Print Version|Feedback
Sri Lankan president warns of autocratic measures
இலங்கை ஜனாதிபதி எதேச்சதிகார நடவடிக்கைகளை எடுப்பதாக எச்சரிக்கிறார்
By K. Ratnayake
18 October 2016
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலஞ்ச ஆணைக்குழுவும் பொலிசும் "அரசியல் நிகழ்ச்சி நிரலின்" படி வேலை செய்வதாக குற்றம் சாட்டி, அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக, அவருக்கு கீழ் இயங்கிவரும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தலைமையிலான அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த புதன் கிழமை கொழும்பில் நடந்த ஒரு இராணுவ விழாவில் உரையாற்றிய சிறிசேன, இளைப்பாறிய மூன்று கடற்படை தளபதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இலஞ்ச ஆணைக்குழு எடுத்த முடிவை தான் எதிர்ப்பதாக அறிவித்தார். செப்டம்பர் 30, அவர்கள் அவன்கார்ட் என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு கிட்டத்தட்ட 11 பில்லியன் ரூபாய்கள் (US74.9 மில்லியன்) நஷ்டத்தை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். முன்நாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க, இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
சிறிசேன, முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்கள் நிதி துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரித்துக்கொண்டிருக்கும் நிதி குற்ற விசாரணைப் பிரிவையும் (FCID) கண்டனம் செய்தார். பத்திரிகையாளர் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் நான்கு இராணுவப் புலனாய்வாளர்களை 16 மாதங்கள் தடுத்து வைத்துள்ளமை தொடர்பாகவும் சிறிசேன போலீஸ் குற்ற புலனாய்வுப் பிரிவை (சி.ஐ.டி) விமர்சித்தார்.
"நான் இராணுவத்தைப் பலவீனப்படுத்த எதையும் செய்யமாட்டேன். நான் இராணுவம் பலவீனமடைய அனுமதிக்க மாட்டேன்,” என ஜனாதிபதி சபதம் செய்தார். தான் கடந்த காலத்தில் அமைதியாக இருந்ததாக கூறிய அவர், ஆனால் இப்போது “அதைப்பற்றி பகிரங்கமாக பேசத் தள்ளப்பட்டுள்ளேன், நான் வெளிப்படையாக நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்" என்றார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க., கொழும்பு ஐக்கிய அரசாங்கத்தின் முக்கிய கட்சியாகும். இதில் சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.) ஒரு பங்காளியாக உள்ளது. மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க.யின் ஒரு கன்னை, ஆளும் கூட்டணியை எதிர்ப்பதோடு கூட்டு எதிர்க்கட்சி என அழைக்கப்படும் ஒன்றையும் அமைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்பு திருத்தத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையினால் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்குவின் கீழேயே இலஞ்ச ஆணைக்குழுவும் பொலிசும் செயல்பாடுகின்றன.
அது சாதாரண தேர்தல் அல்ல. மாறாக அது மஹிந்த இராஜபக்ஷவை நீக்குவதற்காக, விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினதும் ஆதரவுடன், ஒபாமா நிர்வாகத்தால் இயக்கப்பட்ட திட்டமிட்ட ஆட்சி மாற்றமாகும். இராஜபக்ஷ மீதான அமெரிக்காவின் விரோதமானது அவரது எதேச்சதிகார ஆட்சி மற்றும் ஜனநாயக உரிமை மீறல்கள் பற்றிய அக்கறையினால் தோன்றியதல்ல. மாறாக, அவர் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்துகொண்டதற்கு எதிரானதாகும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட நீண்டகால யுத்தத்தின் பின்னர், நல்லாட்சி, ஜனநாயக உரிமைகள், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் காப்பாளனாக சிறிசேன தன்னைக் காட்டிக் கொண்டார்.
விக்கிரமசிங்க, குமாரதுங்க மற்றும் பல தமிழ் கட்சிகளின் மட்டுமன்றி, சிறிசேனவை ஜனநாயகவாதி என்று பிரகாசமான வண்ணங்களில் சித்தரித்த ஒரு தொகை போலி இடது அமைப்புக்கள் மற்றும் பிரஜைகள் சக்தி போன்ற மத்தியதர வர்க்க குழுக்களினதும் உதவியுடனேயே இந்த அரசியல் மோசடியை அவரால் செய்ய முடிந்தது.
உண்மையில், தேர்தல் அறிவிக்கப்படும் வரை, இராஜபக்ஷவின் அமைச்சரவையில் சிறிசேன ஒரு முக்கிய உறுப்பினராக இருந்து, அதன் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அனைத்துக்கும் அரசியல் ரீதியில் பொறுப்பாளியாக இருந்தார். விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, முந்தைய ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கங்களில் ஒரு அமைச்சராக இருந்து யுத்தத்தை தொடங்கி வைத்தமைக்கு பொறுப்பாளியாக இருந்ததுடன் இராஜபக்ஷவைப் போலவே எதேச்சதிகாரியாக இருந்தார்.
சிறிசேன, விக்கிரமசிங்க இருவரும், அரசியல் எதிரிகள் மீதான, குறிப்பாக இராஜபக்ஷவின் கூட்டு எதிர்க்கட்சி மீதான ஒரு வேட்டையாடலுக்காகவே இலஞ்ச ஆணைக்குழு, அத்துடன் எஃப்.சி.ஐ.டி. மற்றும் சி.ஐ.டி.யையும் பயன்படுத்தி வருவதுடன் அரசாங்கத்தின் மீதான மக்களின் பெருகிவரும் அதிருப்தியில் இருந்து கவனத்தை திசை திருப்பும் ஒரு வழிமுறையாகவும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
எனினும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு ஆட்சியின் பின்னர், நல்லாட்சிக்கான உதாரணங்களாக தானே உதவி செய்து உருவாக்கிய நிறுவனங்களில் இருந்தும் ஊழலுக்கு எதிராகப் போராடுவதில் தன் அர்ப்பணிப்பில் இருந்தும் தன்னை தூர விலக்கிக்கொள்ள முயற்சிக்கும் சிறிசேனவின் கடந்த வார கருத்துக்கள், ஐக்கிய அரசாங்கம் என்று அழைக்கப்படுவதனுள் காணப்படும் கூர்மையான பதட்டங்களை வெளிப்படுத்துகிறது.
அரசாங்கம் வெடித்துச்சிதறும் அரசியல் நிலைமையை எதிர்கொள்கிறது. இது பெருந்தோட்டங்களில் 200,000 தொழிலாளர்கள் ஈடுபடும் நடப்பு போராட்டங்கள் மற்றும் ஆங்காங்கேயான வேலை நிறுத்தங்களில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. ஜூன் மாதத்தில் தொழிலாளர் மற்றும் ஏழைகள் மத்தியில் வெகுஜன எதிர்ப்பு வளர்ச்சியடைந்ததன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஒத்திவைக்கும் கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. எனினும், தற்போது அது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும், இல்லையேல் சர்வதேச நாணய நிதியம் வாக்குறுதியளித்த கடனை நிறுத்தி வைப்பதை எதிர்கொள்ள நேரும். அத்தகைய ஒரு நிலைமை பிரமாண்டமான நிதி பிரச்சினைகளை உருவாக்கி விடும்.
இராஜபக்ஷவும் அவரது கூட்டு எதிர்க்கட்சியும், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பவர்களாக காட்டிக் கொண்டு அரசாங்கத்தின் மீது பெருகிவரும் அதிருப்தியை சுரண்டிக்கொள்ள முயற்சித்து வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமை சம்பந்தமான யுத்தக் குற்றங்களுக்கு அவரது அரசாங்கம் பொறுப்பு அல்ல என்று தீவிரமாக மறுத்துள்ளார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர் இராணுவத்தினதும் அதன் "யுத்த வீரர்களதும்" பாதுகாவலனாக தன்னை காட்டிக் கொள்கின்றார்.
சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் போர்க் குற்றங்கள் பற்றிய கடுமையான விசாரணையை தடுக்க முயற்சிப்பதோடு, வாஷிங்டனின் உதவியுடன் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஸ்தாபிக்கும் முயற்சியை முடக்கிவிட்டது. அரசாங்கத்தின் சொந்த விசாரணை, ஒரு பூசிமறைப்பதாகத்தான் இருக்கும் என்ற உண்மை ஒருபுறம் இருக்க, அரசாங்கம் இராணுவத்தை தண்டிக்க முயற்சிப்பதாக இராஜபக்ஷ தொடர்ந்தும் கண்டனம் செய்கின்றார்.
இந்த சூழலில், சிறிசேன இப்போது இராணுவத்தின் காப்பாளனாக தன்னை காட்டிக்கொள்ள விரும்புவதுடன், கடந்த ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் தானே எதிர்த்துப் பிரச்சாரம் செய்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் எதேச்சதிகார அதிகாரங்களை பயன்படுத்த அச்சுறுத்தி வருகிறார்.
இலஞ்ச ஆணைக்குழு மற்றும் பொலிசும் சுயாதீன ஆணைக்குழுவின் கீழ் செயல்பட்டாலும் அவற்றின் முடிவுகளை தனக்கு அறிவிக்க வேண்டும் என தனது உரையில் சிறிசேன அறிவித்தார். தான் "நாட்டின் நிர்வாகி என்ற வகையில், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டியது ஆணைக்குழு தலைவர்களின் கடமை," என்று அவர் வலியுறுத்தினார்.
"விசேட நிலைமையை கருத்தில் கொண்டு அரசை முகாமைத்துவம் செய்வதில் விசேட அக்கறை தேவைப்படுகிறது" எனக் கூறி, சிறிசேன தான் அந்த அதிகாரங்களை பயன்படுத்துவதை நியாயப்படுத்தினார். உண்மையில் அவர் சுயாதீன ஆணைக் குழுக்களை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிற்சேர்க்கையாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்.
தனது உரைக்கு முன்னதாக, சில அமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கும் தனது கருத்தை தெரிவித்த சிறிசேன, இலஞ்ச ஆணைக்குழு மீதான தனது விமர்சனத்துடன் "ஒன்றிப்" போவதாக வலியுறுத்தியதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. அரசாங்கம் வலுவாக உள்ளது, யாரும் அதை கவிழ்க்க முடியாது, என்று கூறியே சிறிசேன தனது உரையை முடித்தார். தற்போது ஐ.தே.க. அமைச்சரின் மேற்பார்வையில் உள்ள போலீசின் கட்டுப்பாட்டை ஜனாதிபதி எடுத்துக் கொள்ளக் கூடும் என்று ஊடகங்கள் ஊகித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ, சிறிசேனவின் உரையினால் "ஆச்சரியமடைந்தாலும்" காலதாமதமான மனமாற்றமும் நன்மையானதுதான் என்று அறிவித்தார். அவர் சந்தேகத்திற்கிடமின்றி அரசாங்கத்தின் நெருக்கடியை பயன்படுத்திக்கொள்ள முயல்வார். ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஒரு புதிய நிர்வாகத்தை நிறுவுவதற்காக அரசாங்கத்தை சவால் செய்யத் தயார் என்று இராஜபக்ஷ வெளிப்படையாக அறிவித்தார்.
சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஜனநாயகத்தின், நல்லாட்சியின், ஊழல் அற்ற ஆட்சியின் சாம்பியன்கள் என்று கூறிய போலி-இடதுகள் மற்றும் பல மத்தியதர வர்க்க சிவில் சமூகக் குழுக்களதும் கூற்றினை சிறிசேனவின் அறிக்கைகள் முற்றிலும் அம்பலப்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு சிறிசேனவின் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்த புரவசி பலய அல்லது பிரஜைகள் சக்தி, கபடத்தனமாக அவரை கண்டனம் செய்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அழைப்பாளருமான சரத் விஜேசூரிய, இராணுவ உளவுத்துறை தலைவர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரால் ஜனாதிபதி தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் என்று கூறி, அவர்களை உடனடியாக பதவி நீக்கக் கோரினார். இது சிறிசேன குற்றவியல் தீய தனிநபர்களினால் பாதிக்கப்பட்ட அப்பாவி என சித்தரிப்பதற்கும் மற்றும் அவரது அச்சுறுத்தல்களின் உண்மையான அரசியல் காரணங்களை மூடி மறைக்கவுமான ஒரு அநாகரிகமான முயற்சியாகும்.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அறிக்கை அறிவித்ததாவது: "இராஜபக்ஷ ஆட்சியின் போது மோசடி, ஊழல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜனவரி 8 அன்று நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்துக்காக வாக்களித்த 6.2 மில்லியன் மக்களின் விருப்பத்தை ஜனாதிபதி சவால் செய்வதாகத் தெரிகிறது." சிறிசேனவின் கருத்துக்கள், "மோசடி, ஊழல் மற்றும் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை பலவீனப்படுத்துகிறது, மற்றும் ... மக்கள் ஆணையின் உள்ளர்த்தத்துக்கு எதிராக செல்கின்றது,” என்று அது மேலும் கூறியது.
ஜே.வி.பி., "இராஜபக்ஷ சர்வாதிகாரத்துக்கு” மாற்றாக சிறிசேனவுக்காக பிரச்சாரம் செய்த மற்றொரு கட்சி ஆகும். சிறிசேன ஆட்சியின் முதல் நான்கு மாதங்களில், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சிறிசேன அமைத்த தேசிய செயற்குழுவில் ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க உறுப்பினராக கலந்து கொண்டார். ஒரு ஜனநாயகவாதியாக சிறிசேனவை ஊக்குவிக்க உதவிய ஜே.வி.பி., இப்போது அரசாங்கத்தின் மீதான பெருகிய எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள முயல்கிறது.
குறைந்தது தற்போதைக்கு சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க உறவுகளை சரிசெய்துகொள்ள முடிந்துள்ளதாக தோன்றுகிறது. கடந்த வியாழக்கிழமை சிறிசேனவுடன் பேசிய பின்னர், ஐ.தே.க. கபீர் ஹாசிம், ஜனாதிபதியும் மற்றும் விக்கிரமசிங்கவும் "ஒரே பக்கத்தில்" உள்ளனர், "வலுவான அரசாங்கத்தின்" தேவையை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மோசமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பின் கீழ், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் கும்பல்கள், மேலும் மேலும் எதேச்சதிகாரமான ஆட்சி முறைகளை நோக்கி திரும்புகின்றன. உடனடி காரணம் என்னவாக இருந்தாலும், இலங்கை ஆளும் வர்க்கம் கடந்த காலத்தை போலவே, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பு வளர்ச்சி காணும் போது அதற்கு எதிராக பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்தும் என்பதையே சிறிசேனவின் கருத்துக்கள் எச்சரிக்கின்றன.