Print Version|Feedback
Sri Lankan plantation workers protest union wage deal
கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் செய்துகொண்ட சம்பள உடன்படிக்கைக்கு எதிராக இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
By W.A. Sunil
23 October 2016
இலங்கை தோட்டத் தொழிலாளர்கள், வலதுசாரி கொழும்பு அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் தொழிற்சங்கங்களும் பெருந்தோட்டக் கம்பனிகளும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி பரவலாக போராட்டங்களை நடத்தினர்.
புதிய ஒப்பந்தமானது அற்பமான ஊதிய உயர்வுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு வேலைச் சுமையை அதிகரிக்கும் திட்டத்துக்குள் தொழிலாளர்களை கட்டிப்போடும். ஒப்பந்தத்தின் ஜனநாயகமற்ற தன்மை எத்தகையது எனில், ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் எதுவும் தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
செப்டம்பர் 26 முதல், சம்பளத்தை 380 ரூபாயால் அதிகரித்து, 1000 ரூபாய் (6.79 அமெரிக்க டாலர்) நாள் சம்பளம் கோரி நாட்டின் ஒவ்வொரு பெருந்தோட்ட மாவட்டங்களிலும் உள்ள பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர் மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னரும் கூட முதலாளிகளதும் அரசாங்கத்தினதும் பிரேரணைகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனக் கோரி, பல தோட்டங்களில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். புதன்கிழமை ஹட்டனுக்கு அருகில் சாமிமலையில் உள்ள ஸ்டாக்ஹொம், ஸ்றெத்ஸ்பி மற்றும் லாட்புரோக் உட்பட பல தோட்டங்களில் தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அவர்கள் வீதிகளை மறித்து கோஷங்களை எழுப்பினர்: "புதிய கூட்டு ஒப்பந்தத்தை நிராகரி! ஒப்பந்தத்தை கிழித்தெறி! எமக்கு நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் ஊதியம் வேண்டும்! தொழிற்சங்கங்களுக்கு சந்தாக்கள் செலுத்த வேண்டாம்!" சில தோட்டங்களில் தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பை காட்ட கறுப்பு கொடிகளை ஏற்றியிருந்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையை புறக்கணித்து தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்ட இந்த அழுகிய உடன்பாட்டின் கீழ், தினசரி சம்பளம் 110 ரூபாவால் மட்டுமே, அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஸ்திரமானது அல்ல. அடிப்படை சம்பளம் 450 முதல் 500 ரூபா வரை 50 ரூபாவால் உயரும். ஒரு நாளுக்குரிய 30 ரூபாய் விலை பங்கு மாறாது. இது தேயிலையின் விலை அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் தொழிலாளர்கள் இந்த தொகையை பெறமாட்டார்கள். வருகைக்கான கொடுப்பனவு ஒரு நாளுக்கு 140 ரூபாயில் இருந்த 60 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளி 25 மாதாந்த வேலை நாட்களில் 75 சதவீதம் வருகை தந்திருந்தால் மாத்திரமே இந்த தொகை கிடைக்கும்.
ஒரு புதிய உற்பத்தி ஊக்குவிப்புத் தொகையாக 140 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளி ஒவ்வொரு தோட்டத்திலும் அமைக்கப்படும் புதிய உற்பத்தி இலக்குகளை பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த தொகை கொடுக்கப்படும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) சார்ந்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகியவையே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களாகும். இந்த தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியானது சந்தர்ப்பவாத லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்த தொழிற்சங்கமாகும். தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஒப்பந்தத்தை ஆதரிக்க சம்மதித்தன.
தொழிலாளர் தேசிய சங்கம், ஜ.தொ.கா., ம.ம.மு. ஆகியவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆளும் கூட்டணியின் பங்காளிகளாக இருப்பதோடு அவற்றின் தலைவர்கள் அமைச்சர் பதவிகளை வகிக்கின்றனர். இ.தொ.கா. தசாப்த காலங்களாக அரசாங்கங்களில் பங்காளியாக இருந்து வந்துள்ள அதேவேளை, தற்போதைய அரசாங்கத்துக்குள்ளும் நுழைய முயல்கின்றது.
தற்போது, குறைந்த அறுவடை மற்றும் கடினமான நிலைமைகள் காரணமாக, உற்பத்தி இலக்குகள் தோட்டத்துக்கு தோட்டம் பச்சைக் கொழுந்து 13 முதல் 18 கிலோ வரை உள்ளது. அதிக உற்பத்தி நிபந்தனைகளை சுமத்துவதில் தொழிற்சங்கங்களின் உடன்பாடு பற்றி விசாரித்தபோது, இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம், கம்பனிகள் ஒவ்வொரு தோட்டத்திலும் உள்ள தொழிற்சங்க தலைவர்களின் உடன்பாட்டுடன் அதிகரிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். இது தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்க தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்படும் தொழிற்சங்கங்கள் ஊடாக உயர் வேலைச் சுமையை திணிக்கும் திட்டமாகும்.
வேலைச் சுமையை அதிகரிப்பதற்கு கம்பனிகளின் உந்துதலை காட்டும் வகையில், அக்கரபத்தனையில் சில தோட்டங்களில் உடனடியாக கொழுந்து பறிக்கும் இலக்கு கிட்டத்தட்ட 4 கிலோவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் இந்த அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
தொழிற்சங்க தலைவர்களும் கம்பனிகளும், அரசாங்க அமைச்சர்கள் நேரடியாக ஒப்பந்தத்தை தயார் செய்வதில் தலையீடு செய்தமை சம்பந்தமாக களிப்படைந்துள்ளனர். ஒப்பந்தத்தில் முத்திரையிட்ட பின்னர், தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் W.D.J. செனவிரத்ன, ஊடகங்களுடன் பேசுகையில், பெருந்தோட்டத் தொழிற்துறையில் காணப்படும் நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முந்தைய உடன்படிக்கை காலாவதியானதில் இருந்து கடந்த 18 மாதங்களுக்கான நிலுவையையும் 1000 ரூபா நாள் சம்பள கோரிக்கையையும் கொடுக்க கம்பனிகளும் அரசாங்கமும் நிராகரித்துவிட்டன, என்று தெரிவித்தார். அனைத்து தொழிற்சங்கங்களும் அதை முழுமையாக ஒப்புக்கொண்டன என்றும் அவர் கூறினார்.
பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் விடுத்த அறிக்கையில், உற்பத்தி சார்ந்த ஊதிய சூத்திரமானது “உற்பத்தித்திறன் சார்ந்த சம்பள முறைமைக்கு மாறுவதற்கான ஒரு தீவிர முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அறிவித்துள்ளது. “உடன்பாடிக்கை அதன் இறுதி வடிவத்தில் உள்ளது போல், அது இன்னமும் தேயிலை தொழிற்துறையை கடுமையான சீர்குலைவுக்குள் வைக்கும் ஒன்றாகும்" மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்பை அமுல்படுத்தாவிட்டால் இந்த உடன்படிக்கை “நிலையற்றதாகும்" என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் கோருவது என்னவெனில், ஒப்பந்தத்தில் இருப்பதை விட அதிக அளவில் உற்பத்தி திறனை அதிகரிப்பது, தொழில்களை வெட்டுவது, தொழிலாளர்கள் கடந்த காலத்தில் வென்றெடுத்த அற்ப நலன்புரி சேவைகளையும் குறைப்பதுமாகும். கடந்த ஆண்டு மார்ச் முதல், தோட்ட உரிமையாளர் சங்கம் "வருவாய் பகிர்வு முறையை" அறிமுகம் செய்யக் கோரி வருகிறது. இந்த முறையின் கீழ், தொழிலாளர் குடும்பங்களுக்கு 1000-1200 வரையான தேயிலைச் செடிகள் பராமரிப்பதற்காக ஒதுக்கப்படும், அறுவடைக்குப் பின்னர், பறித்து கொடுக்கப்பட்ட கொழுந்துக்கு ஏற்ப வருமானத்தில் ஒரு பகுதி தொழிலாளிக்கு கொடுக்கப்படும். இந்த பிற்போக்கான முறை, குத்தகை விவசாயிகள் என்ற நிலைக்கு தொழிலாளர்களை கீழிறக்கும்.
இலங்கை உட்பட அனைத்து தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளும், உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில், சந்தை சுருக்கத்தையும் உற்பத்திப் பொருட்கள் விலை வீழ்ச்சியையும் எதிர்கொள்கின்றன. 2014ல் இருந்து தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி சரிவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலக சந்தையில் இலங்கை தேயிலை ஏற்றுமதி பங்கு 23 சதவீதத்தில் இருந்து 17 சதவீதம் வரை குறைந்துள்ளது.
எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மத்திய கிழக்கில் அந்த நாடுகளில் தூண்டிவிடப்பட்டுள்ள மோதல்கள் இந்த நெருக்கடிக்கு பங்களிப்பு செய்துள்ளன. சுருங்கி வரும் சந்தை பங்கை தக்கவைத்துக் கொள்வதற்கு கென்யா மற்றும் இந்தியா உட்பட தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான கழுத்தை அறுக்கும் போட்டி கூர்மையடைந்து வருகின்றது.
உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய பல தொழிலாளர்கள், சம்பள ஒப்பந்தத்தை நிராகரித்ததோடு தொழிற்சங்கங்களையும் அரசாங்கத்தையும் கண்டனம் செய்தனர்.
மஸ்கெலியாவில் டீசைட் தோட்டத்தைச் சேர்ந்த இ.தொ.கா. உறுப்பினரான ஒரு தொழிலாளி கூறியதாவது: "எல்லா தொழிற்சங்கங்களும் எங்களை ஏமாற்றி விட்டன. இன்று காலை நான் தொழிற்சங்கங்களுக்கு என் சந்தாவை நிறுத்தக் கோரி ஒரு கடிதத்தை கொடுத்துவிட்டேன். எங்களுக்கு எதிராக கம்பனிகளுடன் வேலை செய்யும் தொழிற்சங்கங்களுக்கு பணம் கொடுத்து எந்த பயனும் இல்லை." தனது தோட்டத்தில் பல தொழிலாளர்கள் வரவிருக்கும் நாட்களில் இதைச் செய்வார்கள் என்று அவர் கூறினார். தொழிற்சங்கங்களுடன் தனது மோசமான அனுபவத்தை விவரித்த அவர் விவரிக்கையில், "நாங்கள் எங்கள் கோரிக்கைகளை முன்னெடுக்க விரும்புகிறோம், நீங்கள் கூறியது போல், எங்களது கோரிக்கைகளுக்காக போராட தொழிற்சங்கங்களுக்கு பதிலாக ஒரு புதிய அமைப்பு தேவை," என்றார்.
கிளனியூஜி தோட்டத்தில் இ.தொ.கா. உறுப்பினரான ஒரு பெண் தொழிலாளி, தொழிற்சங்கத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன் தொழிலாளர்களிடம் கேட்டிருக்க வேண்டும், என்று கூறினார். "அவர்கள் அதை செய்யவில்லை, எங்கள் அனுமதியின்றி 730 ரூபாய் சம்பளத்துக்கு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்."
இ.தொ.கா. தலைவர்கள் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களில் இருந்தனர், ஆனால் அவர்கள் தொழிலாளர்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை என்று கூறினார். "கம்பனிகள், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களும் எங்களுக்கு எதிராக சதி செய்கின்றன, ஒரு அற்ப ஊதியத்துக்காக எங்கள் மீது ஒரு பாரிய வேலைச் சுமையை சுமத்தப் போகிறார்கள். ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் இந்த பேரழிவுக்கு பொறுப்பு."
தொழிலாளர்களின் கோரிக்கையை புறக்கணித்து விட்டதாக அவர் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை குற்றம்சாட்டினார். "புதிய அரசாங்கம் ஒரு நல்ல எதிர்காலத்தை கொண்டு வரும் என்று நமக்கு தொழிற்சங்கங்கள் அறிவுறுத்தியதால் நாம் அவர்களுக்கு வாக்களித்தோம்." இந்த ஆண்டு கொடுக்கப்படவுள்ள தீபாவளி முற்பணம் கூட வட்டிக்கு கொடுக்கப்படும் ஒரு கடனாகக் கருதப்படுகிறது என்றார்.
தோட்டக் கம்பனிகளும் அரசாங்கமும், தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், தொழிலாளர்கள் மீது ஈவு இரக்கமற்ற சுரண்டல் முறைகளை அறிமுகப்படுத்தி நெருக்கடியை சமாளிக்க முயற்சிக்கின்றன. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் சமீப ஆண்டுகளில் கடுமையாக சீரழிந்து போயுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம், வேலை நிலைமைகள், வேலைகள் மற்றும் ஏனைய உரிமைகள் மீதான தாக்குதல்கள், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் கீழ், சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கம் அமுல்படுத்தும் பரந்த சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பாகமாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) சம்பளப் போராட்டம் முழுவதும் ஒரு முக்கியமான அரசியல் தலையீட்டைச் செய்தது. சோ.ச.க., தங்கள் உரிமைகளுக்காக போராட தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து வெளியேறி, ஒவ்வொரு தோட்டத்திலும் தமது சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என்று தொழிலாளர்களை கேட்டுக் கொண்டது. தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ், பிரமாண்ட தோட்டங்களை தேசியமயமாக்குவதன் மூலம் மட்டுமே சம்பளம், தொழில் மற்றும் சமூக உரிமைகளை காக்க முடியும். சோசலிசத்திற்கான ஒரு பரந்த சர்வதேச போராட்டத்தின் பாகமாக, சோசலிச வேலைத்திட்டத்துக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்குமான ஒரு போராட்டத்துக்காக, ஏனைய தொழிலாளர்கள் பக்கம் திரும்புவதன் மூலமே இந்த போராட்டத்தை முன்னெடுக்க முடியும். (சோ.ச.க. அறிக்கையினைப் பார்க்க: இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்: நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு! சோசலிசக் கொள்கைகளுக்காப் போராடு!).
சில தோட்டங்களில் தொழிலாளர்கள் இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த போராடத்தை மேற்கொள்வது இப்போது அவசரமான பணியாகும். தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தின் படிப்பினைகள் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் மிகவும் முக்கியமானதாகும். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து இந்தப் போராட்டத்தை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுக்கின்றோம்.