Print Version|Feedback
Amid Mosul offensive, Turkey denounces US policy, stakes claims in Balkans
மொசூல் தாக்குதலின் மத்தியில், துருக்கி அமெரிக்க கொள்கையை கண்டிப்பதோடு, பால்கன் பகுதிகளுக்கு உரிமையும் கோருகிறது
By Alex Lantier
20 October 2016
மொசூல் மீது அமெரிக்கா-வழிநடத்தும் தாக்குதல் மற்றும் ஜூலையில் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆதரிக்கப்பட்ட ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கு எதிரான தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஆகியவை துருக்கிக்குள்ளும் மற்றும் பிரதான ஏகாதிபத்திய சக்திகளுடனான துருக்கியின் உறவுகளிலும் வெடிப்பார்ந்த பதட்டங்களுக்கு எரியூட்டி வருகிறது.
அவரது ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கான பெரும்பிரயத்தனத்தில், எர்டோகன் தேசியவாத உணர்வைத் தூண்டிவிட்டு வருவதுடன், முன்னாள் ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்தில் தலையீடு செய்வதற்கான உரிமையை மறைமுகமாக கையிலெடுத்துள்ளார். அவரது கலகம் தூண்டும் பல உரைகளில், அவர் மத்திய கிழக்கில் மட்டுமல்ல, மாறாக காகசஸ் மற்றும், மிகவும் வெடிப்பார்ந்து இருக்கக்கூடிய பால்கன்களிலும் எல்லை உரிமைகோரல்களில் பங்கு கோருகிறார். இது, 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் துருக்கியுடன் மூன்று போர்களில் சண்டையிட்டுள்ளதும் மற்றும் சைப்ரஸ் மீதான 1974 துருக்கிய படையெடுப்புக்கு இடையே துருக்கியுடன் போருக்கு அருகாமையில் சென்றதுமான கிரீஸின் அதிகாரிகளிடம் இருந்து கண்டனங்களை வரவழைத்துள்ளது.
திங்களன்று இஸ்தான்புல்லில் பேசுகையில், மொசூல் தாக்குதலில் துருக்கிய பங்குபற்றலை தடுப்பதற்காக வாஷிங்டனை தாக்கினார் —அங்கே வாஷிங்டன், துருக்கிய அரசாங்கம் ஆழ்ந்த விரோதப் போக்கை கொண்டுள்ள இனரீதியிலான குர்திஷ் போராளிகள் குழுக்களை சார்ந்துள்ளது— மற்றும் ஜூலை ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் சூத்திரதாரியாக எர்டோகன் குற்றஞ்சாட்டிய கூலன் இயக்க தலைவரான, அமெரிக்காவில் தங்கியுள்ள மதகுரு பெத்துல்லா கூலனுக்கு இடமளிப்பதற்காகவும் அவர் அதை தாக்கினார்.
“மொசூலில் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன,” என்று எர்டோகன் அறிவித்தார். “அவர்கள் என்ன கூறுகிறார்கள்? 'துருக்கி மொசூலில் நுழைய முடியாது போகலாம்!' என்று கூறுகிறார்கள். என்னால் ஏன் நுழைய முடியாது? என் வசம் 350 கிலோமீட்டர் நீள எல்லை உள்ளது, எல்லை தாண்டிவரும் வரும் அச்சுறுத்தலில் இருக்கிறேன். … மொசூல் நடவடிக்கையில் துருக்கி பங்கு வகிக்கும் மற்றும் மேசையில் ஓரிடத்தையும் தக்க வைக்கும். நாங்கள் ஒதுங்கியிருப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் அங்கே மொசூலில் எங்களுக்கென்று வரலாறு உள்ளது,” என்றார்.
மொசூலில் குர்திஷ் போராளிகள் குழுக்களை சார்ந்திருப்பதற்காக எர்டோகன் அவரது முந்தைய அக்டோபர் 14 உரையில் வாஷிங்டனை அப்பட்டமாக தாக்கினார்: “நீங்கள் வெட்கப்பட வேண்டும்! PYD/YPG [போராளிகள் குழுக்கள்] நேட்டோவில் உள்ள உங்கள் பங்காளியா அல்லது அது துருக்கியா? அது துருக்கி என்றால், நீங்கள் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வந்து, எங்களுடன் சேர்ந்து உங்கள் நடவடிக்கையை எடுக்க வேண்டும்,” என்றார்.
இஸ்தான்புல்லில், கூலன் உடனான அதன் கூட்டணியால் வாஷிங்டன் பயங்கரவாதத்திற்கு உடந்தையாகி உள்ளதென்றும் எர்டோகன் குற்றஞ்சாட்டினார்: “ஒரு நீதித்துறை அமைப்புமுறை எவ்வாறு பயங்கரவாத அமைப்புகளை மற்றும் பயங்கரவாத தலைவர்களை பாதுகாக்க முடியும்? ஒரு பயங்கரவாதிக்கு எவ்வாறு பச்சை அட்டை [க்ரீன் கார்டு] வழங்கப்பட்டுள்ளது? அவர் 400 ஏக்கர் பண்ணையில் சொகுசாக வாழ்ந்து கொண்டே, அங்கிருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்? யாரை நீங்கள் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?”
மொசூல் விவகாரத்தில் எர்டோகனின் வாதங்கள், தெற்கு பல்கேரியா மற்றும் வடக்கு கிரீஸின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய மேற்கு தரஸ் (Western Thrace) குறித்த கூற்றுகள் உட்பட, அவர் சமீபத்திய நாட்களில் வெளியிட்ட தொடர்ச்சியான பல எல்லை உரிமைகோரல்களின் பாகமாக இருந்தன.
அக்டோபர் 15 இல் ரைஸ் மாகாணத்தின் ரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகத்தில் அவர் கூறுகையில், “மொசூலை அதன் போக்கில் நாம் விட்டுவிடலாமா? மொசூல் வரலாறில் நாம் இடம் பெற்றிருக்கிறோம். மேலும் இப்போது அவர்கள் அதை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் மொசூல் மக்களிடமிருந்து மொசூலைப் பறிக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள் … அலெப்போ விவகாரத்தில் துருக்கி முதுகைக் காட்டி நிற்க முடியாது. மேற்கு தரஸ், சைப்ரஸ், கிரிமீயா மற்றும் ஏனைய இடங்களில் துருக்கி அதன் இரத்த சொந்தங்களைக் கண்டு கொள்ளாமல் விட முடியாது. லிபியா, எகிப்து, போஸ்னியா மற்றும் ஆப்கானிஸ்தானை கூட அவற்றின் சொந்த பிரச்சினைகளுடன் விட்டுவிட முடியாது,” என்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் எந்தவொரு நாட்டிலும் நீங்கள் எங்களிடம் காணும் ஏதோவொன்றை காண்பீர்கள் நீங்கள் [சிரியாவை ஒட்டி துருக்கியின் எல்லையில் உள்ள] ஹடாய் மற்றும் மொரோக்கோவுக்கு இடையிலேயே நின்று விடுங்கள். தரஸ் இல் இருந்து கிழக்கு ஐரோப்பா வரையில் புவியியல்ரீதியில் நீண்ட பகுதியில், நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் நிச்சயமாக எங்களது வம்சாவளியினரின் தடத்தைக் கடந்து வருவீர்கள்,” என்றார்.
நேற்று கிரேக்க ஜனாதிபதி பிரோகோபிஸ் பாவ்லொபௌலொஸ் (Prokopis Pavlopoulos) எச்சரிக்கையில், எர்டோகனின் அறிக்கைகள் 1923 லோசான் உடன்படிக்கையை கேள்விக்குட்படுத்துகிறது என்றார். அந்த உடன்படிக்கை முதலாம் உலகப் போரில் துருக்கி உடனான நேசப்படைகளது மோதலை இறுதியில் முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் அழிவையும், மத்திய கிழக்கின் பெரும்பகுதிகளை பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு இடையே காலனிகளாக பங்கு போடுவதையும் இறுதி செய்தளித்தது, மேலும் கிரீஸ் மற்றும் துருக்கிக்கு இடையிலான இப்போதைய எல்லையையும் வகுத்துக் கொடுத்தது.
“துருக்கிய ஜனாதிபதி எர்டோகனின் பகட்டுப்பேச்சு, மிகவும் பெரிய மனம் படைத்ததாக இருந்தாலும் கூட, எந்தவொரு முன்னோக்கின் அடிப்படையிலும், துரதிருஷ்டவசமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ லோசான் உடன்படிக்கைக்கு குழிபறிக்கிறது, மேலும் கிரேக்க-துருக்கிய உறவுகளைக் குறித்தும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகளைக் குறித்தும் குறிப்பிட வேண்டியதே இல்லை,” என்றார்.
மேற்கு தரஸ் சம்பந்தமாக எர்டோகன் ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு திட்டமிட்டு வருவதாக கிரேக்க ஊடகங்கள் ஆரம்பத்தில் ஓர் செய்தியும் வெளியிட்டன. பின்னர் அச்செய்தி மறுக்கப்பட்டது, ஆனால் கிரேக்க வெளியுறவு அமைச்சகம் "ஆத்திரமூட்டுவதாக மற்றும் பிராந்திய ஸ்திரப்பாட்டை பலவீனப்படுத்துவதாக" கூறி அச்செய்தியை கண்டித்து ஓர் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் வரை அது மறுக்கப்பட்டிருக்கவில்லை.
இதை தொடர்ந்து, கடந்த மாதம் எர்டோகன் லோசான் உடன்படிக்கையை பகிரங்கமாக தாக்கினார். அதுவொரு "வெற்றியே" கிடையாது என்று வலியுறுத்திய அவர், துருக்கியின் ஏகியன் கடற்கரைக்கு "அக்கரையிலிருந்து நீங்கள் கூச்சலிடுவதற்காக, நாங்கள் தான் அந்த (கிரேக்க) தீவுகளை விட்டுக்கொடுத்தோம்,” என்றார்.
கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் பனொஸ் கமெனோஸ் பதிலுரைக்கையில், “சர்வதேச உடன்படிக்கைகள் மீது ஐயப்பாடுகளைச் சித்தரிக்கும் முயற்சிகள், அபாயகரமான பாதைகளுக்கு இட்டுச் செல்கின்றன,” என்று கூறியதுடன், துருக்கி அத்தகைய பாதைகளைப் "பின்பற்ற" கூடாது என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
எர்டோகனின் அறிக்கைகளுக்கு அடியிலிருக்கும் வெடிப்பார்ந்த அரசியல் மற்றும் இராணுவ பதட்டங்கள், ஏகாதிபத்திய சக்திகளது ஒரு கால் நூற்றாண்டு இடைவிடாத போர்கள் மற்றும் தலையீடுகளின் விளைபொருளாகும். சோவியத் அதிகாரத்துவம் அமெரிக்க-நேட்டோ போர்களுக்கு இருந்த பிரதான இராணுவ தடையை நீக்கி, சோவியத் ஒன்றியத்தை கலைத்து முதலாளித்துவத்தை மீட்டமைக்க நகர்ந்த ஆண்டான, 1991 இல் நடத்தப்பட்ட ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான வளைகுடா போருக்குப் பின்னர் இருந்து, நேட்டோ அதிகாரங்கள் இடைவிடாது மத்திய கிழக்கு மற்றும் பால்கன்களில் தலையீடு செய்திருந்தது. இத்தகைய போர்களில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள் மற்றும் பத்து மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஈராக் மற்றும் யூகோஸ்லேவியா போர்களைப் பின்தொடர்ந்து, 2008 இல் காகசஸ் இல் ரஷ்ய படைகள் மீது அமெரிக்க ஆதரவிலான ஜோர்ஜிய தாக்குதல் மற்றும் இறுதியில் 2011 இல் லிபியா மற்றும் சிரியாவில் நேட்டோ போர்கள் தொடங்கப்பட்டமை ஆகியவை நிச்சயமாக முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போரில் உருவான பிராந்திய அரசு கட்டமைப்பை தகர்த்தன.
ரஷ்யா, மற்றும் சிரியாவில் உள்ள ரஷ்யா ஆதரிக்கும் ஆட்சியுடனான நேட்டோவின் மோதல் இப்போது ஒரு மூன்றாம் உலக போரைக் கட்டவிழ்த்துவிட அச்சுறுத்தி வருகின்ற நிலையில், ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு முதலாளித்துவத்தின் வரலாறு மற்றும் புவிசார் அரசியலில் ஆழமாக வேரூன்றிய மோதல்கள் தங்களைத்தாங்களே மீண்டும் பலப்படுத்திக் கொண்டு வருகின்றன. துருக்கிய மற்றும் கிரேக்க அதிகாரிகளது வெளிப்படையான அறிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களானது, எந்தவொரு நாட்டின் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் மீறி எல்லா அதிகாரங்களது தூதர்களும் இராணுவ முப்படை தளபதிகளும் பரந்த உலகளாவிய நெருக்கடியால் எவ்வாறு இழுக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
"அண்டைநாடுகளுடன் பிரச்சினையற்ற" வெளியுறவு கொள்கை எனப்படுவதைக் கைவிட்டு, நேட்டோ அழுத்தத்தின் கீழ் லிபிய மற்றும் சிரிய போர்களை ஆதரித்திருந்த எர்டோகன் அரசாங்கம், வாஷிங்டனின் சிரிய கொள்கையினது குழப்பமான சகல நெளிவு சுளிவுகளுக்கும் இணங்கி போக முடியாமல் உள்ளது. சிரிய போரானது, துருக்கிக்கு உள்ளேயே கூட குர்திஷ் பிரிவினைவாத உணர்வுக்கு முறையிட்டு ஒரு குர்திஷ் அரசு உருவாவதற்கு இட்டுச் செல்லுமோ என்று பீதியடைந்து, எர்டோகன் சிரிய குர்திஷ் போராளிகள் குழுக்கள் உடனான அமெரிக்க கூட்டணிகளை எதிர்க்கிறார். இது சிரியா விவகாரத்தில் நேட்டோவுடன், அதுவும் குறிப்பாக வாஷிங்டன் உடன், அங்காராவின் மோதல்கள் தீவிரமடைவதற்கு இட்டுச் செல்கிறது.
ஜூலை ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய மறைமுக ஆதரவு, இந்தாண்டின் தொடக்கத்தில் எர்டோகன், மாஸ்கோ மற்றும் டமாஸ்கஸை நோக்கி இன்னும் நெருக்கமாக நகரக்கூடும் என்ற அவரது அறிக்கைகள் மீது அதிகரித்த கவலைகளைப் பிரதிபலித்தது.
இஸ்லாமிய அரசு (IS) போராளி குழுக்கள் வசமிருந்த வடக்கு சிரிய பகுதிகள் மீது அமெரிக்க ஆதரவுடன் துருக்கி படையெடுப்பை தொடங்கியவேளையில், அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னரும் கூட வாஷிங்டன் உடன் எர்டோகன் சிறந்த உறவுகளை கொண்டிருக்க செயற்படுவதாக தோற்றப்பாட்டை கொண்டிருந்தபோதும், அடியிலிருந்த மோதல்களில் எதுவுமே தீர்க்கப்படவில்லை என்பது தெளிவாக உள்ளது. அதற்கு மாறாக, அடுத்தடுத்து ஒவ்வொரு இராணுவ தீவிரப்பாடும் சர்வதேச மோதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. எர்டோகனின் இப்போதைய பொறுப்பற்ற தேசியவாத முறையீடுகள், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் முன்பினும் பரந்த மற்றும் அதிக வெடிப்பார்ந்த மோதல்களுக்கும் மற்றும் போர்களுக்கும் மட்டுமே களம் அமைக்கிறது.