Print Version|Feedback
Sri Lanka: plantation workers accuse trade unions of being agents of companies and the government
இலங்கை: தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் கம்பனிகளின் முகவர்களாக செயற்படுவதாக தோட்டத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்
By M. Thevaraja
08 January 2016
தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வுக்காக எந்தவொரு போராட்டத்தையும் நடத்துவதைக் கைவிட்டு, தேயிலை தொழிற்துறையின் நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதில் தோட்ட கம்பனிகளதும் முதலாளித்துவ அரசாங்கத்தினதும் முகவர்களாக செயற்படுவதாக இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பும் கோபமும் வளர்ந்து வருகிறது.
முந்தைய கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சம்பளத்தினை 620 ரூபாவில் (அமெரிக்க டாலர் 4.37) இருந்து 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரினர். தோட்டக் கம்பனிகள் எந்தவொரு ஊதிய உயர்வினையும் நிராகரித்துடன் தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பெரும் தாக்குதலாக இருக்கக் கூடிய ஒரு ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றன.
உத்தேச "வருவாய் பங்கு" முறைமையின் கீழ் தொழிலாளர்கள் பங்கு ஊழியர்களாக மாற்றப்படுவதோடு அவர்களது ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) உட்பட சமூக உரிமைகளை இழப்பர். அத்துடன் தொழிலாளர்களது வருமானம் அவர்கள் கம்பனிகளுக்காக உற்பத்தி செய்யும் வருமானத்திலேயே தங்கியிருக்கும். இந்த ஒப்பந்த முறைமை தொடர்பாக வளர்ந்து வரும் எதிர்பின் மத்தியிலும், தொழிற்சங்கங்களதும் அரசாங்கத்தினதும் ஆதரவுடன் தோட்டக் கம்பனிகள் இதை தந்திரமாக அமுல்படுத்த முயற்சிக்கின்றன.
உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் குழு, கடந்த வாரம் நுவரெலியா மாவட்டத்தின் சாமிமலையில் உள்ள ஓல்டன் தோட்டத்துக்கும் டிக்கோயாவில் ஃபோர்டைஸ் தோட்டத்திற்கும் சென்றிருந்தனர்.
ஓல்டன் தோட்டம் ஹொரனை பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமானதாகும். இங்கு சுமார் 1,100 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஃபோர்டைஸ் தோட்டம் களனிவெளி பெருந்தோட்டத்தின் கீழ் இயங்குகின்றது. இங்கு கிட்டத்தட்ட 1,200 தொழிலாளர்கள் உள்ளனர். மேற்படி தோட்டங்களில் தொழிலாளர்கள் மாதம் ஒன்றிற்கு 75 சதவீதம் வேலைக்குச் சென்றிருந்தால் சராசரி சம்பளம் 12,000 ரூபாய்க்கு குறைவாகவே பெறுகின்றனர். சில தொழிலாளர்கள் ஆறு அல்லது ஏழு ஆயிரம் ரூபாயும் பெறுகின்றனர்.
இந்தக் குழுவினர் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) இலங்கை தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க ஒரு சோசலிச முன்னோக்கு என்ற அறிக்கையையும் விநியோகித்தனர்.
WSWS உடன் பேசிய பல தொழிலாளர்கள் முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்த முறைக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் கம்பனிகளதும் முதலாளித்துவ அரசாங்கத்தினதும் முகவர்களாக தொழிற்சங்கங்களின் பாத்திரத்தை கண்டனம் செய்தனர். மேலும் அவர்கள் தங்களுடைய தாழ்ந்த சமூக நிலைமை மற்றும் வேலை நிலைமைகள் பற்றி புகார் செய்தனர்.
டிக்கோயா போர்டைஸ் தோட்டத்தை சேர்ந்த பி. சுமதி (34) மூன்று பிள்ளைகளின் தாயார் ஆவார். "தோட்டத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகத்துடன் ஒத்துழைக்கின்றன. அவர்கள் நிர்வாகத்துடன் இரகசியமாக சந்தித்து, ஒப்பந்த முறையை இரகசியமாக அமுல்படுத்தும் திட்டங்களை தீட்டுகின்றனர்,” என அவர் கூறினார்.
பழைய தேயிலைச் செடிகளை அகற்றுதல், தேயிலை நடுதல், கவாத்து வெட்டுதல் மற்றும் கைவிடப்பட்ட தோட்டத்தை துப்பரவு செய்தலும் ஒப்பந்தத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன, என்று அவர் கூறினார். அந்த ஒப்பந்தங்கள் தொழிற்சங்க தலைவர்களிடம் கொடுக்கப்பட்டது. ஒப்பந்த முறைமையின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு 450 ரூபா மட்டுமே பெருகின்றனர். பல ஒய்வு பெற்ற தொழிலாளர்கள் இந்த குறைந்த ஊதிய வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். “தேயிலை கொழுந்து பறிப்பவர்கள் 1 கிலோவுக்கு 30 ரூபா பெறுகின்றனர், ஆனால் அவர்களுக்கு வேறு எந்த நன்மையும் கிடையாது. இந்த முறைமையின் கீழ் நிர்வாகத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் அதே வேளை, தொழிலாளர்கள் தங்களின் சலுகைகளை இழப்பர். நாம் இது பற்றி எதேனும் கேள்வி எழுப்பினால் அவர்கள் எங்களை பிரச்சினையை கிளப்புபவர்கள் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்,” என அவர் கூறினார்.
"கம்பனிக்கு கடந்த ஆண்டு பத்து கோடியே எட்டு இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் கூறியது. உங்களுக்கு கொழுத்த இலாபம் வந்த போது எவ்வளவு தொகையை உங்கள் பைகளில் போட்டுக்கொண்டீர்கள் என எங்களிடம் என்றாவது கூறியிருக்கின்றீர்களா? எமக்கு கணக்கு விபரங்களை காட்டவேண்டும் என நாம் கேட்டோம். அதற்கு பதில் இல்லை.” என அவர் மேலும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், எமக்கு போதுமான சுகாதார வசதிகள், வீட்டு வசதிகள் இல்லை மற்றும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவும் குறைந்த மட்டத்திலான சம்பளத்தில் கிடைக்கும் வருமானமும் உணவு, பிள்ளைகளின் பாடசாலைச் செலவுகளை சமளிப்பதற்கு கூட போதுமானதக இல்லை என்றார். ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர். “செப்டம்பர் 21 அன்று நாம் இந்த பிரச்சினைக்காக எங்கள் பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினோம். ஆனால் அதை பொலிஸ் நிறுத்திவிட்டது. எமக்கு யாருமே உதவி செய்யவில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் தேர்தல் நேரம் மட்டுமே வருவார்கள் பின்னர் எம்மை மறந்து விடுவார்கள்.”
போர்டைஸ் தோட்டத்தின் மற்றுமொரு பெண் தொழிலாளி, தான் அண்மையில் ஒரு விபத்தில் சிக்கியதால் வேலை செய்வதில்லை என்றும் கணவர் மட்டுமே வேலை செய்கின்றார் என்றும் கூறினார். “நாம் இருவரும் வேலை செய்தாலும் கூட எமது செலவுகளை சமாளித்துக்கொள்ள முடியாது. இப்போது கம்பனி புதிய ஒப்பந்த முறைமைக்குத் தயார் செய்து வருகின்றது, ஒவ்வொரு தொழிலாளிக்கும் 3000 தேயிலைச் செடிகளை கையளிக்கவிருக்கிறது. தொழிலாளர்கள் அதை பரமரித்து கொழுந்து பறித்து கொடுக்க வேண்டும். சந்தை விலைப்படியே எமக்கு பணம் வழங்கப்படும், அத்துடன் நாம் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியையும் இழக்க நேரிடும். இதன் பின்னர் எங்கள் வருமானத்திற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது”.
தொழிற்சங்கம் பயனற்றது. அவர்கள் மாதத்திற்கு ஒரு தொழிலாளியிடம் இருந்து 150 ரூபாய் பெற்று இலட்சக்கணக்கான ரூபாய்களை தமது பணப்பையில் நிரப்பிக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் தொழிலாளர்களின் துன்பங்கள் குறித்து கவலைப்படுவதில்லை. என் கணவர் உட்பட 10 தொழிலாளர்கள், சங்கத்திற்கு வழங்கும் சந்தாவை நிறுத்தக் கோரி முகமையாளருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்" என அவர் மேலும் தெரிவித்தார்.
அதே தோட்டத்தைச் சேர்ந்த கே. பக்கியம் (66) ஓய்வுபெற்ற தொழிலாளி ஆவார். அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று தற்பொழுது தோட்டத்தில் தற்காலிகமாக வேலை செய்வதாக கூறினார். "நான் தேயிலை கொழுந்து பறிக்கிறேன். அவர்கள் ஒரு கிலோவிற்கு 30 ரூபா தான் கொடுக்கின்றனர். இன்று நான் 10 கிலோ பறித்தால் என்னுடைய கூலி 300 ரூபாய். இந்த பணத்திலேயே நான் என்னுடைய அனைத்து செலவுகளையும் சமாளிக்க வேண்டும்.”
ஓல்டேன் தோட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி அங்கு கடுமையான வேலை நிலைமைகளை விளக்கினார். “இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் கடுமையான சிரமங்களை சந்திக்கின்றனர். நாம் அட்டை கடியை தாங்கிக்கொண்டு குளவித் தாக்குதலையும் எதிர்கொள்கிறோம். நாம் மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கே வாக்களித்தோம் ஆனால் எங்கள் வாழ்க்கை நிலைமைகளில் எந்த மாற்றமும் இல்லை மாறாக நிலைமை மோசமடைந்து வருகின்றது. சகல தொழிற்சங்கங்களும் பொய்யர்கள். தேர்தலின் போது தொழிற்சங்க தலைவர்கள் எங்கள் தோட்டத்திற்கு வந்து மரியாதை செய்தனர். தேர்தல் முடிந்த பின்னர் அந்த பொய்யர்களை காணவில்லை. யாருமே எங்கள் ஊதிய உயர்வு பற்றி பேசுகிவதில்லை.
சாமிமலை ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையை வாசித்து அதனுடன் முற்றிலும் உடன்படுவதாக கூறினார்கள். “தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுதலை பெற்றுத்தர சோசலிசம் அவசியம். நாங்கள் உங்களின் வேலைத்திட்டங்கள் மற்றும் சோசலிச முன்னோக்கு பற்றி மேலும் உங்களுடன் கலந்துரையாட விரும்புகின்றோம்,” என அவர்கள் தெரிவித்தனர்.
கலந்துரையாடலில் பங்குபற்றிய ஒரு ஆசிரியர், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒரு புதிய புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதும் சர்வதேச சோசலிசத்திற்காக போராடுவதும் அவசியம் என்று கூறினார்.