Print Version|Feedback
The Life and Times of Bill Brust
பில் பிரஸ்டின் வாழ்க்கையும் காலமும்
By David North
15 September 2016
மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியான பில் பிரஸ்ட் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக இதே தினத்தில் 1991, செப்டம்பர் 15 அன்று இறந்தார். டேவிட் நோர்த் வழங்கிய இந்த உரை 1991, அக்டோபர் 27 அன்று மினசோட்டாவின், மினெயபோலிஸ் நகரத்தில் பில் பிரஸ்டுக்காக நடத்தப்பட்ட நினைவஞ்சலிக் கூட்டத்தில் வழங்கப்பட்டதாகும்.
இரண்டு மாதங்களுக்கு சிறிது கூடுதல் காலத்திற்கு முன்பாக, ஆகஸ்டின் பிற்பகுதியில், நான் பில்லுடன் உரையாடியிருந்தேன். அதுதான் எங்களது கடைசி உரையாடலாக இருக்கக் கூடும் என நாங்கள் இருவருமே அறிந்திருந்தோம். இன்னும் சொன்னால், போய்வருகின்றேன் என கூறும் குறிப்பான நோக்கத்திற்காகத்தான் அவர் தொலைபேசியில் என்னுடன் உரையாட வந்திருந்தார். அவர் தனது நோயின் தன்மை குறித்து புரிந்து வைத்திருந்தார், தான் தனது இறுதிக் கட்டங்களில் இருப்பது குறித்து முழுமையாக தெரிந்திருந்தார்.
பில் பிரஸ்ட்
இருந்தபோதிலும், பில் தனது ஆளுமையின் இயல்பானதன்மையை மட்டுமல்ல, தனது புறநிலைப் பண்புகளையும் தொடர்ந்து பராமரித்திருந்தார். சோசலிசத்துக்கான போராட்டத்திற்கு தனது தனிப்பட்ட பங்களிப்பின் காலகட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது என்பதை அவர் அறிவார். ஆனால் அவர் தனது சொந்த வாழ்க்கையில் சாதித்த விடயங்கள் இளம் தலைமுறைகள் தொடர்ந்து கட்டியெழுப்ப வசதியான அடித்தளத்தை இடுவதற்கு உதவியிருந்தன என்பதில் அவர் உறுதி கொண்டிருந்தார். இந்த ஆழமான நம்பிக்கைதான் அவர் தனது மரணத்திற்கான உடனடி சாத்தியத்தை தீரத்துடனும் மனத்திடத்துடனும் எதிர்கொண்டதன் கீழமைந்திருந்ததாகும்.
அவர் தனது வாழ்க்கையின் இறுதி மாதங்களில் வெளிப்படுத்திய அதே தீரமும் வலிமையும், எங்களது முறை வரும்போது நாங்கள் மரணத்தை எதிர்கொள்கையில், எங்கள் அனைவருடனும் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அந்த கடைசி உரையாடலில் அவரிடம் கூறினேன். ஆயினும் அவர் மரணத்தை எதிர்கொண்டவிதமானது முந்தைய எழுபத்தியிரண்டு ஆண்டுகளின் சமயத்தில் அவர் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை வழிநடத்தியிருந்த அதேவிதத்தில் இருந்தே தோன்றியிருந்தது.
பில் பிரஸ்ட் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 1919 இல் பிறந்தார். அந்த ஆண்டு இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததொரு ஆண்டாகும், ஜேர்மனியில் ஸ்பார்டகாஸ் கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதுடன் தொடங்கிய அந்த ஆண்டில், பில் ஆழமான அர்ப்பணிப்புடன் நேசித்த வரலாற்றின் மிகச்சிறந்த இரண்டு பிரதிநிதிகளான ரோசா லுக்சம்பேர்க்கும், கார்ல் லீப்னெக்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கம்யூனிச அகிலம் ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டாகவும் அமெரிக்காவில் இரும்புத்துறையின் மாபெரும் வேலைநிறுத்தம் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்ட ஆண்டாகவும் அது இருந்தது. 1919 இன் நிகழ்வுகள் பில் பிரஸ்டின் வாழ்க்கையில் ஆற்றியது சாதாரண சிறிய பாத்திரமல்ல, ஏனென்றால் ஹங்கேரிய புரட்சி தோற்கடிக்கப்பட்டதற்கு பின்னர்தான், பில்லும் அவரது குடும்பமும் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து மினெயபோலிஸில் குடியேறினார்கள்.
ஐரோப்பாவில் பாசிசத்தின் எழுச்சி, பெருமந்தநிலை மற்றும் அமெரிக்காவில் CIO இயக்கத்தின் மேலெழுச்சி, அத்துடன் உலகப் போர் நெருங்கி வந்தமை ஆகியவற்றின் பின்புலத்தில்தான் பில்லின் இளமைக்காலமும் கல்விப்பருவமும் கடந்து கொண்டிருந்தது. இந்த காலகட்டத்தில் பொறுப்புமிக்க தலைமுறையின் மிகச்சிறந்த பிரதிநிதிகள் —பில் நிச்சயமாய் அவர்களில் ஒருவராய் கூறக் கூடியவர்— உலகத்தையும் அதில் தங்கள் பாத்திரத்தையும் குறித்து மிகத் தீவிரமாய் சிந்தித்தவர்களாய் இருந்தனர். அவர்கள் London, Dreiser, Dos Passos, Lewis ஆகியோரை வாசித்து, ஆளும் வர்க்கத்தின் உலகை வெறுக்கும் நிலைக்கு வந்திருந்தனர். இந்தப் படைப்புகளை வெறுமனே பொழுதுபோக்கிக் கொள்வதற்காக மட்டும் படிக்காமல், பதிலாய் கல்வியூட்டுவதற்காய் அவர்கள் படித்தனர். உலகின் அநீதிகளுக்கு உணர்ச்சிகரமாய் எதிர்வினையாற்றிய அவர்கள், மகத்தான வரலாற்று மற்றும் அறநெறிக் கோட்பாடுகளால் உயிரூட்டப்பட்ட ஒரு வாழ்க்கை மட்டுமே வாழத் தகுதியானதாகும் என்று நம்பினர். இத்தலைமுறையின் மிகவும் தொலைநோக்கான மற்றும் ஊடுருவும் பார்வை கொண்ட மனிதர்கள் அக்கோட்பாடுகளை மார்க்சிசத்தின் செவ்வியல் படைப்புகளில் கண்டனர்.
”சண்டைக்கிழுப்பது” ”மண்டைக்கனம் கொண்டது” என்று சார்ல்ஸ் வோக்கரால் விபரிக்கப்படும் நகரமான மினெயாபோலிஸ் நகரத்தில்தான் பில் வளர்ந்தார். பதின்மவயதுகளிலேயே அவர் மினசோட்டாவின் வரலாற்றிலும் பாரம்பரியங்களிலும் ஆழமாய் வேரூன்றியிருந்த தீவிரவாத ஜனரஞ்சகவாதத்தை கடந்து, தனது முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வுகளை விவசாயி-தொழிலாளி கட்சியால் வழங்கப்பட்டதை விடவும் கூடுதல் உறுதியான அடித்தளங்களின் மீது நங்கூரமிட முனைந்தார். 1934 ஆம் ஆண்டின் மினெயாபோலிஸ் பொது வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒழுங்கமைப்பதிலும் வழிநடத்துவதிலும் புரட்சிகரத் தலைமையின் தீர்மானகரமான பாத்திரத்தை எடுத்துக்காட்டியிருந்தது. ஆயினும் 1934 ஆம் ஆண்டின் மகத்தான வேலைநிறுத்தங்களில் டான் சகோதரர்கள் ஆற்றிய தீரமான பாத்திரத்தின் பின்னால் ஸ்ராலினிசத்திற்கு எதிரான சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டங்களில் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு இருந்தது என்பதை அறிந்திருக்கும் அளவுக்கான வயதும் அனுபவமும் அவருக்கு இருந்திருக்கவில்லை. ஆகவே, முதலில் பில் இளம் கம்யூனிஸ்ட் கழகத்தில் இணைந்தார். அக்டோபர் புரட்சி வேலைத்திட்டத்தையும் அதன் பாரம்பரியங்களையும் பாதுகாத்து நின்றது சோவியத் அரசின் தலைவர்களும், அவர்களது சர்வதேச பரிவாரங்களும் இல்லை, மாறாக ட்ரொட்ஸ்கியும் துன்புறுத்தப்பட்டு வந்த அவரது வழிவந்தவர்களும் தான் என்பதை மிகப் பக்குவமான பத்தொன்பதாவது வயதில் புரிந்து கொண்டுவிட்ட உடனேயே, பில், நான்காம் அகிலத்தின் ஒரு போராளியாகி விட்டார்.
அவர் எதிர்கொண்ட அத்தனை பெரும் அரசியல் கேள்விகளிலும் சம்பந்தப்பட்டிருந்த கோட்பாடு குறித்த இன்றியமையாத பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு, அவருக்கு மீண்டும் மீண்டும் இயலுமை தருவதாய் இருந்த இவ்வாறான அனைத்து அரசியல் கேள்விகளிலும் மிகக் கடினமானதான இந்த மிக முக்கியமான முடிவின் மூலமாக, பில், சமரசமற்ற நேர்மை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலனுக்கான தன்னலமற்ற அர்ப்பணிப்பு என்ற அவரது ஒட்டுமொத்த வாழ்வின் பாதையையும் தீர்மானிக்கவிருந்த அவரது சுபாவத்தின் அத்தியாவசியக் கூறுகளது ஆரம்ப வெளிப்பாட்டை அவர் எடுத்துக்காட்டியிருந்தார். அவரது அன்றாட வேலைகளில், நம் அனைவரையும் போலவேதான் பில்லும் பல தவறுகள் செய்திருக்கலாம். ஏதேனும் இரண்டாம்தர அரசியல் பிரச்சினையில், பில்லின் முடிவுகள் அவ்வப்போது துல்லியமற்றதாக அல்லது இன்னும் சொன்னால் தவறானதாகவும் கூட போயிருந்தன. ஆனாலும், அடிப்படைக் கோட்பாடுகள் குறித்த பிரச்சினை, தொழிலாள வர்க்கத்தின் மற்றும் அதன் புரட்சிகர முன்னணிப்படையின் அடிப்படை நலன்கள் குறித்த பிரச்சினை, சர்வதேச சோசலிச இயக்கத்தின் திசை மற்றும் தலைவிதி குறித்த பிரச்சினை, சுருக்கமாய் கூறினால் மனிதகுலத்தின் வாழ்வா-சாவா பிரச்சினைகள் என்று வந்துவிட்டால், பில் பிரஸ்ட் எப்போதும், அவரது மனைவி ஜீன் உடன்சேர்ந்து, தனக்குள் ஆழச் சென்று அத்தியாவசியமான பிரதிபலிப்பை கண்டுகொள்வார்.
பில் இளமையிலேயே சோசலிசத்திற்கு உறுதிபூண்டதும் கூட குறிப்பாக அசாதாரணமானது என்றெல்லாம் சொல்லி விட முடியாது. ரஷ்யப் புரட்சியில் உத்வேகம் பெற்று, அதனை 1930களது அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் எழுச்சியுடன் அடையாளம் கண்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர் அவர். ஆயினும், துல்லியமாக அவரது சோசலிச உறுதிப்பாடுகளின் ஆழமும் ஈடுபாடும்தான் பில்லை தனித்துவமானவராக காட்டியது. பழைய ஒழுங்கிற்கு எதிராக பரந்த மக்கள் ஒரு பகிரங்கமான போராட்டத்தில் இறங்கியிருந்த அந்த நாட்களில், ஒரு புரட்சிகரப் பதாகையின் கீழ் போராடுவது என்பது ஒரு விடயம், ஆனால் ஒரு நெடிய அரசியல் பிற்போக்குத்தனத்தின் காலகட்டத்திலும் கூட சோசலிச வேலைத்திட்டத்தையும் அதன் புரட்சிகரப் பாரம்பரியங்களையும் பாதுகாத்து நிற்பது முற்றிலும் வேறொரு விடயமாகும்.
CIO இயக்கத்தின் தீரம்மிக்க காலகட்டம் முடிவுக்கு வந்திருந்த சமயத்தில், பில்லின் வயது வெறும் முப்பது மட்டுமே ஆகியிருந்தது. ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகள் சர்வதேச அளவிலும் மற்றும் அமெரிக்காவிலும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதலாளித்துவத்திற்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்திருந்தது. CIO இயக்கத்தின் புரட்சிகர ஆற்றல்வளத்தை அழிப்பதற்காக தன் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்திருந்த அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கங்களுக்குள்ளாக வலது-சாரி தொழிற்சங்க அதிகாரத்துவம் அதிகாரத்தில் காலூன்றி நிற்பதற்கு வழிவகுத்துத் தந்திருந்தது. சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) ஸ்ராலினிசத்திற்கு எதிராக கோட்பாடுமிக்க நீண்டநெடியதொரு போராட்டத்தை நடத்தியிருந்தாலும் கூட முதலாளித்துவம் ஸ்திரப்பட்டதன் அரசியல் பின்விளைவுகளுக்கு அதுவும் தப்பமுடியவில்லை. பிற்போக்குத்தனமான அரசியல் காலநிலை நீண்டுசென்றமையானது தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக SWP இன் செல்வாக்கு பலவீனமடைவதற்கு இட்டுச் சென்றது. SWP இல், பில் மற்றும் ஜீன் போன்று, 1946 மற்றும் 1948க்கு இடையிலான தொழிற்சங்கப் போராட்டங்களில் ஒரு பிரதான பாத்திரம் வகித்திருந்த காரியாளர்கள், தாங்கள் தனிமைப்பட்டு விட்டதைக் கண்டுகொண்டனர்.
இவையே சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக சந்தர்ப்பவாதப் போக்குகளின் வளர்ச்சிக்கு ஒரு சாதகமான காலநிலையை உருவாக்கின. சோவியத் அதிகாரத்துவத்தின் மூலமாக அமைக்கப்பட்ட கைப்பாவை ஆட்சிகளைக் கொண்டு கிழக்கு ஐரோப்பாவில் முதலாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டமையானது, ஸ்ராலினிசத்திற்கு இன்னும் ஒரு முற்போக்கான பாத்திரம் இருந்ததையே காட்டியதாகக் கூறி ஐரோப்பாவில் பப்லோவும் மண்டேலும் வகுத்திருந்த திருத்தல்வாத சூத்திரங்கள், சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் இருந்த, புரட்சிகர இயக்கத்தை கட்டியமைப்பதை தவிர்த்து, ஒரு இலகுவான வழியைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு வசதியான மறைப்பை வழங்கியது. அமெரிக்காவில் பப்லோவாத பாதையின் ஆதரவாளர்களான கோக்ரானும் கிளார்க்கும் “பழைய ட்ரொட்ஸ்கிசத்தை விட்டொழிப்போம்” என்ற படுபயங்கரமான சுலோகத்தை தங்களது போர் முழக்கமாக்கினர். ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த சிந்தனைகளும் வேலைத்திட்டமும் பொருத்தமற்றவை, உண்மையான பரந்த மக்கள் இயக்கமாகச் சொல்லப்படக் கூடிய ஒன்றில் சோசலிச தொழிலாளர் கட்சியை ஒருங்கிணைய விடாமல் தடுப்பதற்கே அவை சேவை செய்திருந்தன என்று அவர்கள் பிரகடனம் செய்தனர். நான்காம் அகிலத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை பெருமளவில் மிகைப்படுத்துவதாக அறிவித்து ”மரபுவழி” ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்தவர்களை “அருங்காட்சியக பொருட்கள்” என்று கோக்ரான்வாதிகள் பரிகசித்தனர்.
பல வருடங்களுக்கு பின்னர்தான் நான் பில்லை சந்தித்தேன். ஆனாலும் கோக்ரான்வாதிகள், நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்திற்கும் பாரம்பரியங்களுக்கும் எதிராய் வீசிய நாகரிகமற்ற மற்றும் ஆணவமான அவமதிப்புகளைப் படித்து அவரது இரத்தம் எப்படிக் கொதித்திருக்கும் என்பதை என்னால் எண்ணிப் பார்க்க முடிகிறது. பில்லை பொறுத்தவரை, புரட்சிகர சிந்தனையின் பாரம்பரியமானது, அது பல தசாப்தகால கடுமையான போராட்டத்தின் மூலமாக அபிவிருத்தி செய்யப்பட்ட விதத்தில், மனிதகுலத்தின் மிகவும் விலைமதிக்க முடியாத செல்வமாகும், அது எப்பாடுபட்டேனும் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். இப்போது வீசுகின்ற அரசியல் காற்றுகள் தற்காலிகமாய் திசைமாறி அடிக்கின்ற காரணத்துக்காக, மார்க்சிசத்தின் புரட்சிகர முன்னோக்குகளின் செல்தகைமையை கேள்விக்குட்படுத்துவது, பில்லைப் பொறுத்தவரை, அரசியல் மற்றும் புத்திஜீவித்தன துரோகத்தின் மிக மோசமான வடிவமாய் இருந்தது.
பப்லோ-மண்டேல்-கோக்ரான் மேடையின் இரண்டு விடயங்களை பில் குறிப்பாய் அறவே வெறுத்தார். முதலாவதாய், நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியதைப் போல, ஸ்ராலினிசம் அதன் கடந்த காலக் குற்றங்கள் அனைத்தும் இருந்தாலும் கூட பொதுவில் உலக விவகாரங்களில் மற்றும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் வகிப்பதற்கு இன்னமும் கூட ஒரு முற்போக்கான பாத்திரம் இருந்தது என்று அவர்கள் கூறியதை அவர் வெறுத்தார். இளம்வயதில் இருந்தபோதே, தானே முன்நின்று ஸ்ராலினிசத்துடன் புத்திஜீவித மற்றும் அரசியல் கணக்கை முடித்துக் கொண்டவரான பில், ஸ்ராலினிசத்துக்கு எந்தவிதமான முற்போக்கு பாத்திரத்தையும் வழங்குவதற்கு சிறிதும் தயாராயில்லாதவராய் இருந்தார். ஸ்ராலினிஸ்டுகளால் கழுத்து நெரிக்கப்பட்ட புரட்சிகளையோ, அவர்களால் கொலை செய்யப்பட்ட புரட்சியாளர்களையோ அவரால் மறந்திருக்க முடியவில்லை. சோசலிசத்தின் வெற்றி சோவியத் அதிகாரத்துவம் மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் என்னும் ஊடகத்தைக் கொண்டு அல்ல, மாறாக அவற்றுக்கு எதிரான ஒரு தாட்சண்யமற்ற போராட்டத்தின் விளைவாகவே எட்டப்பட முடியும் என்பதில் பில் மிகத் தீர்மானகரமான உறுதி கொண்டிருந்தார். கிழக்கு ஐரோப்பாவில் —பில் பிறந்த ஹங்கேரி உட்பட— போலிஸ்-அரசு ஆட்சிகளை உருவாக்கியமை, அவரைப் பொறுத்தவரை, தொழிலாள வர்க்கத்தின் சோசலிச அபிலாசைகளுக்கு எதிராக ஸ்ராலினிசம் இழைத்த குற்றங்களின் ஒரு நெடிய பட்டியலில் இன்னுமொன்று மட்டுமே.
ஜீன் மற்றும் பில் பிரஸ்ட், 1989
பில் எதிர்த்து நின்ற திருத்தல்வாத மேடையின் இன்னொரு கூறு என்னவென்றால், சோசலிசப் புரட்சிக்கு தயாரிப்பு செய்வதிலும் அதன் வெற்றியிலும் புரட்சிகர மார்க்சிச கட்சி ஆற்றத்தக்க இன்றியமையாத பாத்திரத்தை அது உள்ளூர மறுத்து நின்றதாகும். பில்லை பொறுத்தவரை, இந்தப் பாத்திரம் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அப்போதிருந்த அமைப்புரீதியான ஒழுங்கமைப்பில் மட்டும் அடங்கியிருந்ததில்லை. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஒழுங்கமைப்பு என்பது, இறுதி ஆய்வில், அதன் புரட்சிகரக் கல்வி மற்றும் அறிவொளியின் விளைபொருளாய் அமைவதாகும் என்பதை பில் புரிந்து கொண்டிருந்தார். புரட்சிகரக் கட்சியின் பல தசாப்த கால பொறுமையான வேலையின் மூலமாக மட்டுமே, புரட்சிகர அமைப்பு மற்றும் போராட்டத்திற்கு நனவான உத்வேகத்தை வழங்கக் கூடிய மகத்தான விடுதலை எண்ணங்களை பரந்த தொழிலாளர்களுக்குள் கொண்டுசெல்ல முடிவதாய் இருந்தது.
புரட்சிகரக் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் குறித்த இந்த ஆழமான உட்பார்வையே, பில், 1953 இல் கோக்ரான்வாத பிளவுபடுத்துபவர்களுக்கு எதிராக மட்டுமன்றி, ஒரு புரட்சிகர அமைப்பாக இருந்த சோசலிச தொழிலாளர் கட்சி சிதைந்து மரணமடைய இட்டுச் சென்ற இப்போதைய அரசியல் அழுத்தங்களுக்கு எதிராகவும் உறுதியுடன் நிற்பதற்கு வழிசெய்தது என்றே நான் நம்புகிறேன். 1953 இல் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை சோசலிச தொழிலாளர் கட்சி எதிர்த்திருந்தது, ஆனால் அதற்கு நீண்டகாலத்திற்கு முன்பாகவே அதன் முதனிலை தலைவர்கள், ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே அவர்களை பப்லோவாதிகளுடன் மறுஇணைவு காண அழைத்துச் சென்று விட்ட நிலைப்பாடுகளை அபிவிருத்தி செய்யத் தொடங்கியிருந்தனர்.
சோசலிச தொழிலாளர் கட்சியின் சீரழிவு, பில் மற்றும் ஜீனுக்கு ஒரு கசப்பான மற்றும் கடினமான அனுபவமாய் இருந்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. குறைந்தபட்சம் 1953 இல், பழைய கட்சித் தலைவர்களான கனன், டான் மற்றும் லூயிட் ஆகியோர் பப்லோவாதிகளுக்கு எதிரான போராட்டத்தின் தலைமையில் இருந்திருந்தனர் என்ற ஆறுதலேனும் கிடைத்தது. ஆனால் ‘53 உடைவுக்குப் பின்னர், இந்த மரியாதைக்குரிய தலைவர்களும் கூட கண்கூடான வீழ்ச்சிப் பாதையில் இருந்தனர். பில் மற்றும் ஜீன் தம்மை உறுதியாக அடையாளம் கண்ட பழைய மினசோட்டா இயக்கம், உட்கட்சி கன்னை மோதலால் உலுக்கப்பட்டு சோசலிச தொழிலாளர் கட்சியின் நோக்குநிலை பிறழ்வை பிரதிபலித்தது. சோசலிச தொழிலாளர் கட்சியின் அரசியல் பாதையானது, மேலும் மேலும் பகிரங்கமாய் தீவிரப்பட்ட ஆர்ப்பாட்ட அரசியலை நோக்கியும், ஒருகாலத்தில் அது சமரசமற்று எதிர்த்துப் போராடி வந்திருந்த அதே அரசியல் சக்திகளுடன் கோட்பாடற்ற வகையில் சூழ்ச்சித் தந்திரங்கள் மேற்கொள்வதை நோக்கியும் சரிந்தது.
சோசலிச தொழிலாளர் கட்சியின் ஒட்டுமொத்த அரசியல் அங்கலட்சணமும் மாறத் தொடங்கியது. ஆரம்ப நாட்களில் ட்ரொட்ஸ்கியும், கனனும் போராடி வந்திருந்த “பாட்டாளி வர்க்க நோக்குநிலை”யானது நடுத்தர வர்க்கத்தை நோக்கிய ஒரு நோக்குநிலையை கொண்டு இடம்பெயர்க்கப்பட்டது. வர்க்கப் போராட்டத்தில் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக பொறுப்புகளில் அமர்த்தப்பட வேண்டும் என்று ட்ரொட்ஸ்கி ஒருமுறை வலியுறுத்தியிருந்தார்; ஆனால் திடீரென்று விசித்திரமான விதத்தில், மினசோட்டாவின் நோர்த்பீல்ட் கார்ல்டன் கல்லூரி (Carleton College) வளாகத்தில் இருந்து மர்மமான முறையில் - ஏனென்றால் இங்கு சோசலிச தொழிலாளர் கட்சி எந்த அரசியல் வேலையிலும் ஈடுபட்டிருந்திருக்கவில்லை - எடுக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஒரு குழுவைக் கொண்டு தலைமைப் பதவிகள் நிரப்பப்பட்டன. அதன்பின்னர், சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக எந்த விவாதமும் இல்லாமல் ஃபாரல் டோப்ஸ் St.Paul-Minneapolis ஆகிய நகரங்களில் தோன்றி, ’பிடெல் காஸ்ட்ரோ ஒரு “இயற்கையான மார்க்சிஸ்ட்”, அவர் கியூபாவில் ஒரு தொழிலாளர் அரசை உருவாக்கியிருந்தார்’ என்று அறிவித்தார். இது பில்லுக்கு அதிர்ச்சியளித்தது. ஏனென்றால் சோசலிசப் புரட்சியின் வெற்றியானது தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ட்ரொட்ஸ்கிச கட்சிகளைக் கட்டியெழுப்புவதில் தங்கியிருந்தது என்பதுதான் கோக்ரான் மற்றும் கிளார்க்குக்கு எதிரான 1953 ஆம் ஆண்டுப் போராட்டத்தின் அத்தியாவசியமான கூறாக இருந்தது என்றுதான் அவர் நம்பியிருந்தார். ஆனால் இப்போதோ, சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கும் தொழிலாளர் அரசுகளை உருவாக்குவதற்கும் ஒரு மார்க்சிசக் கட்சியும் தேவையில்லை, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் நடவடிக்கையும் தேவையில்லை என்று சோசலிச தொழிலாளர் கட்சி திட்டவட்டமாய் சொல்லிக் கொண்டிருந்தது. அதற்குப் பதிலாக, சிறிய குட்டி-முதலாளித்துவக் கெரில்லாக்களின் நடவடிக்கைகளின் மூலமாக சோசலிச முன்னோக்குகள் எட்டப்பட முடியும் என்பதே சோசலிச தொழிலாளர் கட்சியின் புதிய நிலைப்பாடாகி விட்டிருந்தது.
இந்த புதிய கோட்பாட்டை கேட்டு திகைத்த பில், தொழிலாள வர்க்கத்தின் விடுதலையானது தொழிலாள வர்க்கமே மேற்கொண்டு முடிக்க வேண்டிய பணியாகும் என்ற மார்க்ஸின் ஆகச்சிறந்த வழிகாட்டலுக்கு என்னவானது என்று திகைப்புற்றார். ஆனாலும், சோசலிச தொழிலாளர் கட்சியில் அவரைச் சுற்றி இருந்தவர்கள் மத்தியில், அவரது பழைய தோழர்கள் எல்லாம் இந்த விநோதமான மற்றும் வெறுமையான அரசியல் மற்றும் தத்துவார்த்த புதிய கண்டுபிடிப்புகளில் மகிழ்ந்திருந்தனர் என்பதைக் கண்டார். மார்க்சிசத்தின் அடிப்படையை கொண்டு, தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியூட்டவும் அதனை ஒழுங்கமைக்கவும் அவசியமில்லாமலேயே சோசலிசம் அடையப்பட முடியும் என்ற செய்தியை அவர்கள் அனைவரும் வரவேற்பதாய் அவருக்குத் தோன்றியது. அவர்களுக்கு தங்களின் தோள்களில் இருந்து பெரும் சுமை இறக்கி வைக்கப்பட்டு விட்ட மகிழ்ச்சி. சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைமை வகுத்தெடுத்த புதிய அரசியல் பாதையானது, அவர்களின் பழைய அரசியல் பொறுப்புகளில் இருந்து அவர்களுக்கு விடுதலையளித்திருந்தது.
அப்போது பில் நாற்பதுகளின் மத்தியில் இருந்தார். அவர் நினைத்திருந்தால் புதிய அரசியல் நிலைப்பாட்டுக்கு தன்னை தகவமைத்துக் கொண்டிருக்க முடியும், இன்னும் நடுத்தர வர்க்க ஆர்ப்பாட்ட அரசியலின் வட்டாரங்களில் சோசலிச தொழிலாளர் கட்சியின் பிரபலம் அதிகரித்துச் சென்றதை அனுகூலமாகவும் கூட ஆக்கிக் கொண்டிருக்க முடியும். ஆனால் களைத்துப் போய்விட்ட மற்றும் சுய-நியாயம் கற்பித்துக் கொள்கின்ற சமகால சகாக்களிடம் பொதுவாகி விட்டிருந்த பச்சோந்தி குணம், பில்லுக்கும் ஜீனுக்கும் இல்லாதிருந்தது. நடுத்தர வர்க்க வாழ்க்கையின் மூடத்தனத்திற்கும் அமெரிக்க முதலாளித்துவத்தின் கபடநாடகம் மற்றும் மோசடிக்கும் சமரசப்பட்டுப் போகின்ற எந்த எண்ணமும் அவருக்கு இருக்கவில்லை. ஆகவே பில் துணிச்சலான மற்றும் தீர்மானகரமான வேறொரு நடவடிக்கையை எடுத்தார். 1963 இல் ஐரோப்பாவில் பயணம் செய்து கொண்டிருந்த சமயத்தில் பிரிட்டிஷ் SLL இன் தலைவராக பத்தாண்டுக்கு முன்பு பப்லோவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் கனன் உடன் நெருக்கமாய் வேலைசெய்திருந்த ஜெர்ரி ஹீலியின் தொடர்பு பில்லுக்கு கிடைத்திருந்தது. ஹீலி உடன் விவாதித்ததன் அடிப்படையில், சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக பப்லோவாதத்திற்கு தலைமை அடிபணிந்ததை எதிர்த்து நின்றிருந்த ஒரு சிறிய போக்குடன் - அச்சமயத்தில் டிம் வோல்ஃபோர்த் தலைமையின் கீழிருந்தது - தொடர்பு கொள்ள பில் முடிவு செய்தார்.
அச்சமயத்தில் பில்லின் கண்ணோட்டங்கள் மற்றும் குணநலன் குறித்த ஒரு மதிப்புமிக்க பார்வை 1963 அக்டோபரில் அவர் எழுதிய ஒரு கடிதத்தில் கிடைக்கப்பெறுகிறது:
”இந்த இயக்கத்தில் தனிப்பட்ட முறையில் 25 வருடங்களைக் கழித்திருக்கின்ற ஜீனும் சரி நானும் சரி, ஒரு நடுத்தர வர்க்க இயக்கத்தினது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருந்த நேர்மையான தீவிரமயப்பபட்டவர்களால் தலைமை கொடுக்கப்பட்டாலும் கூட, ஒரு உண்மையான பாட்டாளி வர்க்கக் கட்சியாக பரிணாம வளர்ச்சி கண்டு ஒரு தொழிலாளர் அரசை உருவாக்க முடியும் என்பதான முன்மொழிவை எளிதாகவோ அல்லது கட்சியின் மிகவும் மரியாதைக்குரிய தலைவர்கள் சொல்வதின் பேரிலோ ஏற்றுக் கொள்ள இயலாத அளவுக்கு மூத்த மனிதரின் -லியோன் ட்ரொட்ஸ்கி- சிந்தனைகளால் சிலவேளை ’சித்தாந்தசலவை’ செய்யப்பட்டவர்களாய் இருந்திருந்தோம்.”
ஏராளமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட தோழர்கள் மற்றும் நண்பர்களுடன் அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் முறித்துக் கொள்வது என்பது பில்லுக்கு அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. ஆனாலும் பில் அவரது முன்னுரிமைகளை அறிந்திருந்தார்; நட்பு பில்லுக்கு மதிப்புமிக்கது தான், ஆனால் உண்மை அதனினும் மதிப்புமிக்கது. அவர் ஒரு இதமான, பண்பான மற்றும் தாராளமனம் படைத்த மனிதர் தான்; ஆனால் ஒரு கோட்பாடுடைய மனிதரும் ஒரு போராளியும் கூட. அவர் வெறுமனே எதேச்சையான மற்றும் தற்செயலான படிமங்களால் உண்டாகும் வெறும் அபிப்ராயங்களை உதிர்ப்பவராக இருக்கவில்லை, மாறாக ஐந்துக்கும் குறையாத மொழிகளில் அவர் மேற்கொண்டிருந்த ஆய்வு மற்றும் தனிமனித அனுபவம் ஆகியவற்றின் ஒரு ஆழமான கலந்துரையாடலின் மூலமாக உருவாக்கப்பட்டிருந்த மன உறுதிகளைக் கொண்டவராய் இருந்தார்.
பில்லைப் பொறுத்தவரை, கற்பது, ஆய்வு செய்வது மற்றும் போராடுவது அனைத்துமே ஒரு ஒன்றுபட்ட மொத்தத்தின் பகுதிகளே. அரசியலுடன், இலக்கியத்திலும் அவருக்கு பெரும் ஈடுபாடு இருந்தது, அதனை அவர், நான் ஏற்கனவே கூறியது போல, பொழுதுபோக்கும் நோக்கத்திற்காக படிக்கவில்லை, மாறாக மனிதகுலத்தின் வாழ்க்கை மற்றும் அது முகம்கொடுத்த கடமைகள் ஆகியவை குறித்த ஒரு செழுமையான உட்பார்வையை பெறுவதற்காக அவர் படித்தார். குறிப்பாக ஜேர்மன் இலக்கியம் அவருக்கு விருப்பமானதாக இருந்தது. கோத்த இன் (Goethe) எழுத்துக்களில் பில்லுக்கு ஆதர்சமானதும் அவரது புத்திஜீவித்தன தோற்றத்தை வெளிப்படுத்தியதுமாக அமைந்த ஒரு வாக்கியத்தை காணலாம். கோத்த எழுதினார்: ”புரிந்து கொள்ள முடியாதது புரிந்துகொள்ளக் கூடியதே என்ற திடமான உறுதியை மனிதன் தாங்கிப் பிடிக்க வேண்டும், ஏனென்றால் அதில்தான் கற்பதற்கும் ஆய்வு செய்வதற்குமான உந்துசக்தி அமைந்திருக்கிறது.”
தனது வாழ்வின் கடைசி இருபத்தியைந்து ஆண்டுகளை வேர்க்கர்ஸ் லீக்கின் ஒரு உறுப்பினராய் அவர் செலவிட்டார். அவர் எங்கள் இயக்கத்திற்குச் செய்திருக்கக் கூடிய பங்களிப்புகளின் முழு எல்லைகளையும் ஒரே கூட்டத்தின் வரம்புக்குள் சொல்லி விடுவது என்பது எனக்கோ அல்லது வேர்க்கர்ஸ் லீக் மற்றும் அனைத்துலகக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கோ நிச்சயமாக சாத்தியமானதில்லை. பில்லின் மரணத்தில் நாங்கள் ஒரு அன்பிற்கினிய மற்றும் மரியாதைக்குரிய தோழரை இழந்திருக்கிறோம் என்று நான் கூறுகின்றபோது, நான் எனக்காக மட்டும் இதைக் கூறவில்லை, உலகெங்கிலும் உள்ள எமது கட்சியின் அங்கத்தவர்கள் சார்பாகவே கூறுகிறேன்.
ஒஸ்கார் மற்றும் கெர்ட்ரூட் ஹிப்ப ஆகிய ஜேர்மன் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை ஜீன் மற்றும் பில் சென்று சந்தித்தனர், 1989
நாம் பில்லுக்கு, அத்தோடு ஜீனுக்கும் என்பதை நான் சேர்த்துக் கூறியாக வேண்டும், பெரும் கடமைப்பட்டிருக்கிறோம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பில்லும் ஜீனும் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் ஆற்றிய வேலையின் காரணத்தாலேயே நாம் இன்று இங்கே நின்று கொண்டிருக்கிறோம். ஜீனுக்கு இது ஏற்க சிரமமான ஒன்றாக இருந்தாலும், இதுவே உண்மை. வேர்க்கர்ஸ் லீக்கின் வரலாறு பில் மற்றும் ஜீன் பிரஸ்டின் பணிகளுடன் பிரிக்கவியலாது பிணைந்துள்ளது. தனது நடைமுறை செயல்பாடுகள் மூலமாக கட்சி வேலைகளில் அவர் அளித்த அன்றாட பங்களிப்புகளை மட்டும் மனதில் கொண்டு நான் இதனைக் கூறவில்லை. பில், வேர்க்கர்ஸ் லீக் மற்றும் அனைத்துலகக் குழுவிற்குள்ளாக ஒரு தார்மீக வலிமை என்பதன் மிக ஆழமானதொரு அர்த்தத்தில் இருந்து வந்திருந்தார். எங்களை பொறுத்தவரை, சர்வதேச சோசலிசத்துடன் நாங்கள் அடையாளம் கண்ட புனிதமான பாரம்பரியங்கள் மற்றும் கோட்பாடுகள் அத்தனையின் உருவடிவமாகவும் அவர் திகழ்ந்திருந்தார். நமது இயக்கத்தின் வரலாற்றில் ஒவ்வொரு நெருக்கடி தருணத்திலுமே, பில்லின் கண்ணோட்டங்கள் மற்றும் தீர்ப்புகள் மீது நாங்கள் மிகப்பெரும் மதிப்பை வைத்திருந்தோம்.
நிறைவாக, சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகின்ற ஒரு கேள்வியை எழுப்பலாம் என்று கருதுகிறேன். உடனிருந்த பலரும் வழிமாறிச் சென்றபோது, பில் மட்டும் தாக்குப்பிடித்து நிற்க முடிந்தது எவ்வாறு? மற்ற பலரும் நொருங்கிப் போகக் காரணமாய் இருந்த அந்த பிரம்மாண்டமான அழுத்தங்களை எதிர்த்து நிற்க இந்த மனிதருக்கு சாத்தியத்தை கொடுத்தது எது? அரசியல் இயக்கங்களுக்கும் அந்த இயக்கங்களுக்குள்ளாக வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் ஒரு பிரதானமான பாத்திரத்தை ஆற்றிய மனிதர்களுக்கும் இடையிலான உறவினை பகுப்பாய்வு செய்வதும் புலனாய்வதும் எப்போதுமே சிரமம் தான். ஆயினும், பில் உடனடித் தருணத்திற்கான பிரச்சினைகளைக் கடந்து பார்க்கும் திறன் பெற்றிருந்தார் என்பதைக் கண்டிப்பாய் கூறியாக வேண்டும். பில் அன்றாட சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றிய, இரத்தமும் சதையுமாய் ஆழமாய் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய, அத்துடன் மற்ற எவரொருவரையும் போலவே ஏற்ற இறக்கங்களைக் கண்டிருந்த ஒரு மனிதர் தான். ஆனாலும் அவர் ஒருபோதும் அத்தருணத்தின் பிரச்சினைகளில் தன்னைத் தொலைத்ததில்லை. பில் எப்போதும் வரலாற்றின் படிப்பினைகளில் இருந்தே முடிவுகளுக்கு வந்தார். அத்துடன் அவர் முந்தைய தலைமுறைகளின் சமூக மற்றும் வரலாற்று அனுபவங்களது படிப்பினைகளை தனது சொந்த நடவடிக்கையில் பிணைத்துக் கொள்வதற்கும் முனைந்தார்.
வயதைப் பிரதிபலிக்கும்விதமாக நடந்து கொள்பவரே பெரிய மனிதர் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆயினும், ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் மட்டுமே அது பொருத்தமாக இருக்கிறது. ஒருவர் வாழ்ந்த காலகட்டத்தின் பாரபட்சங்களை (les préjugés) அப்படியே பிரதிபலிப்பது மற்றும் அதன் மிகவும் மூடத்தனமான உந்துதல்களின் ஊடாக செல்வதும் என்பது ஒரு விடயம். அதன் ஆழமான சக்திகள் மற்றும் மறைந்திருக்கும் உட்சாரத்தை விளங்கிக்கொள்வது என்பது முற்றிலும் தனியான வேறொரு விடயமாகும். ஆனால் பில் நிச்சயமாக அப்படியான ஒரு மனிதராக இருந்தார். உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்: நமது காலத்தை மிக ஆழமாகப் பிரதிபலிப்பது யார் - வரலாற்றின் மிகப்பெரும் சமூகப் போராட்டங்களுடன் பிணைந்ததாக தனது வாழ்க்கையையும் அனுபவங்களையும் கொண்டிருந்த பில் பிரஸ்டா, அல்லது ஏதாவது ஒரு ஊழல் மோசடியில் பின்னால் மறக்கப்பட்டுபோகின்ற வரையிலும் மலிவான விளம்பரப் புகழை அனுபவிக்கின்ற மூளையற்ற பிரபலங்களும் திவாலான முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க அரசியல்வாதிகளுமா? மனிதகுலத்தின் முனைவுகளைப் பிரதிநிதித்துவம் செய்வது பில் பிரஸ்டுகளா அல்லது பில் கிளின்டன்களா? பில்லின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமானதாகும். அதனால் தான், பில் பிரஸ்ட் இறந்து விட்டிருந்தாலும் கூட, அவர் மறக்கப்படமாட்டார். உலகெங்கிலும் இருந்து பில் பிரஸ்டுக்கு எழுதியிருந்த பதினாறு வயது, பதினேழு வயது மற்றும் பதினெட்டு வயது இளைஞர்கள், அவரது வாழ்க்கையின் கடைசி 40 ஆண்டுகளில் எந்த நிலைமைகளின் கீழ் அவர் போராடத் தள்ளப்பட்டிருந்தாரோ அதற்கு மிகவும் மாறுபட்ட பல்வேறு நிலைமைகளின் கீழ், அவரது கோட்பாடுகளுக்காக தொடர்ந்து போராடவிருக்கிறார்கள். காலங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. நாம் மீண்டும் மாபெரும் எழுச்சிகளின் ஒரு சகாப்தத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். ஏராளமான முறை காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கின்ற சர்வதேச சோசலிசத்தின் உன்னத இலட்சியம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களிலும், நமது சொந்த இயக்கமான அனைத்துலகக் குழுவின் வேலைகளிலும் மறுபிறப்பு எடுத்துக் கொண்டிருக்கிறது.
அனைத்துலக் குழுவின் சார்பாக சோவியத் ஒன்றியத்திற்கு விஜயம் செய்யும் சிறப்பான பெருமை எனக்கு கிட்டுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக பில் பிரஸ்ட் காலமாகி விட்டிருந்தார். இந்தப் பயணத்தின் போது, கியேவ் நகரில் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர் குழு ஒன்றினை ஒன்றுதிரட்டுவதும் சோவியத் ஒன்றியத்தில் அனைத்துலகக் குழுவின் ஒரு புதிய பிரிவினைக் கட்டியெழுப்புவதற்குமான அடித்தளங்களை இடுவதற்கான ஒரு கூட்டத்தை ஒழுங்கமைப்பதும் சாத்தியமாகி இருந்தது. பில் இருந்திருந்தால் இந்தக் கூட்டம் குறித்து மிகப் பெருமிதம் கொண்டிருந்திருப்பார் ஏனென்றால் அதற்குத் தயாரிப்பு செய்வதற்கு அவர் நிறைய உழைத்திருந்தார். இந்த இயக்கத்தின் நினைவுகளில் பில் பிரஸ்ட் என்றும் வாழ்வார். தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் அவர் தொடர்ந்து வாழ்வார். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தீரம் மற்றும் வலிமைக்கான ஒரு மாபெரும் உதாரணமாக அவர் என்றென்றும் திகழ்வார். இங்கிருக்கும் நாம் அனைவரும், அவருடன் இணைந்தியங்கிய, அவரைத் தெரிந்திருந்த, மற்றும் அவரால் தோழர்களாக கணக்கில் கொள்ளப்பட்ட தனித்துவம் பெற்றவர்கள். வருகின்ற காலங்களில் நாம் செய்கின்ற ஒவ்வொன்றும் அவர் நம்மீது வைத்திருந்த நம்பிக்கையை நிரூபணம் செய்வதாக இருக்கும்.
இந்த உரை பில் பிரஸ்டுக்கான நினைவஞ்சலிகள் மற்றும் பில் பிரஸ்டின் எழுத்துக்கள் அடங்கிய தொகுப்பான கோட்பாடுகளின் பாதுகாப்பு: பில் பிரஸ்டின் அரசியல் மரபு என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.