Print Version|Feedback
Tamil nationalists stage sham protest vs. Sri Lankan president’s visit to Jaffna
இலங்கை ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையையொட்டி தமிழ் தேசியவாதிகள் ஏமாற்று ஆர்ப்பாட்டத்தை அரங்கேற்றுகின்றனர்
By Subash Somachandran and K. Nesan
15 January 2016
கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வருகை தரவிருந்ததற்கு முன்னர், புதனன்று தமிழ் தேசியவாதிகள் ஒரு அடையாள ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பாரம்பரியமான ஒரு இந்து மதப் பண்டிகையான “தைப்பொங்கல்” பண்டிகை நிகழ்வுகளில் சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் பங்கேற்கவிருக்கின்றனர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்பதும் அனுமானிக்கக் கூடியதாகும்.
இந்த வருகைக்கு இரண்டு நாள் முன்னதாய் நடைபெற்ற இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது சிறிசேன அரசாங்கத்தை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்குநிலைக்கு ஒரு மூடிமறைப்பை வழங்குவதற்கான ஒரு அவமானகரமான சூழ்ச்சியாகும். வட மாகாண பாராளுமன்ற அங்கத்தவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர். அவருடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) செயலர் செல்வராசா கஜேந்திரனும் ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையை பிரதானமாக விளம்பரப்படுத்திய TamilNet, சிவாஜிலிங்கத்தை அரசாங்கத்தினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் ஒரு அரசியல் எதிர்ப்பாளனாக சித்தரித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க “மக்களுக்கு கோரிக்கைவிட்டது”.
இத்தனை விளம்பரம் அளித்தும் கூட, யாழ்ப்பாண நகர மையத்தில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு 30க்கும் குறைவானவர்களே வந்திருந்தனர். இந்த குறைவான வருகைப்பதிவே, ஒரு வருடத்திற்கு முன்பாக அமெரிக்கா தலைமையிலான ஆட்சிமாற்ற நடவடிக்கையின் மூலமாக ஆட்சியில் அமர்த்தப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தினால் கோரப்படுகின்ற சமூகத் தாக்குதல்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்ற சிறிசேனவுக்கு, தமிழ் தேசியவாதக் குழுக்கள் வழங்குகின்ற ஆதரவின் மீதான வெகுஜனங்களின் பிரமை விலகுவது அதிகரித்துச் செல்வதைப் பிரதிபலிப்பதாய் இருக்கிறது.
இதற்கு எதிரிடையாக, இதே இடத்தில், மருத்துவப் படிப்புகள் தனியார்மயப்படுத்தப்பட திட்டமிடப்படுவதற்கு எதிரான நாடு-முழுவதுமான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாய் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவத் துறையைச் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மாணவர்கள் 600 பேர் பங்குபற்றியிருந்தனர்.
மருத்துவ கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தில் தான் ஆற்றிய உரையில் சிவாஜிலிங்கம் கூறினார், “ஜனாதிபதியும் பிரதமரும் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது முதல் எச்சரிக்கை: உங்களுக்கும் உங்கள் அமைச்சர்களுக்கும் எதிராய் நாங்கள் கறுப்புக் கொடி காட்டும்படி செய்து விடாதீர்கள். இது ஒரு எச்சரிக்கை, இதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், சர்வதேச சமூகத்தின் உதவியுடன் போராடி சுயாட்சியை நாங்கள் நிறுவுவோம்.”
“இனப் படுகொலை போர்க் குற்றங்களுக்கான நீதி”, தமிழ் தேசியப் பிரச்சினைக்கு மூன்றாம்-தரப்பு மத்தியஸ்தம், இராணுவ ஆக்கிரமிப்பிலான நிலங்களை விடுவிப்பதுடன் மேலதிக ஆக்கிரமிப்பை நிறுத்துவது, காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவது, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வது ஆகிய ஐந்து கோரிக்கைகளை ஜனாதிபதி, பிரதமர் நோக்கி முன்வைக்கின்ற ஒரு பதாகை இந்த ஆர்ப்பாட்டத்தில் காட்டப்பட்டது.
இந்தக் கோரிக்கைகள் ஆகஸ்டில் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தவற்றை ஒத்தது. தேர்தலுக்கு பின்னர், இந்த வாக்குறுதிகளை கைவிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தொழிலாள வர்க்கத்தின் மீதும் எல்லா இன ஏழை மக்களின் மீதும் பரந்த தாக்குதல்களை திணிப்பதற்கான அரசாங்கத்தின் பிரதான முட்டுத்தூணாக தன்னை மாற்றிக் கொண்டது. சிறிசேனவுக்கு கீழ்ப்படிவான ஒரு எதிர்க்கட்சியாக சேவை செய்கின்ற அதேநேரத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது சொந்த உறுப்பினர்கள் உட்பட இலங்கை அரசாங்கம் சித்திரவதையினை தொடர்ந்து நடாத்தி வருவதை மூடிமறைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற, இலங்கை உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களது விரல் விட்டு எண்ணக்கூடிய உறவினர்களில் சிலர், உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசினர். மூளாய் கிராமத்தை சேர்ந்த ஒரு தாய் கூறினார், “1997 மார்ச் 3 ஆம் தேதியன்று என் பிள்ளை கணேஸ் கருணாகரன் அரிசி மில்லுக்கு சென்று கொண்டிருந்த வழியில் அவரையும் இன்னொரு பையனையும் இராணுவம் கைதுசெய்தது. அப்போது அவனுக்கு 19 வயது. நாங்கள் மாவடி இராணுவ முகாமுக்குச் சென்று கேட்டோம். அவர்கள் மூன்று நாட்களுக்குப் பின்னர் கிராம சேவகர் முன்பாக இரண்டு பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று எங்களிடம் கூறினார்கள், ஆனால் அவர்கள் இன்று வரையும் விடுதலை செய்யப்பட்டிருக்கவில்லை.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது "காணாமல்" போன ஒருவரின் தாயார்
”அந்த சமயத்தில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவை நாங்கள் சந்தித்தோம். அப்போது ’உங்கள் பிள்ளைகள் இருக்கின்றார்கள், நாங்கள் நிச்சயமாக விடுதலை செய்வோம்’ என்று அவர் சொன்னார், ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. என் பிள்ளை ஒருநாள் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இதுமாதிரி ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றும் அரசியல்வாதிகளை சந்தித்தும் வந்துகொண்டிருக்கிறேன்.”
மகாதேவன் பரமேஸ்வரன் தன் சகோதரன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டபோது அவனுக்கு வயது 15 என்று தெரிவித்தார். “2009 ல் இராணுவம் ஷெல் குண்டுகளை வீசிய சமயத்தில் அந்த பகுதியிலிருந்து அவன் இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டான். ஷெல் வீச்சின் போது அவனுடன் மக்கள் பலரும் இருந்தார்கள், மக்கள் பீதியில் சிதறி ஓடிய சமயத்தில், அவன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று விட்டான். அதன்பின்னர் நாங்கள் அவனைக் காணவில்லை. முகாம்களிலும் சிறைகளிலும் நாங்கள் அவனைத் தேடியிருக்கிறோம்.
”மனித உரிமை ஆணையம் மற்றும் ஜனாதிபதி ஆணையத்திலும் நாங்கள் புகார் பதிவு செய்திருக்கிறோம். கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் கூட நாங்கள் சந்தித்தோம், ஆனாலும் யாரும் உதவவில்லை. போகுமிடங்களில் எல்லாம் அவனைக் குறித்துப் பேசிக் கேட்டுப் பார்க்கிறோம். அவனைத் தேடித் தேடியே என் அம்மாவுக்கு நோய் பீடித்து விட்டது. எனது சகோதரியும் அவரது கணவரும் போரில் காயமடைந்து நடக்க முடியாமல் இருக்கிறார்கள். நாங்கள் நகைத்தொழில் செய்பவர்கள், எல்லாவற்றையும் முள்ளிவாய்க்காலில் இழந்துவிட்டுத்தான் வந்தோம். இங்கு ஒரு தொழிலை எம்மால் தேட முடியாமல் உள்ளது. எங்களை பொறுத்தவரை மஹிந்தாவும் மைத்திரியும் ஒன்று தான்.”
இந்திய முதலாளித்துவத்துடனும் ஏகாதிபத்திய சக்திகளுடனும் கூட்டுச் சேர்வதன் மூலமாக தமிழ் சிறுபான்மையினருக்கு சலுகைகளை வென்றெடுப்பது என்ற தமிழ் தேசியவாத முன்னோக்கானது தமிழ் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மக்களுக்கு முட்டுச் சந்தாக நிரூபணமாகியிருக்கிறது.
ஏகாதிபத்திய சக்திகளின் உலகளாவிய மூலோபாய நலன்களே எந்த நாட்டிலுமான அவர்களது தலையீட்டிற்கு வடிவம் கொடுக்கின்றன என்பது சென்ற ஆண்டில் இலங்கையில் நடந்த நிகழ்வுகளில் மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஆதரவுடன், அமெரிக்கா தலைமையில் நடந்த ஆட்சியை மாற்றும் நடவடிக்கையானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சீன ஆதரவு அரசாங்கத்தை குறிவைத்தது. சிறிசேன ஜனாதிபதியாக அமர்த்தப்பட்டு, விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர், அமெரிக்கா இலங்கையை “ஆசியாவில் முன்னிலை” சுற்றுவட்டத்திற்குள்ளும் சீனாவுக்கு எதிரான தனது போர்த் தயாரிப்புகளுக்குள்ளும் கொண்டுவந்தது.
அரசாங்கத்தின் முதல் சிக்கன நடவடிக்கை வரவு-செலவு திட்டமானது, சர்வதேச மூலதனத்தால் இலங்கையில் இருக்கும் தொழிலாளர்கள் வரைமுறையற்று சுரண்டப்படுவதற்கு எஞ்சியிருக்கின்ற அத்தனை முட்டுக்கட்டைகளையும் அகற்றுவதை நோக்கமாய் கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் தமது வாழ்க்கைத் தரங்களுக்கும் அரசியல் உரிமைகளுக்கும் எதிராக பாரிய தாக்குதல் அலை தொடுக்கப்படும் நிலைக்கு முகம்கொடுத்து நிற்கின்றனர்.
வெற்று வாக்குறுதிகளை வழங்குவதற்கு சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் இன்று யாழ்ப்பாணம் வருகை தரவிருக்கின்றனர். சென்ற ஆண்டில் அடிக்கடி வடக்கிற்கு பயணம் செய்த சிறிசேன, நெல்வயல்களுக்கும் ஏழைக் குடும்பங்களின் வீடுகளுக்கும் திடீர் விஜயம் செய்து, தன்னை சாதாரண மக்கள் மீது அக்கறை கொண்டவராய் காட்டிக் கொண்டார். ஆனால் போரினால் நாசமடைந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளில் எதுவுமே நடைமுறைக்கு வந்திருக்கவில்லை.
தமிழ் தினசரியான தினக்குரல் கூறுவதன் படி, யாழ்ப்பாணத்திற்கு சிறிசேன அடிக்கடி பயணம் செய்வது வட இலங்கையில் தனியார் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்தது தொடர்பான “சர்வதேச அழுத்தங்களை” குறைப்பதை நோக்கமாய்க் கொண்டிருக்கிறது. சிறிசேன அதிகாரத்திற்கு வந்தபோது, இராணுவம் 26 சதுர கிலோமீட்டர்களை (6,459 ஏக்கர்கள்) ஆக்கிரமித்திருந்தது, ஆனால் 4.5 சதுர கிலோமீட்டர்கள் (1,118 ஏக்கர்கள்) இரண்டு கட்டங்களாக திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் புதிய நிலப் பறிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.