம்பர் 5 அன்று, “சோசலிசம் எதிர் முதலாளித்துவம் மற்றும் போர்” எனும் தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்துகின்றன. மேலும் தகவல் அறிவதற்கு மாநாட்டின் வலைத் தளத்தை socialismvswar.com அணுகவும்.