Print Version|Feedback
Beating the drums for war with Russia
ரஷ்யாவுடனான போருக்கு முரசு கொட்டப்படுகிறது
Bill Van Auken
6 October 2016
செப்டம்பர் 30 அன்று உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரித்தது: “கண்கூடாய் புலப்படுவது என்னவென்றால்....சிரியாவில் அமெரிக்கத் தலையீட்டினை தீவிரப்படுத்தும் பிரச்சினையானது நவம்பர் 8 அமெரிக்கத் தேர்தல் முடியும் வரையிலும் காத்திருக்க முடியுமா என்பது அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்திற்குள்ளாக சூடான விவாதங்களுக்கான கருப்பொருளாக ஆகியிருக்கிறது.”
இந்த மதிப்பீடு தீர்மானகரமாய் ஊர்ஜிதப்படுவதற்கு ஒரு வாரம் கூட ஆகவில்லை. ஒபாமா நிர்வாகம் தான் இத்தகைய ஒரு விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது முழுமையாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.
பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறையின் செயலர்கள், கூட்டுப்படைத் தளபதிகளின் தலைவர் மற்றும் சிஐஏ இயக்குநர், அத்துடன் ஜனாதிபதியின் உயர்நிலை பாதுகாப்பு உதவியாளர்கள் ஆகியோர் கொண்ட முதன்மையாளர்கள் குழு (Principals Committee) என்று அழைக்கப்படுவதான ஒன்று, சிரிய அரசாங்கப் படைகள் மீது கப்பல்தள ஏவுகணைகளைக் கொண்டு தாக்குவது மற்றும் பிற இராணுவ உக்கிர நடவடிக்கைகளைக் குறித்த ஆலோசனைகளை பரிசீலிப்பதற்காக புதன்கிழமையன்று வெள்ளைமாளிகையில் கூடியது.
உலகின் இரண்டு பெரும் அணுஆயுத சக்திகளான அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு நேரடியான ஆயுத மோதலுக்கான உண்மையான சாத்தியத்தை சுமந்திருக்கக் கூடிய இத்தகையதொரு நடவடிக்கைக்கு சிஐஏ யும் கூட்டுப்படைத் தளபதிகளும் ஆதரவாய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரு விரிவான போருக்கு அமெரிக்க ஸ்தாபகத்தின் பிரிவுகளுக்குள்ளாக ஆதரவு பெருகிச் செல்வதைப் பிரதிபலிக்கும் விதமாக, நியூ யோர்க் டைம்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட்ட ஊடகங்களின் முக்கியமான பகுதிகள், இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்குள் அமெரிக்க இராணுவவாதத்தின் ஒரு புதிய வெடிப்புக்காய் ஆலோசனை கூறி வருகின்ற தரப்பின் பக்கம் சாய்ந்திருக்கின்றன.
செனட்டின் இராணுவ சேவைகள் கமிட்டியின் குடியரசுக் கட்சித் தலைவரான ஜோன் மக்கெயின் எழுதி புதன்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியாகியிருக்கும் ஒரு பத்தியை இதற்கான மிக வெளிப்பட்ட உதாரணங்களில் ஒன்றாய் கூறலாம். “பகுத்தறியாத, இரக்கமில்லாத குண்டுவீச்சின்” மூலமாக “எண்ணிலடங்கா அப்பாவிமக்களை படுகொலை செய்து” இருப்பதாக சிரிய அரசாங்கத்தையும் அதன் கூட்டாளியான ரஷ்யாவையும் மக் கெயின் குற்றம் சாட்டுகிறார். இதை எழுதுகின்ற மனிதர் ஈராக்கில் 1 மில்லியன் ஈராக்கிய உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த “அதிர்ச்சியூட்டும் மற்றும் உறையச் செய்யும்” போரை மிக ஊக்கத்துடன் முன்மொழிந்தவர்களில் ஒருவராவர்.
குடியரசுக் கட்சியின் இந்த செனட்டர் எழுதுகிறார்: “அமெரிக்காவும் அதன் கூட்டணிக் கூட்டாளிகளும் அசாத்திற்கு [சிரிய ஜனாதிபதி] இறுதிக்கெடு அளிக்க வேண்டும் - பறப்பதை நிறுத்துங்கள் அல்லது உங்கள் விமானத்தை இழந்து விடுங்கள் - அத்துடன் இதனைத் தொடர்ந்தும் பின்பற்றிச் செல்ல வேண்டும். ரஷ்யா அதன் பகுத்தறியாத குண்டுவீச்சைத் தொடருமானால், அதன் விமானத்தை பெரும் அபாயத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதை நாம் தெளிவுபடுத்தியாக வேண்டும்.”
அமெரிக்க இராணுவத்தால் பாதுகாக்கப்படுகின்ற சிரிய பொதுமக்களுக்காக “பாதுகாப்பு வலயங்களை” உருவாக்குவதற்கும் அத்துடன் “கிளர்ச்சியாளர்”களாகச் சொல்லப்படுபவர்களுக்கு “மிக ஊக்கமான இராணுவ உதவி” கொடுக்கப்படுவதற்கும் கூட மக் கெயின் அழைப்பு விடுக்கிறார். இந்த மூலோபாயம் “மிகப்பெரும் செலவு வைக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்பதை ஒப்புக்கொள்கின்ற அவர், இந்த செலவுகளின் தன்மை என்ன என்பதையோ அல்லது யார் அதற்கு தொகையளிப்பார்கள் என்பதையோ குறிப்பாய் கூறவில்லை. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒரு இராணுவ மோதலின் பேரழிவுகரமான உலகளாவிய தாக்கங்கள் குறித்து மக் கெயின் ஒரு இம்மியளவு குறிப்பும் கூட தரவில்லை.
இதேபோல வாஷிங்டன் போஸ்டும், புதன்கிழமை ஒரு தலையங்கத்தில், “பஷார் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிராய் இராணுவ அழுத்தத்தைப் பயன்படுத்துவதற்கு மறுத்ததால்” சிரியாவில் அமெரிக்காவின் கொள்கை தோல்வி கண்டிருப்பதாக வலியுறுத்தியது. சிரியாவில் ஒரு மிக நேரடியான இராணுவத் தலையீட்டை நடத்துவதற்கு ஒபாமா நிர்வாகம் தவறியமையானது ”ரஷ்யாவுக்கு ஆதாயமளிக்கும் விதமாய், அமெரிக்க செல்வாக்கை சுருக்கி விடுவதில்” விளைந்திருக்கிறது என்று புகாரிட்ட இச்செய்தித்தாள், கப்பல்ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கும் “கிளர்ச்சியாளர்”களுக்கு மிக நவீன ஆயுதங்களை வழங்குவதற்கும் சிஐஏ மற்றும் பென்டகன் வைக்கின்ற ஆலோசனைகளை ஏற்புடன் மேற்கோளிடுகிறது.
இறுதியாக, புதன்கிழமையன்று நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த முதற்பக்க கட்டுரை ஒன்றில், இப்போது முதல் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்கவிருக்கும் 2017 ஜனவரி வரையான காலத்தை ரஷ்யா சிரிய அரசாங்கத்திற்கு இராணுவ ஆதரவை வழங்குவதில் “மும்முரமாய் இயங்குவதற்கான” ஒரு “சந்தர்ப்பத்தின் காலமாய்” பயன்படுத்திக் கொண்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரை அமெரிக்க விமானத் தாக்குதல் ஆலோசனைகளை ஏற்கத்தக்கவண்ணமாய் முன்வைத்ததுடன், “குறிப்பாக கிளர்ச்சியாளர்களுக்கு உதவியளிக்கும் அரபு அரசுகள் அவர்களுக்கு விமானஎதிர்ப்பு ஆயுதங்களை விநியோகிக்குமானால் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ரஷ்ய நகரங்களைத் தாக்குவதன் மூலமாக பதிலடி கொடுக்க முடிவு செய்வார்களேயானால்” சிரியாவை ரஷ்யா வெளியேற முடியாமல் மாட்டிக் கொண்ட ஒரு “சதுப்பு” நிலமாய் அமெரிக்கா மாற்றி விட முடியும் என்று வாதிடப்படுவதாக பெயர்கூறப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கொள் காட்டி அது கூறுகிறது.
சிரியாவில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இஸ்லாமிய படைகளின் பதிலிறுப்பில், “ரஷ்ய நலன்களுக்கு எதிரான, இன்னும் ரஷ்ய நகரங்களுக்கு எதிரான தாக்குதல்களும்” இடம்பெறக் கூடும் என்று உயர்நிலை அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் சிலநாட்களுக்கு முன்னர் அளித்திருந்த எச்சரிக்கையை இந்தப் பத்தி எதிரொலிக்கிறது.
இந்தக் குறிப்புகள் தவறாகப் புரிந்து கொள்ள வழியில்லாதவை. சிரியாவில் ஐந்து ஆண்டு காலமாக நடந்து வருகின்ற சிஐஏ ஏற்பாட்டிலான ஆட்சி மாற்றத்திற்கான போரில் பிரதானமான போரிடும் படையாக இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மீது அமெரிக்கா மிகப்பெரும் செயல்பாட்டு செல்வாக்கை செலுத்துகிறது. எப்படி அது சிரியாவில் அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு அவற்றை செலுத்தியதோ, அதேபோல ரஷ்யாவில் அதைச் செய்வதற்கும் அவற்றுக்கு உத்தரவிட அதனால் இயலும்.
இந்த கட்டுரைக்கு துணையாக டைம்ஸ் வெளியுறவு விவகார பத்தியாளரான தோமஸ் ஃப்ரீட்மன் எழுதிய ஒரு பத்தி இருக்கிறது. அவர் தனது வழக்கமான சண்டைக் கோழி பாணியில் எழுதுகிறார்: “நாங்கள், புட்டினுக்கு அவரது மருந்தை அவருக்கே கொடுப்பதற்கான சரியான தருணமல்லவா இது?”
ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதல் அணு ஆயுதப் போரின் நேரடி அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்பதை ஒப்புக்கொள்கின்ற அவர் பின்வருமாறு அறிவிக்கிறார்: “ஆனால் சிரியாவிலும் உக்ரேனிலும் புட்டின் நடந்து கொள்வதைப் பார்த்து விட்டு” நம்மால் “வெறுமனே முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட முடியாது.” “அலெப்போவில் இரக்கமில்லாமல் அப்பாவிமக்கள் மீது குண்டுவீச்சு நடத்துவதற்காக” ரஷ்யாவை கண்டனம் செய்கின்ற அவர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் “அடிப்படை நாகரிக நிர்ணயங்களை” மீறியதாக இரண்டுமுறை குற்றம் சாட்டுகிறார்.
சிடுமூஞ்சித்தனத்திலும் ஏமாற்றிலும் முத்திரை பதித்த ஒரு பத்தியாளரிடம் இருந்துதான் என்றாலும் கூட, “அடிப்படை நாகரிக நிர்ணயங்கள்” குறித்து ஃப்ரீட்மன் பேசுவது ஒருவரைத் திகைக்க வைக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனமான போர் எதுவொன்றிலும், அவர் ஒரு வெறித்தனமான ஊக்குவிப்பாளராக இருக்கத் தவறியதே கிடையாது. கிழக்கு அலெப்போவில் ரஷ்யாவின் குண்டுவீச்சிற்காக இன்று புலம்புகின்ற இதே மனிதர் 1999 இல் சேர்பியா மீதான அமெரிக்கக் குண்டுவீச்சிற்கு பதிலிறுப்பாய் பின்வருமாறு எழுதினார்: “பெல்கிரேடில் வெளிச்சமே தென்படக் கூடாது: ஒவ்வொரு மின் கம்பியும், நீர்க் குழாயும், பாலமும், சாலையும், போர் தொடர்பான தொழிற்சாலைகளும் குறிவைக்கப்பட வேண்டும்... உங்களை பொடிப்பொடியாக்கி உங்கள் நாட்டை மீண்டும் நாங்கள் உருவமைப்போம்.”
அதற்குப் பின் நான்கு வருடங்களுக்கும் குறைவான காலத்தில், ஈராக் தொடர்பாகவும் அதே பாத்திரத்தை இவர் வகித்தார். 2003 படையெடுப்புக்கு முன்பாக “எண்ணெய்க்கான ஒரு யுத்தத்தில்” தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அறிவித்த இவர், ஈராக் மீது அமெரிக்கா தாக்கியதற்கான “ஒரே எளிமையான காரணம்: அது எங்களால் முடியும்...” என்பது தான் என்று அதன்பின் எழுதினார்.
இவை தான் இந்த டைம்ஸ் மனிதர் அனுசரிக்கும் நாகரிக நிர்ணயங்கள்.
அமெரிக்கா தனது பினாமிப் படைகளாகப் பயன்படுத்தியிருக்கக் கூடிய பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் --அல் கெய்தாவுடன் நேரடியாக இணைந்திருப்பவை உட்பட-- அலெப்போவில் ஒரு முழுமையான படுதோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன; ரஷ்யா மற்றும் ஈரானின் ஒரு கூட்டாளியான அசாத்தைப் பதவியிறக்கி விட்டு டமாஸ்கஸில் ஒரு அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தை அமர்த்துவதற்கான ஐந்தரை ஆண்டு காலப் போர், ஒரு மூலோபாய தோல்வியின் அச்சுறுத்தலை முன்நிறுத்தியுள்ளது என்ற உண்மைதான், சிரியாவில் இராணுவத் தீவிரப்படுத்தலுக்கான வெறிக்கூச்சல் ஆதரவின் கீழமைந்திருப்பதாகும்.
அத்தகையதொரு விளைபயன், சோவியத் ஒன்றியம் மாஸ்கோவிலிருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்பற்றி வந்திருக்கக் கூடிய கொள்கைக்கு ஒரு தீவிர பின்னடைவைக் குறிப்பதாக அமையும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை உலக மேலாதிக்கத்திற்கான தனது ஓட்டத்தில் ஒரு தடையில்லாத பாதையை திறந்து விட்ட ஒரு அபிவிருத்தியாக அமெரிக்கா கருதியிருந்தது. உலகப் பொருளாதார நிலையிலான தனது வீழ்ச்சியை சரிக்கட்டுவதற்கான ஒரு வழியாக, தனது இராணுவ வல்லாதிக்கத்தை சுரண்டிக் கொள்கின்ற கொள்கையை அது கையிலெடுத்தது.
ரஷ்யாவும் சீனாவும் அந்தக் கொள்கையை நிராசையாக்க தொடங்கியிருக்கின்றன என்ற உண்மையிலிருந்தே, சிரியாவில் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கான பதிலிறுப்பாக வெளிப்படும் வெறிக்கூச்சலானது எழுகிறது.
ரஷ்ய அடாவடித்தனம் குறித்த ஊடகங்களின் கண்கூசச் செய்யும் கூற்றுகள் அனைத்தும் இருந்தபோதிலும், உக்ரேனிலும் மற்றும் தென் சீனக் கடலிலும் போலவே, சிரியாவிலும், ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து தற்காப்பு எதிர்வினைகளை தூண்டிய அடாவடித்தனத்தை முன்னெடுத்தது அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆயினும், அதனால் மட்டும் ரஷ்ய அரசாங்கத்தால் பின்பற்றப்படும் கொள்கைகளுக்கு எந்த முற்போக்கான உள்ளடக்கத்தையும் கொடுத்து விட முடியாது. புட்டினை பொறுத்தவரை, அவரது அரசாங்கத்தின் நலன்களையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களையும் ஒருசேரப் பாதுகாப்பதாக இருக்கின்ற ஒரு உடன்பாட்டை அவரால் அமெரிக்காவுடன் செய்து கொள்ள முடியும் என்றால், அவர் அதில் நிமிடத்தில் கையெழுத்திட்டு விடுவார்.
அவ்வாறு செய்யும் வழி இல்லாததாலும், சொந்த நாட்டில் பெருகும் பொருளாதார நெருக்கடிக்கும் சமூக அமைதியின்மையின் அடையாளங்களுக்கும் முகம்கொடுக்கின்ற நிலையிலும் தான், புட்டின் ரஷ்ய தேசியவாதத்தை ஊக்குவிப்பதிலும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து அவருக்கு கிட்டப்பெற்றிருக்கும் எஞ்சிய இராணுவ சக்தியின் மீது அதிகமான நம்பிக்கை வைப்பதிலும் இறங்கியிருக்கிறார்.
கடந்த சில தினங்களில், ரஷ்ய அரசாங்கம் சிரியாவில் தரையில் இருந்து வானம் பாயும் ஏவுகணைப் பேட்டரிகளை இடம்நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளதோடு ஆயுதம் தயாரிக்கும் புளூட்டோனியத்தை அழிப்பதற்கு அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒரு உடன்பாட்டையும் நிறுத்திவைத்துள்ளது. அதேசமயத்தில், அரசாங்க ஆதரவு ரஷ்ய செய்தித்தாள்கள் ஒரு மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்துள்ளன, அரசாங்கம் அத்தகையதொரு நிகழ்வுக்கு தயாரிப்பாக ஒரு பெரும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையை தொடக்கியிருக்கிறது.
ரஷ்யாவின் முதலாளித்துவ சிலவரணியின் நலன்களைப் பிரதிநிதித்துவ படுத்தும் ஒரு ஆட்சியால் முன்னெடுக்கப்படுகின்ற தேசிய பாதுகாப்புக் கொள்கையானது, உலகப் போருக்கான உந்துதலுக்கே எரியூட்ட முடியும். பரந்த ரஷ்ய உழைக்கும் மக்கள், சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிசம் கலைத்ததன் இறுதிப் பின்விளைவுக்கு அணுஆயுதப் படுகொலைப் பேரழிவின் பெருகும் ஒரு அச்சுறுத்தலின் வடிவத்தில் முகம்கொடுத்து நிற்கின்றனர்.
சுயாதீனமாக ஒழுங்கமைப்பட்டு போரின் மூலவளமான முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் அணிதிரட்டப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஒரு புதிய உலகப் போரை தடுத்து நிறுத்துவதற்கான ஒரே சக்தியாகும். ஒரு சர்வதேச சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவது இதற்கு அவசியமாக இருக்கிறது, இதில் இழப்பதற்கு கொஞ்சமும் நேரமில்லை.
இந்தப் போராட்டத்தில் ஒரு இன்றியமையாத படியாக டெட்ராயிட்டில் நவம்பர் 5 ஆம் தேதியன்று “சோசலிசம் Vs. முதலாளித்துவம் & போர்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிற அவசரகால கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கு எங்களது வாசகர்கள் அனைவரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். கருத்தரங்கின் வலைத் தளத்திற்கு விஜயம் செய்து இன்றே பதிவு செய்யுங்கள்!