Print Version|Feedback
Citigroup chose Obama’s 2008 cabinet, WikiLeaks document reveals
ஒபாமாவின் 2008 மந்திரிசபையை சிட்டிகுழு தேர்ந்தெடுத்ததை விக்கிலீக்ஸ் ஆவணம் அம்பலப்படுத்துகின்றது
By Tom Eley
15 October 2016
2008 ஜனாதிபதி தேர்தலின் ஒரு மாதத்திற்கு முன்னர், வோல் ஸ்ட்ரீட் இராட்சத வங்கி குழுமமான சிட்டி குழு (Citigroup) ஒபாமா நிர்வாகத்தில் மந்திரிசபை பதவிகளுக்கான தனது விருப்பிற்குரிய வேட்பாளர்கள் பட்டியலை ஒபாமா பிரச்சாரத்தில் சமர்ப்பித்திருந்தது. இந்தப் பட்டியல் கிட்டத்தட்ட பாராக் ஒபாமாவின் மந்திரிசபையின் இறுதிதேர்வினை ஒத்திருந்தது.
விக்கிலீக்ஸால் தற்போது ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரத் தலைவராக இருக்கும் ஜோன் பொடெஸ்டா இன் மின்னஞ்சல் கணக்கிலிருந்து வெளியான அதன் அண்மைய ஆவணத்தில் வெளியான குறிப்பு ஒன்று, மைக்கல் ஃபுரோமனால் எழுதப்பட்டது. அப்போது சிட்டி குழுவின் நிர்வாகியாக இருந்தார் அவர் தற்போது அமெரிக்க வர்த்தக பிரதிநிதியாக வேலைசெய்கிறார். அக்டோபர் 6 2008 தேதியிட்ட அந்த மின்னஞ்சல் “பட்டியல்கள்” எனப் பெயர் பெற்றிருந்தது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் ஒபாமாவின் இடைமருவு அணியில் ஒரு மாதத்திற்கு முன்னரே அதன் தலைவராக பொடெஸ்டாவின் பெயர் அறிவிக்கும் அளவு சென்றது.
செப்டம்பர் 15 அன்று லெஹ்மன் பிரதர்ஸ் திவால் ஆனபின்னர் ஏற்பட்ட நிதி உருகலின் உச்சக்கட்டத்தில் அம்மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. 1930 களுக்குப் பின்னர் இருந்து சிட்டி குழுவும் வால் ஸ்ட்ரீட்டும் அமெரிக்காவையும் உலகப் பொருளாதாரத்தையும் அதன் ஆழமான நெருக்கடிக்குள் இழுத்துச்செல்கையில் கூட, அந்த மின்னஞ்சல்களே காட்டுகிறவாறு, அவர்கள் அமெரிக்க ஜனநாயகம் மற்றும் அதன் தேர்தல் நிகழ்முறையின் மூடுதிரைக்குப் பின்னே, உண்மையான அதிகாரத்தை கொண்டவர்களாக தொடர்ந்து இருந்தனர்.
ஃபுரோமன் பட்டியல் குறிப்பிடத்தக்க வகையில் முன்னறிதலாய் நிரூபிக்கப்பட்டது. அது முன்மொழிந்தவாறு, புஷ் ஆதரவாளரான ரோபர்ட் கேட்ஸ் பாதுகாப்பு செயலாளர் ஆனார்; எரிக் ஹோல்டர் பிரதம அரச வழக்குத்தொடுனராக ஆனார்; ஜனெட் நபொலிட்டனோ உள்நாட்டு பாதுகாப்புச் செயலர் ஆனார்; ராஹும் எம்மானுவேல் வெள்ளை மாளிகை தலைமைப் பணியாளர் ஆனார்; சூசன் ரைஸ் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் ஆனார்; ஆர்னே டுன்கான் கல்விச் செயலர் ஆனார்; கத்லின் செபெலியஸ் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் செயலர் ஆனார்; பீட்டர் ஓர்ஷாக் நிர்வாகம் மற்றும் வரவு-செலவுத் திட்ட தலைவரானார்; எரிக் ஷின்செக்கி ஓய்வு பெற்ற இராணுவத்தினர் விவகார செயலர் ஆனார்; மற்றும் மெலோடி பார்னஸ் உள்நாட்டுக் கொள்கைக்கான சபையின் தலைவர் ஆனார்.
மிகவும் முக்கியமானதான கருவூலச்செயலர் பதவிக்கு மூன்று வாய்ப்புக்கள் முன்வைக்கப்பட்டன. அதில் ராபர்ட் ரூபின் மற்றும் ரூபினின் நெருங்கிய சீடர் லோரன்ஸ் சம்மர்ஸ் மற்றும் டிமோதி கெய்த்னர் உள்ளடங்கியிருந்தனர். ஒபாமா அப்போது நியூயோர்க் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்த கெய்த்னரை தேர்ந்தெடுத்தார். கெய்த்னர், புஷ் காலத்து கருவூலச் செயலர் (மற்றும் முன்னாள் கோல்ட்மன் சாக்ஸின் நிர்வக அதிகாரியாக இருந்த) ஹென்ரி போல்சன் மற்றும் மத்திய வங்கி தலைவர் பென் பெர்னன்கே ஆகியோருடன் சேர்ந்து வால் ஸ்ட்ரீட் பிணையெடுப்பை ஒழுங்கமைப்பதில் முன்னணிப் பாத்திரம் ஆற்றினார்.
ரூபின் பில் கிளிண்டன் நிர்வாகத்தில் 1995லிருந்து 1999 வரை, அவரை அடுத்து சம்மர்ஸ் வரும்வரை கருவூலச் செயலராக இருந்தார். தங்களுக்கிருந்த அதிகாரத்தில், ரூபின், சம்மர்ஸ் இருவரும் வணிக வங்கிக்கும் முதலீட்டு வங்கிக்கும் இடையில் ஒரு சட்டரீதியான தடுப்பை அமுல்படுத்தும் Glass-Steagall Act (1933) சட்டத்தை பலமிழக்கச் செய்வதை மேற்பார்வை செய்தனர். அவர் கருவூலப் பதவியில் இருந்து விடுபட்ட உடனேயே சிட்டி குழுவின் உயர் நிர்வாக அதிகாரியாகி, 2009 வரை அதில் தொடர்ந்து பதவிவகித்தார்.
ஃபுரோமன் குறிப்பின் குறிப்படத்தக்க அம்சம் அதன் அடையாள அரசியலை பயன்படுத்தல் ஆகும். போட்ஸ்டாவை பதவியில் அமர்த்துவதற்கு முன்மொழிந்த சிட்டி குழு நிர்வாக அதிகாரிகள் பட்டியலில், ஃபுரோமன் வார்த்தைகளின்படி “மந்திரிசபை/ துணை/ உதவி துணை / உதவி/ இணை/ உதவி இணை மட்டத்தில் செயலாற்ற ஆபிரிக்க அமெரிக்கன், லத்தினோ மற்றும் ஆசியன் அமெரிக்கர் வேட்பாளர்கள்” உள்பட ஒரு “பன்முகப்பட்டியல்” இருந்ததுடன் “பெண்கள் தொடர்பான ஒரு பட்டியலும்” இருந்தது. ஃபுரோமனும் தனது வெள்ளை மாளிகை மந்திரிசபை பட்டியலுக்காக வேறுபட்டதை கணக்கில் எடுத்துக் கொண்டார், “நிகழ்தகவு – ஒவ்வொரு பதவிக்குமான வேறுபட்ட நபரை நியமிக்கும் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொண்டது. இந்தப் பட்டியல் இனம் மற்றும் பாலின் அடிப்படையில் 31 கட்டளைகளை செயலற்றதாக்கும் ஒரு அட்டவணையுடன் முடிந்திருந்தது.
அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ், பிரச்சினைக்குள்ளாகிய சொத்து நிவாரண திட்டத்தை சட்டமாக்க கையெழுத்திட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் சிட்டி குழு பரிந்துரைகள் வந்தன. அச்சட்டம் வரிசெலுத்துவோர் பணத்தில் 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை வோல் ஸ்ட்ரீட்டின் பெரும் வங்கிகளை மீட்பதற்கு ஒதுக்கியது. அதில் மிகப்பெரும் இலாபம் அடைந்தது சிட்டி குழுவாகும். அதற்கு 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அரசாங்கப் பங்கை வாங்குதல், அத்துடன் அதன் மதிப்புக்கு குறைந்த அடமானம் தொடர்பான சொத்துக்களுக்கு அரசாங்கம் உத்தரவாதம் தரும் விதமாக 306 பில்லியன் டாலர்கள் என்ற வடிவத்தில் ரொக்கமாகக் கொடுக்கப்பட்டது.
பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா காங்கிரசினூடாக பெருமளவில் மதிப்பிழந்த வங்கிப் பிணையெடுப்பை மேற்பார்வை செய்வதலில் முக்கிய அரசியல் பாத்திரத்தை வகித்தார். செப்டம்பர் நிதிய நெருக்கடி அமெரிக்கப் பெருநிறுவன செல்வந்தத்தட்டின் தீர்க்கமான பகுதியினரை, “நம்பிக்கை” மற்றும் “மாற்றம்” என்பதின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அவரது குடியரசுக் கட்சி எதிராளி செனெட்டர் அரிசோனாவின் ஜோன் மக்கெயினை விடவும் பிணையெடுப்பை எதிர்க்கும் மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த சிறந்தவகையில் செயலாற்றுவார் என நம்பிக்கை கொள்ள வைத்தது.
ஜனாதிபதி என்ற வகையில், ஒபாமா வங்கிகளுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களை மட்டும் கொடுக்கவில்லை, நிதிப்பொறிவுக்கும் பெரும் பொருளாதாரப் பின்னடைவுக்கும் இட்டுச்சென்ற ஊகவணிக கூத்தாட்டம் மற்றும் பணமோசடி இவற்றுக்காக வோல் ஸ்ட்ரீட் அதிகாரிகளில் ஒருவர் கூட வழக்கை எதிர்கொள்ளாதவாறு பார்த்துக் கொண்டார். பிணையெடுக்க நிறுவனங்களில் இருந்து உயர்அதிகாரிகளுக்கு பணம் வழங்கலை தடுத்த மசோதாவையும் தனிப்பட்டரீதியில் தலையிட்டுத் தடுத்தார்.
அதே கள்ளத்தனமான மற்றும் முறைகேடான செயல்முறைகள் ஹிலாரி கிளிண்டன் அல்லது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடர்பானதில் நடந்து கொண்டிருக்கின்றன. போடெஸ்டாவின் கணக்கிலிருந்து விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட பல ஆயிரம் மின்னஞ்சல்களில் ஃபுரோமனினதும் ஒன்று. அமெரிக்காவை உண்மையிலேயே யார் ஆளுகிறார்கள் என அம்பலப்படுத்தும் ஃபுரோமன் மின்னஞ்சல் போன்ற தொடர்புகள் உண்மையில் ஊடகங்களால் அலட்சியப்படுத்தப்படுகின்றன. ஜனநாயகக் கட்சி ஆதரவு New Republic வெள்ளியன்று வெளியான ஒரு கட்டுரையில் அதில் கவனம் செலுத்துமாறு கேட்டதுடன், மேலும் அவ்விடயத்தை பற்றி மிகக்குறைந்த கவனமே கொடுக்கப்பட்டது.
இதற்கு பதிலாக ஊடகமானது குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பின் பாலியல் நடவடிக்கை பற்றிய அநாகரிக விவரங்கள் மீதுதான் கவனம் குவித்தது, விக்கலீக்ஸாலும் மற்றைய தகவல் வளங்களாலும் வெளியிடப்பட்ட கிளிண்டன் தொடர்பான மின்னஞ்சல்களின் விடயங்களிலிருந்து கவனத்தை திசைதிருப்ப குறிப்பிட்டளவேனும் இது வடிவமைக்கப்பட்டது.
New Republic ஃபுரோமனின் குறிப்பின்பால் கவனம் ஈர்த்ததானது அத்தகைய மோசடி நடவடிக்கைகளை அது எதிர்க்கிறது என்பதல்ல, ஹிலாரி கிளிண்டன் நிர்வாகத்தின் சாத்தியமான இறுதிகூட்டமைவின் மீது ஆதிக்கம் செலுத்துவதை நோக்கி இப்பொழுதே கட்டாயம் நகரவேண்டும் என்று அது பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களுக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கை ஆகும்.
“2008 பொடிஸ்டா மின்னஞ்சல்கள் ஏதேனும் அறிகுறி காட்டுவது இருக்குமானால், அடுத்த நான்காண்டுகால பொதுக் கொள்கை இப்போதே மோசமான வகையில் மூடிய கதவுகளுக்கு பின்னால் வகுக்கப்படுகிறது என்பதாகும்” என New Republic ஆசிரியர் டேவிட் டேயன் எழுதினார். “மற்றும் தாராளவாதிகள் அந்த நிகழ்வுப்போக்கில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினால், தேர்தல் முடியும்வரை காத்திருப்பது என்பது மிக காலதாமதமானதாகும்.” எனவும் எழுதியுள்ளார்.