Print Version|Feedback
Tamil People’s Council provides political cover for pro-US Sri Lankan regime
தமிழ் மக்கள் பேரவை அமெரிக்க ஆதரவு இலங்கை ஆட்சிக்கு அரசியல் மூடுதிரை இடுகின்றது
By Athiyan Silva
15 October 2016
செப்டம்பர் 24 அன்று, தமிழ் தேசியவாதக் கன்னைகளில் ஒன்றான தமிழ் மக்கள் பேரவை “எழுக தமிழ் 2016” என்ற ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. ”நல்லாட்சியை” உருவாக்கிக் கொண்டிருப்பதாக தமிழ் தேசியவாதிகளால் பாராட்டப்படுகின்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு எழுந்து வருவதன் மத்தியில் சிங்கள விரோத மனோநிலையைத் தூண்டிவிடுவதும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதும் தான் அவர்களது இலக்காக இருந்தது.
சிறிசேன-விக்கிரமசிங்க-தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிக்கு எதிரான சமூகக் கோபம் முன்கண்டிராத அளவில் அதிகரித்திருக்கிறது. நாடெங்கிலும் தொழிலாளர்களும் மாணவர்களும், வன்முறையான அரச ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்கின்ற நிலையிலும் கூட, சமூக வெட்டுகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் உள்நாட்டுப் போரின் முடிவில் இருந்தே தமிழ் சிறுபான்மை மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தொடர்ந்தும் இருந்து வருகின்ற நிலையில், அதிகாரிகளால் காணாமல் போகச் செய்யப்பட்ட தமது உறவினர்களை சிறிசேன விடுதலை செய்ய வேண்டும் என குடும்பங்கள் கோரிவருகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளை செயலாக்குவதிலும் ஜனநாயக உரிமைகளை பலவீனப்படுத்துவதிலும், எல்லாவற்றுக்கும் மேல் சீனாவுக்கு எதிரான போருக்குத் தயாரிப்பு செய்வதற்கான அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யை ஊக்குவிப்பதிலும் சிறிசேனவுடன் சேர்ந்து செயல்படுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான அரசியல் மறைப்பை வழங்குவதே தமிழ் மக்கள் பேரவையின் நோக்கமாய் இருக்கிறது. இதுவே அமெரிக்கா, இந்திய அரசாங்கம் மற்றும் சிறிசேன ஆட்சியுடன் தமிழ் தேசியவாதக் குழுக்கள் கரம் கோர்த்திருப்பதற்கான சர்வதேச அடிப்படை ஆகும்.
இலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாத அரச அமைப்பின் மூலமாக தமிழ் மக்கள் பல தசாப்தங்களாய் ஒடுக்கப்பட்டு வருகின்றனர் என்றும், “எழுக தமிழ்” பேரணியானது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் விடயத்தில் தமிழ் மக்கள் பேரவை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்றும், கொழும்பில் இருக்கும் சிறிசேனவுக்கு சமிக்கையை அனுப்புவதாகும் என்று பேரணியின் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
"ஒரு ஒற்றையாட்சி அரசு அமைப்புமுறை தமிழ் தேசியப் பிரச்சினைக்கு எப்போதும் தீர்வாக முடியாது” என்று அறிவித்த அவர்கள், “வடக்கு மற்றும் கிழக்கின் தமிழ் மக்களை ஒரு தனி தேசமாக அங்கீகரிக்கின்ற அதேசமயத்தில், தமிழ் மக்கள் பேரவை அளித்துள்ள அரசியலமைப்பு ஆலோசனைகளில் கூறப்பட்டுள்ளவாறு, அவர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதன் மூலமும் அதற்கு மரியாதையளிப்பதன் மூலமும், இறையாண்மை கொண்ட ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பு முறையை ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டுமே தமிழ் தேசியப் பிரச்சினைக்கான ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட முடியும்” என்றும் மேலும் சேர்த்துக் கொண்டனர்.
“சுய நிர்ணயத்திற்காக”வும் மற்றும் தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பு முறைக்காகவும் தமிழ் மக்கள் பேரவை விடுக்கின்ற அழைப்பும், அதன் சிங்கள விரோதக் கருத்துக்களும் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அவர்களது சிங்கள மற்றும் முஸ்லீம் வர்க்க சகோதர சகோதரிகளுடன் கரம்கோர்க்க விடாமல் பிளவுபடுத்துவதை நோக்கமாய் கொண்ட ஒரு பிற்போக்குத்தனமான மோசடியாகும். சர்வதேச நிதி மூலதனத்தின் சார்பாக தொழிலாளர்களை, பிரதானமாக தமிழ் உழைக்கும் மக்களை, சுரண்டுவதற்கு முனைகின்ற தமிழ் முதலாளித்துவத்தின் தனிச்சலுகை நலன்களுக்கு மட்டுமே இது முழுக்க சேவை செய்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மதிப்பிழந்து வரும் நிலையில், பெருகும் சமூக கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ் மக்கள் பேரவை தலைமைப் பாத்திரம் வகிக்கிறது. செப்டெம்பர் 2013 வடமாகாண சபை தேர்த்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தர்மலிங்கம் சித்தார்த்தனின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, போன்ற பல்வேறு தமிழ் குட்டி முதலாளித்துவக் குழுக்கள், மற்றும் இவர்களுடன் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதவாதிகள், தொழில் வல்லுனர்கள், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூலமாக கடந்த டிசம்பர் 19ம் தேதி உருவாக்கப்பட்டது.
ஆயினும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், தமிழ் மக்கள் பேரவைக்கும் இடையே குறிப்பிடத்தக்க அரசியல் வேறுபாடு ஏதும் கிடையாது. இரண்டுமே, சிறிசேன ஆட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியம், மற்றும் அதனது பிரதான பிராந்தியக் கூட்டாளியான இந்தியா ஆகியவற்றின் புவிமூலோபாய நலன்களை நோக்கி இருப்பதில் இணைந்திருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்கள் தாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதை எப்போதும் தெளிவாகக் கூறி வந்திருக்கின்றனர். தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டபோது, EPRLF தலைவரான சுரேஷ் பிரேமசந்திரன் “இந்த அமைப்பு, கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல. கூட்டமைப்புக்கு எதிரானது என்ற தோற்றப்பாட்டை கொடுப்பது அர்த்தமற்ற செயற்பாடு ஆகும்” என கூறினார்.
யாழ்ப்பாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இருதய மருத்துவரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான பி.லட்சுமணன், “தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் நிலையை வலுப்படுத்திக் கொள்வதில் நாங்கள் உதவி செய்ய முயல்வோம்” என்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழ் இனவாத முன்னோக்கின் விளைபயனாக அது அழிவுகரமான வகையில் தோற்கடிக்கப்பட்ட 2009 உள்நாட்டுப் போர் முடிந்ததற்குப் பிந்தைய காலத்தில் இந்த சக்திகளின் திவால்நிலை முற்றிலுமாய் அம்பலப்பட்டு வந்திருக்கிறது. சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களுக்கு எந்த முற்போக்கான அழைப்பையும் விட திறனில்லாமலும், அதனது முக்கியமான ஆதரவு நாடுகளால், குறிப்பாக இந்தியாவால் கைவிடப்பட்டும், அனைத்து பெரிய உலக சக்திகளின் ஆதரவுடன் இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் புலிகள் அமைப்பு அழித்தொழிக்கப்பட்டது.
2011 இல் அமெரிக்கா தனது “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யை அறிவித்ததன் பின்னர், புலிகள் படுகொலை செய்யப்படுவதற்கு ஆதரவளிக்க அமெரிக்காவும், இந்தியாவும் முடிவு செய்திருந்ததன் பின்னணியில் இருந்த புவி மூலோபாயக் கணக்கு தெள்ளத் தெளிவாகியிருக்கிறது. அவர்களால் சீனா, இலங்கைக்கு இடையில் அபிவிருத்தி கண்ட நெருக்க உறவினை ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது. இந்த உறவு சீனாவின் “பட்டுப் பாதை பொருளாதார வலயம்” (Silk Road Economic Belt), 2013 இல் அறிவிக்கப்பட்ட “ஒரே இணைப்பு, ஒரே பாதை” (One Belt, One Road) முன்முயற்சியின் பகுதியாக இலங்கையில் துறைமுகங்களுக்கும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் சீனா மலிந்த கடன்களை வழங்குவதன் மூலம் நெருக்கமாகி வந்தது.
புலிகளின் அழித்தொழிப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை போன்ற சக்திகளுக்கு தங்கள் கொள்கைகளை ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு நெருக்கமான விதத்தில் நிறுத்திக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது, அதனை அவை துரிதமாகக் கையிலெடுத்துக் கொண்டன. அமெரிக்கா ஆதரவுடன் புலிகளுக்கு எதிரான போர் நடத்தப்பட்டிருந்த போதிலும், அந்த போரில் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடிய இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரணை செய்யவிருப்பதாக கபடவேடத்துடன் மிரட்டி, சீனாவுடனான இலங்கை பொருளாதார உறவுகளைத் துண்டிப்பதற்கு இராஜபக்ஷவிற்கு, அமெரிக்கா அழுத்தம் கொடுத்தபோது, இந்த சக்திகள் அதற்கு ஆதரவளித்து அணிதிரண்டனர்.
2015 இல் அமெரிக்க ஆதரவு ஆட்சி மாற்ற நடவடிக்கை ஒன்றின் மூலமாக சிறிசேன அமர்த்தப்படுவதை ஆதரிப்பதற்கு முன்பாகவே, மனித உரிமைகள் பிரச்சினைகளின் அடிப்படையில் இராஜபக்ஷவிற்கு அழுத்தமளிப்பதற்கு அவை அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் தொடர்ந்து விண்ணப்பம் செய்துவந்தன. “மனிதாபிமானக் கவலைகளில் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசியல் சீர்திருத்தங்கள் செய்வதற்கும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கைக்கு நெருக்குதலளிக்க வேண்டும்” என்று பிரேமசந்திரன் பிபிசியிடம் கூறினார்.
தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பிற்போக்குத்தனமான வெளியுறவுக் கொள்கைக்கு கீழ்ப்படியச் செய்ய வேலை செய்த தமிழ் தேசியவாதிகள், தொழிலாளர்களுக்கு மிகவும் கசப்பான வகையில் குரோதம் கொண்டவர்களாவர்.
1980களில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்தே, இவர்கள் இந்திய மற்றும் சில சந்தர்ப்பங்களில் இலங்கை உளவுத் துறையின், சொத்துக்களாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டத்திற்கு வன்மையான குரோதம் கொண்டவர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) போன்ற பாரம்பரிய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவை அவர்கள் அனுபவித்த அதே வேளையில், LTTE, PLOTE, TELO மற்றும் EPRLF போன்ற தமிழ் குட்டி முதலாளித்துவக் குழுக்கள் புதுடெல்லியின் சொத்துக்களாக வளர்த்தெடுக்கப்பட்டன.
இலங்கையில் 1983 ஜூலையில் நடந்த தமிழர் விரோத கலவரங்களுக்கு பின்னர், இந்தியாவின் பிரதான உளவு முகமையான RAW (Research and Analysis Wing) இலங்கைக்கான நடவடிக்கைகளில் LTTE, PLOTE, TELO மற்றும் EPRLF போன்ற தமிழ் குட்டி முதலாளித்துவ தேசியவாதக் குழுக்களுக்கு நிதியாதாரமும், பயிற்சியும், ஆயுதங்களும் வழங்க ஆலோசனையளித்தது.
இந்த மூலோபாயமானது, அப்போதைய இலங்கை ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் புவிமூலோபாய நோக்குநிலையால் இந்திய ஆளும் வர்க்கம் பெரும் கவலை கொண்டிருந்த நிலையில், இலங்கையின் மீது அழுத்தமளிப்பதை நோக்கமாய் கொண்டிருந்தது. ஜெயவர்த்தன அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், ஆசியாவில் இந்தியாவின் பரம வைரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனும் உறவுகளை அபிவிருத்தி செய்தார், தீவை அந்நிய முதலீட்டுக்கு திறந்து விடுகின்ற சுதந்திர சந்தைக் கொள்கைகளை அறிவித்ததோடு, சிங்களப் பேரினவாதத்தையும் கிளறி விட்டார். இந்தியா, சோவியத் அதிகாரத்துவத்துடன் அது கொண்டிருந்த பனிப்போர் காலக் கூட்டணியின் அடிப்படையில், ஜெயவர்த்தனவின் நோக்குநிலையை ஒரு பெரும் அச்சுறுத்தலாய் கண்டது.
LTTE, PLOTE, TELO, EPRLF ஆகியவை, அவை ஆதரித்த பிரதானமாக இந்தியாவின், அத்துடன் இலங்கையினதும், அரசுகளின் வெளியுறவுக் கொள்கைக்கு குறுக்கே வருகின்ற எந்த இயக்கத்திற்கும் எதிராக கொலைவெறியுடனான வன்முறையைப் பயன்படுத்தும் குண்டர் குழுக்களாய் எழுந்தன. வடக்கிலும் கிழக்கிலும் அதிகரித்து வந்த சமூகக் கோபத்தை, தமிழ் இனவாதத்தின் அடிப்படையிலான ஒரு இனவாதப் போர் முன்னோக்கினை ஊக்குவிப்பதற்காய் இந்திய ஆளும் வர்க்கமும் தமிழ் குட்டி முதலாளித்துவ குழுக்களும் சுரண்டிக் கொண்டன.
இந்தக் குழுக்களின் உள்முக உடைவுகளும், கன்னைச் சண்டைகளும் அவற்றுக்கு இடையிலான குருதிகொட்டும் சண்டைகளின் மூலமாய் தீர்க்கப்பட்டன. இதில் 1980களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இறந்தனர். தனது எதிராளிகளின் பெரும்பகுதியை கொன்ற பின்னர், புலிகள் மேலாதிக்க நிலைக்கு வந்தனர்.
புலிகள் ஆதரித்த 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, அமைதியைக் காப்பதாக கூறி இந்திய இராணுவத்தை இலங்கையின் வடபகுதிக்கு கொண்டுவந்தது. சண்டைநிறுத்தம் சில மாதங்கள் மட்டுமே நீடித்தது, புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் இடையில் நடந்த மோதலில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். LTTEக்கு எதிராக சண்டையிடுவதற்கு EPRLF, PLOTE, TELO, உள்ளிட்ட குழுக்களில் இருந்து படைகளைத் திரட்டி தமிழ் தேசிய இராணுவம் ஒன்றை RAW உருவாக்கியது.
மூன்று நட்சத்திரங்கள் மற்றும் EPRLF இன் பிரேமச்சந்திரன் தலைமையிலான மண்டையன் குழு போன்ற தமிழ் துணை இராணுவப் படைகளும், தமது பங்காக, IPKFக்கு ஒத்துழைத்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள அசோகா ஹோட்டலில் இருந்து தனது குழுவை இயக்கி வந்த பிரேமசந்திரன் அதனை ஒரு சித்தரவதை முகாமாக மாற்றினார். LTTE இன் அங்கத்தவர்களாக சந்தேகிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் அங்கு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
உள்நாட்டுப் போரின்போது இந்த சக்திகள் வகித்த இரத்தம்தோய்ந்த பாத்திரத்தின் வரலாறு, இன்று இலங்கையில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அவை எத்தகையதொரு பிற்போக்குத்தனமான பாத்திரத்தை ஆற்றுவதற்கு முனைந்து கொண்டிருக்கிறது என்பதற்கான மேலும் ஒரு அடையாளக்குறிப்பு ஆகும்.