Print Version|Feedback
France’s New Anticapitalist Party denounces opposition to NATO escalation in Syria
பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி சிரியாவில் நேட்டோ மோதல் மோசமாதலை எதிர்ப்பதை கண்டிக்கிறது
By Alex Lantier
12 October 2016
ரஷ்யாவை இலக்காக கொண்டு, நேட்டோ நேரடியாக சிரியாவில் தலையிடுவதற்கு ஆதரவாக புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) அழைப்புவிடுவது, சிஐஏ மற்றும் பிரெஞ்சு பெருநிறுவன ஊடகங்களின் போர் பிரச்சாரத்திலிருந்து வேறுபட்டதல்ல.
சிரியா மீது குண்டுவீச மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அணுஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் அச்சுறுத்திய நிலையில், புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) அதன் சுவிஸ்-சிரிய செய்தியாளர் ஜோசப் தாஹர் இன் கட்டுரை ஒன்றை பிரசுரித்தது. “தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அழைப்புவிடுவது மட்டும் போதுமானதாக இல்லை,” என்ற அந்த கட்டுரை சிரியாவில் நேட்டோ தலையீட்டுக்கான எதிர்ப்பை கண்டிப்பதுடன், அல் கொய்தாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு கைப்பாவை அரசாங்கத்தை சிரியாவில் நிறுவுவதற்கும் அழைப்புவிடுக்கிறது.
சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான படைகளுக்கும் மற்றும் ரஷ்ய ஆதரவிலான படைகளுக்கும் இடையே குறுகிய காலமே நீடித்திருந்த கடந்த மாதத்தின் தற்காலிக சமாதான உடன்பாட்டை "அரசியல்ரீதியில், இராணுவரீதியில் மற்றும் மனிதாபிமான அர்த்தத்திலும் முழுமையான தோல்வி" என்று குறிப்பிடும் தாஹர், அது முறிந்ததைப் பாராட்டுவதுடன் கட்டுரையை தொடங்குகிறார். பின்னர் அவர், "அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள போர் எதிர்ப்பியக்க பிரிவுகள் மற்றும் சில 'இடது' பிரிவுகள்" பக்கம் திரும்புகிறார், அவர்களைப் பொறுத்த வரையில் "அந்த தற்காலிக சமாதான உடன்பாட்டின் தோல்வி, சிரியாவில் போர் சர்வதேசமயமாக்கப்பட்டதன் விளைவாக உள்ளது.” என்கிறார்.
பிரிட்டனின் போரை நிறுத்துவோம் (Stop the War) கூட்டணியின் ஒரு கட்டுரையை தாஹர் மேற்கோளிடுகிறார், அது குறிப்பிடுவதாவது, “அந்த போர் சர்வதேசமயப்படுத்தப்பட்டதே மத்திய பிரச்சினையாகும். மோதலை நீடித்து தீவிரப்படுத்தும் வகையில், பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகள் அவற்றின் புவிசார் அரசியல் நலன்களைப் பின்தொடர்வதற்கு பல ஆண்டுகளாக சிரியா ஒரு களமாக இருந்துள்ளது. இந்த நிகழ்போக்கு சமீபத்தில் கவலையளிக்கும்விதத்தில் அமெரிக்க தேர்தல்களுக்கு முன்னதாக வேகமெடுத்துள்ளது, இன்னும் கூடுதலாக மேற்கின் தீவிரப்படுத்தலைக் கோரும் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன,” என்று குறிப்பிடுகிறது.
சிரிய ஜனனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிரான மேற்கின் தீவிரப்பாடு மீதான விமர்சனங்களால் சீற்றமுற்று, தாஹர் விடையிறுக்கையில், “எல்லா தலையீடுகளையும் முடிவுக்குக் கொண்டு வர, அதே மட்டத்தில் அவற்றை வைத்திருக்க, சிரியாவில் சமாதானத்தை எட்ட சர்வசாதாரணமாக அழைப்பிடுவது … போதாது, அத்துடன் பிழையானதும் கூட,” என்கிறார். அவர் Stop the War கூட்டணியின் கட்டுரையை பின்வருமாறு தாக்குகிறார்: “அக்கட்டுரையை வாசிக்கும் எவரொருவரும், அந்நாட்டில் அண்மித்து அரை மில்லியன் பேர் கொல்லப்படுவதற்கு முக்கிய மூலக்காரணமாக உள்ள குற்றகரமான மற்றும் எதேச்சதிகார அசாத் ஆட்சியின் நாசகரமான கொள்கைகளை குறித்து ஒரு வார்த்தையும் கூறப்படவில்லை என்பதை கவனிப்பார்.”
போர்-எதிர்ப்புணர்வு மீதான தாஹர் இன் தாக்குதல், முழுமையாக அரசியல் பொய்களில் தங்கியுள்ளது. சிரியாவில் மனிதபடுகொலைக்கு பிரதான காரணம் அசாத் ஆட்சி அல்ல, மாறாக NPA போன்ற போலி-இடது குழுக்களால் ஆதரிக்கப்படும் நேட்டோ சக்திகளது தலையீடாகும். அசாத்தை பதவியிலிருந்து கவிழ்க்க, நேட்டோவும் அதன் மத்திய கிழக்கு கூட்டாளிகளும் இஸ்லாமிய எதிர்ப்பு போராளிகள் குழுக்களை ஆயுதமேந்த செய்வதற்காக பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டு ஒரு மோதலைத் தொடங்கியுள்ளனர் என்பதும், அதில் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் மற்றும் 10 மில்லியனுக்கும் மேலான சிரியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் ஐந்தாண்டுகால போருக்குப் பின்னர் நன்கறியப்பட்டதாகும்.
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழுத்தமளித்து வருகின்ற மற்றும் கடந்த மாதத்தின் போர்நிறுத்தத்தை எதிர்த்த, நேட்டோ இராணுவ படைகள் மற்றும் உளவுத்துறைகளுடன் அரசியல்ரீதியில் முற்றிலுமாக அணிசேர்ந்த நிலைப்பாட்டில் இருந்து தாஹர் எழுதுகிறார்.
கடந்த மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி போர்நிறுத்தத்தில் கையெழுத்திட்டதும், பல அமெரிக்க தளபதிகள் அதை அவர்கள் மதிக்க போவதில்லையென அறிவித்தார்கள். மாஸ்கோவிற்கு எதிரான போருக்கு அவர்கள் தயாரிப்பு செய்து வருவதை அறிவித்துள்ளதால், அல் கொய்தா குறித்த உளவுத்தகவல்களை அதனுடன் பகிர்ந்து கொள்ள அவர்கள் மறுத்தார்கள். விரோதங்களை தற்காலிகமாக நிறுத்துவதென்பது, அந்த போர்நிறுத்த விதிமுறைகளுக்குள் வரையறை செய்யப்படாத அமெரிக்க ஆதரவிலான அல் கொய்தா இணைப்பு கொண்ட போராளிகள் குழுக்களிடம் இருந்து அலெப்போ போன்ற முக்கிய நகரங்களை அசாத் மீண்டும் கைப்பற்றுவதற்கே உதவி செய்யுமென்றும் அவர்கள் அஞ்சினர். அந்த போர்நிறுத்தம் காலாவதி ஆவதற்கு சற்று முன்னரே, அதை நீடிக்க செய்யும் எந்தவித முயற்சியையும் முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில், அமெரிக்க விமானப்படையினர் டெர் எஸ்-ஜொர் இல் டஜன் கணக்கான சிரிய துருப்புகளைக் குண்டுவீசி கொன்றனர்.
சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை அழிப்பதை அந்த போர்நிறுத்தம் தடுத்துவிட்டதாக, பெண்டகன் தலைவர்களது நிலைப்பாடுகளையே எதிரொலித்து, தாஹர் குற்றஞ்சாட்டுகிறார்.
“அரசியல் மட்டத்தில், இந்த போர்நிறுத்தம் தோல்வியடையவே பிறந்தது, ஏனென்றால் அது பிரச்சினையின் அரசியல் வேர்களை, அதாவது அசாத் ஆட்சியை, கவனத்தில் எடுக்கவில்லை" என்று எழுதும் அவர், தொடர்ந்து குறிப்பிடுகையில், “இந்த அரசியல் உடன்படிக்கை உண்மையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவினது அரசியல் நலன்களுக்குரிய 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' பாசாங்குத்தனம் என்றழைக்கப்படுவதன் கீழ், அசாத் ஆட்சியை ஸ்திரப்படுத்தவே உறுதியாக இட்டுச் சென்றது. இதனால்தான் இந்த உடன்படிக்கையை ஜனநாயகரீதியில் எதிர்க்கும் நிறைய பிரிவுகளால், ஆயுதப்படை ஆகட்டும் அல்லது சமாதானத்தை விரும்பும் பிரிவுகள் ஆகட்டும், அது நிராகரிக்கப்பட்டது,” என்கிறார்.
ஒபாமா நிர்வாகம் அசாத் ஆட்சியை ஸ்திரப்படுத்த முயன்று வருவதாக தாஹர் பிரகடனப்படுத்துகிறார். அமெரிக்க நவ-பழைவாத வட்டாரங்களில் உருவான இந்த பொய், அமெரிக்க இராணுவ மற்றும் ஊடக அடுக்குகளின் நலன்களுக்கும் மற்றும் பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தில் உள்ள NPA கூட்டாளிகளது நலன்களுக்கும் சேவையாற்றுகிறது, இவர்கள் அசாத்தை நசுக்க ஒபாமா நிர்வாகம் இன்னும் இராணுவ நடவடிக்கை எடுக்கவில்லையே என்று அதிருப்தி கொண்டுள்ளனர். குறிப்பாக 2013 இல், பிரான்ஸ் பக்கவாட்டில் நிற்க ஒபாமா ஏறத்தாழ சிரியா மீது போர் தொடுக்குமளவிற்குச் சென்றார், ஆனால் சோசலிஸ்ட் கட்சி அதற்கு ஆதரவாக முன்வந்த போதும் கூட திடீரென அவர் பின்வாங்கினார். இது சோசலிஸ்ட் கட்சியையும் மற்றும் சிரிய போருக்கான முக்கிய NPA ஆதரவாளர்களையும், அதாவது சிஐஏ உடன் தொடர்பிலிருந்த சிரிய தேசிய கவுன்சில் தலைவர்களுக்கு ஏற்கனவே 2011 இல் ஆலோசனை வழங்கி வந்த பேராசிரியர் ஜில்பேர் அஷ்கார் போன்றவர்களை, சீற்றமுறச் செய்தது.
பெண்டகன் மற்றும் சிஐஏ போர் பிரசாரத்துடன் தாஹர் அணிசேர்ந்திருப்பது, வலதை நோக்கிய NPA பரிணாமத்தில் மற்றொரு படியைக் குறிக்கிறது. பல தசாப்தங்களாக, NPA உம் மற்றும் அது எந்த சமூக அடுக்குகளில் இருந்து வந்ததோ அதுவும் தங்களைத்தாங்களே முதலாளித்துவ அரசியலுக்குள் ஒருங்கிணைத்துள்ளன. 1980 களுக்குப் பின்னர், ஆபிரிக்காவின் சாட் (Chad) மற்றும் மாலியில் தொடங்கி ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் வரையில் இராணுவ தலையீடுகள் மற்றும் போர்களைத் தொடங்கிய சுதந்திர-சந்தை சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்களையே அந்த அடுக்கு சுற்றி வந்துள்ளது.
Lausanne பல்கலைக்கழகத்தின் ஒரு பட்டதாரி மாணவரான தாஹர், மார்க்சிசம், ட்ரொட்ஸ்கிசம், அல்லது ஆழ்ந்த சோசலிஸ்டாக மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலாக கூறிக்கொள்ளும் எதனுடனும் முற்றிலுமாக தனிப்பட்டரீதியில் உண்மையான தொடர்பு இல்லாததுடன், NPA க்குள் இருக்கும், ஒரு இளம் அடுக்கை பிரதிநிதித்துவம் செய்கிறார். ஏகாதிபத்திய சக்திகள் ஏதோவிதத்தில் பரந்தளவில் செல்வச்செழிப்பான மாணவர்களின் அடுக்குகள் மற்றும் உயரடுக்கு நடுத்தர வர்க்கத்திற்குள் எதைக் கொண்டு அவற்றின் போர் கொள்கைகளுக்கு ஒரு "வெகுஜன" அடித்தளத்தை உருவாக்க முயலும் ஊடகங்கள் மற்றும் அரசியல் வலையமைப்பிற்குள் அவர்களை ஒருங்கிணைத்து கொள்ள, NPA உடனான அத்தட்டினரது கூட்டு ஒரு இயங்குமுறையாக சேவையாற்றி உள்ளது.
Syrian Freedom Forever வலைத் தளம் போன்ற சிரியாவில் உள்ள அமெரிக்க ஆதரவிலான எதிர்ப்பு படைகளின் ஆவணங்களைப் பிரசுரிக்கும் பல்வேறு வலைத் தளங்களுக்கும் தாஹர் பங்களிப்பு செய்கிறார். சர்வதேச சோசலிச அமைப்பின் (ISO) மே 2013 அழைப்பான "சிரிய புரட்சியுடன் ஐக்கியம்" என்பதில் அவர் கையெழுத்திட்டார். அது 2013 போர் பீதிக்கு முன்னதாக அமெரிக்க தலைமையிலான இராணுவ தலையீட்டு பிரச்சார நடவடிக்கையின் பாகமாக இருந்தது. அவர் ஏகாதிபத்திய-சார்பு பிரச்சாரத்திற்கு அழைப்புவிடுகின்ற அதேவேளையில் அவரை ஒரு "இடது" பிரமுகராக காட்டும் நோக்கில், ஒரு பாலஸ்தீன கழுத்துத்துண்டு அணிந்தவாறு அவர் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார்.
அரசியல்ரீதியில், தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட சோசலிச அரசியல் ஒருபுறம் இருக்கட்டும், தாஹர் மற்றும் அஷ்கார் உம் இடதுசாரி அரசியலை விட, அமெரிக்காவின் சட்டவிரோதமான 2003 ஈராக் படையெடுப்பை திட்டமிட்ட பவுல் வொல்ஃபோவிட்ஸ் போன்ற நவ-பழமைவாத அரசியல்வாதிகளுடன் மிகவும் நெருக்கமாக உள்ளனர்.
அசாத் ஆட்சியை அழித்து சிரியாவில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு சுதந்திர சிரிய இராணுவம் (FSA) மற்றும் சிரிய புரட்சிகர மற்றும் எதிர்ப்பு படைகளது தேசிய கூட்டணியில் (NCSROF) உள்ள ஏனைய அங்கத்துவ அமைப்புகள் போன்ற அமெரிக்க ஆதரவிலான குழுக்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலமாக தாஹர் அவர் கட்டுரையை முடிக்கிறார். தாஹர் எழுதுகிறார், அசாத்தை பதவியிலிருந்து இறக்குவதுதான் "ஜனநாயக மற்றும் முற்போக்கான சக்திகள் மீள ஒழுங்கமைவதற்கும் மற்றும் குற்றகரமான அசாத் ஆட்சியின் சர்வாதிகாரம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் எதேச்சதிகார நடைமுறைகளில் இருந்து விலகி, எந்தவிதமான பாரபட்சமும் இல்லாத ஒரு புதிய சிரியாவிற்கான போராட்டத்தில் மீண்டும் ஒருமுறை முன்னணி பாத்திரம் வகிப்பதற்கும் ஒரே வழி" என்கிறார்.
உண்மையில், சிரியாவில் ஒரு பிற்போக்குத்தனமான இஸ்லாமிய கைப்பாவை அரசாங்கத்தை நிறுவுவதற்கு பெண்டகன், சிஐஏ மற்றும் பாரசீக வளைகுடா எண்ணெய்வள ஷேக் ஆட்சிகள் செல்லும் அதே பாதையில் NPA உம் இயங்கி வருகிறது என்பது தான் “ஜனநாயக" எதிர்ப்பைக் குறித்த தாஹரின் பகுப்பாய்வை ஆய்வு செய்கையில் தெளிவாகிறது. பெண்டகன் மற்றும் NPA இரண்டாலும் ஆதரிக்கப்படும் NCSROF குறித்து, சிரிய குர்திஷ் போராளிகள் குழுக்களது விமர்சனங்களை தாஹர் மேற்கோளிடுகிறார்.
இப்போராளிகள் குழுக்கள் அசாத்திற்குப் பிந்தைய சிரியாவிற்கான NCSROF இன் ஒரு வரைவு திட்டத்தை தாக்கியிருந்தன. அவை அறிவித்தன, “அந்த ஆவணத்தை எவரொருவர் வாசித்தாலும் உடனே கவனத்தில் வருவது, 'பொது கொள்கைகள்' மீதான புள்ளி 1 பிரத்யேகமாக அரபு கலாச்சாரத்தையும் மற்றும் இஸ்லாமையும் "புத்திஜீவித உற்பத்தி மற்றும் சமூக உறவுகளுக்கான" மூலகாரணமாக பட்டிலிடுகிறது என்பதுதான். இந்த வரையறை தெளிவாக பாரம்பரியரீதியிலான, மொழிரீதியிலான அல்லது மதரீதியிலான ஏனைய கலாச்சாரங்களை தவிர்த்துவிட்டு, பெரும்பான்மையினரது கலாச்சாரத்தை முன்னணி ஒன்றாக அமைக்கிறது. சிரிய குர்தியர்களை போலவே, நாங்களும் சிரிய மக்கள் குறித்த இந்த குறுகிய கண்ணோட்டத்தை அருவருக்கத்தக்கதாக உணர்கிறோம். இந்த வரையறைக்கும் மற்றும் அசாத் ஆட்சியின் கீழ் பேரினவாத கொள்கைகளுக்கும் இடையிலான ஒத்தத்தன்மையை மறுக்கவியலாது,” என்றது குறிப்பிட்டது.
அவர் ஆதரிக்கும் அப்படைகளை குறித்து பல அதிர்ச்சியூட்டும் ஒப்புதல்களுடன் தாஹர் பதிலளிக்கிறார். அவர் குறிப்பிடுகையில், “அப்பிராந்தியத்தில் உள்ள சர்வாதிகாரங்கள் மற்றும் எதேச்சதிகார ஆட்சிகளுடன் கூட்டு சேர்ந்தும், அதேவேளையில் பிரிவினைவாத மற்றும் பிற்போக்குத்தனமான சக்திகளுடன் (ஜெய்ஷ் இஸ்லாம்) ஒத்துழைத்தும் அல்லது அவற்றுடன் (அஹ்ரர் ஷாம் மற்றும் பதாஹ் அல் ஷாம்) இன்னும் நெருக்கமாக கூட்டுறவைக் கோரியும், சிரிய புரட்சிகர மற்றும் எதிர்ப்பு படைகளது தேசிய கூட்டணி, ஜனநாயகம், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான சிரிய புரட்சி மற்றும் புரட்சியாளர்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான சட்டபூர்வத்தன்மையை நீண்டகாலத்திற்கு முன்னரே இழந்துவிட்டுள்ளது என்பது உண்மை தான்," என்றவர் எழுதுகிறார்.
பதாஹ் அல் ஷாம் என்பது, சிரியாவை கைப்பற்ற வேண்டுமென NPA விரும்பும் சக்திகளின் ஒரு கூட்டாளியும், சிரியாவில் அல் கொய்தா இணைப்பு கொண்டதுமான அல் நுஸ்ரா முன்னணியின் மாற்றியமைக்கப்பட்ட புதிய பெயராகும். தஹார் தொடர்ந்து கூறுகையில், "குர்திஷ் மக்களுக்கு எதிரான அதன் பேரினவாத மற்றும் இனவாத கொள்கைகளுக்கு கூடுதலாக,” NCSROF இன் "ஊழலும் மற்றும் நவ-தாராளவாத கொள்கைகளை அது ஊக்குவிப்பதும் மற்றும் அதற்கு பதிலாக ஜனநாயகத்தை மிகவும் குறைவாகவே கருத்தில் கொள்வதும், புறநிலைரீதியில் பாரபட்சம் இல்லாத எல்லா சிரியர்களுக்குமான ஒரு புதிய சிரியாவை கட்டமைக்கும் நோக்கங்களுக்கு எதிராக உள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொள்கிறார்.
இராணுவ தீவிரப்பாட்டிற்கான அவரின் முன்மொழிவானது, அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்ட ஒரு ஊழல் நிறைந்த, சுதந்திர-சந்தை, ஜனநாயக-விரோத, இனவாத, பாரபட்சமான அமைப்பை அதிகாரத்திற்குக் கொண்டு வர நோக்கம் கொண்டுள்ளது என்பதை தாஹர் அவரே ஒப்புக் கொள்கிறார்.
அவர் பின்வருமாறு குறிப்பிட்டு உவகையோடு நிறைவு செய்கிறார்: “அதே நேரத்தில், ஜனநாயக மக்கள் இயக்கத்தைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும் மற்றும் சுதந்திர சிரிய இராணுவத்தின் ஜனநாயக குழுக்கள் புரட்சியின் நோக்கங்களையும், பிரிவினைவாதம் மற்றும் இனவாதத்திற்கு சவால்விடுக்கும் சிரிய மக்களின் பல்வேறு கூறுபாடுகளை ஐக்கியப்படுத்துவதையும் தாங்கிப் பிடித்துள்ளன,” என்றார்.
தனது கொள்கைகளை "இடது" அல்லது ஜனநாயகத்திற்கானது என்று காட்டும் NPA இன் ஏனைய முயற்சிகளைப் போலவே, இதுவும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இரத்தந்தோய்ந்த கொள்கைகளை முற்போக்கான வடிவத்தின்கீழ் நியாயப்படுத்த முயலும் வெறும் வெற்று வாய்ஜாலமே ஆகும்.