Print Version|Feedback
Tamil National Alliance backs austerity, pro-investor policies in Sri Lanka
தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கையில் சிக்கனத்திட்ட, முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை ஆதரிக்கிறது
By K. Nesan
11 January 2016
இந்த ஆண்டு ஆரம்பிக்கையில், இலங்கையின் தமிழ் தேசியவாத அமைப்புகள் சிக்கனத் திட்டத்திற்கும், இலங்கை தொழிலாளர்களை சர்வதேச மூலதனத்திற்கான மலிவு கூலி தொழிலாளர்களாகள் ஆக்குவதற்குமான அவர்களது ஆதரவினை தீவிரப்படுத்தி உள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு முன்னணி பாராளுமன்ற பிரதிநிதி மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு, “வடக்கு, கிழக்கில் நாம் பல்வேறு அபிவிருத்திகளை, பொருளாதார வலயங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதற்கான காலம் தற்போது எட்டியுள்ளது” என்று தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் யாழ்பாணத்தில் உள்ள பலாலி விமானத்தளத்தை ஒரு சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு முறைப்படுத்தப்பட்ட அரசாங்க வரவு-செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரித்து ஒரு சில வாரங்களின் பின்னர் சேனாதிராஜாவின் இந்த அறிக்கை வெளியாகியது.
சேனாதிராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான தமிழரசுக் கட்சிக்கு தலைமை தாங்குகிறார். பாரம்பரியமாக தமிழரசுக் கட்சி, அது 1949 இல் உருவாக்கப்பட்டதிலிருந்து, கொழும்பில் அடுத்தடுத்து உருவாக்கப்பட்ட அரசாங்கங்களது பொருளாதார முன்மொழிவுகள் மீது எந்த நிலைப்பாடும் எடுக்க மறுத்து, “முதலில் அரசியல் உரிமைகள்" என்ற ஒரு கொள்கையை பிரதிநிதித்துவப்படுத்தியது. சேனாதிராஜாவின் அறிக்கையுடன், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை மூர்க்கமாக சுரண்டுவதில் தமிழ் முதலாளித்துவ வர்க்கம் அதன் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கிவைத்து சிங்கள முதலாளித்துவ வர்க்கத்துடன் கைகோர்க்கும் நோக்கத்தினை சமிக்ஞை செய்கிறது.
இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஒரு எதிர்க்கட்சி தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னணி தலைவரான சம்பந்தன் ஆவார்.
அரசாங்கத்திற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவுக்கு எதிராக, தமிழ் மக்களிடையே அதிகரித்துவரும் எதிர்ப்பின் முன்னால், பல பாராளுமன்ற அங்கத்தவர்கள் வரவு-செலவு திட்டத்திற்கு அவர்கள் காட்டும் ஆதரவுக்கு பிரதி உபகாரமாக அரசியல் கைதிகளை விடுவிக்கும் கோரிக்கையினை வைக்குமாறு ஆலோசனை வழங்கினர். சம்பந்தன் "நீண்ட பயணமொன்றை பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவசரப்பட்டு அரசுடனான தொடர்புகளை துண்டித்து விட முடியாது" “எனக் கூறி, அவர்களது விசனங்களை நிராகரித்தார்.
வரவு-செலவு திட்டத்தின் இதயமாக இருப்பது, தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான சலுகைகளாகும். ஏற்றுமதிகளை பொருளாதாரத்தின் "முதுகெலும்பாக" குறிப்பிட்டு, அந்த வரவு-செலவுத் திட்டம் "வெளிநாட்டு நேரடி முதலீட்டை" ஈர்க்க கூடுதல் தாராளமயமாக்கலுக்கு வாக்குறுதி வழங்குகின்றது. “ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்யும்" வகையில் வரி சேகரிப்பு அதிகரிக்கப்பட உள்ளது. இந்த சகல புள்ளிகளும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதைக் குறிக்கின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு முன்னணி பாராளுமன்ற பிரதிநிதி சுமந்திரன், அந்த வரவு-செலவு திட்ட முன்மொழிவுகளை பாராட்டினார். அவர் தெரிவித்தார், “வட-கிழக்கு அபிவிருத்திகளுக்கு நாம் இதைவிட பெரியளவிலான வரவு-செலவு திட்டத்தை விரும்பினாலும், 2016 இல் வட கிழக்கின் போர் அழிவுகளில் இருந்து மீட்டு எடுக்கும் ஒரு நன்கொடையாளர் மாநாடு குறித்த வாக்குறுதியுடன், இது கொண்டு வரப்படுவதால் இதை நாங்கள் பாராட்டுகின்றோம்” என்றார்.
தமிழ் மாகாணங்களில் 20,000 வீடுகள் கட்டித்தருவது மற்றும் ஒரு செம்மண் தொழிற்சாலை அமைப்பது ஆகியவற்றுடன், இப்போதிருக்கும் வைத்தியசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களை சிறிதளவில் மேம்படுத்துவதை வரவு-செலவு திட்ட முன்மொழிவுகள் உள்ளடக்கி இருந்தன. முந்தைய அரசாங்கத்தின் கீழும் இதேபோன்ற சில திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாலும், அதிலிருந்து கணிசமான நலன்கள் எதுவும் சாதாரண மக்களுக்கு சென்று சேரவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த திட்டங்கள் இலங்கையில் போரினால் நாசமாக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க அறவே போதுமானதல்ல, அங்கே பெருந்திரளான மக்கள் இன்னமும் வறுமையின் பிடியில் தான் வாழ்கிறார்கள். குறைந்தபட்சம் 65,000 வீடுகளாவது மீள்கட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது அத்துடன் இலங்கையின் வேறு எந்த பகுதியை விடவும் இங்கே வேலைவாய்ப்பின்மை, வறுமை விகிதங்கள் அதிகமாகும்.
“நன்கொடையாளர் மாநாடு" வட இலங்கையை மறுகட்டுமானம் செய்து, உள்நாட்டு போரின் அழிவுகளிலிருந்து மீண்டுவர வழிவகுக்கும் என்று சுமந்திரன் சொல்வது இன்னொரு பொய். அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின். ஏகாதிபத்திய சார்பு அரசியலுக்கு மூடுதிரை வழங்குகிறார். அரசாங்கத்தினது பொருளாதார வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பை உந்துவது தமிழ் முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஒரு சிறிய மத்தியதர வர்க்க அடுக்கின் சுயநல நலன்கள் மட்டும் தான்.
இந்த மாநாடு பெப்ரவரி 2002 இல் தொடங்கிய நோர்வேயின் மத்தியத்திலான சமாதான பேச்சுவார்த்தைகளுடன் இணைந்திருக்கின்றது. செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு சற்று பின்னர், அப்போதைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு போர்நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட நிர்பந்திக்க "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" கையில் எடுத்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அது தொடர்ந்தும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்வது உட்பட்ட பலவற்றை விட்டுக்கொடுத்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்கேற்புடன் முதல் மாநாடு டிசம்பர் 2002 இல் ஓஸ்லோவில் நடந்தது. ஏப்ரல் 2003 இல் வாஷிங்டனில் நடந்த இரண்டாவது கூட்டத்திற்கு புலிகள் அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டிருந்தததால் அழைக்கப்படவில்லை. ஒரு "சம பங்காளியாக" மதிக்கப்படவில்லை என்று கூறி புலிகள் டோக்கியோவில் நடந்த அடுத்த மாநாட்டில் இருந்து பின்வாங்கியது. இந்த டோக்கியோ மாநாடு, மறுகட்டமைப்பிற்காக 4.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு உறுதியளித்தாலும், அதன் அடிப்படை நோக்கம் புலிகளை பலவீனப்படுத்துவதும் இலங்கையில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துவதுமாக இருந்தது.
நிதி திரட்டுவதற்கு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து இலங்கையின் Daily News பத்திரிகை கேள்வி எழுப்பியது: “யதார்த்தத்தில் இன்றைக்கு தேசிய நிலைமையும் புவிசார் அரசியல் நலன்களும் பாரியளவில் வேறுபட்டுள்ளது, இந்த நன்கொடையாளர் மாநாடு ஒரு யதார்த்தம் ஆவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கின்றது, அது நடந்தாலும் கூட, மறுகட்டமைப்புக்கு தேவையான ஒரு சிறிய நிதியுதவி வேண்டுமானால் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கலாம்.”
இப்படி ஒரு மாநாட்டில் இருந்து கிடைக்கும் நிதியுதவிக்கான வாக்குறுதிகளை, புலிகளின் 2009 தோல்விக்குப் பின்னர் உருவாகியுள்ள அரசியல் நிலைமைகள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் மூலோபாயத்தை முழுமையாக சார்ந்திருக்கும் ஓர் அரசாங்கத்தை நிறுவுதற்காக கடந்த ஆண்டு நடந்த அமெரிக்கா-வடிவமைத்த ஆட்சி மாற்ற உள்ளடக்கத்தில் இருந்து மட்டுந்தான் மதிப்பிட முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சகல பிரதான பாராளுமன்ற கட்சிகளும் தீவிரமாக வலது பக்கத்தை நோக்கி நகர்ந்து செல்கின்ற அப்பட்டமான நிதி மூலதனத்தின் பிற்போக்குத்தனமான சேவகர்களாக உருவெடுக்கின்றன.
இப்படியான ஒரு மாநாடு நடந்தாலும், அதில் கிடைக்கும் எந்தவொரு தொகையும் ஒடுக்கப்பட்ட ஏழைகளது அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட போவதில்லை. உதவிகளின் பெரும் பகுதி சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகளின் மூலம் மலிவு கூலிக்கு உழைப்பை சுரண்டும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கே சேவையாற்றும்.
ஒரு சிறியளவிலான நிதியுதவி கிடைத்தாலும் கூட, நன்கொடையளிப்பு நாடுகள் கேட்கும் "நவதாராளவாத பொருளாதார சீர்திருத்தங்கள்", பெருந்திரளான மக்களின் வாழ்வை இன்னும் மோசமாக்க மட்டுமே செய்யும். “நன்கொடையளிப்பு நாடுகளது கொள்கைகளும் மற்றும் அரசு கொள்கைகளும் அரசுதுறைசாரா அமைப்புகள் தலைமையிலான திட்டங்கள் மற்றும் ஏனைய திட்டங்கள் மூலமாக சிறு கடனுதவி உட்பட்ட சுய வேலைவாய்ப்பு திட்டங்களை நோக்கிய ஏற்பாடுகளையே ஊக்குவிக்கின்றன, உண்மையில் இவை அதிக மட்டத்திலான கடன்சுமை, குடும்ப சொத்துக்கள் மற்றும் நிதியாதாரங்கள் அழிவதற்கே இட்டுச் செல்கின்றன” என்பதையும் Daily News குறிப்பிடுகின்றது.
கடன்சுமை மக்களிடையே பரவி வருவதாக யாழ்பாண வர்த்தக சபை தெரிவிக்கிறது: “யாழ்பாண மக்கள் நிதி நிறுவனங்களுக்கும், அடமானக்கடன் நிறுவனங்களுக்கும் வட்டி கொடுத்து தீர்க்க வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.” உள்நாட்டு போர் முடிந்ததற்குப் பின்னர், யாழ்பாண தீபகற்பம் எங்கிலும் டஜன் கணக்கான வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன, அவை நுகர்வு பொருட்களுக்கும் அல்லது வியாபாரம் தொடங்குவதற்கும் கடன் கொடுக்கின்றன. பெண்களுக்கான ஒரு வர்த்தக சபையின் ஸ்தாபகர் ஜதுசன் கூறுகையில், பால்வளத்துறை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள 120 அங்கத்தவர்கள் நாளாந்தம் அண்ணளவாக 600 லிட்டர் பால் சேகரிக்கின்றனர், "இந்த பண்ணையிலிருந்து நாங்கள் நெஸ்டல் நிறுவனத்திற்குப் பால் வினியோகிக்கிறோம், ஆனால் அவர்கள் எங்களுக்கு மிகவும் குறைவான விலை தான் கொடுக்கிறார்கள்” என்று குறைபட்டுக் கொண்டார்.
நாடங்கிலும் 45 “பொருளதார அபிவிருத்தி மண்டலங்களை" அமைக்க கொழும்பு திட்டமிட்டு வருகிறது. இந்த மண்டலங்கள், "உற்பத்தி, தொழில்நுட்பம், சேவைகள், விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறைக்குள் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதன் மூலமாக" அமைக்கப்படும். அதாவது, கொழும்பு ஒவ்வொரு துறையிலும் கட்டுப்பாடின்றி மலிவு கூலி உழைப்பைச் சுரண்டுவதற்கு சர்வதேச மூலதனத்திற்கு சுதந்திரத்தினை வழங்குகின்றது.
ஹாங்காங் வர்த்தக அபிவிருத்தி கவுன்சில் (HKTDC) அதன் வலைத் தளத்தில் எழுதும் போது, கொழும்பு பிரதான உலக வர்த்தக பாதைகளின் மத்தியில் உள்ளது என்பது தான் இலங்கையில் தயாரிப்பு செய்வதில் இருக்கும் அனுகூலம். அப்பிராந்தியத்தில் இலங்கை சற்றே அதிக கூலிகளைக் கொண்டிருந்தாலும், அதன் உற்பத்திகளுக்கு நல்ல தரமான மதிப்பு உள்ளது. தொழிலாளர்கள் துரிதமாக உற்பத்திக்குத் தேவையான உயர் தரங்களை வழங்க படித்துக் கொள்கிறார்கள் என்றது குறிப்பிட்டது. “உயர்ரக பொருட்கள் மீது வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யவும், நிறுவனத்திற்கு உயர் இலாபகர வரம்புகளை பெறவும் அவர்கள் உதவக்கூடியவர்களாக இருக்கிறார்கள்,” என்றும் அது குறிப்பிட்டது.