Print Version|Feedback
Indian Stalinists aid BJP’s bellicose anti-Pakistan campaign
இந்திய ஸ்ராலினிஸ்டுகள் பிஜேபி இன் போர்வெறியூட்டும் பாகிஸ்தான்-விரோத பிரச்சாரத்திற்கு உதவுகின்றனர்
By Wasantha Rupasinghe and Keith Jones
14 October 2016
இந்தியாவின் பிரதான ஸ்ராலினிச கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) இந்திய ஆளும் உயரடுக்கின் பரம விரோதியான அணுஆயுதமேந்திய பாகிஸ்தானுக்கு எதிராக அது தொடுத்துவரும் பொறுப்பற்ற, போர்வெறியூட்டும் தாக்குதலில் கேடுவிளைவிக்கும் ஒரு பாத்திரம் வகித்து வருகிறது.
இந்தியாவின் அபாயகரமான வலதுசாரி, இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா (பிஜேபி) அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், செப்டம்பர் 28 இரவில் பாகிஸ்தானுக்குள் இந்திய இராணுவம் நடத்திய "துல்லிய தாக்குதல்களை" ஆதரிப்பதில் அரசியல் ஸ்தாபகத்தின் ஏனையவற்றுடன் சிபிஎம் உம் இணைந்தது.
அது சர்ச்சைக்குரிய காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை (LoC) ஒட்டி இந்திய இராணுவத்தின் தயார்நிலையை பலப்படுத்துவதையும் மற்றும் அதிகரிப்பதையும் ஆதரிக்கிறது. மேலும், ஸ்ராலினிஸ்டுகள் "பதட்டங்களை தணிக்க" விரும்புவதாக கூறிக்கொள்கின்ற அதேவேளையில், இந்திய நிர்வாகத்திலுள்ள காஷ்மீரின் ஊரி இராணுவ தளம் மீதான செப்டம்பர் 18 இராணுவ தாக்குதலுக்கு இஸ்லாமாபாத் தான் பொறுப்பு என்று புதுடெல்லி அறிவித்ததற்குப் பின்னர் இருந்து அது எடுத்துள்ள ஆத்திரமூட்டும் அரசியல், இராஜாங்க மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அவர்கள் தங்களது ஆதரவை சமிக்ஞை காட்டியுள்ளனர்.
இந்திய சிறப்பு படைகளது எல்லை கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டிய செப்டம்பர் 28-29 நடவடிக்கைகள், நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் பாகிஸ்தானுக்குள் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் இந்தியா பகிரங்கமாக ஒப்புக்கொண்ட முதல் இராணுவ நடவடிக்கையாகும். அவை அறிவிக்கப்பட்டதோ இல்லையோ உடனேயே பிஜேபி அரசாங்கமும் பெருநிறுவன ஊடகங்களும், பாகிஸ்தானுடனான நேருக்கு நேரான "மூலோபாய கட்டுப்பாடு" கொள்கை என்றழைக்கப்பட்டது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கும் மற்றும் இந்தியாவின் இராணுவ துணிச்சலுக்கும் அவை சான்றுகளாகும் என்று கொண்டாட சலிப்பூட்டுமளவிற்கு வேலை செய்தன.
யதார்த்தத்தில், அத்தாக்குதல்கள் இந்திய மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான இராணுவ-மூலோபாய விரோதத்தின் ஓர் அபாயகரமான தீவிரப்பாடு என்பதுடன், சட்டவிரோதமானதும் கூட. இந்த விரோதம், முஸ்லீம் பாகிஸ்தான் என்றும், இந்துக்கள் மேலோங்கிய இந்தியா என்றும் வெளிப்படையாக தெற்காசியாவின் 1947 வகுப்புவாத பிரிவினைக்குப் பின்னரில் இருந்து அந்த துணைகண்டத்தை அழிவுகரமாக ஆக்கியுள்ளது. இன்றோ அது அப்பிராந்தியத்தின் மக்களை அணுஆயுதம் கொண்டு அச்சுறுத்துகிறது.
அத்தாக்குதல்கள் குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு ஒருசில மணி நேரத்திற்குள், ஸ்ராலினிஸ்டுகளில் இருந்து பிஜேபி இன் பாசிசவாத கூட்டாளி சிவ சேனா வரையில் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் சகல பிரிவினரும், அதாவது "இந்தியா", பாகிஸ்தானுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறது என்பதை எடுத்துக்காட்டவும் மற்றும் இந்திய இராணுவ நடவடிக்கையை கட்சி தலைவர்களுக்கு விளக்கமளிக்கவும் பிஜேபி அரசாங்கம் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் சிபிஎம் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.
அக்கூட்டதின் முடிவில், அதற்கு தலைமை வகித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பங்குபற்றிய அனைவரும் இராணுவ நடவடிக்கையை புகழ்ந்துரைத்தாகவும், “அரசாங்கத்தின் எந்தவொரு எதிர்கால நடவடிக்கைக்கும் அவர்களது ஆதரவை உத்தரவாதப்படுத்தியதாகவும்" பெருமைபீற்றினார்.
யெச்சூரியும் மற்றும் சிபிஎம் உம், சிங்கின் விபரிப்பின் எந்த பகுதியுடனும் முரண்படவில்லை.
இந்த "தாக்குதல்களும்" மற்றும் அவற்றிற்கான அனைத்து கட்சிகளது ஆதரவும், முற்றுமுழுதான போரைத் தூண்ட அச்சுறுத்துகின்ற ஒரு பாகிஸ்தான்-விரோத பிரச்சாரத்திற்கு தீனி போடுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலைமைகளின் கீழ், சிபிஎம் அரசியல்குழு "சில எதிர்கட்சி தலைவர்களுக்கு அரசாங்கத்தின் விளக்கம் குறித்து" என்று அமைதிப்படுத்தும் ஒரு தலைப்பின் கீழ் செப்டம்பர் 29 அன்று மாலை சிறிய அறிக்கை ஒன்றை பிரசுரித்தது.
பாகிஸ்தான் மீதான சிறப்பு படைகளது சட்டவிரோத தாக்குதலுக்கு ஸ்ராலினிஸ்டுகளின் ஆதரவைச் சுட்டிக்காட்டும் அந்த 111 வார்த்தை அறிக்கை, “இந்திய இராணுவம் நடத்திய சில நடவடிக்கைகளை" குறிப்பிட்ட பின்னர், பாகிஸ்தானுக்குள் இன்னும் கூடுதலாக ஊடுருவும் திட்டங்கள் எதுவும் இல்லை என்ற இராணுவத்தின் சொந்த கூற்றுகளையே எதிரொலித்து, அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “மேற்கொண்டு விரோதமான தீவிரப்பாடு இருக்காதென சிபிஎம் எதிர்ப்பார்க்கிறது,” என்றும் குறிப்பிட்டது.
அந்த அறிக்கை, “பதான்கோட் [பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்-ஈ-மொஹம்மத் தாக்கியதாக குற்றஞ்சாட்ட ஜனவரி 2 இந்திய விமானப்படை தளம் மீதான தாக்குதல்] மற்றும் ஊரி தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது" என்று "நம்பிக்கை" வெளியிடுமளவிற்கு சென்றது. “எல்லாவற்றினோடு சேர்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து நம் மக்களின் நிம்மதி மற்றும் பாதுகாப்பு பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை சிபிஎம் நீண்டகாலமாக பேணுகிறது,” என்றது குறிப்பிட்டது.
பிஜேபி உத்தரவிட்ட இராணுவ நடவடிக்கைக்கு சிபிஎம் இன் ஆதரவை மேற்கொண்டு அடிக்கோடிட்டு கூறுகையில், “தேசம்" அதன் பின்னால் ஐக்கியப்பட்டு நிற்கிறது என்று குறிப்பிட்டதுடன், பாகிஸ்தான் உடனான மோதலை தொடர்வதற்கு சூளுரைத்து அதிகாரத்திற்கு வந்த மோடி அரசாங்கத்தை விமர்சித்து அந்த சிபிஎம் அரசியல்குழு அறிக்கை ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை. அந்த "துல்லிய தாக்குதல்களுக்கு" முன்னரே கூட, பிஜேபி மற்றும் இந்து வலதுடன் சேர்ந்து பெருநிறுவன ஊடகங்களும் ஒருமித்து தொடுத்திருந்த தேசவெறி கொண்ட பாகிஸ்தான்-எதிர்ப்பு பிரச்சாரத்திலிருந்து, தன்னைத்தானே எவ்வாறேனும் தூர விலக்கிக் கொள்வதையும் அது சரியானதாக காணவில்லை.
அதன்பின்னர், சிபிஎம் பொது செயலாளர் யெச்சூரி இந்தியாவின் இராணுவ-பாதுகாப்பு எந்திரத்தைப் பலப்படுத்துவதற்கும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அதை அணிதிரட்டுவதற்கும் சிபிஎம் இன் ஆதரவை வெளிப்படையாக வெளியிட்டார். “நம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது," யெச்சூரி அறிவித்தார், “நமது மற்றும் மத்திய அரசாங்கத்தினது கடமையாகும்.”
பிஜேபி அரசாங்கம் ஊரி தாக்குதலுக்கான பொறுப்பை ஒரு அவசர விசாரணை கூட இல்லாமல் பாகிஸ்தான் மீது சுமத்தியதும், அதற்குப் பின்னால் அணிதிரண்ட வெளிவேஷத்திற்கு எதிர்கட்சிகளாக உள்ள ஏனையவற்றோடு சிபிஎம் உம் முன்னதாக இணைந்திருந்தது.
ஊரி தாக்குதலுக்கு ஒருசில மணி நேரங்களில் வெளியிடப்பட்ட மத்திய குழுவின் அறிக்கை ஒன்றில் சிபிஎம் அறிவிக்கையில், “பாகிஸ்தான் தீவிரவாத சக்திகளுக்கு உதவுவதை மற்றும் துணைபோவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுபோன்ற நடவடிக்கைகள் [இப்]பிரதேசத்தில் சமாதான நிகழ்முறைக்கு ஒரு மிகப்பெரிய தடையாக உள்ளன,” என்று குறிப்பிட்டது.
பாகிஸ்தானிய இராணுவம் மற்றும் அந்நாட்டின் அரசியல் உயரடுக்கு அவற்றின் பிற்போக்குத்தனமான புவிசார் மூலோபாய நலன்களை முன்னெடுக்கவும் மற்றும் குறிப்பாக காஷ்மீர் படுகையில், இந்திய ஆட்சிக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யவும் மற்றும் வகுப்புவாதப்படுத்தவும் ஆயுதமேந்திய இஸ்லாமிய குழுக்களைப் பயன்படுத்தி உள்ளது தான்.
ஆனால் ஸ்ராலினிஸ்டுகளோ அதை விட குறைவில்லாத பிற்போக்குத்தன சக்திகளை, அதாவது இந்திய முதலாளித்துவ வர்க்கத்தை, அதன் இராணுவ-பாதுகாப்பு எந்திரத்தை மற்றும் அது அடைகாத்து வளர்த்துள்ள வெறிபிடித்த இந்து வகுப்புவாத சக்திகளை, ஆதரிப்பதை நியாயப்படுத்துவதற்காக மட்டுமே இதை மேற்கோளிடுகின்றனர்.
கடந்த கால் நூற்றாண்டுகளாக அடுத்தடுத்து வந்த இந்திய அரசாங்கங்களின் கீழ் இந்திய நிர்வாகத்திலுள்ள காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள பலமான அரை-மில்லியன் பாதுகாப்பு படைகளால் காஷ்மீர் மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள துஷ்பிரயோகம் மற்றும் குற்றங்கள் ஒருபுறம் இருக்கட்டும்; ஜம்மு மற்றும் காஷ்மீரில் பெருந்திரளான மக்களின் இந்திய அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் தற்போதைய அலையில் பிஜேபி அரசாங்கத்தின் மூர்க்கமான ஒடுக்குமுறையைக் கூட சிபிஎம் அதன் அறிக்கையில் எங்கேயுமே குறிப்பிடவில்லை.
அதேபோல, சீனா பாகிஸ்தான் பொருளாதார பாலம் மீது இந்தியாவின் எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியமை; பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு அரசாக பாகிஸ்தானை முத்திரைக் குத்துவதற்கான ஒரு சர்வதேச பிரச்சாரத்தை தொடங்கியமை; மற்றும் பலுசிஸ்தானில் பாகிஸ்தானின் மனித உரிமைமீறல்களைச் சாதகமாக்கி மற்றும் பாகிஸ்தானைத் தூண்டாடுவதற்கு அது அழுத்தமளிக்குமென சமிக்ஞை செய்ததன் மூலமாக இஸ்லாமாபாத்திற்கு எதிரான பலூச்சி இன-தேசியவாத பிரிவினைவாத கிளர்ச்சிக்கு முட்டுக்கொடுத்தமை ஆகியவை உட்பட, ஊரி தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்னரே பாகிஸ்தானுக்கு எதிராக பிஜேபி அரசாங்கம் எடுத்திருந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைக் குறித்தும் சிபிஎம் இன் மத்தியக் குழு அறிக்கை எதுவும் குறிப்பிடவில்லை.
பாகிஸ்தான் உடனான பதட்டங்களை தீவிரப்படுத்துவதில், பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது பிஜேபி அரசாங்கமும் பாகிஸ்தான் மற்றும் சீனாவை பலவீனப்படுத்துவதென்ற இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நீண்டகால நோக்கங்களைப் பின்தொடர்கின்றன, அத்துடன் இந்திய வசமிருக்கும் காஷ்மீரில் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான பெருதிரளான மக்களின் போராட்டங்களில் அது நடத்திய ஒடுக்குமுறையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் முயல்கின்றன.
சிபிஎம், பாகிஸ்தானுக்கு எதிராக "இராஜாங்க ரீதியிலான தாக்குதலை" அறிவுறுத்துகிறது
ஸ்ராலினிஸ்டுகள் அவர்களது ஆங்கில-மொழி வாரயிதழ் People’s Democracy இன் (மக்களின் ஜனநாயகம்) செப்டம்பர் 25 பதிப்பில் பிரசுரித்த ஒரு தலையங்கத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான பிஜேபி அரசாங்கத்தின் பிரச்சாரத்தை நியாயப்படுத்துவதைத் தொடர்ந்தன.
“ஊரி தாக்குதலுக்குப் பின்னர், என்ன?” என்று தலைப்பிட்ட அந்த தலையங்கம், “பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு இராஜாங்கரீதியிலான தாக்குதலை" தொடுக்க மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி இந்தியாவின் இராணுவ படைகளை பலப்படுத்த பிஜேபி அரசாங்கத்திற்கு வெளிப்படையாக அழைப்புவிடுத்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவை அரங்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக குற்றஞ்சாட்டுவதற்கு ஒரு நாள் முன்னதாக, People’s Democracy அறிவிக்கையில், “பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவும் பிரச்சினையை சர்வதேச அரங்கில் கொண்டு வர, அங்கே பன்முகப்பட்ட இராஜாங்க மற்றும் நீடித்த அரசியல் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்,” என்று அறிவித்தது.
அதேபோல, அத்தலையங்கம் "ஜிஹாதி தற்கொலைப் படைப்பிரிவுகள் ஊடுருவுவதால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தலை கையாள… இன்னும் பரந்த நடவடிக்கைகளுக்கும்" மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் "பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதற்கும்" அழைப்புவிடுத்து, இராணுவத்தை அரசாங்கம் ஒன்றுதிரட்டுவதற்கு ஆதரவையும் மூடிமறைப்பையும் வழங்கியது.
மிக முக்கியமாக, பாகிஸ்தானுக்கு எதிராக அத்தலையங்கம் ஒரு இராஜாங்கரீதியிலான "தாக்குதலை" பாதுகாத்த அதேவேளையில், இஸ்லாமாபாத்திற்கு எதிரான அரசாங்கத்தின் இராஜாங்க தாக்குதலில் பல முக்கிய மற்றும் பெரிதும் ஆத்திரமூட்டும் கூறுபாடுகளைக் குறித்து அது ஒன்றுமே கூறவில்லை—அதாவது பலுசிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்திற்கு அது முட்டுக்கொடுப்பதை குறித்தோ மற்றும் சிந்து நதி நீர் உடன்படிக்கையைக் கைவிடுவதன் மூலமாக பாகிஸ்தானைப் பொருளாதாரரீதியில் முடமாக்குவதற்கான அதன் அச்சுறுத்தலைக் குறித்தோ ஒன்றுமே கூறவில்லை.
இத்தகைய கூறுபாடுகள், ஒரு "இராஜாங்கரீதியிலான தாக்குதல்" மற்றும் இராணுவ நடவடிக்கைக்கு இடையிலான வித்தியாசம், வெறுமனே தந்திரோபாயம் சம்பந்தப்பட்டது மட்டுமே என்பதையும்; அவ்விரு முதலாளித்துவ அரசாங்கங்களின் கீழ் ஆக்ரோஷமான வடிவங்களாகும் என்பதையுமே எடுத்துக்காட்டுகின்றன. அனைத்திற்கும் மேலாக, இராணுவ நடவடிக்கையானது ஏறத்தாழ விதிவிலக்கின்றி "இராஜாங்க தாக்குதல்கள்" மூலமாக தயாரிப்பு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன. முந்தையதை ஆதரிப்பதென்பது, ஆளும் வர்க்கத்திற்கு உதவ மக்கள் ஆதரவை அணிதிரட்டுவதாகும் அல்லது இராணுவ ஆக்ரோஷம் மற்றும் போருக்கான அடித்தளத்தை அமைப்பதாகும்.
“ஊரி தாக்குதலுக்குப் பின்னர், என்ன?” என்ற அதன் தலையங்கத்தில், சிபிஎம் குறிப்பிடுகையில், “சகல இராணுவ வாய்ப்புகளும் தீவிர மட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன அல்லது அவ்விரு அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு மோதலைத் தீவிரப்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றன" என்பதால், இந்து வலது "ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் குழாமை" புறக்கணித்து, “மூலோபாய கட்டுப்பாட்டு" கொள்கையை தொடருமாறு மோடி மற்றும் அவர் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியது.
ஆனால், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் ஓர் ஆலோசகராக, வக்காலத்து வாங்குபவராக மற்றும் ஒரு சேவகராகவும் மற்றும் இந்திய முதலாளித்துவ அரசின் பொறுப்பற்ற பாதுகாவலராகவும் சிபிஎம் இன் பாத்திரத்தை எடுத்துக்காட்டும் ஒரு நடவடிக்கையில், இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்கின்ற அதேவேளையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் இராஜாங்கரீதியிலான ஆக்ரோஷத்தை ஆதரிக்கும் ஸ்ராலினிசவாதிகளது கொள்கை, “மூலோபாய கட்டுப்பாடு" தளைகள் அறுத்தெறியப்பட்டதாக பிஜேபி அரசாங்கம் அறிவித்ததும் கைவிடப்பட்டன.
சிபிஎம் தலையங்கம் பிரசுரமாகி நான்கு நாட்களுக்குப் பின்னர், அரசாங்கம் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் இராணுவ தாக்குதல்களுக்கு ஒப்புதல் வழங்கி, இந்திய ஸ்தாபகத்தின் எஞ்சியவற்றுடன் யெச்சூரி இணைந்தார்.
சிபிஎம்: ஒரு அரச கட்சி
இந்திய முதலாளித்துவ வர்க்கம் காஷ்மீரில் அதன் ஆட்சியை, பாகிஸ்தான் உடனான அதன் மூலோபாய விரோதத்தை மற்றும் அதன் வல்லரசாகும் அபிலாஷைகளை பலவந்தமாக பேணுவதில் ஸ்ராலினிசவாதிகள் தசாப்தங்களாக இந்திய முதலாளித்துவ வர்க்கத்தை ஆதரித்துள்ளனர். அவர்கள் இந்த ஆதரவை, 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் தெற்காசியாவை அதிரச் செய்த ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டத்தை இந்திய அரசு தன்னகத்தே கொண்டிருந்தது என்ற வாதங்களைக் கொண்டு நியாயப்படுத்துகின்றன.
உண்மையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மற்றும் தெற்காசியாவின் நஞ்சூட்டப்பட்ட வகுப்புவாத தேசிய-அரசு அமைப்புமுறையானது தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் கரங்களில் ஜனநாயகப் புரட்சி ஒடுக்கப்பட்டதன் விளைபொருளாகும். தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன சக்தியாக எழுந்ததைக் கண்டு பீதியுற்று, எம். கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு தலைமையின் கீழ், இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு ஐக்கியப்பட்ட, ஜனநாயக, மதசார்பற்ற இந்தியா என்ற அவர்களின் சொந்த வேலைத்திட்டத்தை காட்டிக்கொடுத்ததுடன், அக்கண்டத்தை பிரிவினைக்கு உட்படுத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் முஸ்லீம் லீக்குடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு, காலனித்துவ அரசு எந்திரத்தை "சுதந்திர" முதலாளித்துவ ஆட்சிக்கான அடித்தளமாக ஆக்கிக் கொண்டது.
பொருளாதார தர்க்கத்தை மீறிய பிரிவினை, அப்பிராந்தியம் மீது ஏகாதிபத்திய மேலாதிக்கம் தொடர்வதற்கு முன்னிலை அடித்தளமாக சேவையாற்றி உள்ளது, மற்றும் வகுப்புவாதமூட்டப்பட்ட புவிமூலோபாய விரோதத்தை அதிகரித்துள்ளது, இது கூறயியலாதளவில் ஆதாரவளங்களை மற்றும் உயிர்களை வீணடிப்பதில் போய் முடிந்துள்ளதுடன், அவ்விரு பிற்போக்குத்தனமான ஆளும் உயரடுக்குகளும் சமூக அதிருப்தியைத் தணிக்கவும் மற்றும் வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை ஊதிவிடவும் அதை பயன்படுத்திக் கொண்டுள்ளன.
சீனாவை தனிமைப்படுத்தி, சுற்றி வளைத்து அதற்கு எதிரான போருக்குத் தயாரிப்பு செய்வதில் இந்தியாவை ஒரு முன்னிலை நாடாக மாற்றுவதற்கான வாஷிங்டனின் ஆக்ரோஷமான நகர்வுகளே, கடந்த தசாப்தத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டங்களை அதிகரிப்பதில் ஒரு தீர்க்கமான காரணியாக இருந்துள்ளது. இந்தியா மீது மூலோபாய உதவிகளை பொழிந்த அதேவேளையில், வாஷிங்டன் பாகிஸ்தான் உடனான அதன் உறவுகளைக் குறைத்துக் கொண்டுள்ளது, இது புது டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே முன்பில்லாத வகையில் ஒரு பரந்த இராணுவ-மூலோபாய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு விடையிறுப்பாக, பாகிஸ்தான் சீனாவுடனான அதன் நீண்டகால மூலோபாய பங்காண்மையைப் பலப்படுத்த முனைந்துள்ளதால், இது மேற்கொண்டும் வாஷிங்டன் மற்றும் புது டெல்லி இரண்டுக்கும் இடையிலான உறவுகளை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்க ஆதரவில் மிதக்கும் புது டெல்லி, மோடியின் கீழ், குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக தெற்காசியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய முதலாளித்துவத்தின் நலன்களை இன்னும் ஆக்ரோஷமாக வலியுறுத்த அதற்கு பலம் இருப்பதாகவும் மற்றும் அதன் தரப்பில் சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும் கணக்கிடுகிறது.
அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்களை வழமையாக பயன்படுத்த இந்திய இராணுவ தளங்களைத் திறந்துவிடுவதென்ற பிஜேபி அரசாங்கத்தின் சமீபத்திய முடிவுக்கு ஒரு எதிர்ப்பாளராக சிபிஎம் காட்டியுள்ளது.
எவ்வாறிருப்பினும் வாஷிங்டன் உடன் நெருக்கமான உறவுகளைக் கோரும் அடுத்தடுத்து வந்த இந்திய அரசாங்கங்களை அது ஆதரித்ததன் மூலமாக, இந்திய முதலாளித்துவ வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு "உலகளாவிய மூலோபாய பங்காண்மையைப்" பின்தொடர்வதை சிபிஎம் ஆதரித்துள்ளது மற்றும் ஒத்துழைத்துள்ளது. மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வாஷிங்டன் உடன் "மூலோபாய பங்காண்மையை" தொடங்கி, அதற்கு ஆதரவு அடித்தளத்தை அமைக்கும் படைத்துறைசாரா அணுசக்தி உடன்படிக்கையை பேரம்பேசிய நிலையில், சிபிஎம் மற்றும் அதன் இடது முன்னணி அந்த அரசாங்கத்திற்கு நான்காண்டுகள் முட்டுக்கொடுத்தது.
இராணுவ தள உடன்படிக்கை உட்பட சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் உந்துதலுக்குள் இந்தியாவை ஒருங்கிணைப்பதை பகிரங்கமாக ஆதரிக்கும் எல்லா விதமான வலதுசாரி பிராந்திய மற்றும் ஜாதிய கட்சிகளுடனான கூட்டணிகளை பாதுகாப்பதை இன்று ஸ்ராலினிஸ்டுகள் தொடர்கிறார்கள்.
அனைத்திற்கும் மேலாக, இந்தோ-அமெரிக்க இராணுவ கூட்டணிக்கு ஸ்ராலினிஸ்டுகளின் எதிர்ப்பானது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து அல்ல, "தேசிய நலன்களை" மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் சூழ்ச்சி செய்வதற்கான சுதந்திரத்தை எவ்வாறு சிறப்பாக தாங்கி பிடிப்பது என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டை தக்க வைப்பதில், இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லா இந்திய அரசாங்கங்களும் பின்தொடர்ந்துள்ள இந்தியாவின் இராணுவ படைகளது பெரியளவிலான விரிவாக்கம் மற்றும் நவீனமயப்படுத்தலை சிபிஎம் ஆதரித்துள்ளது.
பிஜேபி மற்றும் ஆளும் உயரடுக்கின் தேசவெறி பிரச்சாரத்தில் அணிசேர்ந்ததன் மூலமாக, ஸ்ராலினிஸ்டுகள் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சூறையாடும் மூலோபாய நலன்களை முன்னெடுப்பதில் அதற்கு உதவி வருகின்றனர். சாத்தியமான அளவிற்கு மக்களை சீரழிக்கும் ஒரு போருக்குள் அடைப்பது, அப்பிராந்தியத்திலும் மற்றும் உலகளவிலும் தொழிலாள வர்க்கம் மற்றும் உழைப்பாளிகள் முகங்கொடுக்கும் மரணகதியிலான அபாயங்களை மூடிமறைக்க சேவையாற்றுவது ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான பிஜேபி அரசாங்கத்தின் ஆக்ரோஷமான நகர்வுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானை அபாயகரமாக அணுஆயுத நாடுகளுக்கு இடையிலான முன்னொருபோதும் இல்லாத போராக இருக்கும் ஒன்று வெடிப்பதற்கு நெருக்கத்தில் கொண்டு வந்துள்ளது.
அனைத்திற்கும் மேலாக, அதுபோன்றவொரு போர் ஏனைய வல்லரசுகளையும் வேகமாக உள்ள இழுத்து வரும். அமெரிக்கா அதன் சீன-விரோத உந்துதலில் இந்தியாவை அணிதிரட்டுவதன் விளைவாக, இந்தோ-பாகிஸ்தானிய மோதலும் மற்றும் அமெரிக்க-சீன மோதலும் ஒன்றோடொன்று பிணைந்துள்ளதுடன், ஒவ்வொன்றும் கொந்தளிப்பும் மற்றும் பாரிய புதிய வெடிப்பார்ந்த தன்மையும் அவற்றில் சேர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு, தென் சீனக் கடல், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஏனைய உலகளாவிய வெடிப்பு புள்ளிகளைப் போலவே, மூன்றாம் உலக போருக்கான விதைகள் இத்தகைய மோதல்களில் வளர்ந்து வருகின்றன.
தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான தலையீட்டின் மூலமாக மட்டுமே அத்தகையவொரு பேரழிவை தடுக்க முடியும் மற்றும் அதுபோன்றவொரு தலையீட்டை சர்வதேச சோசலிச கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட தொழிலாள வர்க்க தலைமையிலான போர்-எதிர்ப்பு இயக்கத்தின் மூலமாக மட்டுமே தயாரிப்பு செய்ய முடியும். இந்த போராட்டத்தில் ஒரு முக்கிய கூறுபாடாக இருப்பது முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசாங்கங்கள் மற்றும் கட்சிகளுக்கு எதிராக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட, தெற்காசிய தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்தை ஏற்படுத்துவதாகும். உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமே இந்த முன்னோக்கிற்காக போராடுகிறது. ICFI இல் இணைவதன் மூலமாக மற்றும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அதன் பிரிவுகளாக புதிய புரட்சிகர தொழிலாள வர்க்க கட்சிகளைக் கட்டமைக்க போராடுவதன் மூலமாக, போருக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச சிந்தனை கொண்ட புத்திஜீவிகளை வலியுறுத்துகிறோம்.