Print Version|Feedback
India and Pakistan teeter on the brink of war
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் விளிம்பில் உள்ளன
By Keith Jones
3 October 2016
பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீருக்குள் இந்தியா "அதிநுட்பமான" இராணுவ தாக்குதல்களை நடத்தி நான்கு நாட்களுக்குப் பின்னர், தெற்காசியாவின் எதிர்விரோத அணுஆயுதமேந்திய இந்நாடுகள் தொடர்ந்து போர் விளிம்பில் உள்ளன.
பாகிஸ்தானுக்குள் இந்தியா அதன் துருப்புகள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பி, “இரட்டை இலக்க" உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்குப் பின்னரில் இருந்து, ஒவ்வொரு இரவும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய வசமுள்ள காஷ்மீரைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு இடையே, மணிக்கணக்கில் பீரங்கி குண்டுகளும் துப்பாக்கி சண்டைகளும் நடந்து வருகின்றன.
காஷ்மீர் படுகையின் பாராமுல்லா இராணுவ முகாம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குறைந்தபட்சம் ஒரு இந்திய சிப்பாய் கொல்லப்பட்டு, ஒருவர் காயமடைந்ததாகவும் ஞாயிறன்று பின்மாலை இந்தியா அறிவித்தது.
மிக சமீபத்தில் ஜம்மு & காஷ்மீரின் ஊரி இராணுவ தளம் மீது இந்திய-விரோத இஸ்லாமிய போராளிகள் நடத்திய செப்டம்பர் 18 தாக்குதல் உட்பட, இந்தியா அதன் மண்ணில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மீண்டும் மீண்டும் பாகிஸ்தானை பொறுப்பாக்கி உள்ளது.
பாகிஸ்தானிய இராணுவ எதிர்தாக்குதல் நடத்தப்படலாமென அனுமானித்து, அல்லது அவர்களது சொந்த போர் தயாரிப்புகளுக்கு அனுகூலமாக, இந்திய அதிகாரிகள் இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஜம்மு & காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வாழும் பத்து நூறாயிரக் கணக்கான மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளனர். இந்திய பத்திரிகை செய்திகளின்படி, எல்லை அருகிலுள்ள படைப்பிரிவுகளது சிப்பாய்கள் அவர்களது குடும்பங்களை சொந்த ஊருக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்திய இராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங், இராணுவத்தின் "நடவடிக்கைக்கான தயார்நிலையை" மீளாய்வு செய்ய சனியன்று ஜம்மு & காஷ்மீரின் வடக்கு கட்டளையக தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், "எந்தவொரு அசம்பாவிதத்திற்கும் தயாராக" இருக்குமாறு தரைப்படை அதன் துருப்புகளுக்கு உத்தரவிட்டது.
புதனன்று இரவு நடத்தப்பட்ட தண்டிக்கும் வகையிலான குண்டுவீச்சு நடவடிக்கைகள் தான், நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியதாக இந்தியா ஒப்புக்கொண்ட முதல் இராணுவ நடவடிக்கையாகும்.
புது டெல்லி "மூலோபாய கட்டுப்பாட்டு" தளைகள் எனப்படுவதைத் துடைதெறிந்து, பாகிஸ்தானிய "அணுஆயுத அச்சுறுத்தலை" வெற்றிகரமாக ஒன்றுமில்லாமல் செய்து, ஒரு எழுச்சி பெற்று வரும் வல்லரசாக இந்தியா அதன் துணிச்சலைக் காட்டியிருப்பதாக, இந்தியாவின் அரசியல் உயரடுக்கும் மற்றும் ஊடகங்களும், அவற்றின் பரபரப்புடன், பெருமை பீற்றி வருகின்றன.
இந்து வானரக்-கடவுளான அனுமாருக்கு அவர் பலத்தை நினைவூட்டியதும், அவர் ஒரே தாவலில் கடலைத் தாண்டினார் என்பதுடன் இந்திய இராணுவத்தை ஒப்பிட்டு, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுகையில், “நமது படைகள் என்ன செய்ய கூடியவை என்ற புரிதலை, இந்த நுட்பமான தாக்குதல்கள் அவற்றிற்கு வழங்கியுள்ளன,” என்றார். பாகிஸ்தான் “எவ்வாறு எதிர்வினை காட்டுவது என்று தெரியாமல்” "தடுமாறிப் போயுள்ளது,” என்றார்.
மேற்கொண்டு இராணுவ நடவடிக்கைக்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லையென இந்தியா கூறியுள்ளது. ஆனால், ஊரி தாக்குதலைக் குறிப்பிட்டு பாரிக்கர் கூறுகையில், “இதுபோன்ற சூழ்ச்சிகளைப் பாகிஸ்தான் தொடர்ந்தால், நாங்கள் மீண்டும் உரிய விதத்தில் பதிலளிப்போம்,” என்றார்.
சீனாவை மூலோபாயரீதியில் சுற்றி வளைத்து அதற்கு எதிராக போர் தயாரிப்பு செய்வதற்கான வாஷிங்டன் முனைவின் பாகமாக, அது புது டெல்லியுடன் முன்பினும் நெருக்கமான இராணுவ-பாதுகாப்பு கூட்டணியை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்தியாவின் போர் ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டையும் ஊக்குவித்து வருகிறது.
செப்டம்பர் 28-29 மாலையில் இந்தியா நடத்திய தாக்குதல்கள் சட்ட விரோதமானவை, அதிகளவில் ஆத்திரமூட்டுபவை என்பதுடன், இந்தியாவிற்குள் இஸ்லாமிய துப்பாக்கிதாரிகளின் படைப்பிரிவுகளை அனுப்ப இருந்த "பயங்கரவாத குண்டு வீசும் இடங்களை" நோக்கி அத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்ற அப்பட்டமான இட்டுக்கட்டப்பட்ட வாதத்தை நியாயப்படுத்தியதன் அடிப்படையில் அவை நடத்தப்பட்டன.
எவ்வாறிருப்பினும் வாஷிங்டன் இந்திய தாக்குதல்களுக்கு அதன் ஆதரவை சமிக்ஞை செய்துள்ளது. ஒபாமா நிர்வாக செய்தி தொடர்பாளர்கள் வேண்டுமென்றே அத்தாக்குதல்களை விமர்சிப்பதைத் தவிர்த்துள்ளனர் மற்றும் பாகிஸ்தானின் பகுதிகளைப் பயங்கரவாதிகள் "பாதுகாப்பு புகலிடமாக" பயன்படுத்துவதைத் தடுக்க அது அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியும், புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் இரண்டும் பதட்டங்களை குறைக்க வேண்டுமென வித்தியாசப்படுத்தாமல் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
28 மாதகால இந்து மேலாதிக்க பிஜேபி அரசாங்கத்தின் கீழ், பாகிஸ்தான் உடனான "விளையாட்டு விதிகளை மாற்றிய" இந்தியாவின் ஒருமித்த அழுத்தத்தைக் குறித்து அங்கே எதுவும் குறிப்பிடப்படவில்லை. எல்லையில் இராணுவம் இன்னும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்க அறிவுறுத்தப்பட்டமை, இது 2015 இல் எல்லை தாண்டிய குண்டுவீச்சுக்கு இட்டுச் சென்றுள்ளது; புது டெல்லி உரிமை கொண்டாடும் முன்னாள் பிரிட்டிஷ் சமஸ்தான மாநிலம் காஷ்மீர் வழியாக சீன பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் (CPEC) செல்கிறது என்ற அடித்தளத்தில் அதை பலமாக எதிர்ப்பது; மற்றும் பாகிஸ்தானை நடைமுறையளவில் துண்டாட அச்சுறுத்துகின்ற பலூச்சி இன-தேசியவாத கிளர்ச்சியை ஆதரிப்பது ஆகியவை அதில் உள்ளடங்கும்.
வெள்ளிக்கிழமை பேசுகையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்டர், இந்திய-அமெரிக்க இராணுவ உறவு "முன்னொருபோதும் இல்லாதளவில் நெருக்கமாக" இருப்பதாக வலியுறுத்தினார்.
இந்திய எல்லை தாண்டிய குண்டுவீச்சில் அதன் இரண்டு சிப்பாய்கள் கொல்லப்பட்டதையும் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்ததையும் குறிப்பிடுவதைத் தவிர, இந்திய சிறப்பு படைகள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஊடுருவின என்பதை தொடர்ந்து பாகிஸ்தான் பகிரங்கமாக மறுக்கிறது. இந்த நிலைப்பாடு, தொடர்ச்சியான அவசர உயர்மட்ட இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளது கூட்டங்களாலும் மற்றும் பாகிஸ்தானிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிடும் அச்சுறுத்தும் அறிக்கைகளாலும் பொய்யாகின்றன.
ஆயுத சேவைகளுக்கான பாகிஸ்தானிய தலைவர் ஜெனரல் ஷெரீப், “எங்கள் விரோதியினது எந்தவொரு பிழையான சாகசமும் பாகிஸ்தானின் மிக பொருத்தமான விடையிறுப்பைச் சந்திக்கும்,” என்று சூளுரைத்தார்.
பாதுகாப்பு அமைச்சர் கஹவாஜா ஆசிப் உம் போர்வெறியூட்டும் அறிக்கைகளை வெளியிட்டார். இந்தியா உடனான பதட்டங்கள் அதிகரித்துள்ள சமீபத்திய வாரங்களில், ஆசிப் மீண்டும் மீண்டும் எச்சரிக்கையில், இந்தியா ஒரு பெரியளவிலான தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் அது சமீபத்தில் நிலைநிறுத்திய "போர்கள" அல்லது தந்திரோபாய அணுஆயுதங்களைப் பிரயோகிக்கும் என்றார். கடந்த புதன்கிழமை இந்திய தாக்குதல்களுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் அவர் அறிவிக்கையில், “இந்தியா எங்கள் மீது போர் நடத்த துணிந்தால், நாங்கள் இந்தியாவை அழிப்போம் … நாங்கள் காட்சிப்பொருளாக காட்டுவதற்காக [ஒரு] அணுகுண்டு சாதனத்தை உருவாக்கவில்லை. அதுபோன்றவொரு சூழல் உருவானால், அதை [ஒரு அணுகுண்டை] நாங்கள் பயன்படுத்தி இந்தியாவை நிர்மூலமாக்குவோம்,” என்றார்.
ஐக்கிய நாடுகள் தலையிட வேண்டுமென பாகிஸ்தான் முறையிட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க கோருவதற்காக பாகிஸ்தானிய தூதர் மல்லெஹா லோதி ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூனை கடந்த வாரயிறுதியில் சந்தித்தார். பாகிஸ்தானுக்குள் தாக்குதல்கள் நடத்தியதாக கூறும் இந்தியாவின் வாதங்களை "பொய்" என்று லோதி கூறுகின்ற அதேவேளையில், இந்தியா "அத்துமீறி இருப்பதை" அதுவே ஒப்புக் கொள்கிறது என்று லோதி தெரிவித்தார்.
ஐ.நா. மத்தியஸ்தத்தை வழங்கும் வகையில் சனியன்று பான் கி மூன் ஓர் அறிக்கை வெளியிட்டு, இரு நாடுகளும் "நிலைமையின் தீவிரத்தைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை" எடுக்குமாறு அழைப்புவிடுத்தார் மற்றும் காஷ்மீர் விவகாரம் உட்பட அவர்களது கருத்துவேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க அவற்றை வலியுறுத்தினார்.
இராஜாங்கரீதியில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதில் அது வெற்றி கண்டுள்ளதாக புது டெல்லி நம்புவதாலும் மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாவது தரப்பும் சம்பந்தப்படுவதற்கு கதவை அடைத்து வைக்க அது விரும்புவதாலும் இவ்விரு காரணங்களாலும், ஐ.நா. மத்தியஸ்த முன்மொழிவை பெரிதும் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம்.
நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த தெற்காசிய பிராந்திய கூட்டுறவுக்கான அமைப்பு (சார்க்) உச்சி மாநாட்டை, பங்களதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான் மற்றும் இலங்கை ஆகியவை புறக்கணிப்பதாக அறிவிப்பதில் இந்தியாவுடன் இணைந்ததும், வெள்ளியன்று அதை இரத்து செய்ய பாகிஸ்தான் நிர்பந்திக்கப்பட்டது.
பங்களதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானும் இந்தியாவின் இராணுவ குண்டுவீச்சை ஆதரிக்கின்றன, காபூல் கூட தான், இது சமீபத்திய மாதங்களில் சுய-பாதுகாப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டு பாகிஸ்தான் உடனான அதன் சொந்த எல்லை தகராறுகளில் ஈடுபட்டுள்ளது.
இந்திய தாக்குதல்கள் பாகிஸ்தானுக்குள் பலூச்சி பிரிவினைவாதிகளாலும் மெச்சப்பட்டது. சிலர் இன்னும் ஆத்திரமூட்டும் வகையில் தொடர்ந்து இந்தியா தாக்குதல்களை நடத்த அழைப்புவிடுத்தனர், இத்தகைய நடவடிக்கை அவ்விரு அணுஆயுத நாடுகளுக்கும் இடையே முன்பில்லாத விதத்தில் முதல் பிரளயத்திற்குள் எளிதாக தெற்காசியாவை மூழ்கடிக்கும்.
அதிகரித்துவரும் இந்தோ-அமெரிக்க கூட்டணி, சீனா மற்றும் பாகிஸ்தானை அவற்றின் நீண்டகால நெருங்கிய உறவுகளை இறுக்குவதற்கு இட்டுச் செல்கிறது. ஆனால் தீவிரமடைந்து வரும் நெருக்கடியின் முன்னால் பெய்ஜிங் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. அது மீண்டும் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தானை மோதலில் இருந்து பின்வாங்குமாறு வலியுறுத்தி வருகிறது.
ஒரு தலையங்கத்தில் பாகிஸ்தானிய Express Tribune இஸ்லாமாபாத்தின் தனிமைப்படலைக் குறித்து எச்சரிக்கை விடுத்தது. “இந்தியா அது செய்திருப்பதை அதுவே ஒப்புக் கொண்டிருப்பது உண்மையாக இருந்தால், குறைந்தபட்சம் அதுவொரு இறையாண்மை மீறலாகும், இதை உலகின் ஏனைய பகுதிகள் கண்டிக்காமல் அங்கே மௌனம் நிலவுவது தான்,” “உடனடிக் கவலையாக" உள்ளது என்றது எழுதியது.
அவ்விரு நாடுகளிலும், ஒரு வெறுக்கத்தக்க பேரினவாத சூழல் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. இது எதிர்விரோத முதலாளித்துவ பிரிவுகளின் பிற்போக்குத்தனமான புவிசார் அரசியல் நலன்களைப் பின்தொடர்வதோடு மட்டுமின்றி, தொழிலாள வர்க்கத்தின் அதிருப்தியை ஒடுக்க மற்றும் அதன் மீது தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படும்.
பாகிஸ்தான் மீதான இந்திய இராணுவ தாக்குதலை ஆதரிப்பதில் இந்தியாவில் ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளும் ஏனைய அரசியல் ஸ்தாபகத்துடன் இணைந்துள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஐக்கியப்பட்டுள்ளது என்பதைக் காட்ட கடந்த வியாழனன்று அரசாங்கம் கூட்டிய ஒரு "அனைத்து கட்சி கூட்டத்தில்", இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) பொது செயலாளர் T. சீதாராம் யெச்சூரி, ஏனைய பிரதான கட்சி தலைவர்களுடன் கலந்து கொண்டார்.
சனியன்று செய்தியாளர்களிடையே யெச்சூரி பேசுகையில், “மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நமதும் மற்றும் மத்திய அரசினதும் கடமைப்பாடாகும்,” என்று கூறி, அந்த இராணுவ தாக்குதல்களுக்கு ஸ்ராலினிஸ்டுகளின் ஆதரவை மீண்டும் நீடித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இந்திய அரசு, பதட்டங்களைக் குறைக்க மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தீமைகளைத் தவிர்க்க, அதன் பலமான நிலைப்பாட்டில் இருந்து, இராஜாங்க மற்றும் அரசியல் நகர்வுகளைத் தொடர வேண்டுமென நாங்கள் அதை வலியுறுத்துகிறோம்,” என்றார்.
அதன் பங்கிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்த இராணுவ தாக்குதல்களைப் பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டதுடன், தெற்காசியாவை முழுமையான போர் விளிம்பில் கொண்டு வருவதைத் தவிர அரசுக்கு வேறு வாய்ப்பு இல்லை என்று கூறியது. “[செப்டம்பர் 18] ஊரி சம்பவம்,” “எல்லை தாண்டிய பயங்கரவாதம் மீது இந்திய இராணுவம் நடவடிக்கை எடுப்பதை … தவிர்க்க முடியாததாக" செய்திருந்தது. இந்திய இராணுவத்தின் நன்கு திட்டமிட்ட நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம்,” என்றது குறிப்பிட்டது.