ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වතු සමාගම් සහ සමිති කම්කරුවන් මත පැටවීමට යන ව්‍යසනකාරී වැටුප් ගිවිසුම ප‍්‍රතික්ෂේප කරනු!

இலங்கை பெருந்தோட்டக் கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள் மீது சுமத்தப் போகும் அழிவுகரமான சம்பள ஒப்பந்தத்தை நிராகரி!

Socialist Equality Party
13 October 2016

* சம்பளப் போராடத்தை தொழிலாளர்களின் கையில் எடுப்பதற்கு நடவடிக்கை குழு

* ஊதியம் மற்றும் வேலை உரிமைகளை வென்றெடுக்க சோசலிச வேலைத் திட்டம்

இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு, அற்ப சம்பள அதிகரிப்புடன் இணைத்து இடுப்பை உடைக்கும் வேலைச் சுமையை திணிப்பதற்கு, பெருந்தோட்டக் கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் ஆதரவுடன் கைச்சாத்திடப்போகும் கூட்டு ஒப்பந்தத்தை நிராகரிக்குமாறு, சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

அக்டோபர் 15 அன்று கையெழுத்திடுவதற்கு இரகசியமாக தயார் செய்யப்படும் இந்த ஒப்பந்தத்துக்குள் தங்கள் ஊதியங்கள், தொழில் மற்றும் வேலை நிலைமைகளையும் பாதிக்கும் எத்தகைய பிரிவுகள் அடங்கியுள்ளன, என்பது பிரமாண்டமான தோட்டக் கம்பனிகளில் பணிசெய்யும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்குத் தெரியாது.

சண்டே டைம்ஸ் மற்றும் ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, நாளொன்றுக்கு 24 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் மீதே, வாரத்தில் நான்கு நாட்களுக்கு தினசரி ஊதியம் 620 ரூபாயில் இருந்து 730 வரை, 110 ரூபா அற்ப தொகையால் அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 16-18 கிலோ கொழுந்து பறிக்கப்படும் நிலைமையின் கீழ், இது நூற்றுக்கு 33 மற்றும் 50 சதவீதத்துக்கும் இடையில் வேலைச் சுமையை அதிகரிப்பதாகும். இந்த தொகையை கொடுக்காவிட்டால் நாள் சம்பளம் 632 ரூபாய் வரை குறைக்கப்படும்.

வாரத்தில் எஞ்சிய இரண்டு நாட்களில், தொழிலாளி தற்காலிக அடிப்படையில் ஒரு நாளுக்கு 500 ரூபாவுக்கு வேலை செய்து, நாளொன்றுக்கு 15 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். கொழுந்தின் அளவு அதை விட அதிகரித்தால், ஒரு கிலோவுக்கு 26 ரூபாபடி செலுத்தப்படும்.

அதாவது இது சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் அல்ல. நூற்றுக்கு 33 மற்றும் 50 சதவிகிதத்துக்கு இடையில் வேலைச் சுமையை அதிகரிப்பதோடு ஒப்பிடும்போது இது சம்பள வெட்டே ஆகும்.

கடந்த மார்ச் மாதம் பழைய கூட்டு ஒப்பந்தம் காலவதியானதில் இருந்து, பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம், தொழிலாளர்களுக்கு ஒரு ரூபா கூட ஊதியம் அதிகரிக்க முடியாது என உறுதியாகக் கூறி வந்தது. அதற்கு கீழ்ப்படிந்து, ஊதிய அதிகரிப்பு பிரச்சினையை தொழிற்சங்கங்கள் ஓரங்கட்டி வைத்திருந்தன. தொழிலாளர்களின் எதிர்ப்பு வளர்ச்சியடைந்த நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாள் ஒன்றுக்கு ரூபா. 1,000 வரையான அதிகரிப்பை முன்மொழிந்து, பின்னர் கையைக் கழுவிக்கொண்டது.

இந்த நிலைமையிலேயே, செப்டம்பர் 26 முதல், ரூபா. 1000 வரை சம்பள உயர்வு கோரி தோட்டத்துக்கு தோட்டம் தொழிலாளர்கள் பிரச்சாரத்தில் இறங்கி போராட்டத்தை தொடங்கினர். ஏற்கனவே ஊதியத்தை 730 ரூபா வரை அதிகரிக்கும் மோசடியை தொழிலாளர்கள் நிராகரித்துவிட்டனர். வாழ்க்கைச் செலவு வானளவு அதிகரிக்கும் நிலைமையின் கீழ், அதற்கு குறைந்த ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அவர்கள் கூறிவிட்டனர்.

தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா அளவு தமக்கு நட்டம் ஏற்படுவதாக கூறி, தொழிற்சங்கங்களதும் அரசாங்கத்தினதும் ஆதரவுடன், வேலைச் சுமையை அதிகரிக்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கம்பனிகள் தயாராக உள்ளன. "தொழிற்துறையின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும்போது, இது உற்பத்தித் திறனை அடிப்படையாக கொண்ட மாற்றத்துக்கான முதலாவது அடியெடுப்பாக இருப்பதனால், கம்பனிகள் சம்பள அதிகரிப்புக்கு உடன்பட்டுள்ளன" என பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத் துணைத் தலைவர் எஸ்.எஸ். பொஹொலியத்த தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட உரிமையாளர்கள் முன்வைத்துள்ள உண்மையான திட்டம், ஒரு தொழிலாள குடும்பத்துக்கு 1,000 அல்லது 1,500க்கு இடைப்பட்ட அளவிலான தேயிலைச் செடிகளை பராமரிப்பதற்காக ஒப்படைத்து, உற்பத்தியை அதிகரித்து, பச்சைக் கொழுந்து ஒரு கிலோவுக்கு கிடைக்கும் விலையை பொறுத்து, ஒரு தொகை பணத்தை அவர்களது குடும்பத்தினருக்கு கொடுப்பதாகும். இது தொழிலாளர்களின் தற்போதைய நிலையை இல்லாமல் ஆக்கி, அவர்களை குத்தகை விவசாயிகளை ஒத்த நிலைமைக்குள் இழுத்துத் தள்ளுவதாகும். அதன் மூலம் ஒன்றுசேரும் வலிமையை அழித்து அவர்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவர்.

கைச்சாத்திடப்படவுள்ள மேலே குறிப்பிடப்பட்ட ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளன. இ.தொ.கா. துணைத் தலைவர் எஸ். அருள்சாமி, ஒப்பந்தத்துக்கு உடன்படுவதாகவும் வாரம் 6 நாட்கள் வேலை பெற பேரம்பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் பங்காளியான பி. திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), மனோ கணேசனின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) மற்றும் வி. ராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் (LJEWU) இதுவரை முன்மொழியப்பட்ட ஊதிய ஒப்பந்தம் பற்றி பகிரங்கமாக கருத்துத் தெரிவிக்கவில்லை. எனினும், அரசாங்கத்தை சேர்ந்த அனைத்து தோட்டத் தொழிற்சங்கங்களும் அதற்கு உடன்பட்டுள்ளதாக, தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்பாடல் அமைச்சர் ஜோன் செனவிரத்ன வியாழக்கிழமை அறிவித்தார்.

தோட்டக் கம்பனிகள், அரசாங்கம் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் எதிராக தொழிலாளர்களின் விரோதம் வளர்ந்து வரும் நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு பொறி அமைத்து அவர்களை அரசியல் ரீதியில் திசை திருப்பி விடுவதற்காக மேலும் பல கும்பல்கள் தலை நீட்டியுள்ளன.

போலி-இடது கட்சியான ஐக்கிய சோசலிசக் கட்சி (ஐ.சோ.க.) மற்றும் மாவோவாத புதிய ஜனநாயக கட்சியின் (பு.ஜ.க.) முன்னாள் தலைவரான இ. தம்பையாவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மலையக சமூக நடவடிக்கை குழுவினால் 11ம் திகதி நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில், தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு ரூபா. 1,000 சம்பள உயர்வு கோரிக்கையை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இல்லையெனில், அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த தொழிலாளர்கள் “அரசாங்கத்தை கவிழ்த்து விடுவார்கள்" என்று அரசாங்கத்துக்கு அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல், 730 ரூபா சம்பளத்துக்கு உடன்பட வேண்டாம் என்றும் அவர்களது எதிர்ப்பை அலட்சியம் செய்து அரசாங்கம் அதை அமுல்படுத்த தயாராகுமெனில், அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக “அச்சுறுத்தல்” விடுக்குமாறும் மலையக சமூக நடவடிக்கை குழு திகாம்பரம், மனோ கணேசன் மற்றும் ராதாகிருஷ்ணனிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தொழிற்சங்கங்கள் அபகீர்த்திக்கு உள்ளாகியுள்ள நிலமையின் கீழ் அவற்றுக்கு வெள்ளை பூசும் இந்த அமைப்பு, தொழிலாளர்களின் சுயாதீனமான போராட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் உள்நாட்டில் உள்ள பெரும் முதலாளிகளுக்காக செயற்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கோ அல்லது இலாபத்தை நாடிச்செல்லும் கம்பனிகளுக்கோ அழுத்தம் கொடுப்பதன் மூலம் எந்தவொரு உரிமையையும் வெற்றிகொள்ள முடியாது என்பதே தொழிலாளர்களின் அனுபவமாகும்.

எதிர்ப்புகள் மற்றும் வேலை நிறுத்தங்களில் குதித்து சம்பளக் கோரிக்கையை வெற்றிகொள்வதற்கு உள்ள உறுதிப்பாட்டை ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் கடந்த பல நாட்களில் வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், அது எந்த வகையிலும் போதுமானதல்ல. தொழிலாளர்கள் சம்பளப் போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளாவிட்டால், அதற்கு அவசியமான அரசியல் வேலைத் திட்டத்தில் ஆயுதபாணியாகாவிட்டால், முதலாளிமாரின் திட்டங்களை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சம்பளக் கோரிக்கை தொடர்பாக, 2011 மற்றும் 2013ல் நடந்த போராட்டங்களின் அனுபவத்தை மட்டும் நினைவு கூர்ந்தால் போதுமானது.

அரசாங்கம் மற்றும் கம்பனிகளுக்காக செயற்படும் தொழிற்துறை பொலிஸ்காரனாக ஆகியுள்ள தொழிற்சங்கத்தை, இனிமேலும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பயன்படுத்த முடியாது.

எனினும் சம்பளம் மற்றும் சேவை நிலைமைகளை வெற்றிகொள்ளும் போராட்டத்தை தாமதமின்றி தொழிலாளர்கள் தம் கையில் எடுக்க வேண்டும். தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாளர்கள் தமது நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப உடனடியாக நடவடிக்கை எடுப்பது அதன் முதல் அடியாகும். வாழ்க்கைச் செலவுக்கு பொருத்தமான சம்பளக் கோரிக்கை மற்றும் சிறந்த சேவை நிலைமைகள் பற்றி தொழிலாளர் நடவடிக்கை குழுவுக்குள் செய்யப்படும் ஜனநாயக கலந்துரையாடல் மூலம், முழு தோட்டத் துறையையும் உள்ளடக்கிய தொழிலாளர்களின் ஒன்றிணைந்த போராட்டத்தை அதன் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தப் போராட்டம் வாழ்க்கைச் செலவு உயர்வினாலும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களினாலும் துன்பப்படும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினருடன் ஐக்கியப்பட்ட போராட்டமாக அபிவிருத்தி செய்யப்படுவது அவசியமாகும்.

முதலாளித்துவ கம்பனிகளின் கை பெருந்தோட்டத் துறையில் இருக்கும் வரை, இந்த கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியாது. இந்த உரிமைகளில் எதையும், இலாபத்துக்காக உற்பத்தி செய்யும் முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் பெற முடியாது. தோட்டக் கம்பனிகள், இருக்கின்ற நிலைமைகளையும் கூட அழித்துக்கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களின் ஆட்சியின் கீழ் தோட்டங்களை தேசியமயமாக்கினால் மட்டுமே இந்த உரிமைகளை வெல்ல முடியும்.

தன்னைப் போலவே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள ஏனைய தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து, சோசலிச வேலைத் திட்டத்துக்கு போராடுவதையும், அந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர்களின் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவரப் போராடுவதையும் இந்தப் போராட்டம் கோருகின்றது. அது சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாகும்.

இந்த வேலைத் திட்டத்திற்காக போராட முன்வருமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த முன்நோக்குக்காக இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே போராடுகின்றது. சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு நாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.