Print Version|Feedback
Pentagon chief outlines preparations for nuclear war with Russia
பெண்டகன் தலைவர் ரஷ்யாவுடனான அணுஆயுத போருக்கான தயாரிப்புகளை விவரிக்கிறார்
By Bill Van Auken
28 September 2016
திங்களன்று வடக்கு டகோடாவில் விமானப்படைக்கான உலகளாவிய தாக்குதல் கட்டளையக மினோட் தளத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலர் அஷ்டன் கார்ட்டர் "ஏவுகணை செலுத்துவோரிடையே" (missileers) பேசுகையில், பாரியளவில் அணுவாயுதங்களை அமெரிக்கா நவீனமயமாக்குவதை நியாயப்படுத்தியும், ரஷ்யாவிற்கு எதிராக போர்வெறியூட்டும் அச்சுறுத்தல்களை விடுத்தும் உரையாற்றினார்.
பெப்ரவரி 2015 இல் பாதுகாப்புத்துறை செயலராக பொறுப்பேற்றதற்கு பின்னர், மினோட்டிற்கான கார்ட்டரின் இந்த விஜயமே ஓர் அணுஆயுத ஏவுகணை தளத்திற்கான அவரது முதல் விஜயமாகும். அணு-ஆயுதமேந்திய ரஷ்யா மற்றும் சீனாவிற்கு நேரெதிராக அமெரிக்காவை நிறுத்தும் ஒரே தொடர்சீரான மோதல்கள், ஒரு புதிய உலக போரைத் தூண்ட அச்சுறுத்துகின்ற அளவிற்கு தீவிரமடைந்து வருவதுடன், இது பொருந்தி உள்ளது.
வாஷிங்டனின் முப்படைகளது அணுசக்தி ஆற்றல் என்றக்கப்படும் மூலோபாய குண்டுவீசிகள், ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்களை மீளகட்டமைப்பதற்காக பெண்டகன் பரிந்துரைத்த 348 பில்லியன் டாலர் திட்டத்தை பாதுகாப்பதே கார்ட்டரது உரையின் உந்துதலாக இருந்தது. முப்பதாண்டுகளுக்கும் அதிகமான காலத்தில், இந்த அணுஆயுத தயாரிப்பு அமெரிக்க பொருளாதாரத்திலிருந்து முழுமையாக 1 ட்ரில்லியன் டாலரை உறிஞ்சி எடுக்கும்.
1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளை விட ஒவ்வொன்றும் 60 மடங்கு அழிவுகரமான ஆற்றலுடைய குண்டுகளை ஏந்திச்செல்லும், கண்டம் விட்டு கண்டம் ஏவும் தொலைதூர ஏவுகணைகளான மினிட்மான் III (Minuteman III) ஐ ஏவக்கூடிய அதிகாரிகள் மற்றும் முக்கிய படைத்துறையினருக்கு வழங்கப்பட்ட அந்த உரை, சிலவேளைகளில் 1964 இன் நையாண்டி திரைப்படத்தின் தலைப்பை எதிரொலிப்பதாக தெரிந்தது: Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb (டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்லவ் அல்லது: நான் எவ்வாறு குண்டுகளைக் குறித்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டு அதை நேசிக்க பழகினேன்).
இந்த பாரிய அமெரிக்க கொலை எந்திரம், “மில்லியன் கணக்காவர்கள் காலையில் எழுந்து பாடசாலைக்கு செல்வதற்கும், வேலைகளுக்குச் செல்வதற்கும், தங்கள் வாழ்வை வாழ்வதற்கும், அவர்கள் கனவு காண்பதற்கும், அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வழங்குவதற்கும் உதவும்" விதத்தில், “பாதுகாப்புக்கான அடித்தளத்தை" வழங்குகிறது என்று கார்ட்டர் வலியுறுத்தினார்.
“நாம் என்ன பார்க்கிறோமோ இந்த இன்றைய பாதுகாப்பு சூழலில், நம் குழந்தைகளும் அவர்களது குழந்தைகளும் அனேகமாக அணுஆயுதங்கள் இருக்கும் ஒரு உலகில் வாழ வேண்டி இருக்கலாம்,” என்று அனுமானிக்கும் அளவிற்கு அவர் சென்றார். ஆனால் யதார்த்தத்தில், தற்போதைய "பாதுகாப்பு சூழலின்" தொடர்ச்சி குறித்தும் மற்றும் அணுஆயுதங்கள் தொடர்ந்து இருப்பதும் குறித்தும் அனுமானித்தால், “நம் குழந்தைகள் மற்றும் அவர்களது குழந்தைகளின்" வாழ்நாளில் உலகம் எரிந்து சாம்பலாகி விடுமோ என்று அச்சப்படுவதற்கு தான் அங்கே உண்மையான காரணங்கள் உள்ளன.
அமெரிக்க அணுஆயுத போர் தளவாடங்களைக் குறித்த கார்ட்டரின் உரை "நமது அணுஆயுத நிறுவனம்" என்ற பெண்டகனின் தொழிற்துறை வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும், ஓர் அணுஆயுத மோதல் அச்சுறுத்தலானது பனிப்போரின் எந்தவொரு உச்சக்கட்ட காலத்திலும் இருந்ததை விட இப்போதுதான் மிகப் பெரியளவில் உள்ளது என்ற மறுக்க முடியாத உண்மையைச் சுட்டிக்காட்டும் வாசகங்களையும் உள்ளடக்கி இருந்தது.
“1945 க்குப் பிந்தைய ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில், அணு ஆயுதங்கள் போரில் மீண்டும் பயன்படுத்தப்படவில்லை" என்றாலும், “அதை நாம் அப்படியே எப்போதைக்கும் எடுத்துக்கொள்ள முடியாது,” என்றவர் எச்சரித்தார்.
அவர் தொடர்ந்து கூறினார்: “கடந்த தலைமுறையிலிருந்து, மற்றும் நிச்சயமாக அதற்கு முந்தைய தலைமுறையிலிருந்தும், மிகவும் வேறுபட்டிருக்கும் இன்றைய பாதுகாப்பு சூழலில், நாம் தொடர்ந்து சவால்களை முன்னிறுத்தும் ஓர் அணுஆயுத சூழலை முகங்கொடுக்கிறோம்… அது தொடர்ந்து பரிணமித்து வருகிறது, உலகெங்கிலும் பலரது சிந்தனையில் மற்றும் அமெரிக்காவிலும் கூட சிலரது சிந்தனையில் பனிப்போர் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றாலும், ஏதோவிதத்தில் பனிப்போர் காலத்தில் இருந்ததை விட குறைவாகவே அனுமானிக்கத்தக்கதாக இருக்கிறது,” என்றார்.
பனிப்போரை அடுத்தும் மற்றும் 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்தும் என்ன மாறியது என்றால், சோவியத் ஒன்றியம் சிதைந்ததும் உலக மேலாதிக்கத்தை ஸ்திரப்படுத்தி, அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை தலைகீழாக மாற்றும் முயற்சியில் தனது இராணுவ பலத்தை சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என்ற அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தினது முடிவின் அடிப்படையில், அமெரிக்க இராணுவவாதமே வெடிப்பார்ந்து வெளிப்பட்டது.
கடந்த கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக நடந்த போர்கள், குறிப்பாக மத்திய கிழக்கு போர்கள், அப்பிராந்திய மக்களுக்கு தொடர்ச்சியாக பல நெருக்கடிகளையும் உலக வரலாற்று பேரழிவுகளையும் தோற்றுவித்துள்ளது. அதே நேரத்தில் அவை ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவை முன்பினும் அதிக நேரடியாக கொண்டு வரும் பரந்த மோதல்களாக பரவியுள்ளன.
உரை நிகழ்த்தியதற்குப் பிந்தைய ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், கார்ட்டர், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அதன் ஐந்தாண்டுகால பினாமி போரின் தோல்வியைக் குறித்து வாஷிங்டனில் அதிகரித்து வரும் ஏமாற்றத்தின் சிறியதொரு வெளிப்பாட்டைக் காட்டினார். இந்த ஏமாற்றம், அச்சுறுத்தும் வகையில் முன்பினும் அதிகமாக ரஷ்யாவை "போர் குற்றங்களுக்காக" குற்றஞ்சாட்டும் வடிவமெடுத்துள்ளது. அதுவும் இது அப்பிராந்தியத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்குப் பொறுப்பான ஓர் அரசாங்கத்திடம் இருந்து இது வருகிறது.
“சிரியாவில் இப்போது என்ன நடந்து வருகிறதோ அது துயர் நிறைந்த, வெட்கக்கேடான, தடுக்கக்கூடிய வன்முறைக்கு —உலகெங்கிலும் ஒவ்வொருவரும் கடந்த வாரயிறுதியிலிருந்து இதைத்தான் வலியுறுத்தி வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்— குறிப்பாக அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறைக்கு, ரஷ்யா மற்றும் சிரிய ஆட்சியே பொறுப்பாகின்றன,” என்று கார்ட்டர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
வாஷிங்டனின் நிஜமான கவலை அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்களே என்பதல்ல, மாறாக ரஷ்ய விமானப்பலத்தால் ஆதரிக்கப்பட்டுள்ள சிரிய அரசாங்கம், ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா முடுக்கிவிட்ட போரில் மோதும் பிரதான சக்தியான அல்-கொய்தா இணைப்பு கொண்ட போராளிகளது குழுக்களின் இறுதி கோட்டைகளில் ஒன்றான கிழக்கு அலெப்போவை கைப்பற்றும் விளிம்பில் உள்ளதே என்பதுதான் அதன் கவலை.
கார்ட்டர் அவர் உரையில் ரஷ்யாவை தாக்கி கூறுகையில், “மாஸ்கோவின் சமீபத்திய போர்முரசொலியும், புதிய அணுஆயுத அமைப்புகளை கட்டமைப்பதும் மூலோபாய ஸ்திரப்பாட்டிற்கான அதன் தலைவர்களது கடமைப்பாடு மீதும், நீண்டகாலத்திற்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட அணுஆயுதங்கள் பயன்பாட்டைக் கைவிடுவதற்கு அவர்கள் கொடுக்கும் மதிப்பு மீதும், மற்றும் அணுஆயுதங்களை அச்சுறுத்தலானதாக முத்திரை குத்துவது சம்பந்தமாக பனிப்போர் காலத்திய தலைவர்கள் காட்டிய ஆழ்ந்த எச்சரிக்கையை அவர்கள் மதிக்கிறார்களா என்பதன் மீதும் ஆழ்ந்த கேள்விகளை எழுப்புகிறது,” என்றார்.
முதலில் அணுஆயுத தாக்குதல் நடத்துவதில்லை என்ற அமெரிக்காவின் உத்தியோகபூர்வ கொள்கையை ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி பாசாங்குத்தனமாக கைவிடுவது என்று சமிக்ஞை காட்டிய ஒபாமா நிர்வாகம் சமீபத்தில், புதிய அணுஆயுத போட்டிகளைத் தூண்டிவிடுவதற்கு ரஷ்யாதான் பொறுப்பு என்பதாக சித்தரிக்க முயல்கிறது. ரஷ்யாவின் இராணுவ வரவு-செலவு திட்டம் அமெரிக்காவின் வரவு-செலவு திட்டத்தை விட பத்தில் ஒரு பங்கிற்கு சற்று அதிகம் என்ற நிலையில், மற்றும் வாஷிங்டனின் மிக நெருக்கமான அரபு கூட்டாளியான சவூதி அரேபியாவின் செலவை விட குறைவு என்கின்ற நிலையில், இது அப்பட்டமான ஒரு பாசாங்குத்தனமாகும்.
அணுஆயுத போர்முரசு கொட்டுதல் அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது என்பதுடன், மினாட்க்கான கார்ட்டரின் பயணம் அதன் பாகமாக இருந்தது.
அணுகுண்டுவீசிகள் மற்றும் ஏவுகணைகளுக்கான படையை, அமெரிக்க துருப்புகள் "உலகெங்கிலும் அவற்றின் வழக்கமான திட்டங்களை நடத்த" உதவுவதற்கு சேவையாற்றும் ஒரு படையாக பாதுகாப்பு செயலர் வர்ணித்தார்.
“உங்களுக்கே தெரியும், அவர்கள் நமது நேட்டோ கூட்டாளிகளுடன் நிற்கிறார்கள் மற்றும் ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நிற்கிறார்கள்,” என்றவர் தெரிவித்தார். அத்துடன் "முக்கிய ஆசிய-பசிபிக் பிராந்திய" அமெரிக்க நடவடிக்கைகளையும், “வடகொரியாவின் ஆத்திரமூட்டல்களை அதைரியப்படுத்தும்" மற்றும் "மத்திய கிழக்கில் ஈரானின் கேடுவிளைவிக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கும்" அமெரிக்க நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவிற்கு எதிரான தொடர்ச்சியான அமெரிக்க-நேட்டோ இராணுவ கட்டமைப்பை குறிப்பிட்டு கார்ட்டர் அறிவிக்கையில்: “நேட்டோ உடனான ஒரு மோதலில் அணுஆயுத பிரயோகத்தால் அது பலனடையுமென சிந்திப்பதிலிருந்தும், சிலர் குறிப்பிடுவதைப் போல தீவிரப்படுத்தும் மற்றும் தீவிரபாட்டை குறைக்கும் முயற்சியிலிருந்தும், ரஷ்யாவை அதைரியப்படுத்த மற்றும் நாம் சண்டையிடுவதை போலவே நாம் திட்டமிடுவதையும் மற்றும் பயிற்சியளிப்பதையும் உறுதிப்படுத்த, வழமையான தடுப்புமுறைகள் மற்றும் அணுஆயுத தடுப்புமுறைகளை சிறப்பாக ஒருங்கிணைக்க, அட்லாண்டிக் எங்கிலும், நாம் நேட்டோவின் அணுஆயுத கையேட்டுக்கு புத்துயிரூட்டி வருகிறோம்,” என்றார்.
அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ரஷ்யாவின் மேற்கத்திய எல்லையில் ஆயிரக்கணக்கான துருப்புகளை நிலைநிறுத்தி உள்ளதுடன், போருக்கான தயாரிப்பில் 40,000 படையினரைக் கொண்ட துரித தாக்குதல் படைகளை உருவாக்கி உள்ளன. இந்த முயற்சியில் "வழமையான மற்றும் அணுஆயுத" படைகளை "ஒருகிணைப்பதற்கு" வெளிப்படையாக குறிப்பிடப்படும் கடமைப்பாடு, அணுஆயுத போர் அச்சுறுத்தலை மயிரிழையில் தூண்டிவிடும் நிலையில் நிறுத்தியுள்ளது.
கடந்த வாரம், ரஷ்ய செய்தி நிறுவனம் Tass ரஷ்யாவின் மூலோபாய ஏவுகணை படையின் தளபதி Sergey Karakayev ஐ மேற்கோளிட்டு குறிப்பிடுகையில், இடம்விட்டு இடம் நகர்த்தக்கூடிய நவீன Yars தொலைதூர ஏவுகணை அமைப்புமுறை அந்நாட்டின் மேற்கு எல்லையில் ICBM கட்டளையகத்தின் Tver பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. வாஷிங்டன், ருமேனியாவில் ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை நிலைநிறுத்துவதற்கும் மற்றும் போலாந்தில் அதேபோன்ற ஏவுகணை குண்டுவீசிகளை அமைக்க திட்டமிடுவதற்கும் விடையிறுப்பாக மாஸ்கோ இந்த நிலைநிறுத்தலை நடத்தி வருவதாக அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. அணுஆயுதங்களைக் கொண்டுள்ள அந்த அமைப்புகள் ஈரானுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறுவது அமெரிக்காவின் சாக்குபோக்கு என்றாலும், அந்த நிலைநிறுத்தல்களை ரஷ்யாவிற்கு எதிரான முதல் தாக்குதலுக்கு வசதி செய்யும் ஒரு முயற்சியாக மாஸ்கோ பார்க்கிறது. இந்த ABM அமைப்புகளை குறைந்த தூர மற்றும் மத்திய தூர அணுஆயுத தாக்கும் ஏவுகணைகளாக எளிதாக மாற்ற முடியும் என்றும் அது குற்றஞ்சாட்டுகிறது.
திங்களன்று அவர் வழங்கிய உரையில் கார்ட்டர், அணுஆயுத தாக்குதலுக்காக நியமிக்கப்பட்ட இராணுவ சிப்பாய்களிடையே நன்னடத்தை உணர்வை ஊக்குவிக்கும் பெண்டகனின் ஒரு முயற்சியை, "பலனளிப்பது" என்று கூறி, சுருக்கமாக மேற்கோளிட்டுக் காட்டினார். 2013 மற்றும் 2014 இல், அணுஆயுத தளங்களில் இருந்த 100 க்கும் அதிகமான அதிகாரிகளும் மற்றும் இடைநிலை பதவி அதிகாரிகளும் போதை மருந்து பிரயோக துஷ்பிரயோகத்திலும், உடல்தேர்வு பரிசோதனைகளில் மோசடி செய்ததிலும் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு மீறல்களிலும் சம்பந்தப்பட்டிருந்தனர். அந்த அணுஆயுத கட்டளையகத்தில் பல உயர்மட்ட அதிகாரிகள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
எவ்வாறிருப்பினும், வியோமிங் இல் உள்ள F.E. வாரென் அணுஆயுத ஏவுகணை தளத்தில் பாதுகாப்பு படைகளின் அங்கத்தவர் ஒருவர், போதையளிக்கும் மருந்தான LSD பயன்படுத்தினார் மற்றும் வினியோகித்தார் என்ற குற்றச்சாட்டுக்களுக்காக ஜூனில் இராணுவ நீதிமன்ற தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நன்னடத்தை மேம்பாடு குறித்த கூற்று சர்ச்சைக்குள் இழுக்கப்பட்டது. அங்கே ஏனைய பதினான்கு விமானப்படை சிப்பாய்களும் கூட போதை மருந்து பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.