Print Version|Feedback
France calls for its own “pivot to Asia” amid US war drive against China
சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் முனைவுக்கு இடையே, பிரான்ஸ் அதன் சொந்த "ஆசிய முன்னிலைக்கு" அழைப்புவிடுக்கிறது
By Kumaran Ira
10 October 2016
ஆசிய-பசிபிக்கில் பிற்போக்குத்தனமான நிதியியல் மற்றும் மூலோபாய நோக்கங்களை பின்தொடர்வதற்காக பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அப்பிராந்தியத்தில் அதன் இராணுவ நிலைநிறுத்தல்களை பலப்படுத்தும் அதன் விருப்பங்களை அறிவித்துள்ளது.
ஜூன் மாதம் சிங்கப்பூரில் உள்ள மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச பயிலகமான Shangri-La Dialogue இல் பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் முன்வைத்த "பிரான்ஸூம், ஆசிய பசிபிக்கில் பாதுகாப்பும்" என்ற ஜூன் மாத அறிக்கை ஒன்றில் அது விவரிக்கப்பட்டிருந்தது. ஆசியாவில் பாரீஸ் அதன் செல்வாக்கை அபிவிருத்தி செய்ய அதன் இராணுவ தகைமைகளைப் பிரதானமாக மேம்படுத்துவதில் அது முதலீடு செய்ய வேண்டுமென கோருவதுடன், அது 2015 இராணுவ செயல்திட்ட விதிமுறைகளின் (Military Programming Law) மேம்படுத்தப்பட்ட பதிப்பின் பாகமாக உள்ளது.
அதன் முன்னுரையில், லு திரியோன், “மூலோபாய சமநிலைகளின் பரிணாமம் ஆசியாவிலும் அத்துடன் இந்தோ-பசிபிக்கிலும் பலமாக தீவிரமடைந்துள்ளது. சுருக்கமாக கூறுவதானால், பொருளாதார இயக்கவியல், மக்கட்தொகையின் அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் உறைவிடமாக உள்ள ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக்கை உள்ளடக்கிய பூகோள அரசியல் அலகாக, ஒட்டுமொத்த செல்வச்செழிப்பின் ஒரு ஊற்றினை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், பலவீனமான பாதிப்பிற்குரிய இடமாகவும் உள்ளது. ஆகையால் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அல்லது விதிமுறைகளின் அடிப்படையில் மற்றும் பல்தரப்பினரினதும் விதிகளை மதிக்கும் ஒழுங்கமைப்பின் கட்டமைப்பிற்குள் இப்பகுதியை பாதுகாப்பது இன்றியமையாததாகும்,” என்று எழுதினார்.
அந்த ஆவணம் பாரீஸிற்கான ஆசிய-பசிபிக்கின் மூலோபாய முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது, அது குறிப்பிடுவதாவது, “ஒரு அண்டைநாட்டு சக்தியாக விளங்கும் இந்தோ-பசிபிக்கை நோக்கி பிரான்ஸ் அதன் மூலோபாய ஈர்ப்பு மையத்தை மீள்-சமநிலைப்படுத்த தொடங்கி உள்ளது,” என்று அறிவிக்கிறது. பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் பல தீவுகளைச் சொந்தமாக கொண்டிருக்கிறது. அது இவற்றை கடற்படை மேலாளுமைக்கான உந்துவிசையாக அபிவிருத்தி செய்ய விரும்புகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் சேர்ந்து பசிபிக் தீவுகளுக்கான பாதுகாப்பு கொள்கையை திட்டமிட்டு வரும் நால்வரணி பாதுகாப்பு கூட்டு ஒருங்கிணைப்பு குழுவில் (Quadrilateral Defence coordination group - QUAD) ஏற்கனவே அது பங்குபற்றி உள்ளது.
சீனாவைச் சுற்றி வளைத்து பெய்ஜிங்கை அமெரிக்க நலன்களுக்கு அடிபணிய வைக்க ஒபாமா நிர்வாகம் 2011 இல் அதன் "ஆசிய முன்னிலையை" அறிவித்ததற்கு பின்னர், பல ஆண்டுகளாக பிரெஞ்சு மூலோபாயவாதிகள் இக்கொள்கையை நெறிப்படுத்தி உள்ளனர்.
ஆசியாவில் ஒரு மிகப்பெரிய இராணுவ தீவிரப்பாட்டுக்கான பிரெஞ்சு திட்டங்களின் அடித்தளத்தில், நிதியியல் நலன்கள் உள்ளன என்பதை லு திரியோன் அறிக்கையை ஆய்வு செய்கையில் தெளிவாகின்றது. அந்த அறிக்கை ஆசியாவை உலகின் பொருளாதார வளர்ச்சிக்குரிய மையமாக மற்றும் பிரெஞ்சு பெருநிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான ஒரு முக்கிய சந்தையாக அடையாளம் காண்பதுடன், 2012 இல், ஆசிய பசிபிக்கில் பிரெஞ்சு அந்நிய நேரடி முதலீடு (FDI) பங்குகள் ஏற்கனவே 75 பில்லியன் டாலராக இருந்ததாக குறிப்பிடுகிறது.
சீனாவுடனான பிரான்சின் வருடாந்தர வர்த்தக பற்றாக்குறை சுமார் 25-35 பில்லியன் யூரோவாக உள்ளது, இது ஒரு தனிப்பட்ட நாட்டுடனான பிரான்சின் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையாகும். பிரெஞ்சு மற்றும் சர்வதேச பெருநிறுவனங்கள், பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு மலிவான நுகர்வு பொருட்களை வினியோகிக்க சீனா மற்றும் ஒட்டுமொத்த ஆசிய-பசிபிக்கை பயன்படுத்துகின்றன. இறுதி பகுப்பாய்வில், அவை ஆசிய வினியோகஸ்தர்கள் மீது தாம் இலாபமடையக்கூடிய நிபந்தனைகளை கட்டளையிடுவதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இராணுவ மேலாளுமையைச் சார்ந்துள்ளன.
பிரெஞ்சு ஏகாதிபத்தியம், இன்னமும் ஒரு மிகப்பெரிய அரசியல் மற்றும் இராணுவ பிரசன்னத்தை கொண்டுள்ள அதன் முன்னாள் காலனியாதிக்க சாம்ராஜ்ஜியமான ஆபிரிக்காவில், சீனாவை பிரான்சின் ஒரு முக்கிய போட்டியாளராகவும் பார்க்கிறது. சீனாவுடன் பொருளாதார உறவுகளை அபிவிருத்தி செய்த ஆட்சிகளையும் மற்றும் பிரெஞ்சு நவ-காலனித்துவ நலன்களை வெட்டுவதற்கு அச்சுறுத்திய ஆட்சிகளையும் இலக்கில் வைத்து, பாரீஸ், 2011 க்குப் பின்னர் இருந்து லிபியா, ஐவரி கோஸ்ட் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசில் தொடர்ச்சியான போர்கள் மற்றும் இராணுவ தலையீடுகளை தொடங்கியுள்ளது.
இரண்டு ஆயுதமேந்திய சக்திகளான வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே ஒரு போரைத் தூண்டக்கூடிய அளவிற்கு தென் சீனக் கடலில் வாஷிங்டன் பெய்ஜிங் உடனான ஒரு மோதலை தூண்டிய போதிலும் கூட, ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் அதன் நலன்களைப் பின்தொடர்வதற்காக தன்னைத்தானே அமெரிக்காவின் "ஆசிய முன்னிலை" உடன் அணிசேர்த்துக் கொண்டது.
பிரான்சின் 2013 இராணுவ வெள்ளை அறிக்கை குறிப்பிடுகையில், “சீனாவின் அதிகரித்துவரும் பலத்தினால் ஆசியாவில் சமநிலை ஆழமாக மாற்றமடைந்துள்ளது… அமெரிக்காவின் இராணுவ பிரசன்னத்தை பலப்படுத்துவது, ஆசியாவில் பதட்டங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர பங்களிப்பு செய்யும்,” என்று குறிப்பிட்டது. அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஒரு பகிரங்கமான நெருக்கடி சம்பவத்தில், பிரான்ஸ் உரிய மட்டத்தில் ஓர் அரசியல் மற்றும் இராணுவ பங்களிப்பை செய்ய செய்யும்,” என்று குறிப்பிட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளது கூட்டமைப்பின் (ஆசியான்) 2013 உச்சிமாநாட்டில் அப்போதைய வெளியுறவுத்துறை மந்திரி லோரன்ட் ஃபாபியுஸ் பின்வருமாறு அறிவித்தார், “பிரான்ஸூம், அதன் சொந்த 'முன்னிலையை' தொடங்கியுள்ளது. ஒரு தோரணையைக் காட்டும் முயற்சியில் அல்ல, மாறாக ஏனென்றால் நாளைய உலகம் எங்கே கட்டமைக்கப்பட்டு வருகிறதோ அங்கே பிரான்ஸூம் இருக்க விரும்புகிறது. மேலும் வெளிப்படையாகவே ஆசிய-பசிபிக் 21 ஆம் நூற்றாண்டின் இதயதானத்தில் இருக்கும்,” என்றார்.
ஆசியாவில் பிரெஞ்சு இராணுவ நலன்களை வலியுறுத்துவதற்கான அத்தகைய திட்டங்கள், அச்சுறுத்தலான தாக்கங்களைக் கொண்டுள்ளன. ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க-ஐரோப்பிய போர் முனைவில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்ட, சகல ஏகாதிபத்திய சக்திகளின் நவ-காலனித்துவ அபிலாஷைகளின் மீள்எழுச்சிக்கு இடையே இது வருகிறது. ஆசியாவில் அதன் சில படுகோரமான குற்றகர காட்சிகளை அரங்கேற்றிய இடத்திற்கு பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மீண்டும் திரும்பி வந்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஒரு மூர்க்கமான காலனியாதிக்க சக்தியாக பிரான்ஸ் இருந்தது. 1946-54 பிரெஞ்சு இந்தோ-சீன போரில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் Diem Bien Phu ஆல் அவமானகரமாக தோற்கடிக்கப்பட்டு அப்பிராந்தியத்தைக் கைவிட நிர்பந்திக்கப்படுவதற்கு முன்னதாக, அதில் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
ஆசியாவில் இராணுவ தீவிரப்பாட்டை தொடங்குவதற்கான பாரீஸின் முயற்சி, ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவத்தின் கையாளமுடியாத நெருக்கடியுடன் பிணைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஓர் ஆழ்ந்த பொருளாதார மந்தநிலையில் சிக்கியுள்ள நிலையில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆழ்ந்த செலவு குறைப்பு கொள்கை மற்றும் அதனோடு சேர்ந்து வங்கிகளுக்கு ட்ரில்லியன் கணக்கிலான யூரோ பிணையெடுப்பு வழங்கும் ஒரு திவாலான கொள்கையை அது பின்தொடர்ந்து வருகின்ற நிலையில், பாரீஸ் நிதியியல் சூறையாடலுக்கு புதிய இலக்குகளைப் பெற பெரும்பிரயத்தனத்துடன் முயன்று வருகிறது.
சர்வதேச உறவுகளுக்கான பிரெஞ்சு பயிலகம் (IFRI) எனும் சிந்தனை குழாம் எழுதுகையில், “ஐரோப்பாவில் இல்லாதுள்ள, பொருளாதார வளர்ச்சிக்கான ஆதாரவளங்களை கண்டறிய வேண்டியிருப்பதால் ஹோலண்ட் நிர்வாகத்தின் பிரதான நோக்கமாக, ஆசியாவிற்கான பிரெஞ்சு 'முன்னிலை' சேவையாற்றுகிறது,” என்று எழுதியது. அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “பிரெஞ்சு நாடாளுமன்றவாதிகளைப் பொறுத்த வரையில், தற்போதைய பொருளாதார சூழல் 'பிரான்சுக்கு ஆசியாவை நோக்கிய நிர்பந்தத்தை தவிர்க்கவியலாமல்' உருவாக்குகிறது. 'ஒரு மூலோபாய திருப்பத்தை தவறவிடும்' வலியை அதனால் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளாதுவிட முடியாது.
எவ்வாறிருப்பினும் ஆசியாவை நோக்கிய ஒரு பிரெஞ்சு "முன்னிலை" பொருளாதார இலாபங்களை உருவாக்கும் என்ற வாதங்கள், இராணுவரீதியான பொய்களாகும். ஒரு பிரெஞ்சு "முன்னிலைக்கு" இராணுவ செலவினங்களை பரந்தளவில் அதிகரிக்க வேண்டியிருக்கும், அவ்விதத்தில், அதற்கேற்ப தொழிலாளர்கள் மீது சமூக வெட்டுக்கள் இருக்கும். IFRI குறிப்பிடுகையில், “அனைத்திற்கும் மேலாக, பிரெஞ்சு பலத்தைக் காட்டுவதற்கான ஆற்றல்களை வரவு-செலவு கட்டுப்பாடுகள் மட்டுப்படுத்தும் போது, இந்த ஆசியாவிற்கான 'முன்னிலையை' கவனத்தில் எடுப்பது விசித்திரமாக தெரிகிறது. … இந்த உள்ளடக்கத்தில், இலட்சிய நோக்கங்களுடன் தன்னார்வ சொற்பொழிவுகள் இருந்தாலும், ஆசியாவில் பிரெஞ்சு வெளியுறவு கொள்கையின் எதிர்காலம் நிச்சயமின்றியே தெரிகிறது,” என்று குறிப்பிட்டது.
பிரான்ஸ் அல்லது ஏனைய ஐரோப்பிய சக்திகளது ஓர் ஆசியாவில் "முன்னிலை" என்பது, ஏற்கனவே அணுஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையே ஓர் உலகப் போராக வெடிக்க அச்சுறுத்துகின்ற உலக முதலாளித்துவ முரண்பாடுகளை தீவிரப்படுத்தும். நீண்டகால ஓட்டத்தில், சீனாவிற்கு எதிராக அல்லது ஆசிய சக்திகளின் வேறு ஏதாவதொரு கூட்டணி அல்லது அமெரிக்காவிற்கே எதிராக கூட இதுபோன்றவொரு "முன்னிலை" நடத்தப்படுமா என்பது தெளிவாக இல்லாதுள்ளது.
பிரான்சின் ஆசிய கொள்கையில் முரண்பாடுகளுக்கு குறைவில்லாது உள்ளது. ஒருபுறம் அது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் மிகப்பெரியளவில் ஆயுத விற்பனைகளை செய்து, ஆசியாவை நோக்கிய அமெரிக்க "முன்னிலையின்" கூட்டாளிகளான இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் இராணுவ உறவுகளை அபிவிருத்தி செய்துள்ளது. மறுபுறம் சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலை மறைமுகமாக ஆதரிக்கின்ற அதேவேளையில், அது ஏனைய ஐரோப்பிய சக்திகள் உடன் சேர்ந்து பெய்ஜிங் உடனான பொருளாதார உறவுகளை அபிவிருத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டு அது, ஏனைய சகல பிரதான ஐரோப்பிய ஒன்றிய சக்திகளைப் போலவே, அமெரிக்க முறையீடுகளை மீறி, பெய்ஜிங்கின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) இணைந்தது.
சீனாவின் பட்டுச்சாலை பொருளாதார இணைப்பு மற்றும் "ஒரே இணைப்பு, ஒரே பாதை" (OBOR) திட்டத்தில் முதலீடு செய்ய AIIB வடிவமைக்கப்பட்டதாகும். சீனாவிலிருந்து ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு வழியாக ஐரோப்பா வரையில் தரை மார்க்கமாக ஒரு துரித-போக்குவரத்து வழியை உருவாக்க ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பிற்காக 1.4 ட்ரில்லியன் டாலரை அது உள்ளடக்கி உள்ளது. மத்திய கிழக்கிலிருந்து சீன எரிபொருள் இறக்குமதிகளைப் பாதுகாப்பதற்கு இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலின் வர்த்தக பாதைகளில் சீன செல்வாக்கை தடுக்கும் அமெரிக்க "முன்னிலைக்கு" OBOR திட்டம் ஒரு விடையிறுப்பாகும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான அதுபோன்ற மூலோபாய போட்டிகளை பிரிட்டன் வெளியேற்றம் கூர்மையாக்கி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் வாக்களித்த பின்னர், பிரான்ஸூம் ஜேர்மனியும் ஒரு சுதந்திரமான ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தை உருவாக்க அழுத்தமளித்துள்ளன. வாஷிங்டன் மற்றும் இலண்டனால் நீண்டகாலமாக எதிர்க்கப்பட்டு வந்த இந்த நகர்வு, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான நேட்டோ கூட்டணிக்கு சாத்தியமான எதிர்ப்பலமாக இருக்கலாம்.