Print Version|Feedback
Escalating war games in the South China Sea
தென்சீனக் கடலில் தீவிரமாகும் போர் பயிற்சிகள்
By Peter Symonds
6 October 2016
வாஷிங்டனானது சிரியாவில் அதன் போர்த் திட்டங்களையும், ரஷ்யாவுடனான முரண்பாடுகளையும், அச்சுறுத்தும் வகையில் தீவிரப்படுத்திவரும் நிலையில், தென்சீனக் கடலானது அமெரிக்காவினாலும் அதன் கூட்டினராலும் செய்யப்படும் பரபரப்பான இராணுவப் பயிற்சிகளுடன், தொடர்ந்து ஒரு தீப்பற்றக்கூடிய புள்ளியாக இருந்து வருகிறது.
பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளை சீனாவுடனான அவர்களின் எல்லைப்புற முரண்பாடுகளில் மிக மூர்க்கமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஒபாமா நிர்வாகம் ஊக்குவித்திருப்பதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக தென் சீனக் கடலில் பதட்டங்கள் திடீரென்று மோசமடைந்து இருக்கின்றன. பதட்டம் தவிர்க்கப்பட்டிருந்த நிலையானது, சீனாவின் கடல்சார் உரிமைகோரல்களை அமெரிக்க ஆதரவு பிலிப்பைன்ஸ் சட்டரீதியாக சவால் செய்ததற்கு ஆதரவாக ஜூலையில் ஹேக் நகரில் உள்ள நிரந்தர நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து மோதல்நிலையை அடைந்தது.
வாஷிங்டனானது, தென்கிழக்காசிய நாடுகளுடன் இராணுவ உறவுகளை பலப்படுத்துவதற்கும் ஆசிய கூட்டாளிகள் தங்களது சொந்த இராணுவ உறவுகளை உறுதிப்படுத்துவதற்கு நெருக்குதல் கொடுப்பதற்கும் ஒரு மூடுதிரையாக “சுதந்திரமான கடல்வழி” என்பதை இப்போது சுரண்டிக் கொள்கிறது. தென் சீனக் கடலானது, சீனாவிற்கெதிரான பென்டகனின் வான், கடல் யுத்த மூலோபாயத்திற்கு முக்கியமானதாக இருக்கிறது. அது ஒரு கடல் முற்றுகையின் உதவியுடன், பிரதான சீன நிலப்பரப்பில் பேரளவிலான வான்வழிக் குண்டு மற்றும் ஏவுகணை வீசலை முன்நிழலிட்டுக் காட்டுகிறது.
அதன் விளவு தற்போது இடம்பெற்றுள்ள போர் பயிற்சிகள் சுட்டிக்காட்டுவது போல தென் சீனக் கடலில் இராணுவ நடவடிக்கையை ஆபத்தான வகையில் தீவிரப்படுத்தலாகும். இவற்றுள் அடங்குவதாவன:
* பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகியன தென்சீனக் கடல் உள்பட இப்பிராந்தியத்தில் மூன்று வாரங்களாக கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன. இதில் 1971ல் கையெழுத்திடப்பட்ட ஐந்து அரசுகள் பாதுகாப்பு ஒழுங்கு என்ற குடையின் கீழ் துருப்புக்கள், போர்க்கப்பல்கள், இராணுவ விமானங்கள் இடம்பெறல் சம்பந்தமான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டுள்ளன. இதன் கீழ் மலேசியா அல்லது சிங்கப்பூர் தாக்குதலுக்கு உள்ளானால் அதன் அங்கத்துவ நாடுகள் கலந்தாலோசிக்க கடமைப்பாடுடையதாகின்றன.
* இந்தோனேஷியாவானது தென்சீனக் கடலில் உள்ள அதன் நாதுனா தீவுகளுக்கு (Natuna Islands) அருகே என்றுமிராத அளவு அதன் மிகப் பெரிய விமானப் படை பயிற்சியை தற்போது நடத்தி வருகிறது. இந்த பயிற்சிகளில் 2000 க்கும் மேலான விமானப் படையினர் இடம்பெற்றுள்ளனர். இதில் ரஷ்யன் சுக்கோய் மற்றும் எப்-16 போர் விமானங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. நாதுனாக்கள் மீதான இந்தோனேஷியாவின் இறையாண்மையை சீனா உறுதிப்படுத்துகின்றபோதிலும், அதன் கடல்சார் உரிமைகோரல்கள் இந்தோனேஷியாவின் பிரத்தியேக பொருளாதர மண்டலத்தை இடைவெட்டிச் செல்கிறது. அது ஜூனில் சீன மீன்பிடி கலங்களுக்கும் இந்தோனேஷிய கடற்படைக்கும் இடையில் மோதல்களை விளைவித்தது.
* வாஷிங்டனுக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Rodrigo Duterte இற்கும் இடையில் அதிகரிக்கும் பதட்டங்கள் இருப்பினும், இரண்டு நாடுகளும் நீரிலும், நிலத்திலும் இறங்கும் பயிற்சிகள் சம்பந்தப்பட்ட இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டன. “இயற்கைப் பேரழிவு அல்லது மோதல் சந்தர்ப்பங்களின் பொழுது சிறப்பாக இயங்குவதற்கு தயாரிக்க” சுமார் 1400 கடற்படையினர் மற்றும் மாலுமிகள் 500 பிலிப்பைன் இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கினர். Duterte இப் போர் பயிற்சிகள் அமெரிக்காவுடனான கடைசியானதாக இருக்கும் என்று அறிவித்திருந்தார், ஆனால் அவரது குறிப்புக்கள் பிலிப்பைன்ஸ் பாதுகாப்புத்துறையால் மென்மைப்படுத்தப்பட்டது. அது அமெரிக்காவுடன் எதிர்கால பயிற்சிகளை இரத்து செய்தல் தொடர்பாக அது எந்த ஆணைகளையும் பெறவில்லை என்று அறிவித்தது.
* ஹனோய் உடன் இராணுவ உறவுகளை ஊக்குவிப்பதற்கான அமெரிக்க முயற்சியின் பகுதியாக, இரண்டு அமெரிக்க போர்க் கப்பல்களான வழியேகு ஏவுகணை அழிப்பான் USS John S. McCain மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் USS Frank Cable ஆகியவை வியட்நாமின் Cam Ranh குடாவிற்கு ஞாயிறன்று வருகை புரிந்தன. 1995ல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதன் பின்னரான அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மூலோபாய முக்கியத்துவமுடைய தளத்திற்கு வரும் அமெரிக்காவின் முதல் துறைமுக விஜயமாக இது இருந்தது. இந்த வருகையை தொடர்ந்து, கடந்த வாரம் தொடங்கிய கூட்டு கடற் பயிற்சியின் ஏழாவது சுற்று இடம்பெற்றது.
தென்சீனக் கடலிலும் ஆசியா முழுமையிலும் அமெரிக்க இராணுவக் கட்டமைத்தலுக்கு பதில் நடவடிக்கையாக சீனா ஒரு புறம் தனது சொந்த இராணுவத்தை ஊக்க்கப்படுத்திவரும் அதேவேளை, மறுபுறம் வாஷிங்டனுடன் இணக்கத்தை பெறவும் நாடுகிறது. சீனாவிலோ அல்லது சர்வதேச ரீதியிலோ தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் சார்பில் அல்லாமால் அதியுயர் செல்வந்த குழுவாட்சியின் நலன்கள் சார்பில் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் நடவடிக்கைகளில் முற்போக்கானது என எதுவும் இல்லை. தென்சீனக் கடலில் உள்ள கடல்திட்டுக்களில் மற்றும் பாறைகளில் மீண்டும் தனது உரிமையை உறுதிப்படுத்தும் விதமாக அவற்றை திருத்தி, பயன்படச் செய்தல் மற்றும் கடந்த மாதம் ரஷ்யாவுடன் சேர்ந்து கடற்படைப் பயிற்சி நடத்தியது உட்பட அதன் அனைத்து நகர்வுகளும் ஆசியாவில் தனது படைப்பெருக்கத்தை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்காவால் பற்றிக்கொள்ளப்பட்டதானது, யுத்த ஆபத்தைக் கூட்ட மட்டுமே செய்துள்ளது.
தென்சீனக் கடலில் அமெரிக்க மேலாதிக்கத்தை பாரமரிப்பதற்கான பென்டகனின் உறுதிப்பாடானது, அமெரிக்க பசிபிக் ஆணையகத்தின் முன்னாள் தளபதியும் தேசிய பாதுகாப்பு இயக்குனருமான, ஓய்வுபெற்ற அட்மிரல் டெனிஸ் பிளேயரால் நேரடியாகவே வெளிப்படுத்தப்பட்டது.
ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “Four Corners” நிகழ்ச்சியில் திங்களன்று பேசும்பொழுது பிளேயர் குறிப்பிட்டார்: “சீனர்கள் தங்களின் வழியில் சென்றால் மற்றும் தென்சீனக் கடல் முழுவதையும் தங்களின் சொந்த எல்லைப் பகுதியாக்கிவிட்டால், அவர்கள் அமெரிக்காவையும் இதர ஆயுதப் படைகளையும் அதன் உள்ளே செயல்படுவதிலிருந்து தடுக்கமுடியும். அதை அமெரிக்காவால் முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாது மற்றும் நாம் அது நடப்பதற்கு விடமாட்டோம்.”
துறைமுகங்கள் மற்றும் ஓடுபாதைகள் அமைத்தல் உள்பட, தென்சீனக்கடலில் சீனா உறுதிப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளை, சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு பெய்ஜிங் அதன் கடற் திட்டுக்களை இராணுவமயப்படுத்துகிறது என்று அமெரிக்கா திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டி வருகிறது. எவ்வாறாயினும், பிளேயர், “அங்கு நிறுவப்பட்டவற்றின் இராணுவ மதிப்பினை கருத்தில் எடுத்துக்கொள்ளாது ஒரு முக்கிய சண்டையில், அந்த (வசதிகளை) இல்லாதொழிப்பது 10 இலிருந்து 15 நிமிட வேலையாகத்தான் இருக்கும்” என்று கூறினார்.
தென்சீனக்கடலில் “தங்களுக்கு தேவைப்படும்பொழுது தமது ஆயுதப்படைகளை சர்வதேச வான்வெளிக்குள்ளும் நீர்ப்பரப்பிற்குள்ளும் அனுப்புவதை காட்டுதற்கு” தென்சீனக்கடலில் ஒரு கூட்டுக் கண்காணிப்பு ரோந்து செய்வதில் அமெரிக்காவுடன் சேர்ந்து கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவுக்கு அவர் விசேட அழைப்பு விடுத்தார். சீனாவால் தனது கடற்திட்டுக்களை சுற்றி உரிமைகோரப்படும் 12 கடல் மைல் எல்லை வரம்புக்குள்ளே ஊடுருவும் “தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரம்” எனும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அமெரிக்கா ஏற்கனவே நடத்திவருகிறது.
“மறுபுறத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் சமரசங்கள் செய்வதற்கும் எம்மைப் பொறுத்தவரை [அமெரிக்கா மற்றும் சீனா] குறிப்பிடத்தக்க ஒரு திறனின்மை நிலவுகிறது…… அத்தகைய உறவு கடந்த காலமும் தீவிரமடையக் கூடியதாக” இருந்தது என்று சுட்டிக்காட்டி யுத்தத்தின் அபாயங்கள் பற்றி அட்மிரலும் குறிப்பிட்டார். இதன் அர்த்தம் மோதலா என்று கேட்டதற்கு, அவர் சொன்னார்: “ஆமாம், ஆம்…. தவறாகப் புரிதல் பின்னர் பயம் மற்றும் மோதல்….” என்றார்.
நிகழ்ச்சி தொடர்பான ஒரு நேர்காணலும் செய்த, ஹவார்ட் கென்னடி பள்ளியிலிருந்து வரும், பேராசிரியர் Graham Allison பின்வருமாறு எச்சரித்தார்: “பொதுவாக நான் சொல்வேன் எழுச்சியடைந்துவரும் சக்தி ஒன்று ஆளுகின்ற ஒரு சக்தியை அகற்றுவதற்கு அச்சுறுத்தும் பொழுதான ஒரு காலகட்டத்தில் நீங்கள் இருந்தால்….. கடுமையான கட்டமைப்பின் அழுத்தம் இருக்கிறது, சிலர் போரை விரும்புகின்றனர் என்பதனால் அல்ல ஆனால் அதில் நிறைய விடயங்கள் தவறாகப் போகும்.….. தென்சீனக் கடலை யார் ஆள வேண்டும்? ஜி ஜின்பிங் நினைக்கின்றார் சீனாதான் என்று, அமெரிக்கர்கள், இல்லை, கடந்த 70 ஆண்டுகளாக மேலாதிக்கம் செய்யும் சக்தியாக நாங்கள் அங்கு இருந்து வருகிறோம் என்கின்றார்கள்….. ஒரு மோதலுக்கு இட்டுச்செல்வதானது ஒரு யுத்தமாக தீவிரமடைந்தால் ஒருவருக்கும் ஒருவித தேர்வும் இல்லை என்பதை இப்போது உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? கவலைக்குரிய விதத்தில் என்னால் பார்க்க முடிகின்றது.” என்றார்.
ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை தொடர்ந்து உறுதிப்படுத்துவதற்கு 2011ல் மேலோட்டமாக அறிவிக்கப்பட்ட, ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” அல்லது “மறுசமநிலைப்படுத்தல்” என்பது, இராணுவத்தை கட்டிஎழுப்பல் மற்றும் அத்தகைய இறுதி விளைவுக்காக திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கும். பென்டகனானாது, அதன் மிக நவீன தளவாடங்கள் உட்பட, வெளியில் உள்ள அதன் கடற்படையிலும், விமானப்படை வளத்திலும் 60 சதவீதத்தை, 2020 அளவிற்குள் ஆசிய-பசிபிக்கிற்குள் அனுப்புவதற்கு ஏற்கனவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஆஸ்டன் கார்ட்டர் புதிய வகையிலான, குறிப்பாக சீனாவிற்கெதிரான போருக்கு வடிவமைக்கப்பட்ட ஆயுத செயல்முறைகளின் அபிவிருத்தி உள்ளடங்கலான இராணுவ “மறுசமநிலைப்படுத்தலின்” “மூன்றாம் கட்டத்தை” அறிவித்தார்.
தென்சீனக்கடலில் பதட்டமிக்க தற்காலிக தணிவுநிலையை வாஷிங்டன் உருவாக்கியிருக்கின்ற நிலையில், சீனாவோ, அமெரிக்காவோ அல்லது அதன் கூட்டாளிகளுள் ஒன்றோ சம்பந்தப்படும், எந்த ஒரு நிகழ்வும் அல்லது எதிர்பாரா நிகழ்வும் இரு அணுவாயுத அரசுகளுக்கும் இடையில் ஒரு மோதலுக்கு இட்டுச்செல்லும். இது சங்கிலிபோலான தொடர் நிகழ்வுகளைத் தூண்டிவிடும் ஆபத்தை உள்கொண்டிருக்கிறது.