Print Version|Feedback
Sri Lankan plantation workers struggle: build action committees, fight for socialist polices
இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்: நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு! சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடு!
Socialist Equality Party of Sri Lanka
6 October 2016
இலங்கையில் பல்லாயிரக் கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ஒழுங்கான சம்பளம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளைக் கோரி, செப்டம்பர் 26 முதல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன் பிணைக்கப்பட்ட ஊதிய முறையை சுமத்த கம்பனிகளும் அரசாங்கமும் மேற்கொள்ளும் முயற்சியை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
ஆரம்பத்தில், ஒரு மதிப்பிழந்த தோட்டத் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) உள்ளூர் தலைவர்கள், தொழிலாளர்களின் கோபத்தை தணிப்பதற்காக இரண்டு மணி நேர எதிர்ப்பு போராட்டத்தை நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை மற்றும் சாமிமலை தோட்டங்களில் நடத்த அழைப்பு விடுத்தனர். எனினும், தொழிலாளர்கள் மத்தியிலான ஆழமான அமைதியின்மை காரணமாக, இந்த எதிர்ப்பு நடவடிக்கை தோட்டத்துக்கு தோட்டம் இடம்பெற்றிருந்தாலும் பெரிய போராட்டமாக வெடித்து, பெருதோட்டத்துறை பூராவும் பரவியது.
இ.தொ.கா. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, 380 ரூபாவை சேர்த்து நாள் சம்பளத்தை 1000 ரூபாய் (6.86 அமெரிக்க டாலர்), வரை அதிகரிக்கும் கோரிக்கையை முன்வைத்தது. இந்த கோரிக்கைக்காக போராட்ட நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்தே, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல்களில் இணைந்துகொள்ள தன்னிச்சையாக பல மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தனர்; அரசாங்கம் தொழிற்சங்க தலைவர்களுடன் இணைந்து கட்டவிழ்த்துவிட்ட போலீஸ் அச்சுறுத்தல்களையும் மீறி, அவர்கள் பெருந்தோட்டப் பகுதி நகரங்களின் பிரதான வீதிகளை முற்றுகையிட்டனர்.
இந்தப் போராட்டம், அரசாங்கத்தின் ஆதரவுடனும் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடனும் முதலாளித்துவ கம்பனிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை தோற்கடித்து, தங்கள் ஊதியங்கள், வேலைகள் மற்றும் வேலை நிலைமைகளை காப்பதற்கான போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு புதிய வடிவிலான அமைப்பும் புதிய தலைமையும் ஒரு அரசியல் வேலைத்திட்டமும் தேவை என்பதை கூர்மையாக வெளிப்படுத்தியுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு தோட்டத்திலும் சோசலிச கொள்கைகளின் அடிப்படையிலான நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பிரச்சாரத்துக்கு அழைப்புவிடுக்கவில்லை அல்லது ஆதரவளிக்கவில்லை. மாறாக, தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடர்கின்ற நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணியில் கூட்டுச் சேர்ந்துள்ள தொழிலாளர் தேசிய சங்கம் (NWU), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசும் (ஜ.தொ.கா.) இப்போது தாமும் போராட்டத்துக்கு 'ஆதரவு' கொடுப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தன.
NWU, ம.ம.மு. மற்றும் ஜ.தொ.கா., தலைவர்களான பி. திகாம்பரம், வி. ராதாகிருஷ்ணன் மற்றும் மனோ கணேசனும், இப்போது தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கையாளவும் நசுக்கவும் முயன்று வருகின்றனர். கம்பனிகளுடனும் அரசாங்கத்துடனும் அணிசேர்ந்துள்ள இந்த தொழிற்சங்கங்களால் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு எந்த தீர்வும் வழங்க முடியாது.
NWU, ம.ம.மு., ஜ.தொ.கா. மற்றும் ஆளும் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் (LJEWU) அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ளதுடன், அவற்றின் தலைவர்கள் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் சுகபோகம் அனுபவிக்கின்றனர். இந்த சங்கங்கள் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை நியமித்த அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஆதரித்தனர். முந்தைய அரசாங்கங்களின் பங்காளியாக இருந்த இ.தொ.கா., இப்போது அமைச்சுப் பதவிகளை கோரி ஆளும் கூட்டணிக்குள் நுழைய பேரம் பேசி வருகின்றது.
இந்த தொழிற்சங்கங்கள், பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான பொலிஸ் அடக்குமுறை மற்றும் கம்பனிகளின் வேட்டையாடல்களுக்கு ஒத்துழைப்பதில் பேர் போனவையாகும். உள்ளூர் NUW தலைவர் ஞாயிறன்று மஸ்கெலியாவில் போராட்டத்தை தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கு போலீசைத் தூண்டியதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினார்.
கடந்த காலத்தை போலவே, இந்த தொழிற்சங்க தலைவர்கள், இலங்கை முதலாளிமார் சம்மேளனம் விதிக்கும் வேலைச் சுமையை அதிகரிப்பதற்கான நிபந்தனைகளை செயல்படுத்த இழிவான கொடுக்கல் வாங்கலுக்குச் செல்லும் ஆபத்து உள்ளது.
உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ளும் தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறை நிறுவனங்கள், ஊதிய உயர்வை மறுத்து, சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் ஆதரவுடன் தோட்டங்களில் ஈவிரக்கமற்ற சுரண்டலைத் திணிக்க தீர்மானித்துள்ளன.
2015 மார்ச்சில் கடைசி கூட்டு ஒப்பந்தம் காலாவதியான பின்னர், பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்க தலைவர் ரொஷான் இராஜதுரை, கம்பனிகளால் ஒரு ரூபாய் கூட சம்பளத்தை அதிகரிக்க முடியாது, தொழிலாளர்கள் "வருமானப் பகிர்வு முறைமையை" ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்தார். அதன்படி, தொழிலாளியின் குடும்பத்துக்கு 1200-1500 தேயிலை செடிகள் பராமரிப்பதற்காக ஒதுக்கப்படும். பின்னர் வருவாயின் ஒரு பங்கு அறுவடைக்கு பின் அவர்களுக்கு வழங்கப்படும். இந்த மாதிரியானது ஒரு வர்க்கமாக இருக்கும் தொழிலாளர்களை குத்தகை விவசாயிகள் முறைக்குள் கரைத்துவிடுவதாகும்.
இராஜதுரை, பெருந்தோட்டங்களில் அதிக உற்பத்தி மற்றும் தொழிலாளர் செலவைக் குறைக்காமல், உலக சந்தையில் கம்பனிகளால் போட்டியிட முடியாது என வலியுறுத்தினார். மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் தூண்டப்பட்ட யுத்த பதட்டங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலைப் போக்கினாலும் உலக சந்தை சுருங்கி வருகின்றது.
இலங்கை தேயிலை தரகர்கள் தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர், கடந்த இரண்டு ஆண்டுகளில் "இலங்கை தேயிலை தொழிற்துறை தேக்கமடைந்துள்ளது… 2013ல் இருந்து வருமானங்கள் தேக்கமடைந்துள்ளன… மற்றும் ஏற்றுமதி மதிப்புகள் கணிசமான வருவாய்க்கு எந்த அடையாளத்தையும் காட்டவில்லை," என்று அண்மையில் கூறினார்.
தொழிற்சங்கங்கள், இந்த நெருக்கடிக்கு தீர்வு காணுவதன் பாகமாக, கொழுந்து பறிக்கும் இலக்குகளை அதிகரிக்கும் கம்பனிகளின் திட்டங்களை ஆதரித்தன, ஆனால் பல தோட்டங்களில் தொழிலாளர்கள் இதை எதிர்த்தனர். முதலாளிமார் சம்மேளனம் இப்போது ஒரு "கலப்பு முறையை" அல்லது இரண்டு அடுக்கு முறையை பிரேரித்துள்ளது. அதாவது, மாதம் 12 நாட்கள் 100 ரூபாய் நிலையற்ற கொடுப்பனவு உட்பட அன்றாட ஊதியம் 720 ரூபா (5 அமெரிக்க டாலர்) கொடுக்கப்படும், மற்றும் 13 நாட்களுக்கான ஊதியம் தேயிலை பறிக்கும் உற்பத்தித் திறைனைப் பொறுத்தது. இராஜதுரையின் படி, இது கம்பனிகள் திட்டமிட்டுள்ள வருமானப் பகிர்வு முறையை செயல்படுத்தும் "ஒத்திகையாக" இருக்கும்.
அரசாங்கம் பெருந்தோட்ட கம்பனிகளின் திட்டத்தை ஆதரிப்பதுடன் அது துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோருகிறது. வளப்படுத்த முடியாது எனக் கூறி, பல தோட்டங்களை மூடிவிடுவதற்கும் வேறு பயிர்ச்செய்கைகளுக்கு மாற்றுவதற்கும் கம்பனிகளுக்கு உதவுவதற்கான திட்டங்களையும் அரசாங்கம் கலந்துரையாடி வருகின்றது. இதன் அர்த்தம், பத்தாயிரக்கணக்கான தொழில்களை அழிப்பதாகும்.
இது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீது சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் மேற்கொள்ளும் பரந்த தாக்குதலின் ஒரு பாகம் ஆகும். அது இப்போது சர்வதேச நாணய நிதியம் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை வானளவு உயர்த்தும் வரி அதிகரிப்பு, தனியார்மயமாக்கம், இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வெட்டித் தள்ளுவதும் இந்த சிக்கன நடவடிக்கைகளில் அடங்கும். மறுபுறம், அரசாங்கம் மலிவு உழைப்பு மற்றும் வளங்களை சுரண்டுவதற்காக வெளிநாட்டு முதலீடுகளுக்கு அழைப்புவிடுக்கின்றது.
ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் கீழ், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் சமூக உரிமைகள் மீதான இதே போன்ற தாக்குதல்களையும் பொலிஸ் அரச வழிமுறைகளையும் எதிர்கொள்கின்றனர். இதே நெருக்கடியால் உந்தப்பட்டுள்ள உலக ஏகாதிபத்தியம், இன்னொரு அழிவுகரமான போருக்குள் உலகத்தை தள்ளிச் செல்கின்றது.
தோட்டத் தொழிலாளர்களின் கௌரவமான வாழ்க்கைக்கு, வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கு ஏற்ற மாத சம்பள உத்தரவாதமும், பொருத்தமான வீடு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வியும், இளைஞர்களுக்கு தொழிலும், அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் பிரஜா உரிமையும் அவசியம். இடுப்பை உடைக்கும் வேலைச் சுமை திணிக்கப்படக் கூடாது.
இலாபத்துக்காக செயற்படும் முதலாளிகளின் உடமையாக தோட்டங்கள் இருக்கும் வரை, இந்த உரிமைகளில் எதையும் அடைய முடியாது. தோட்டக் கம்பனிகள் ஏற்கனவே உள்ள நிலைமைகளைக் கூட அழிக்கின்றன. இந்த உரிமைகளை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தோட்டங்களை தேசியமயமாக்குவதன் மூலம் மட்டுமே அடைய முடியும்.
இந்தப் போராட்டத்தில், பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் இலங்கையில் ஏனைய துறைகளில் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் திரும்பி, சோசலிச கொள்கைகளுக்கான ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுவது அவசியமாகும். அதாவது, சமூகத்தின் பெரும்பான்மையினரின் நன்மைக்காக பொருளாதாரத்தை மறு ஒழுங்கு செய்யும் ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை கொண்டுவர வேண்டும். இந்தப் போராட்டத்தில் அவர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும். இது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிலாளர்களுக்கு புதிய அமைப்பு வேண்டும். ஏனைய தோட்டத் துறைகளில் உள்ள தொழிற்சங்கங்கள் போன்று, பெருந்தோட்டங்களில் உள்ள சகல தொழிற் சங்கங்களும், கம்பனிகளுடனும் அரசாங்கத்துடனும் இரகசிய கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதோடு அவை தொழிலாளர்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை வறுமை நிலைமைகளின் கீழ் வைத்துக்கொள்ளும் முதலாளித்துவ வர்க்கத்தின் கருவிகள் என்பதை கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன.
இதனாலேயே சோசலிச கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட, சாதாரண தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலம், போராட்டத்தை தொழிலாளர்கள் தங்கள் கைகளில் எடுக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தி வருகின்றது. எல்லா பெருந்தோட்டத் துறைகளிலும் ஏனைய துறைகளிலும் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக, ஒவ்வொரு தோட்டங்களிலும் தொழிலாளர்கள் தங்களது சொந்த பிரதிநிதிகளை நடவடிக்கை குழுக்களுக்கு தேர்வு செய்து, அதேபோன்ற எல்லா குழுக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு கூட்டுக் குழுவை உருவாக்குவது அவசரத் தேவையாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த அரசியல் போராட்டத்திற்கு ஒரு புரட்சிகர கட்சி தேவை. இலங்கையில் இந்த முன்னோக்கை அபிவிருத்திசெய்யும் புரட்சிகரக் கட்சி சோசலிச சமத்துவக் கட்சியே ஆகும். அதை ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சியாக கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு நாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.