Print Version|Feedback
Aleppo, Mosul and “war crimes”
அலெப்போ, மொசூலும் "போர் குற்றங்களும்"
Bill Van Auken
28 October 2016
சிரியாவிலுள்ள வடக்கு நகரமான அலெப்போவில் ரஷ்யாவினது நடவடிக்கைகளுக்காக அதன் மீது மேற்கத்திய சக்திகள் போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருக்கின்ற நிலையில், நடந்து வரும் சிரியா போர் மீதான கசப்பான கருத்து பரிவர்த்தனை புதனன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் நடந்தேறியது.
ஐ.நா. நிவாரண உதவிகளுக்கான தலைவரும் மற்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் முன்னாள் டோரி கட்சி அங்கத்தவருமான Stephen O’Brien, பாதுகாப்பு அவையினது நடவடிக்கை எடுக்க திராணியற்றத்தன்மை குறித்து அவரே "சீற்றத்தின் சுவாலையாக" இருப்பதாக அறிவித்து, “அலெப்போ இன்றியமையாத விதத்தில் ஒரு கொலைக்களமாக மாறியுள்ளது” என்றார்.
ரஷ்ய மற்றும் சிரிய போர்விமானங்கள், கிழக்கு அலெப்போவை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள, அல் கொய்தா இணைப்பு கொண்ட போராளிகள் குழுக்களுக்கு எதிரான அவர்களது தாக்குதல்களை கடந்த 10 நாட்களாக நிறுத்தி உள்ளன என்ற உண்மை, ஏகாதிபத்திய "மனித உரிமைகள்" பாசாங்குத்தனத்திற்கு வாழும் உதாரணமாக விளங்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் சமந்தா பௌவர் ஆல் உதறிவிடப்பட்டது.
ரஷ்ய தூதர் விடாலி சுர்கினைக் கடிந்துரைத்து அப்பெண்மணி அறிவிக்கையில், “நீங்கள் ஒரு நாளோ அல்லது ஒரு வாரமோ போர் குற்றங்களைப் புரியவில்லை என்பதற்காக உங்களுக்கு நன்மதிப்புகள் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்காது,” என்றார். அவரது பழியுரைகளை தொடர்கையில், “கிழக்கு அலெப்போவின் எல்லா குழந்தைகளையும் ரஷ்யா அல் கொய்தாவின் அங்கத்தவர்களாக கருதுகிறதா?” என்று பௌவர் கேள்வி எழுப்பினார்.
அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளின் கதியைக் குறித்த இத்தகைய சீற்றம் பெரிதும் பாரபட்சமானதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளின் பிரதிநிதிகள் யாருமே, அரசு கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு அலெப்போவில் கொல்லப்படும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஒரு சிறிதும் சீற்றம் கொள்ளவதில்லை, அங்கே பெண்டகன் மற்றும் சிஐஏ ஆல் அல் கொய்தா "கிளர்ச்சியாளர்களுக்கு" வழங்கப்பட்ட சிறுபீரங்கிகள் மற்றும் ராக்கெட்டுகளை கொண்டு வழமையாக குண்டுவீச்சு நடத்தப்படுகிறது.
வியாழனன்று மக்கள்தொகையில் பாரிய பெரும்பான்மையினர் வசிக்கும் அந்நகரின் மேற்கில் நடந்த ராக்கெட் குண்டுவீச்சில் ஆறு குழந்தைகள் கொல்லப்பட்டனர். மூன்று சிரிய குழந்தைகள் அவர்களது பாடசாலையிலேயே உயிரிழந்தனர், அங்கே ஏனைய 14 மாணவ/மாணவியர் காயமடைந்தனர். மற்றொரு தாக்குதலில், வீட்டை ஒரு ராக்கெட் தாக்கியதில் மூன்று இளம் சகோதர்களது உயிரிழந்தனர்.
ஏகாதிபத்தியவாதிகளது மனித உரிமைகளைப் பொறுத்த வரையில், அமெரிக்க விமானத் தாக்குதலால் சிரியாவின் வேறு இடங்களில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது அலெப்போவில் ரஷ்ய குண்டுகளால் ஏற்படும் உயிரிழப்புகளுடன் எந்தவிதத்திலும் ஒப்பிடக்கூடிய விடயமாக இல்லை.
அமெரிக்க தலைமையிலான "கூட்டணியின்" வெவ்வேறு 11 தாக்குதல்கள் குறித்து செவ்வாயன்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை (Amnesty International) வெளியிட்ட ஓர் அறிக்கையில், சுமார் 300 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அது அறிவித்தது. இந்த குண்டுவீச்சு நடவடிக்கைகளில் ஒரேயொரு உயிரிழப்பை மட்டுமே பெண்டகன் ஒப்புக் கொண்டது. சிரியாவில் அமெரிக்க விமானப் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை ஏனைய கண்காணிப்பு குழுக்கள் 1,000 க்கும் அதிகமாக எடுத்துக்காட்டுகின்றன. ஒட்டுமொத்தமாக, இரண்டாண்டுகளில் வெறும் 55 பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக பெண்டகன் கூறுகிறது. ரஷ்யர்கள் அலெப்போவின் ஒவ்வொரு குழந்தைகளையும் ஒரு அல் கொய்தா அங்கத்தவராக பார்க்கின்றனர் என்று எதிராளி மீது பழிசுமத்தும் பௌவரின் பழியுரை அதேயளவிற்கு பெண்டகனுக்கும் பொருந்தும், இதன் குண்டுகள் ISIS அங்கத்தவர்களை மட்டுமே கொல்வதுபோலுள்ளது.
பௌவர் இவ்விதமான விகாரமான இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றிய ஒரு அனுபவஸ்தர் ஆவார். மனித உரிமைகளுக்கான இந்த புனிதப்போராளி, 2013 இல் 2,100 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்று மேற்கொண்டு 11,000 பேரை காயப்படுத்திய 51 நாள் இஸ்ரேலிய முற்றுகையின் போது, “காசாவில் ஒவ்வொரு குழந்தையும் ஹமாஸ் இன் அங்கத்தவராக உள்ளது" என்ற பயனுள்ள நிலைப்பாட்டை எடுத்தவராவார். இந்த ஒருதரப்பு படுகொலையின் போது, அந்த அமெரிக்க தூதர் தன்னைத்தானே "பாதுகாத்து" கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை இடைவிடாது பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையில் அவர் வகித்த பதவியைப் பயன்படுத்தினார்.
அருவருப்பான ஏகாதிபத்திய மனித உரிமைகள் பாதையை முன்னெடுத்துள்ள அப்பெண்மணி, லிபியாவில் பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு அந்நாடே இடிபாடுகளாக விடப்பட்ட அமெரிக்க-நேட்டோ போர், அத்துடன் 300,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு, மில்லியன் கணக்கானவர்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற தள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான சிரிய போர் ஆகியவற்றின் முன்னணி ஆதரவாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.
அலெப்போ குறித்து ரஷ்யாவிற்கு எதிரான போர் குற்ற கண்டனங்களின் பாசாங்குத்தனம் மற்றும் இரட்டை நிலைப்பாடு, 2014 இல் ISIS ஆல் கைப்பற்றப்பட்ட கிழக்கிலிருந்து வெறும் 300 மைல் தூரத்தில் அமைந்துள்ள ஈராக்கிய நகரம் மொசூல் மீது இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க தலைமையிலான முற்றுகை தொடங்கியதுடன் மிகப்பொருத்தமாக இருக்கின்றது.
அலெப்போவை ஒரு "கொலைக்களமாக" மாற்றியதற்காக ரஷ்யர்கள் மீது குற்றஞ்சுமத்தப்படுகின்ற அதேவேளையில், மேற்கத்திய ஊடகங்கள் வழமையாக மொசூல் மீதான அமெரிக்க படுகொலையை "சுதந்திரத்திற்காக" நடத்தப்படுவதாக குறிப்பிடுகின்றன. அதற்காக அமெரிக்க போர்விமானங்களும், ராக்கெட் வீசிகளும் மற்றும் கனரக பீரங்கிப்படைகளும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உள்ள அந்நகர் மீது ஈவிரக்கமின்றி குண்டுமழை பொழிகின்றன, இது அந்நகரை இடிபாடுகளாக மாற்றிவிடுமென பகுப்பாய்வாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையக தலைவர் ஜெனரல் ஜோசப் வொடெல் AFP உடனான ஒரு பேட்டியில் கூறுகையில், அவரது படைகள் "800 இல் இருந்து 900 இஸ்லாமிய அரசு போராளிகளைக்" கொன்றிருப்பதாக பெருமைபீற்றினார். அந்த அமெரிக்க குண்டுவீச்சில் எத்தனை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதைக் குறித்து அவர் ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை; அல்லது அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களும் அவ்விடயம் குறித்து எந்த ஆர்வமும் காட்டவில்லை.
கொடூரமான சம்பவம் ஒன்று —அதாவது கடந்த வெள்ளியன்று கிர்குக்கிற்கு அருகில் ஒரு ஷியா மசூதி மீது குண்டுவீசப்பட்டதில் 17 பெண்கள் மற்றும் குழந்தைகள் கொலைப்பட்டதுடன், பலர் காயமடைந்த சம்பவம்— வெளிச்சத்திற்கு வந்தபோது, பெண்டகன் அதை உதறிவிட்டது, ஊடகங்கள் பெரிதும் அதை இருட்டடிப்பு செய்தன.
அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கான ஒரு சலித்துப்போன பொய்காரணமான, மொசூல் மக்களை ISIS “மனித கேடயங்களாக” பயன்படுத்துகின்றது என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினாலும், பத்திரிகைகளும் அதையே கிளிப்பிள்ளை போல திரும்ப சொன்னாலும் கூட, முற்றுகையிடப்பட்ட கிழக்கு அலெப்போவின் அண்டைப்பகுதிகளில் இருந்து அப்பாவி மக்கள் தப்பிப்பதில் இருந்து அவர்களைத் தடுக்க, அல் கொய்தா அதன் கொடூரங்கள் மற்றும் வன்முறையை பயன்படுத்துவதை அவர்கள் மறைமுகமாக ஆதரிக்கின்றனர் மற்றும் அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.
கிழக்கு அலெப்போவில் சிக்கிய அப்பாவி மக்களுக்கு எதிராக ரஷ்ய இராணுவம் நடத்திய நடவடிக்கைகள் ஐயத்திற்கிடமின்றி கண்டிக்கத்தக்கது தான் என்றாலும், போர் குற்றங்கள் குறித்து கூச்சலிடுபவர்களின் நிஜமான கவலை அவை கிடையாது. ஆட்சி மாற்றத்திற்கான போரில் முதன்மை பினாமி படையாக சேவையாற்றும் அல் கொய்தா இணைப்பு கொண்ட போராளிகள் குழுக்கள் ஒரு இறுதி தோல்வியை முகங்கொடுத்துள்ளனரே என்பது தான் அவர்களது அச்சம்.
மிக அடிப்படையாக, அப்பிராந்தியத்திலும், அவ்விடயமாக, உலகெங்கிலும் வாஷிங்டன் நடத்திய குற்றங்களுடன் ஒப்பிடுகையில் அலெப்போவில் ரஷ்ய குற்றங்கள் மங்கி விடுகின்றன.
சிரியா மீது வீசப்பட்ட ரஷ்ய குண்டுகள் குறித்து அதிர்ச்சியும் சீற்றமும் காட்டுபவர்கள், 1 மில்லியன் என்று மதிப்பிடப்பட்ட ஈராக்கியர் உயிர்களை பறித்த அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் "அதிரடி-ஆக்கிரமிப்பை?” மறந்துவிட்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா வழங்கிய குண்டுகள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு நடத்தப்பட்ட, பெண்டகனிடம் இருந்து பாரிய உளவுத்தகவல்கள் மற்றும் படைத்தளவாட உதவிகளால் சாத்தியமாக்கப்பட்ட, சவூதி விமானத் தாக்குதலில் 10,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட, யேமனில் நடந்துவரும் படுகொலை குறித்து இந்த மனித உரிமைகளுக்கான பாதுகாவலர்களுக்கு தெரியாதா? மத்திய கிழக்கின் மிக செல்வசெழிப்பான நாட்டின் ஆளும் முடியாட்சியால் அப்பிராந்தியத்தின் மிக வறிய ஒரு நாட்டின் மீது நடத்தப்பட்ட போர் குறித்த ஏன் அங்கே எந்த சீற்றமும் இல்லை? இதில் படைத்துறைசாரா உள்கட்டமைப்பு திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது மற்றும் அமெரிக்க படைகளுக்கு உதவியாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு முற்றுகையால் அம்மக்கள் பட்டினியால் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
போர் குற்றங்கள் என்று வருகையில், விளாடிமீர் புட்டின் ஆல் பிரதிநிதித்துவம் செய்யப்படும் கிரெம்ளின் செல்வந்த தட்டு சிறிய அணியாகவே உள்ளது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் சுமார் 200,000 ஐ பேரை கொன்ற அமெரிக்க அணுகுண்டுகள் வீசப்பட்ட இரண்டாம் உலக போர் முடிந்ததில் இருந்து, நடைமுறையளவில் ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் போர் குற்றங்களை உள்ளடக்கிய இராணுவ ஆக்கிரமிப்பு போர்களில் ஈடுபட்டுள்ளனர், மிகப் பெரியளவிலான அத்தகைய போர்களில் பல ஹிட்லரின் மூன்றாம் ரைஹ் ஆல் நடத்தப்பட்ட அட்டூழியங்களையும் கூட விஞ்சிவிட்டது.
கொரிய போர் 3 மில்லியன் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதில் போய் முடிந்தது; வியட்நாமில், அமெரிக்கா சுமார் 3 இல் இருந்து 4 மில்லியன் பொதுமக்களை கொன்றது. 1980 களில் ஆட்சி மாற்றத்திற்காக சிஐஏ முடுக்கிவிட்ட போரிலிருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆப்கானிஸ்தான் துயரம் மற்றும் நீடித்த எதிர்தாக்குதல், 1.5 மில்லியனில் இருந்து 2 மில்லியனுக்கும் அதிகம் என்பதற்கு இடையிலான எண்ணிக்கையில் உயிர்களைப் பறித்தது.
இதற்கிடையே வாஷிங்டன் குறைந்தபட்சம் ஏழு வெவ்வேறு நாடுகளில் போரில் ஈடுபட்டுள்ளது, அங்கே நாளாந்தம் தொடர்ந்து அப்பாவி மக்களின் படுகொலைகள் நடந்து வருகின்றன: ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, லிபியா, யேமன் மற்றும் சோமாலியா.
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க போர் தோல்வியடைந்துள்ளது என்ற உண்மையே அலெப்போ மீதான பாசாங்குத்தனமான சீற்றம் மற்றும் கண்ணீருக்கு ஆதாரமாக இருக்கிறது. மாஸ்கோ சிரிய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அல்ல, ரஷ்யாவின் ஆளும் முதலாளித்துவ செல்வந்த தட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே அதன் தலையீட்டைத் தொடங்கியது. எவ்வாறிருப்பினும், எண்ணெய் வளம் மிகுந்த ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் அதன் மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான அமெரிக்க உந்துதலுக்கு அதுவொரு தடையாக முன்வந்துள்ளது.
அலெப்போ விவகாரத்தில் இந்த இடைவிடாத "மனித உரிமைகள்" பிரச்சாரம் மற்றும் ரஷ்யாவை பூதாகரமாக சித்தரிப்பதானது ஒரு எச்சரிக்கையாக நிற்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், சிரியாவில் அமெரிக்க தலையீட்டுக்கு மட்டுமல்ல, மாறாக ஒரு நிஜமான அணுஆயுத போர் அபாயத்தைக் கொண்டுள்ள ரஷ்யாவுடனான அதன் மோதலுக்கான ஒரு பிரதான தீவிரப்பாட்டுக்கும் தயாரிப்பு செய்து வருகிறது.