Print Version|Feedback
India’s military calls for more strikes on Pakistan
இந்திய இராணுவம் பாகிஸ்தான் மீது அதிக தாக்குதல்களை நடத்த அழைப்பு விடுக்கிறது
By Keith Jones
6 October 2016
அசாத் காஷ்மீர் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சிறப்பு படைகளது கடந்த வார தாக்குதல்களை அடுத்து, பாகிஸ்தான் மீது இராணுவ அழுத்தத்தை இன்னும் அதிகரிக்குமாறு இந்திய உயரடுக்கின் நிறைய பிரிவுகள் அந்நாட்டின் தீவிர வலதுசாரி இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.
இந்த “துல்லிய தாக்குதல்கள்", நான்கு தசாப்தங்களுக்கும் அதிக காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்தியா பகிரங்கமாக ஒப்புகொண்ட பாகிஸ்தானுக்குள் நடத்தப்பட்ட முதல் இராணுவ தாக்குதல்கள் ஆகும்.
இவை தெற்காசியாவின் இந்த எதிர்விரோத அணுஆயுத நாடுகளை அபாயகரமாக அண்மித்து போர் உச்சத்திற்கு தள்ளியுள்ளன. ஆனால் இந்தியாவின் அரசியல் ஸ்தாபகமும் மற்றும் பெருநிறுவன ஊடகங்களும், இவை இந்தியாவின் அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் இராணுவ துணிச்சலை நிரூபித்துள்ளதாகவும் மற்றும் உலக புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு, அனைத்திற்கும் மேலாக வாஷிங்டனுடனான இந்தியாவின் அதிகரித்துவரும் இராணுவ-பாதுகாப்பு பங்காண்மைக்கு வெற்றிகரமாக முட்டுக்கொடுக்கும் அதன் ஆற்றலை மெய்ப்பித்திருப்பதாகவும் புகழ்ந்துள்ளன.
செவ்வாயன்று எகானமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, முஸ்லீம் பெரும்பான்மை காஷ்மீர் படுகையில் இந்திய ஆட்சியை எதிர்க்கும், பாகிஸ்தானை மையப்படுத்திய இஸ்லாமிய கிளர்ச்சி குழுக்களை செயலிழக்கச் செய்வதற்காக —அதாவது பலவீனப்படுத்தி அழிப்பதற்காக— அத்தாக்குதல்களுக்கு தொடர்ச்சியாக ஒருமித்த அனேக இராணுவ நடவடிக்கை அவசியப்படுவதாக மூத்த இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
“நாம் ஒரு நீடித்த நடவடிக்கையை பார்க்க வேண்டியுள்ளது,” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு "உயர்மட்ட அதிகாரி" தெரிவித்தார். “பயங்கரவாத வலையமைப்பு பின்னடைவைச் சந்தித்துள்ளது என்றாலும் நிஜமாகவே எதையாவது சாதிப்பதற்கு, நாம் நடுத்தர கால திட்டம் ஒன்றை, ஆறு மாதகால நடவடிக்கை ஒன்றை காண வேண்டியுள்ளது. ஒரேயொரு நடவடிக்கை அவர்களை அதைரியப்படுத்தி விடாது,” என்றார்.
டைம்ஸ் க்கு கூறிய மற்றொரு அதிகாரி, “இப்போது நமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும் தயாராக இருக்கிறார்கள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீரை பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் மீது, எதிர்தரப்பை விட நாம் அதிக பலமாக இருக்கிறோம்,” என்றார்.
திரைக்குப் பின்னால் இந்திய இராணுவத்தின் தீவிரப்படுத்துவதற்கான அழுத்தத்திற்கு இணையாக, பெருநிறுவன ஊடகங்களும் இந்தியாவின் "மூலோபாய கட்டுப்பாடு" என்பதை முடிவுக்குக் கொண்டு வந்ததைக் கொண்டாடும் தலையங்கங்கள் மற்றும் கருத்துரைகளைப் பொழிந்து கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானுக்குள் சிறப்பு படை நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்துவது, விரைவிலேயே முழு அளவிலான போராக வடிவெடுக்கக்கூடிய தாக்குதல் மற்றும் எதிர்தாக்குதலின் ஓர் இயக்கவியலை தூண்டிவிடுமென அஞ்சி புது டெல்லி அக்கொள்கையின் கீழ் அதை தவிர்த்திருந்தது.
பிஜேபி எதிர்கட்சியாக இருந்தபோது அக்கட்சி உள்ளடங்கலாக, மிகவும் போர்வெறி கொண்ட இந்திய ஆளும் உயரடுக்கின் கன்னைகள், “மூலோபாய கட்டுப்பாடு" இந்தியாவை "பலவீனமாக" பார்க்க செய்துவிட்டதாகவும் மற்றும் அதன் பரம-விரோதியான பாகிஸ்தானுடன் நன்முயற்சி செய்ய விட்டு வைத்துள்ளதாகவும் நீண்டகாலமாக வாதிட்டன.
இந்தியாவின் உயரதிகாரிகளைப் போலவே, ஊடகங்களில் பெரும்பாலானவை இப்போது இந்தியா இராணுவரீதியில் பாகிஸ்தானை தொடர்ந்து தாக்க வேண்டுமென வாதிட்டு வருகின்றன.
இந்தியாவின் நன்கறியப்பட்ட புவிசார் அரசியல் மூலோபாயவாதிகளில் ஒருவரான சி. ராஜா மோகன், எல்லை தாண்டிய தாக்குதல்கள் "அமைப்புமயப்படுத்தப்பட" வேண்டுமென அழைப்புவிடுத்துள்ளார். “பெட்டியை உடைத்துக் கொண்டு வெளிவருவது" (Breaking Out of the Box) என்று தலைப்பிட்டு திங்களன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் மோகன் எழுதினார், “இந்தியாவின் 'எதையும் செய்வதில்லை' என்ற மூலோபாயத்தை முடிவுக் கொண்டு வந்ததால், கட்டவிழ உள்ள தவிர்க்கவியலாத தீவிரப்பாட்டின் மீது இப்போது மோடி பலமான கட்டுப்பாட்டை பேண வேண்டும், எல்லை தாண்டிய இராணுவ தாக்குதல்கள், எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒரு வழமையான விடையிறுப்பாக மாறுவதை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் (பாகிஸ்தானிய இராணுவத்தின்) அரசியல் தீங்கிழைப்பின் மீது இடைவிடாத அழுத்தத்தை நீடித்து வைத்திருக்க வேண்டும்,” என்றார்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிய தாக்குதலை வரவேற்ற ஒரு கட்டுரையில், இந்தியாவின் முன்னணி சிந்தனை குழாம்களில் ஒன்றான Observer Foundation இன் அசோக் மலிக் வாதிடுகையில், இந்தியா பாகிஸ்தானுடன் அதன் "நீண்ட போரை" மேற்கொண்டு எடுத்துச் செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றார். “அடைக்கப்பட்ட பூதம் வெளியில் வந்துவிட்டது" என்று அறிவித்த மலிக், “அது திரும்ப உள்ளே போகாது. உண்மையில், உடனடியாகவோ அல்லது பின்னரோ, அந்த பூதம் இன்னும் முன்னேறி பயணிக்க முயலும்,” என்றார்.
“செயல்படாத ஒரு பாதுகாப்பு கொள்கையை இனியும் இந்தியா கொண்டிருக்க முடியாது" என்ற தலையங்கம் ஒன்றை பிரசுரித்த ஹிந்துஸ்தான் டைம்ஸ், இராணுவ செலவினங்களை அதிகரிக்க அழைப்புவிடுத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒரு ஆக்ரோஷமான கொள்கையை பின்தொடர வேண்டுமானால், சீனாவை எதிர்த்து நிற்க வேண்டுமானால், மற்றும் இந்திய பெருங்கடல் சக்தியாக ஆகும் அதன் அபிலாஷைகளைப் பின்தொடர வேண்டுமானால், அது இன்னும் அதிக அபாயகரமான ஆயுதங்களைப் பெற வேண்டியிருக்கிறது என்று அந்த தலையங்கம் வாதிடுகிறது. இதற்காக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது 2.5 சதவீதமாக உள்ள அதன் இராணுவ செலவினங்களை கூடுதலாக குறிப்பிடத்தக்களவிற்கு உயர்த்த வேண்டுமென அது வாதிடுகிறது.
குறிப்பாக தலையங்கத்திற்கு அடுத்த பக்க போர்வெறியூட்டும் கட்டுரை ஒன்றில், இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் பத்திரிகையாளர்களுக்கான முன்னாள் செயலர் சன்ஜய் பாரூவும், பாகிஸ்தான் உடனான அதன் நெருக்கமான உறவுகளுக்காக பெய்ஜிங்கை விளாசி, சீனாவின் பிரச்சினையை உயர்த்தினார். இஸ்லாமாபாத் மற்றும் பியொங்யாங் இரண்டுக்கும் சீனா ஒரு கூட்டாளி என்பதைக் குறிப்பிட்டு, பாகிஸ்தானை வட கொரியாவுடன் சமப்படுத்திய பாரூ, ஜப்பான் மற்றும் தென் கொரியா வட கொரியாவை கையாளும் அதே விதத்தில், அதாவது ஒரு போர்வெறி கொண்ட நாடாக, பாகிஸ்தானை இந்தியா கையாள அழைப்புவிடுத்தார். ஜப்பான் மற்றும் தென் கொரியாவைப் போலவே இந்தியாவும் அமெரிக்காவின் உத்தியோகபூர்வ இராணுவ கூட்டாளியாக ஆக வேண்டும் என்பது பாரூ இன் வாதத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் மறைமுகமாக உள்ளார்ந்து இருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான அரசாங்கத்தின் ஆக்ரோஷமான நிலைப்பாட்டுக்கு, வணிக தலைவர்களும் அவர்களின் ஆதரவை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர். தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான இன்போசிஸ் இன் முன்னாள் உயர் செயலதிகாரியும் மற்றும் ஒரு நிதி நிறுவன மேலாளருமான Mohandas Pai, “தாக்குதல்களை கொண்டு, பாகிஸ்தானை கையாள்வதில் மோடி இந்தியாவிற்கு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளார்" என்ற தலைப்பின் கீழ், அரசாங்கம் பாகிஸ்தான் உடனான மோதலை துரிதமாக தீவிரப்படுத்த தயாராக இருக்குமாறு வலியுறுத்தி உள்ளார். NDTV க்கான ஒரு கட்டுரையில் Pai எழுதுகையில், “எல்லையைப் பொறுத்த வரையில் இந்த தாக்குதல் அதிகார சமநிலையை மாற்றுகிறது. … பதட்டங்கள் அதிகரித்தால் மற்றும் எல்லை தாண்டி துப்பாக்கி சூடு நடத்தும் அதன் வழமையான தந்திரோபாயங்களிலேயே பாகிஸ்தான் நிலைத்திருந்தால், இந்தியா 10 மடங்கு அதிகமாக பதிலடி கொடுத்து, இந்த மாதிரியான வழமையான தந்திரோபாயங்கள் எதையும் இனி அது ஏற்றுக் கொள்ளாது என்பதையும், ஒரு அச்சுறுத்தலைக் கையாள்வதற்கு ஒரே வழி எதிர்த்து நின்று இன்னும் பலமாக திருப்பி தாக்குவது தான் என்பதால் அது திருப்பி கொடுக்கும் என்பதையும் இந்தியா எடுத்துக்காட்ட வேண்டும்,” என்றார்.
கேள்விக்கிடமின்றி, இந்தியாவின் உயரடுக்கு, வாஷிங்டனிடம் இருந்து வரும் சமிக்ஞைகளால் அதன் ஆக்ரோஷமான நிலைப்பாட்டில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வார தாக்குதல் பாகிஸ்தானிய இறையாண்மை மீதான வெளிப்படையான மீறல் என்ற போதிலும், ஒபாமா நிர்வாகம் அதன் மீது எந்தவித கருத்துக்களும் கூற உறுதியாக மறுத்துள்ளது. அதற்கு மாறாக அவர்கள் தீவிரப்பாட்டை தவிர்க்க அரசாங்கங்களுக்கு வலியுறுத்தி உள்ளனர், அதேவேளையில் இஸ்லாமாபாத் அதன் எல்லையில் இருந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்க வேண்டுமென்ற புது டெல்லியின் கோரிக்கைகளை எதிரொலிக்கின்றனர்.
இதற்கிடையே ஒபாமா மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகங்களின் முன்னாள் அதிகாரிகளின் ஒரு கூட்டம் தங்குதடையின்றி இந்திய இராணுவ தாக்குதல்களையும் மற்றும் அத்தாக்குதல்களை நியாயப்படுத்த புது டெல்லி பயன்படுத்துகின்ற பிற்போக்குத்தனமான "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" சொல்லாடல்களையும் ஆதரித்துள்ளன.
பாகிஸ்தானால் மற்றும் குறிப்பாக காஷ்மீரில் அதன் இராணுவ-மூலோபாய நலன்களை முன்னெடுக்க இஸ்லாமிய குழுக்களைப் பயன்படுத்தும் அதன் தந்திரத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி நாடாக, இந்திய ஆளும் உயரடுக்கு, இந்தியாவைச் சித்தரிக்கிறது.
இந்தியா-வசமிருக்கும் காஷ்மீரில் உள்ள ஊரி இராணுவ தளம் மீதான செப்டம்பர் 18 தாக்குதல் மீது எந்தவித முன்கூட்டிய விசாரணையும் இன்றி புது டெல்லி இஸ்லாமாபாத்தை பொறுப்பாக்குகின்ற போதினும், பாகிஸ்தான் மீதான அதன் தாக்குதலுக்கு அதையே நியாயப்பாடாக காட்டுகிறது. மிக அடிப்படையாக, சீனா பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் குறித்த அதன் பலமாக எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தானை துண்டாட அச்சுறுத்தும் விதத்தில் பலுசிஸ்தான் பிரிவினைவாத கிளர்ச்சிகளை அது ஊக்குவிப்பது உட்பட பிஜேபி அரசாங்கத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு எதிராக புது டெல்லி எடுத்துள்ள நீண்ட தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை இந்திய உயரடுக்கின் சுய-சேவைக்குரிய சொல்லாடல்கள் புறக்கணித்து விடுகின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல், 1947 வகுப்புவாத பிரிவினையில் முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் பிரதான இந்து இந்தியா என்று அக்கண்டம் பிரிவினை செய்யப்பட்டதில் வேரூன்றி உள்ளது—இக்குற்றம் புதிதாக பிறந்த இந்திய மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கங்களால் மற்றும் அவற்றின் பிரதான கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் கருத்தொன்றி நடத்தப்பட்டது.
பொருளாதார தர்க்கத்தை மீறிய பிரிவினை, தெற்காசிய அரசு கட்டமைப்புகளில் பொதிந்திருந்த வகுப்புவாதம் ஆகியவை அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு உதவுவதுடன், பாரிய வளங்களைச் சீரழித்துள்ள நான்கு அறிவிக்கப்பட்ட போர்கள் மற்றும் எண்ணற்ற போர் நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்லும் ஒரு பிற்போக்குத்தனமான புவிசார் அரசியல் விரோதத்தையும் வளர்த்துள்ளது.
சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் புது டெல்லியை ஒரு "முன்னணி நாடாக" ஆக்குவதற்கான அமெரிக்க உந்துதலே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதட்டங்கள் அதிகரிப்பதில் ஒரு முக்கிய காரணியாகும். அதிநவீன அமெரிக்க ஆயுதங்களை அது அணுகுவதற்கு அனுமதி அளித்தமை, இந்நடவடிக்கை அதிகார சமநிலையை மாற்றி, அதேவேளையில் அவ்விதத்தில் இந்திய ஆக்ரோஷத்தை ஊக்குவித்து தெற்காசியாவில் ஆயுத போட்டிக்கு எரியூட்டி வருவது மீதான இஸ்லாமாபாத்தின் அதிகரித்த அச்சுறுத்தலான எச்சரிக்கைகளை மொத்தமாக நிராகரித்தமை உட்பட, ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் வாஷிங்டன் இந்தியாவிற்கு மூலோபாய அன்பளிப்புகளைப் பொழிந்து வந்துள்ளது.
இரண்டரை வருட பழமையான நரேந்திர மோடியின் பிஜேபி அரசாங்கத்தின் கீழ், இந்தியா, தெற்காசியாவில் மற்றும் இந்திய பெருகடலில் மேலாதிக்க சக்தியாக மாறும் அதன் சொந்த அபிலாஷைகளை பின்தொடர அமெரிக்க ஆதரவை அது பெற முடியும் என்று கணக்கிட்டு, அமெரிக்காவினது சீன-விரோத "முன்னிலை"க்குள் படிப்படியாக அதன் ஒருங்கிணைப்பை விரிவாக்கி உள்ளது.
இவ்விதத்தில் இந்தியா பாகிஸ்தானை "பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசு" என்று கண்டிப்பதுடன், அதேநேரத்தில் அதன் சொந்த சுயநலன்களைப் பின்தொடர அது உலகின் மிக கேடுவிளைவிக்கும் சக்தியுடன், விருப்பம் போல் சர்வதேச சட்டத்தை ஒதுக்கிவிடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஓர் இராணுவ மூலோபாய கூட்டணியை பலப்படுத்துகிறது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் வாஷிங்டன் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் ஒட்டுமொத்த சமூகங்களையும் அழித்து ஒன்று மாற்றி ஒன்றாக சட்டவிரோத போரை நடத்தியுள்ளது மற்றும் கொசோவொ, லிபியா மற்றும் சிரியா உட்பட அதன் "ஆட்சி மாற்றத்திற்கான" போர்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை அதன் பினாமிகளாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உள்ளது.