Print Version|Feedback
වතු කම්කරුවෝ වැටුප් වැඩි නොකිරීමට එරෙහිව උද්ඝෝෂනය කරති
இலங்கை: தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் அதிகரிக்கப்படாமைக்கு எதிராக போராடுகின்றனர்
By M. Thevarajah
30 September 2016
பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்ச்சியாக சம்பள உயர்வை நிராகரித்து வருகின்றமையினால் தமது நாளந்த சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்க கோரி கடந்த சில தினங்களாக நூவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ, சாமிமலை, நோர்வூட், நானு ஓயா, டிக்கோய போன்ற பிரதேசங்களின் பல்வேறு தோட்டங்களை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹட்டன் சந்தி மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள்
செப்டம்பர் 26, பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்திலும், சாமிமலையின் ஸ்றெத்ஸ்பி தோட்டத்திலும் சுமார் 2000 தொழிலாளர்கள் அருகில் உள்ள மைதானத்தில் மறியல் போராட்டம் நடாத்தியதோடு, 27 அன்று நோர்வூட் தோட்டத்தின் ஆயிரம் தொழிலாளர்களும், 28 அன்று நோர்வுட் பிரதேசத்தின் வெஞ்சர், சென் ஜோன்ஸ் டில்லரி, கியூ ஆகிய தோட்டங்களிலும் மற்றும் 29 அன்று டிக்கோய பிரதசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஹட்டன்-பொகவந்தலாவ வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர்கள், இப்போராட்டங்களை வேலை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு மணித்தியாலத்துக்கு மட்டுப்படுத்தினர்.
தமிழ் முற்போக்கு கூட்டனிகளில் அங்கத்துவம் வகிக்கும் தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.), ஜனநாயக தொழிலாளர் காங்கிராசும் (ஜ.தொ.கா.), ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட வேறு சங்கங்களும் போராட்டத்தில் பங்குபற்றாவிட்டாலும், தொழிலாளர்கள் சங்க வேறுபாடின்றி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றினர். பரந்தளவிலான தொழிலாளர்கள் போரட்டங்களில் பங்குபற்றியமை, சம்பள அதிகரிப்பின்மைக்கும் வாழ்க்கை நிலைமை மோசமடைவதற்கும் எதிராக, பரந்த ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு செல்வதற்கான தேவையையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றது.
எனினும், இ.தொ.கா தலைவர்கள், அங்காங்கேயும் இடை இடையேயும் தோட்டத்திற்கு தோட்டமுமாக ஒரு மணித்தியால போராட்டத்துக்குள் மட்டுப்படுத்தியமையும், ஏனைய தொழிற்சங்கங்கள் நனவாக இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்காமையும், தோட்டத் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தினை தடுப்பதற்கான நடவடிக்கையாகும். சம்பளம் அதிகரிக்காமைக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தபோது, கடந்த ஆண்டு ஜூலை மாதம், தொழிற்சங்கங்கள் மெதுவாக வேலை செய்தல் என்ற பயனற்ற எதிர்ப்பு நடவடிக்கைக்குள் தொழிலாளர்களின் போரட்டத்தினை மட்டுப்படுத்தி தொழிலாளர் ஜக்கியத்தினை கலைத்துவிட்டன.
சம்பள உயர்வின்மைக்கும் வாழ்க்கை நிலமைகள் மீதான தாக்குதலுக்கும் எதிராகவும், தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் மைத்திரிபால சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் எதிராகவும், தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்துவரும் விரோதத்தையும் கோபத்தையும் பற்றி விழிப்படைந்துள்ள தொழிற்சங்கங்கள், தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பினை கட்டுப்படுத்தி சீர்குலைக்காவிட்டால் அது தமது கட்டுப்பாட்டினையும் மீறிச்செல்லும் என்பதையிட்டு பீதியடைந்துள்ளன.
பி. கைலாயநாதன் (39), பொகவந்தலாவயின் கொட்டியாகல தோட்டத்தில் தொழிலாளி ஆவார். ‘’நான் இ.தொ.கா. உறுப்பினர். நியாயமான சம்பள உயர்வினை பெற்றுக்கொள்வதில் தொழிற்சங்க பேதமின்றி ஐக்கியப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களை ஏமாற்றி நாடகமாடுகின்றனர். கூட்டு ஒப்பந்தம் முடிவுற்று 18 மாதங்கள் ஆகின்றன. தொழிற்சங்கத் தலைவர்கள் 10 முறை கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதுவரையிலும் எந்த சம்பள உயர்வும் இல்லை. அவர்கள் பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த விபரங்களையும் எமக்கு அறிவிப்பதில்லை. வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு எமக்கு எவ்வளவு சம்பள அதிகரிப்பு தேவையென எம்மிடம் கேட்பதில்லை. அவர்கள் தோட்டக் கம்பனிகளுடனும் அரசுடனும் எமக்குத் தெரியாமல் கொடுக்கல் வாங்கல் செய்கின்றனர். தோட்டங்களை துண்டாடுவதற்கு கம்பனிகள் திரைமறைவில் திட்டமிடுகின்றன. அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் எமது நிலமை மேலும் மோசமடையும். நாங்கள் முற்றிலும் அதை எதிர்க்கிறோம்,” என அவர் கூறினார்.
தோட்டங்களில் வேலை நிலமைகளும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலமைகளும் மோசமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். காலநிலை மாற்றத்தால் கடந்த இரண்டு மாதங்களில் கொழுந்து குறைவடைந்துள்ளது, வேலை இலக்கினை பூர்த்தி செய்ய முடியாமையினால் தொழிலாளர்களின் வருமானம் குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், “எனக்கு பாடசாலை செல்லும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் வாழ்வதற்கோ பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கோ முடியாது. எனவே இந்தப் போராட்டத்திற்காக எனது உயிரையே கொடுப்பேன்,” என கைலாயநாதன் குறிப்பிட்டார்.
ஹட்டன் வீதியூடாக அணிவகுத்துச் செல்லும் தொழிலாளர்கள்
தொழிலாளர்கள் மிகவும் கரிசனையுடன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக, நோர்வூட் சென் ஜோன்ஸ் தோட்டத்தின் ஓய்வுபெற்ற தொழிலாளி பி. ராஜேந்திரன் குறிப்பிட்டார். “தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தி அங்கத்தவர்களை சேர்த்துக்கொள்ள அக்கறையாக உள்ளன. ஆனால் தொழிலாளர்களின் தேவை தொடர்பாக அவர்களுக்கு சிறிதளவேனும் அக்கறையில்லை. தேர்தல் காலங்களில் தோட்டங்களுக்கு வந்து முகத்தை காட்டிச்செல்வார்கள். அதனால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் சந்தாப் பணத்தை நிறுத்தியுள்ளனர்.”
நோர்வூட், கியூ தோட்டத்தைச் சேர்ந்த எஸ். ஆரோக்கியசாமி, சம்பளம் மட்டுமன்றி இன்னும் தீர்க்கவேண்டிய பல பிரச்சனைகள் இருப்பதாக குறிப்பிட்டார். “தோட்டங்களில் வீதிகள் சீரழிந்துள்ளன, தோட்ட லயன்கள் (வரிசை வீடுகள்) பல வருடங்களாக திருத்தப்படவில்லை. நாங்கள் இந்த நிலமை மாற்றமடையும் என்று எதிர்பார்த்தே இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தோம். ஆனால், வரவர நிலமை மோசமடைந்து வருகின்றது, இந்த அரசாங்கம் எம்மை ஏமாற்றிவிட்டது. எவரும் எம்மை பற்றி கவனத்தில் எடுப்பதில்லை எமக்காக எவரும் போராடுவதில்லை.”
ஏற்கனவே சம்பள கூட்டு ஒப்பந்தம் மார்ச் மாதம் காலாவதியாகிவிட்டது. அன்றிலிருந்து ஒன்றரை வருடங்கள் கழிந்துள்ள போதிலும் தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வினை தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றன. இலங்கை பெருந்தோட்டத் தொழிற்துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தொழிலாளர்கள் சுமக்க வேண்டும் என தோட்டக் கம்பனிகள் குறிப்பிடுகின்றன, எனவே தற்போது நடைமுறையில் உள்ள நாளாந்த சம்பள முறையை நீக்கி, அவர்கள் முன்மொழிந்துள்ள உற்பத்தித்திறனுடன் தொழிலாளர்களை முடிச்சுப்போடும் பிற்போக்கான வருமானப் பங்கீடு என்னும் சம்பள முறைக்கு தொழிலாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கம்பனிகள் வலியுறுத்துகின்றன.
பிரேரிக்கப்பட்டுள்ள இந்த முறையில் குறிப்பிட்ட தொகையான தேயிலை செடிகளை பராமரிக்கும் பொறுப்பு தொழிலாளர்கள் மீது சுமத்தப்படுவதோடு பறிக்கும் கொழுந்தில் பெறும் இலாபத்தில் உரம், கிருமிநாசினி போன்ற ஏனைய செலவுகளை கழித்துக்கொண்டு, மிகுதியில் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கு வழங்குவார்கள். இது தொழிலாளர்களை குத்தகை விவசாய அடிமைகளாக மாற்றும் நோக்கம் கொண்டதாகும். இந்த முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸ்சாநாயக்க கடந்த மாதம் நடைபெற்ற பெருந்தோட்ட கம்பனிகள் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். அதற்கூடாக வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் நாளாந்த சம்பளமும் ஊழியர் சேமலாப நிதி போன்ற சில சமூக நல நடவடிக்கைகளும் இல்லாதொழியும்.
2014ல் இருந்து தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றது. உலகப் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வருகின்றமையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முதன்மையாக கொண்ட ஏகாதிபத்தியவாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள யுத்தங்களினால், இலங்கை தேயிலையின் 75 சதவீதத்தை வாங்கும் ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கேள்வி குறைந்துள்ளது. இந்த காரணிகளால் இலங்கை, கென்யா, இந்தியா போன்ற தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கிடையே பாரிய போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலமைகளுக்கு மத்தியில் முன்மொழியப்பட்டுள்ள முறையை நடைமுறைப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என அக்கூட்டத்தில் கம்பனிகளின் தலைவர் ரொஷான் ராஜதுரை மீண்டும் குறிப்பிட்டுள்ளார். “தோட்டத் தொழிற்துறையை பிச்சையெடுக்கும் நிலமைக்கு தள்ளும் நடைமுறையினை மேற்கொள்ள வேண்டாம்” என்று தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் அவர் அச்சுறுத்தினார். அத்தோடு, உலக சந்தையில் போட்டிக்கு முகம் கொடுப்பதற்காக தோட்டக் கம்பனிகளை ஒருங்கிணைப்பதற்கும் பெருந்தோட்ட தொழிற்துறைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும், செழுமையற்ற தோட்டங்களில் மாற்றுப் பயிற்செய்கை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் திட்டமிடுகின்றது. இந்த திட்டத்தினூடாக தோட்டத் தொழிலாளர்களின் தொழில் மற்றும் சேவை நிலமைகள் மீது பாரிய தாக்குதல் தொடுக்கப்பட உள்ளதோடு பல்லாயிரக் கணக்கானோர் வீதிக்கும் தள்ளப்படுவர்.
தோட்டக் கம்பனிகளதும் அரசாங்கத்தினதும் திட்டங்களை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு, அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் NUW தலைவர் பி. திகாம்பரம், ஐ.தொ.க. தலைவர் மனோ கணேசன் மற்றும் ம.ம.மு. தலைவர் ராதா கிருஷ்ணனும் அரசுடன் இணங்கிச் செயல்படுவதற்கு முயற்சிக்கின்றனர். இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட அனைத்து தொழிற்சங்க தலைமைகளும் சந்தேகத்துக்கு இடமின்றி கம்பனியுடனும் அரசுடனும் இணைந்து சூழ்ச்சி செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளப் போராட்டத்தில் தொழிலாளர்களது உறுதியும் உணர்வும் இருக்கும்போது, தொழிற்சங்கத் தலைவர்கள் இத்தகைய குறுகிய பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் பின்னால், இத்தகைய சூழ்ச்சியே தயார் செய்யப்படுகிறது. சம்பளம் மற்றும் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முதலாவது நிபந்தனை, தோட்டக் கம்பனிகளதும் முதலாளித்துவ அரசினதும் முகவர்களாக செயற்படும் தொழிற்சங்கங்களில் இருந்து வெளியேறி, ஜனநாயக கலந்துரையாடல் ஊடாக கோரிக்கைகளை வென்றெடுக்க, ஐக்கியப்பட்ட போராட்டத்தினை ஒழுங்கு செய்வதை குறிக்கோளாகக் கொண்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும். அந்த நடவடிக்கை குழுக்களூடாக சம்பளம், தொழில் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்து தோட்டப்புற மற்றும் நகர்புற தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தினை உறுதி செய்துகொள்வது அவசியமானதாகும்.
தோட்டக் கம்பனிகளினதும் முதலாளித்துவவாதிகளதும் தேவைக்கு ஏற்றவாறு அல்லாது, பெரும்பான்மையான தொழிலாளர் மற்றும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்றவாறு, சோசலிச பொருளாதார வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக, தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதன் பேரில் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துடன் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அமைப்பை கட்டியெழுப்ப வேண்டும்.