Print Version|Feedback
Police stage right-wing, law and order protest in France
பிரான்சில் பொலீஸ் நடத்தும் சட்டம் ஒழுங்கு எதிர்ப்பு வலதுசாரி ஒத்திகை
By Francis Dubois
22 October 2016
போலீஸ் மேல்மட்டத்திலிருந்து வரும் ஆணைகளை வெளிப்படையாகவே மீறி சுமார் 500 போலீசார் அக்டோபர் 17-18 அன்று இரவு பாரிசில் Champs-Elysees இல் மேற்கொண்ட ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் புதிய இரவு ஆர்ப்பாட்டங்கள் பிரான்சு முழுவதும் இடம்பெற்றன. பொலீசார், வரவு-செலவு திட்டத்தில் தமக்கு அதிகளவு நிதியை ஒதுக்கவும், பொலீஸ் அதிகாரத்தையும் கோருவதுடன், பொலீஸ் உயர் மட்டத்திலிருந்தும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திடமிருந்தும் வரும் தடை அச்சுறுத்தலையும் எதிர்த்தனர்.
Champs-Elysées இல் நடந்த எதிர்ப்பானது அதிக நிதிவளங்களுக்கும், அதிக பணியாளர்களுக்குமாக ஒழுங்கு செய்யப்பட்டது. அதன் ஒழுங்கமைப்பாளர்கள் அக்டோபர் 8 நிகழ்வை நினைவுகூர்ந்து இதற்கு அழைப்பு விட்டிருந்தனர்த்தனர். இதன்போது பாரிஸின் தென்புறம் உள்ள Viry-Châtillon பகுதியில் பொலீஸ் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டபொழுது இரு பொலீஸார் காயமுற்றனர்.
அடுத்தநாள், Evry இல் தேசிய பொலீசின் பொது இயக்குநர் ஜோன்-மார்க் ஃபல்க்கோன் (Jean-Marc Falcone) இன் வாகனம் பலநூறு பொலீஸாரின் எதிர்ப்பு போராட்டத்தில் குறிவைக்கப்பட்டது. Marseille, Lyon, Nice, Bordeaux மற்றும் பல சிறு நகரங்களிலும் சீருடை அணிந்த பொலீஸாரால் எதிர்ப்புக்கள் இடம்பெற்றன. ஃபல்க்கோன் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் உள்துறை அமைச்சர் பேர்னார்ட் கஸ்னேவ் இனை பதவி விலகக்கோரிய அழைப்புக்களும் அங்கே இருந்தன.
ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் அடுத்த கிழமை எலிசே ஜனாதிபதி மாளிகையில் பொலீஸ் தொழிற்சங்கங்களை சந்திப்பேன் என்று அறிவித்திருந்தார்.
பணியில் இருக்கையிலேயே, தங்களின் வாகனங்களுடன் வெளிப்படையாகவும் சட்டவிரோதமாகவும் எதிர்ப்பு தெரிவிக்கும் பொலீஸாரின் முடிவானது, மற்றும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திடமிருந்து விமர்சனத்தை எதிர் நோக்குகையில் இந்த அத்துமீறலைத் திரும்பத் திரும்பச் செய்வதானது, அரசு எந்திரத்தின் ஒரு பகுதி தானே சட்டத்தை அவமதிப்பதை சுட்டிக்காட்டுகிறது.
இது, ஜனவரி 2015ல் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) மீதான தாக்குதலுக்கு பின்னர் இருந்து, சோசலிஸ்ட் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் அரசியல் சூழலின் விளைவாகும். முன்னர் எதிர்பாராத இராணுவ மற்றும் பொலீஸ் அணிதிரட்டலுக்கும் அப்பால், சோசலிஸ்ட் கட்சியானது பிரெஞ்சு முஸ்லிம் மக்கட்தொகையை குறிவைக்கும் பிரச்சாரத்தையும் சேர்த்து, பொலீசாரை புகழ்ந்துபாடும் ஊடகப் பிரச்சாரத்தை செய்தது. பிரெஞ்சு சமுதாயத்திற்குள்ளே அதன் பிரதான சமூக அடித்தளமாக பொலீஸ் அமைப்பை ஆக்குவதற்கு சோசலிஸ்ட் கட்சி சக்திமிக்க வகையில் முயன்றது.
பாரிசில் நவம்பர் 13 தாக்குதல்களுக்குப் பின்னர் சோசலிஸ்ட் கட்சியானது, பிரான்சில் நெருக்கடி நிலையை காலவரையின்றி நீட்டிக்க வழிவகுத்து, பொலீஸ் அதிகாரத்தை மேலும் வலுவுடையதாக்கியது. சோசலிஸ்ட் கட்சியின் கொள்கையால் தூண்டப்பட்ட இனவாத சூழலில், பொலீஸ் படை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத்தினருக்கு எதிராக திடீர்ச்சோதனையிடவும், சோசலிஸ்ட் கட்சியின் இழிவான தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு போன்ற பொருளாதார சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து வரும் எதிர்ப்பை மிருகத்தனமாகவும் திட்டமிட்டபடியும் தாக்குவதற்கும் பொலீஸ் படையினர் தடையின்றி கட்டவிழ்த்து விடப்பட்டனர்.
பிரான்சின் அதிஉயர் நிர்வாக நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவால் நடைமுறைக்கு வந்த, மத சுதந்திரத்தின் மீதான ஒரு மூர்க்கத்தனமான தாக்குதலில், சோசலிஸ்ட் கட்சி நகராட்சிகளால் கட்டுப்படுத்தப்படும் உள்ளூர் பொலீசார் முஸ்லிம் பெண்களை முகத்திரை அணிந்திருந்தனர் என்ற சாக்கில் கைது செய்தனர்.
இறுதி ஆய்வில், “மதச்சார்பின்மை” என்ற மோசடித்தனமான பதாகையின் கீழ் மேற்கொள்ளப்படும் “பயங்கரவாதம் மீதான யுத்தம்” என்று கூறப்படுவதும் மற்றும் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரம் ஆகிய இரண்டினதும் இலக்கு, சமூக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு தொழிலாள வர்க்கம் காட்டும் எதிர்ப்பு ஆகும்.
எல்லா பிரதான முதலாளித்துவ கட்சிகளாலும் தொழிற்சங்கங்களாலும் ஆதரிக்கப்படும் பொலீஸ் ஆர்ப்பாட்டங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும்: நெருக்கடிக்கான ஒரே தீர்வாக நிதியியல் ஆதிக்ககுழு எண்ணிப்பார்ப்பது உள்நாட்டில் சர்வாதிகாரமும் வெளிநாட்டில் ஒரு முடிவற்ற யுத்தமும் ஆகும்.
முதலாவது ஆர்ப்பாட்டங்களுக்கு ஒருநாள் கழித்து, கஸ்னேவ் குறிப்பிட்டதாவது, பொலீசார் “ஒரு விரக்தி நிலையின் காரணமாக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்று நான் புரிந்துகொள்கிறேன், இருந்தும் நான் தெளிவாகக் கூறுவேனாயின் பொலீஸ் வாகனங்களோடும் ஒளிரும் விளக்குகளோடும் எதிர்ப்பில் ஈடுபடுவதென்பது ஒரு பொலீஸ்காரராக இருந்துகொண்டு செய்ய இயலாது.”
இரண்டாவது ஆர்ப்பாட்டங்களுக்கு அடுத்தநாள், “தேசிய பொலீஸ் பொது ஆய்வு சேவை சம்பந்தப்பட்டுள்ளது என்று நான் உடன்பட்டால், அது தொடர்ந்து தீங்கிழைக்கும் தண்டனைகளை பெறுவதில் தலையிடுவது என்பதல்ல. மாறாக குறிப்பிட்ட கோட்பாடுகளை நினைவூட்டுவது என்பதாகும்” என்று அவர் சொன்னார். அதற்கு முன்னாள், ஒரு ஒளிப்பதிவு செய்தியில் “அதிகாரத்திற்கும் பாதுகாப்பு படைகளுக்கும் மரியாதை அளிக்க” அழைப்பு விடுத்திருந்தார்.
அனைத்து வகையான முதலாளித்துவ அரசியல்வாதிகளாலும் அதேபோன்ற அறிக்கைககள் வழங்கப்பட்டன. சோசலிஸ்ட் கட்சியின் பிரதமர் மானுவல் வால்ஸ், “எமது ஆசிரியர்களை, எமது பள்ளிகளை, எமது பாதுகாப்பு படைகளை இலக்கு வைக்கும் அவர்களை, படையினர் இடைவிடாது தண்டிப்பதற்கு” உறுதி அளித்து, அரசாங்கம் போலீசை ஆதரிக்கும் என்று வலியுறுத்தினார்.
தேசிய சட்டமன்றத்திலுள்ள வலதுசாரிப் பிரிவான Les Républicains (LR) கட்சியின் தலைவரான கிறிஸ்டியான் ஜாகோப் உம் கூட, தாம் பொலீசாரின் “விரக்தியை” மற்றும் “நம்பிக்கை இழந்த நிலையை” தான் புரிந்துகொள்வதாக கூறி, எதிர்ப்புக்கு ஆதரவளித்தார்.
ஜனநாயக மற்றும் சுயேட்சைகள் சங்கத்தின் (UDI) Philippe Vigier, சமூகமானது “தீச்சுவாலையின் விளிம்பிற்கு போய்க்கொண்டிருக்கிறது” என தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்களாக, நவ பாசிச தேசிய முன்னணி (FN) தலைவர்களும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ”முழுஆதரவுக்கு” திரும்பதிரும்ப அழைப்பு விடுத்திருந்ததோடு, பொலீஸ் தலைவர் ஃபல்க்கோனை இராஜினாமா செய்யவும் கோரினர்.
கடந்த இரு ஆண்டுகளாக போலீசுக்குள்ளும் இராணுவத்திற்குள்ளும் FN க்கான ஆதரவு கடுமையாக உயர்ந்துள்ளது. அரசியல் விஞ்ஞானக் கழகத்தின் Cevipro முகவாண்மையால் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2015 மாநில தேர்தலின் பொழுது FN 51.5 சதவீதம் பொலீஸ் வாக்கினைப் பெற்றது. இது 2012 க்குப் பின்னரான 30 சதவீத அதிகரிப்பும், மற்றும் 2016 இல் 57 சதவீத போலீஸ் வாக்கு அதிகரிப்புமாகும்.
Force Ouvrière (FO) தொழிற்சங்க அமைப்புடன் தொடர்புடைய பொலீஸ் தொழிற்சங்கமான Unité-Police SGP-FO அக்டோபர் 26 அன்று “போலீஸ் மற்றும் குடிமக்களின் கோபத்தின் அணிநடை” என்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.