Print Version|Feedback
US defence secretary announces “third phase” of military build-up against China
சீனாவிற்கு எதிரான "மூன்றாம் கட்ட" இராணுவ தயார்ப்படுத்தலை அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அறிவிக்கிறார்
By Peter Symonds
4 October 2016
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுடன் ஏற்கனவே பதட்டமாக உள்ள இராணுவ மோதலை அதிகரிக்க மட்டுமே செய்யக்கூடிய பெண்டகனின் "மறுசமன்படுத்தல்" அல்லது "முன்னிலையை" அப்பிராந்தியத்தில் இன்னும் அதிவேகமாக விரிவாக்குவது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர் கடந்த வியாழனன்று அறிவித்தார். ஆசிய பசிபிக் "அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ஒரே பிராந்தியமாகும்" என்று வலியுறுத்தினார்.
சான் டியேகோ (San Diego) இல் விமானந்தாங்கிய போர்க்கப்பல் USS Carl Vinson இல் இருந்து பேசுகையில், ஆசியாவில் "கோட்பாட்டுரீதியிலான மற்றும் உள்ளார்ந்த பாதுகாப்பு வலையமைப்பை" பலப்படுத்துவதற்கும் மற்றும் அமெரிக்க இராணுவ தயார்ப்படுத்தலுக்கும் உரிய "மூன்றாம் கட்டம்" என்று அவர் குறிப்பிட்டதை கார்ட்டர் விவரித்தார். அந்த "வலையமைப்பில்" பெய்ஜிங் தவிர்க்கப்படவில்லை என்று கூறிய போதிலும், அந்த "மூன்றாம் கட்டத்தின்" ஒவ்வொரு அம்சமும் சீனாவுடனான ஒரு போருக்கு தயாரிப்பு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
“அமெரிக்காவுடன் ஏனைய 11 நாடுகளை மிக நெருக்கமாக ஒன்றிணைப்பதை" பசிபிக் கடந்த கூட்டு உடன்படிக்கையுடன் (TPP) கார்ட்டர் இணைத்ததன் முக்கியத்துவமே, அந்த "முன்னிலையின்" நிஜமான நோக்கத்தை, அதாவது அமெரிக்க நலன்களுக்கு சீனாவை அடிபணிய செய்வதும் மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்தை பேணுவதும் என்ற நோக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது. வாஷிங்டன் நிர்ணயிக்கும் விதிமுறைகளை பெய்ஜிங் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது ஒதுக்கப்படும் என்பதை TPP குறித்த நிபந்தனைகளே உறுதிப்படுத்தி விடுகின்றன.
இராணுவ பலத்திற்கு அடித்தளத்தில் அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கம் இருப்பதை பாதுகாப்புச் செயலர் தெளிவுபடுத்தினார். “மூன்றாம் கட்டத்தை" வரையறுத்து அவர் அறிவிக்கையில், “அமெரிக்கா தொடர்ந்து எங்களின் இராணுவ முனையைக் கூர்மைப்படுத்தும், அவ்விதத்தில் நாங்கள் அப்பிராந்தியத்தில் மிகவும் சக்தி வாய்ந்த இராணுவமாகவும் மற்றும் பாதுகாப்பிற்கான விருப்பமான பங்காளியாகவும் இருப்போம்,” என்றார்.
2011 இல் அறிவிக்கப்பட்ட "முன்னிலையின்" “முதல் கட்டம்", அமெரிக்க இராணுவத்தின் அளவில் ஒரு அதிகரிப்பதை மற்றும் அதன் இராணுவ ஆயத்தப்பாடுகளை மீளக்கட்டமைப்பதை உள்ளடக்கி இருந்தது. அன்னிய நாடுகளுக்கான கடற்படை மற்றும் விமானப்படை இராணுவ இருப்புகளில் 60 சதவீதத்தை அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்துவதற்கு பொறுப்பேற்று இருப்பதுடன், பத்தாயிரக் கணக்கான அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் ஆசியாவிற்கு திருப்பிவிடப்பட்டனர். ஜப்பான், தென் கொரியா, குவாம் மற்றும் ஹவாய் இல் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் மறுசீரமைப்பு தொடங்கப்பட்டது மற்றும் புதிய இராணுவ தளங்களை ஆயத்தப்படுத்துவற்கு ஆஸ்திரேலியாவுடன் உடன்பாடு எட்டப்பட்டது.
F-22 மற்றும் F-35 கண்டறியவியலா போர் விமானங்கள், கடல் போக்குவரத்துக்கான P-8 ரோந்து விமானம் மற்றும் நிலம் மீது போர்தொடுக்கும் கடற்படையின் புத்தம் புதிய வாகனங்கள் உட்பட ஆசிய பசிபிக்கிற்கு "மிக நவீன ஆற்றல் கொண்ட" போர் வாகனங்களை அனுப்புவது, அத்துடன் தொடர்ந்து மூலோபாய குண்டுவீசிகளை நிலைநிறுத்துவதையும் “இரண்டாம் கட்டம்" உள்ளடக்கி இருந்தது. கூட்டாளிகள் மற்றும் மூலோபாய பங்காளிகளுடன் சீனாவைச் சுற்றி வளைக்கும் ஒரு முயற்சியில் அப்பிராந்தியம் எங்கிலும் இராணுவ உறவுகளை விரிவாக்குவதற்கான ஒரு ஒருமித்த முயற்சியும் அதில் உள்ளடங்கி இருந்தது. குறிப்பாக ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இந்தியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுடனான பாதுகாப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டதை கார்ட்டர் எடுத்துக்காட்டினார்.
"இராணுவ நிலையை" பராமரிப்பதற்காக, கார்ட்டர், "தரத்தை மேம்படுத்துவதற்கான" திட்டங்களையும் "மற்றும் எங்களின் பிராந்திய பல நிலைகளில் முதலீடு" செய்வதற்கான பரந்த திட்டங்களையும் விவரித்தார். நிதியுதவி வழங்கப்பட்டு இந்தாண்டு தொடங்கப்படவிருக்கின்ற, உயர் தொழில்நுட்ப திட்டங்களின் ஒரு பட்டியலை அவர் வெளியிட்டார், அதில் பின்வருபவை உள்ளடங்கும்:
* வெர்ஜீனியா-ரக அணுகுண்டு ஏந்திய நீர்மூழ்கி கப்பல்களின் ஏவுகணை எண்ணிக்கையை மும்மடங்கு அதிகரிப்பதன் மூலம், அவற்றை "இன்னும் அதிக அபாயகரமான மற்றும் இன்னும் அதிக ஆற்றலுடையவை" ஆக செய்வது
* “உலகிலேயே மிகவும் அபாயகரமானதாக, கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பல்களைத் தகர்க்கும் படையை" பேணுவதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்வதன் பாகமாக, பல்வேறு விதமான கடலுக்கடியிலான டிரோன்களுக்கான நிதியுதவியை அதிகரிப்பது
* புதிய B-21 ரைடர் ரக தொலைதூர தாக்கும் குண்டுவீசிகளுக்காக ஐந்தாண்டுகளில் 12 பில்லியன் டாலர் வழங்குவது
* 400 க்கும் அதிகமான கண்டறியவியலாத F-35 கூட்டு தாக்குதல் போர்விமானங்களை வாங்க ஐந்தாண்டுகளில் 56 பில்லியன் டாலர் செலவிடுவது
* வானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானப்படையை மேம்படுத்த ஐந்தாண்டுகளில் அண்மித்து 16 பில்லியன் டாலர் முதலீடு செய்வது
* “கடலில் தொலைதூரம் இருக்கும் எதிரி கப்பல்களையும் தாக்கம் விதத்தில்", SM-6 ஏவுகணையை வேறு பயன்பாடுகளுக்கும் உரியதாக செய்வது
* “நிலத்தில் தாக்கும் மற்றும் கப்பல்களைத் தகர்க்கும் ஏவுகணைகளது தூரம் மற்றும் துல்லியத்தை" மேம்படுத்துவதிலும், அத்துடன் புதிய நீருக்கடியிலான ஏவுகணைகளிலும் முதலீடு செய்வது
* இணையவழி, மின்னணு-வழி மற்றும் விண்வெளி போர்முறைகளில், அடுத்த ஆண்டு மட்டும் 34 பில்லியன் டாலர் அளவிற்கு, மிகப் பெரியளவில் புதிய முதலீடுகளைச் செய்வது
இத்தகைய புதிய ஆயுதங்கள் மற்றும் மேம்படுத்தல்களில் ஒவ்வொன்றும், முன்பே பெண்டகனின் வான்வழி/கடல்வழி போர் மூலோபாயத்தில் முன்னரே கூறப்பட்டுள்ளவை, சீனாவுடனான ஒரு போரில் சண்டையிடுவதற்காக மேம்படுத்தப்படுகின்றன. இந்த மூலோபாயமானது, முடக்கும் வகையில் கடற்படை முற்றுகையுடன் சேர்ந்து, சீன பெருநிலம் மீதான ஒரு பாரிய ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலாகும்.
அனைத்திற்கும் மேலாக, கார்ட்டர் குறிப்பிட்டதைப் போல, அங்கே "நிறைய ஆச்சரியங்களும்"—சில "முன்னோக்கிப்பாயும்" முதலீடுகளும்—உள்ளன, அவை "ஆசிய பசிபிக்கில் பலமான மற்றும் சவாலுக்கிடமற்ற பாதுகாப்பை பலப்படுத்தும் எங்களின் தசாப்த-கால பொறுப்புறுதியைப்" பேணும்,” என்றார்.
“ஆசிய பசிபிக்கில் அதிகரித்து வரும் கோட்பாட்டுரீதியிலான மற்றும் உள்ளார்ந்த பாதுகாப்பு வலையமைப்பை" தீவிரப்படுத்துவதை இந்த "மூன்றாம் கட்டம்" தனிச்சிறப்பாக கொண்டுள்ளது, இதை கார்ட்டர் அறிவிக்கையில், “ஒரு சம்பிரதாயமான கூட்டணியாகவோ, அல்லது யாரையும் கட்டுப்படுத்தும் அல்லது தனிமைப்படுத்தும் ஒரு முயற்சியாகவோ" இது இருக்காது என்றார். “பொதுவான நலன்கள் மற்றும் மதிப்புகள்" என்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் “கோட்பாட்டுரீதியில்" என்ற வார்த்தை பிரயோகம், எரிச்சலூட்டும் விதத்தில் மற்றும் பாசாங்குத்தனமாக, “ஜனநாயகங்கள்" எனப்படும் நாடுகளது ஒரு வலையமைப்பை பெய்ஜிங்கில் உள்ள எதேச்சதிகார ஆட்சிக்கு எதிர்ரெதிரான ஆக்குவதன் மூலமாக, சீனாவை ஒதுக்குவதற்காக குறிக்கப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளது கூட்டமைப்பு எனப்படும் ஆசியான் நாடுகளை அமெரிக்க-தலைமையிலான "பாதுகாப்பு வலையத்திற்குள்" கொண்டு வருவதற்காக, அக்கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்களது ஒரு கூட்டத்திற்கு சற்று முன்னதாக கார்ட்டரின் உரை வழங்கப்பட்டது. இராணுவ ஆட்சியில் உள்ள தாய்லாந்து, ஸ்ராலினிச பொலிஸ்-அரசு ஆட்சிகள் நடக்கும் வியட்நாம், கம்போடியா மற்றும் லாவோஸ், நடைமுறையளவில் ஒரு-கட்சி அரசாக உள்ள மலேசியா மற்றும் சிங்கப்பூர், முற்றிலும் முடியாட்சியாக உள்ள புரூனே, தற்போது பாசிசவாத ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற தலைமையில் உள்ள பிலிப்பைன்ஸ், அத்துடன் தொடர்ந்து ஒரு முக்கிய அரசியல் பாத்திரம் வகிக்கும் இராணுவங்களைக் கொண்டுள்ள இந்தோனேஷியா மற்றும் மியான்மர் ஆகியவையே இந்த 10 ஆசியான் அங்கத்துவ நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறிருந்தபோதும், ஆசியான் பாதுகாப்பு மந்திரிகள் உடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற பேச்சுவார்த்தை, "எங்களின் பொதுவான நலன்கள் மற்றும் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும், அவற்றை அடைவதற்காக பங்காளிகளாக ஒன்றுசேர்வதற்கான புதிய வழிகளை அது அடையாளம் காணும்" என்று கார்ட்டர் அறிவித்தார். ஆசியான் நாடுகளை சீன-விரோத கூட்டணிக்குள் இழுப்பதும் மற்றும் தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனா மீதான அழுத்தத்தை அதிகரிப்பதுமே அந்த ஒன்றுகூடலின் உண்மையான நோக்கமாக இருந்தது.
“கடற்போக்குவரத்து பாதுகாப்பு" மீது ஒருமுனைப்பட்டிருந்த இக்கூட்டம், தென் சீனக் கடலில் சீனாவின் எல்லை உரிமைகோரல்களுக்கு அமெரிக்க ஆதரவுடன் சவால் விடுத்த பிலிப்பைன்ஸ் க்கு சாதகமாக வெளியான மத்தியஸ்த்துக்கான ஹேக் ஐ.நா நிரந்தர நீதிமன்றத்தின் ஜூலை 12 தீர்ப்பைத் தொடர்ந்து கூட்டப்பட்டிருந்தது.
அப்பிரச்சினையில் சீனாவுடனான ஒரு மோதலில் இருந்து பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுரேற்ற பின்வாங்குவதைக் குறித்தும் மற்றும் அமெரிக்காவுடன் அதன் இராணுவ உறவுகளைத் தளர்த்த அறிவித்துள்ளமை குறித்தும் வாஷிங்டன் அதிகரித்தளவில் கவலை கொண்டுள்ளது. இந்த உள்ளடக்கத்தில், “பிலிப்பைன்ஸ் உடனான எங்களின் கூட்டணி இரும்பு கவசமாகும்" என்ற கார்ட்டரின் அறிவிப்பு, பெய்ஜிங்கின் முகாமிற்கு நகர வேண்டாம் என்பதற்கு மிக பகிரங்கமான டுரேற்ற க்கான அச்சுறுத்தலாகும்.
F-22 ராப்டர் போர்விமானங்கள் மற்றும் தந்திரமாக குண்டுவீசும் B-1B குண்டுவீசிகள் பறக்கவிடப்பட்டு, அமெரிக்க இராணுவ பலத்தைக் காட்சிப்படுத்தி, கார்ட்டர் அங்கே கூடியிருந்த பாதுகாப்பு அமைச்சர்களைக் கவர முனைந்தார். USS மிசோரி போர்க்கப்பலில் ஒரு இரவு விருந்துடன் வெள்ளிக்கிழமை சம்பவங்கள் நிறைவுற்றன, அதைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று நாசகாரி போர்க்கப்பலான USS Chung-Hoon இல் ஒரு சுற்றுப்பயணம் நடந்தது.
ஆசியான் நாடுகளுடனான கடற்போக்குவரத்து பேச்சுவார்த்தை மற்றும் கடற்போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஒத்திகை உட்பட, புதிய கடற்போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பாதுகாப்பு செயலர் விவரித்தார். பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய சில ஆசியான் அங்கத்துவ நாடுகளுடன் கூட்டுறவை அபிவிருத்தி செய்ய மற்றும் படைத்தளவாடங்களை வழங்க பெண்டகன் ஏற்கனவே கடற்போக்குவரத்து பாதுகாப்பு திட்டம் என்ற ஒன்றில் ஐந்தாண்டுகளுக்கு 425 மில்லியன் டாலரை வழங்கி வருகிறது.
ஆசியாவை நோக்கிய அதன் மறுசமன்படுத்தலின் "மூன்றாம் கட்டத்தை" வேகமாக நடைமுறைப்படுத்துவதற்கு பெண்டகன் தீர்மானகரமாக இருப்பதில், சமாதானமானதோ அல்லது தீங்கிற்கு இடமற்றதோ எதுவும் கிடையாது. பிராந்திய பாதுகாப்பைப் பேணுவது என்ற பெயரில், அமெரிக்க ஏகாதிபத்தியம் வேகமாகவும் மற்றும் பொறுப்பற்ற விதத்திலும் சீனாவுடன் ஒரு பலப்பரீட்சைக்குத் தயாரிப்பு செய்து வருகிறது, இது பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.