Print Version|Feedback
Amid state of emergency, French workers jailed for struggle to defend jobs
அவசரகால நெருக்கடி நிலைக்கு இடையே, பிரெஞ்சு தொழிலாளர்கள் வேலைகளைப் பாதுகாக்க போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டனர்
By Kumaran Ira
14 January 2016
செவ்வாயன்று, வடக்கு பிரான்ஸ் அமியான் இல் உள்ள பிரெஞ்சு குற்றவியல் நீதிமன்றம் எட்டு முன்னாள் குட்இயர் டயர் தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகால சிறை தண்டனை விதித்தது, ஒன்பது மாதங்கள் பிணையில் வெளிவர சாத்தியமில்லை என்பதும் இதில் உள்ளடங்கும். அவர்களது ஆலையை மூடுவதற்கான திட்டத்திற்கும் மற்றும் 1,173 வேலை இழப்புகளுக்கும் எதிராக அவர்கள் வேலைநிறுத்தத்தில் இருந்த போது, ஜனவரி 2014 இல் இரண்டு குட்இயர் நிறுவன நிர்வாகிகளை பிணையாளிகளாக பிடித்து வைத்ததாக அத்தொழிலாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தொழிற்சங்கங்கள் பின்னர் அந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் மற்றும் ஆலைமூடல்களை ஏற்றுக்கொள்ளவும் நிர்வாகத்துடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
நிர்வாகிகளை சிறிய கால அவகாசத்தில் பிணையாளிகளாக வைத்ததற்காக தொழிலாளர்களைத் தண்டிக்கும் முடிவு பிரான்சில் முன்னொருபோதும் இல்லாதது. தொழிலாளர் வழக்கறிஞர் Stéphanie Stein கூறுகையில், இந்த தீர்ப்பு "மிகவும் அரிதானது" என்றார், “சமீபத்திய ஆண்டுகளில் குறுகிய நேரத்திற்கு முதலாளிகளை சிறைப்பிடித்து வைக்கும் நடவடிக்கை (boss-napping), ஒரு கடுமையான நடவடிக்கையான இது, அதிகரித்திருப்பதால், அங்கே தெளிவாக அவர்களை முன்னுதாரணமாக்கும் உள்நோக்கம் இருந்தது.”
2008 பொருளாதார நெருக்கடி வெடித்ததற்கு பின்னர், 2009 இல் (Caterpillar, Molex, Scapa, 3M Healthcare, Sony), 2010 (La Poste), 2011 (Constellium, Still) மற்றும் 2013 (Forgital) போன்ற தொழில்நிறுவனங்களில் பாரிய வேலைநீக்கங்களுக்கு எதிரான போராட்டங்களின் போதும் குறுகிய நேரத்திற்கு முதலாளிகளை சிறைப்பிடித்து வைக்கும் நடவடிக்கைகள் நடந்துள்ளன. அத்தகைய நடவடிக்கைகளுக்காக அங்கே வழக்குகள் எதுவும் தொடுக்கப்பட்டதில்லை.
தொழிலாளர்கள் பிணையாளிகளாக பிடித்துவைத்த குட்இயர் நிர்வாகிகள், “எங்கள் உடல்ரீதியிலான பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நடவடிக்கை" அங்கே எதுவும் இருக்கவில்லை என்று கூறி, அவர்களே தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டாமென விருப்பப்படுகின்ற நிலையில், இந்த குட்இயர் வழக்கை முன்னெடுப்பதென்ற வழக்கறிஞர்களது முடிவு அனைத்தினும் மிகவும் குறிப்பிடத்தக்கதாக ஆகிறது.
சமூகவியலாளர் Jean-François Amadou குறிப்பிடுகையில், பொதுவாக அத்தகைய வழக்குகளில் "நிர்வாகம் விடயங்களை அமைதிப்படுத்த குற்றச்சாட்டுக்களை திரும்ப பெற்றுவிடும்" என்றார். “அதைத்தான் குட்இயர் செய்தது. அந்த நபர்கள் அவர்களது வேலைகளை இழந்துவிட்டார்கள் என்பதற்குப் பின்னரும், அமைச்சகம் வழக்கை முன்னெடுக்க முடிவெடுத்தது தான் அதிர்ச்சியூட்டுகிறது,” என்று அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
இந்த ஆத்திரமூட்டும் மற்றும் பிற்போக்குத்தனமான தீர்ப்பு, நவம்பர் 13 பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் கொண்டு வந்த மூன்று மாதகால அவசரகால நெருக்கடி நிலைக்கு இடையே வருகிறது. இது ஒரு திட்டமிட்ட அரசியல் மிரட்டல் நடவடிக்கையாகும். அரசின் பரந்த அவசரகால அதிகாரங்கள், தொழிலாள வர்க்கத்தை கட்டங்கட்ட நோக்கம் கொண்டிருப்பதை இது தெளிவுபடுத்துகிறது.
நீதித்துறை நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், அவசரகால அதிகாரங்கள் முற்றிலுமாக பிரான்ஸை ஒரு பொலிஸ் அரசாக மாற்றியுள்ளது. சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தால் போராட்டங்களுக்கு தடைவிதிக்க மற்றும் ஒடுக்க முடியும், ஏதேச்சதிகார தேடல்கள் மற்றும் கைப்பற்றல்களை நடத்த முடியும், பாரிய கைது நடவடிக்கைகளை தொடங்க முடியும். ஹோலாண்ட் இந்த அவசரகால நெருக்கடி நிலையைக் காலவரையறையின்றி நீடிக்கும் மற்றும் பொலிஸ் யாரையேனும் பொது ஒழுங்கிற்கு ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாக கருதினாலே அவர்களைத் தேடுவதற்கும் கைது செய்வதற்கும் அனுமதிக்கும் ஓர் அரசியலமைப்பு திருத்தத்திற்கு தயாரிப்பு செய்து வருகிறார்.
குட்இயர் தொழிலாளர்கள், இவர்களில் ஐந்து பேர் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) அங்கத்தவர்கள், நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்தனர். Hassan Bourki கூறுகையில், “நான் எதிர்பார்த்தது தான் அது, எப்படியிருந்தாலும் அந்த முடிவு முற்றிலும் அநியாயமானது. நாங்கள் முறையீடு செய்வோம். நீண்ட காலமாக நீதித்துறை மீதிருந்த எங்களது நம்பிக்கை முறிந்து போயுள்ளது,” என்றார்.
மற்றொரு தொழிலாளர், Reynald Jurek, அந்த தீர்ப்பை "முற்றிலும் அரசியல்ரீதியானது" என்று குறிப்பிட்டார்.
குட்இயர் தொழிலாளர்களை தண்டிக்கும் அரசின் முடிவு பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வர்க்க உறவுகளில் ஏற்பட்டிருக்கும் ஓர் ஆழ்ந்த மாற்றத்தைக் குறிக்கிறது. அண்மித்த ஒரு தசாப்தகாலமாக தொழிலாளர்களுக்கு சமூக சிக்கனத் திட்டமும் பெரும் பணக்காரர்களுக்கு வங்கி பிணையெடுப்பும் செய்யப்பட்ட பின்னர், இதன் காரணமாக ஐரோப்பா எங்கும் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அவர்களது வேலைகளை இழந்துள்ள நிலையில், அங்கே வெடிப்பார்ந்த சமூக கோபம் நிலவுகிறது. 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்த நிகழ்வுப்போக்குகளை போல, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டுக்கு வெளியே வர்க்க போராட்டம் திடீரென வெடித்துவிடுமோ என்று அஞ்சி, ஆளும் வர்க்கம் எந்தவொரு மற்றும் எல்லா போராட்டத்தையும் ஈவிரக்கமின்றி தண்டிக்க நோக்கம் கொண்டிருப்பதற்கு ஒரு சமிக்ஞை அனுப்பி உள்ளது.
அது “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் அவசரகால நெருக்கடிநிலையைக் கொண்டு வந்திருந்தாலும், சோசலிஸ்ட் கட்சி அதேநேரத்தில் பிரெஞ்சு அரசியலமைப்பு ரீதியில் பாதுகாக்கப்பட்ட வேலைநிறுத்த உரிமை போன்ற தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக உரிமைகளுக்கு எதிரான ஒரு தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
குட்இயர் தொழிலாளர்களை சிறையில் அடைத்தமை கடந்த அக்டோபரில் ஏர் பிரான்ஸ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வருகிறது. பாரிய வேலைநீக்கங்களை கொண்டு ஏர் பிரான்ஸ் தொழிலாளர்களை அச்சுறுத்திய நிர்வாகிகளை தாக்கியதாகவும் மற்றும் ஏர் பிரான்ஸ் தொழிலாளர் கவுன்சில் கூட்டத்திற்குள் புகுந்ததாகவும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சோசலிஸ்ட் கட்சி அந்த வேலைநிறுத்தக்காரர்களை பலமான தடைகளைக் கொண்டு அச்சுறுத்தியது, பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் அவர் "அதிர்ச்சி அடைந்ததாக" அறிவித்தார். அதற்கடுத்து நான்கு தொழிலாளர்கள் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தால் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.
டிசம்பரில், உணவு மற்றும் பதப்படுத்தும் மேலாண்மைக்கான பன்னாட்டு நிறுவனம் Sodexo, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக மார்சைய் பகுதியில் 19 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியது.
வேலைநிறுத்தத்திற்கான உரிமை மீதான இந்த தாக்குதல் தீவிர-வலது தேசிய முன்னணி (FN) பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தால் இயல்பானதாக ஆக்குவதன் முக்கியத்துவத்தையும் மற்றும் பயங்கரவாதம் சம்பந்தமான குற்றங்கள் சுமத்தப்பட்டவர்களது பிரெஞ்சு குடியுரிமையை பறிப்பது போன்ற தேசிய முன்னணியுடன் நீண்டகாலம் தொடர்புபட்ட கொள்கைகளுக்கு சோசலிஸ்ட் கட்சி திரும்புவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. குடியுரிமையை பறிப்பதென்பது, இரண்டாம் உலக போரில் ஜேர்மனி பிரான்சை ஆக்கிரமித்திருந்தபோது, நாஜிக்களுடன் ஒத்துழைத்துவந்த பாசிச விச்சி சர்வாதிகாரத்தால் ஆயிரக் கணக்கான பிரெஞ்சு யூதர்கள் மீது மிகவும் இழிவார்ந்தரீதியில் பயன்படுத்தப்பட்டதாகும். பின்னர் விச்சி ஆட்சி, யூதர்களை ஐரோப்பா எங்கிலும் இருந்த நாஜி கொலை முகாம்களுக்கு அனுப்பியது.
பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் விச்சியால் நடத்தபட்ட குற்றங்கள் திரும்பவும் ஒருபோதும் நடக்காமல் இருக்க சூளுரைத்து வேலைநிறுத்த உரிமை போன்ற அடிப்படை சமூக உரிமைகளை அரசியலைமைப்பிற்குள் சேர்த்துக் கொண்டது. கட்டுப்படுத்தவியலாத நிதியியல் மற்றும் பொருளாதார முரண்பாடுகளால் உந்தப்பட்டு, அடிப்படை சமூக உரிமைகளைப் பேணுவோம் என்ற அதன் கடமைப்பாடுகளை கிழித்தெறிந்து சர்வாதிபத்திய ஆட்சி வடிவங்களுக்கு அது திரும்புவதன் மூலமாக, ஆளும் வர்க்கம் தேசிய முன்னணியை நியாயப்படுத்தவும், 20ஆம் நூற்றாண்டின் பாசிசத்தின் சட்டபூர்வ கிடங்கிலிருந்து வரையப்பட்ட கொள்கைகளை நோக்கியும் நகரத்தொடங்கியுள்ளது.
சோசலிஸ்ட் கட்சி மீது எப்போதாவது அவர்களது பயனற்ற விமர்சனங்களுக்கு இடையே, தொழிற்சங்கங்களும் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) போன்ற அவர்களது அரசியல் கூட்டாளிகளும், சர்வாதிகாரம் மற்றும் சமூக உரிமைகளின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கு தொழிலாளர்களுக்கான எந்தவொரு முன்னோக்கிய பாதையும் வழங்குவதாக இல்லை. தொழிலாள வர்க்கத்தின் மீதான தற்போதைய தாக்குதல்கள் நிதி மூலதனத்தின் ஒரு பிற்போக்குத்தனமான கட்சியான சோசலிஸ்ட் கட்சிக்கான அவர்களது தசாப்தகால ஆதரவின் வரலாற்று திவால்நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.
CGT தலைவர் Philippe Martinez நொண்டிச்சாட்டுடன் அறிவித்தார், “இந்த முடிவின் ஒட்டுமொத்த விளைவு, மீண்டும், தொழிற்சங்க நடவடிக்கையை ஒரு குற்றமாக மாற்றுவதற்காக உள்ளது. இது முன்பினும் அதிக பதட்டமான சமூக சூழலின் பாகமாக உள்ளது.”
தேசிய நாடாளுமன்றத்தின் இடது முன்னணி நாடாளுமன்ற குழுவின் தலைவரும் ஒரு PCF நிர்வாகியுமான André Chassaigne, அவரது பங்கிற்கு, கூறுகையில், “இந்த தீர்ப்பு குறித்து எனக்கு தெரிய வந்ததும், நான், ஒருவரால் ஒருபோதும் முன்யோசித்திராத அளவிற்கு நிஜத்தில் தொழிற்சங்கத்தைக் குற்றகரமாக்கும் நடவடிக்கை நடத்தப்பட்டு வருகிறது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்,” என்றார்.
CGT மற்றும் இடது முன்னணி இரண்டினது நிலைப்பாடுகளிலிருந்து மூடநம்பிக்கையின் துர்நாற்றம் வீசுகிறது. அவை இரண்டுமே 2012 இல் ஜனாதிபதியாக ஹோலாண்டைத் தேர்ந்தெடுக்கும் முனைவிற்கு பின்னால் நின்றிருந்தன, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், அவை சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் எதேச்சதிகார கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒன்றுதிரள்வதை தடுக்க அவற்றின் சக்திக்கு உட்பட்டு அனைத்தையும் செய்துள்ளன.
தொழிற்சங்கங்கள் குட்இயர், PSA மற்றும் ஏர் பிரான்ஸ் வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தி விற்றுத்தள்ளின, ஹோலாண்ட் திணித்த பத்து பில்லியன் கணக்கான யூரோ சமூக வெட்டுக்களுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்கின, அதேவேளையில் ஒரு அவசரகால நெருக்கடிநிலைக்கான சோசலிஸ்ட் கட்சியின் சட்டமசோதாவிற்கு ஆதரவாக இடது முன்னணி வாக்களித்தது.
குட்இயர் தொழிலாளர்களுக்கு எதிரான தீர்ப்பு தொழிலாளர்களைப் பீதியூட்ட மட்டும் நோக்கம் கொள்ளவில்லை, மாறாக எந்தவொரு பரிசீலனை ரீதியான அடையாள எதிர்ப்புகளைக் கூட ஆளும் வர்க்கம் சகித்துக் கொள்ளாது என்பதை தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு சமிக்ஞை செய்யவும் நோக்கம் கொண்டுள்ளது. ஹோலாண்ட் ஜனாதிபதியாக பதவி வகித்துவரும் கிட்டத்தட்ட நான்காண்டுகால CGT இன் நடவடிக்கைகளில் இருந்து முடிவுக்கு வருவதானால், தொழிற்சங்க அதிகாரத்துவங்களை அதன் பின்னால் நிறுத்த சோசலிஸ்ட் கட்சிக்கு எந்த சிரமமும் இருக்காது.
எவ்வாறிருப்பினும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை காலவரையின்றி தடுத்து வைக்க முடியாது என்பது வேறு விடயம். சோசலிஸ்ட் கட்சி அதன் பிற்போக்குத்தனமான கொள்கைகளை திணிக்கும் ஒரு முயற்சியில் சமூக போராட்டங்களை சட்டவிரோதமானதாக்க நகர்வதன் மூலமாக, தொழிலாள வர்க்கம் வழமையான தொழிற்சங்க வடிகால்களுக்கு வெளியே, சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் அரசியல் துணை அமைப்புகளிலிருந்து சுயாதீனமாகி அதன் போராட்டங்களை அபிவிருத்தி செய்து, புரட்சிகர பாதையை எடுப்பதைத் தவிர தொழிலாள வர்க்கத்திற்கு வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தான் அது கொண்டு வருகிறது.