Print Version|Feedback
The political significance of the global economic turmoil
உலகளாவிய பொருளாதார கொந்தளிப்பின் அரசியல் முக்கியத்துவம்
Nick Beams
21 January 2016
உலகளாவிய சந்தைகளது தொடர்ச்சியான விற்றுத்தள்ளல்கள், 2015 இல் அவற்றின் உயரத்திலிருந்த பங்குகளை ஏறத்தாழ 20 சதவீத அளவில் சரிவுக்கு இட்டுச் சென்றுள்ள நிலையில், இவை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் வெறுமனே பெருகிவரும் பொருளாதார முரண்பாடுகளின் ஒரு வெளிப்பாடு அல்ல. அது கடந்த கால் நூற்றாண்டின் முதலாளித்துவ ஆட்சியின் கட்டமைப்பிலேயே ஓர் ஆழ்ந்த நெருக்கடி உருவாகியிருப்பதைக் குறிக்கிறது.
நேற்று டோவ் ஒரு தருணத்தில் ஏறத்தாழ 566 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது, அன்றைய நாளில் இறுதியில் 246 வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து கிழக்கு ஆசியாவிலிருந்து ஐரோப்பா வரையில் சந்தைகள் சரிந்தன, அதில் பிரிட்டிஷ் பங்குச் சந்தை 2003 மட்டங்களுக்கு வீழ்ச்சி அடைந்தது.
அமெரிக்க சந்தைகள், வரலாற்றில் எந்தவொரு ஆண்டையும் விட மிக மோசமாக தொடங்கியுள்ளன, வோல் ஸ்ட்ரீட் சரிவு அந்த போக்கையே தொடர்ந்தது. அது தொடர்ச்சியான எண்ணெய் விலை வீழ்ச்சியால் எரியூட்டப்பட்டது. எண்ணெய் விலை 27 டாலருக்கு கீழே சரிந்து, கடந்த ஆண்டை விட 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது மற்றும் 2014 இல் பேரலுக்கு 100 டாலருக்கு அதிகமாக இருந்த மட்டத்திலிருந்து 75 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. சீனாவின் வேகமான தொழில்துறைமயமாக்கல் உடன் சேர்ந்து 2003 இல் தொடங்கிய மூலப்பொருட்களின் விலை உயர்வு சுழற்சிமுறை என்றழைக்கப்பட்ட ஒன்று, உலகளாவிய பொருளாதாரத்தில் இப்போது பழுத்துவரும் ஓர் ஒன்றுதிரண்ட மந்தநிலை சக்திகளின் வெளிப்பாட்டுடன் மோதலுக்கு வந்துள்ளது என்பதையே எண்ணெய் விலை வீழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
எழுச்சியடைந்துவரும் சந்தை பொருளாதாரங்கள் என்றழைக்கப்படும் பொருளாதாரங்களுக்கு நேற்று "கறுப்பு புதன்கிழமை" என்று கூறப்பட்டது, இந்த பொருளாதாரங்கள் தான் 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் உலக பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய ஊக்கத்தை வழங்கின, அவற்றின் டாலர் அடிப்படையிலான கடன்களைத் திரும்ப செலுத்துவதில் அதிகரித்துவந்த பிரச்சினைகளுடன் அவற்றின் நிதியியல் ஸ்திரப்பாடு மீது கவலைகள் அதிகரித்ததுடன் அவற்றின் செலாவணி மதிப்பும் கூர்மையாக வீழ்ச்சி அடைந்தது.
பெடரல் மற்றும் ஏனைய பிரதான மத்திய வங்கிகள் பின்பற்றிய பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கைகள் (QE), உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியதுடன், எழுச்சியடையும் சந்தைகளில் பெருநிறுவன கடன் அதிகரிப்புக்கும் இட்டுச் சென்றது. 2004 இல் 4 ட்ரில்லியன் டாலராக இருந்த அவற்றின் கடன் 2014 இல் 18 ட்ரில்லியன் டாலராக நான்கு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தது. இப்போது இந்த பணம் வெளியேற நகர்ந்து வருகின்றன.
சர்வதேச நிதியியல் அமைப்பின் கருத்துப்படி, கடந்த ஆண்டில் எழுச்சியடைந்துவரும் சந்தைகள் 735 பில்லியன் டாலர் மூலதன வெளியேற்றத்தைக் கண்டன, இதில் பெரும்பான்மை சீனாவிலிருந்து வந்தது, இந்த திருப்பத்தை அவ்வமைப்பின் தலைமை பொருளாதார நிபுணர் "முன்னொருபோதும் இல்லாத சம்பவமாக" குறிப்பிட்டிருந்தார். இன்னும் இதர மதிப்பீடுகள் வெளியேற்றத்தை இதையும் விட அதிகமாக குறிப்பிட்டன, சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார கூட்டத்தில் ஒரு பொருளாதார நிபுணர் கூறுகையில், 2015 மத்திய காலப்பகுதிக்குப் பின்னர் சீனாவிலிருந்து வெளியேறிய தொகை 1 டரில்லியன் டாலரை எட்டியிருந்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் எழுச்சியடைந்துவரும் சந்தைகளது அந்தரத்தில் தொங்கும் நிலை உலக நிதியியல் அமைப்புமுறையின் ஆழமடைந்துவரும் நெருக்கடியின் மிக முக்கிய அறிகுறிகளில் ஒன்றே ஒன்று தான். டாவோஸ் கூட்டத்திற்கு முன்னதாக, சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கியின் முன்னாள் மூத்த பொருளாதார நிபுணரும், பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பினது மீளாய்வு கமிட்டியின் தலைவருமான வில்லியம் வொய்ட் எச்சரிக்கையில் உலகளாவிய நிதியியல் அமைப்புமுறை ஸ்திரமின்றி இருப்பதாகவும், சரமாரியான திவால்நிலைமைகளை முகங்கொடுப்பதாகவும் எச்சரித்தார்.
“நிலைமை 2007 இல் இருந்ததை விடவும் மோசமாக உள்ளது,” என்றார். “கீழ்நோக்கியச் சரிவை எதிர்க்கும் நமது பரந்த-பொருளாதார வகைமுறைகள் அனைத்தும் இன்றியமையாத விதத்தில் பயன்படுத்தப்பட்டுவிட்டன.” கடந்த எட்டு ஆண்டுகளில் கடன்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன, அவற்றில் பல அடுத்த மந்தநிலையில் ஒருபோதும் திரும்ப செலுத்தவியலாது போகும் என்பது வெளிப்படையாகிவிடும்.
ஐரோப்பிய வங்கிகள் ஏற்கனவே 1 ட்ரில்லியன் டாலர் திரும்பிவராத கடன்களை (non-performing loans) கொண்டிருந்தன என்பதுடன், எழுச்சியடைந்துவரும் சந்தைகளைவிட பெரிதும் ஆபத்தான நிலையில் இருந்தன. “எழுச்சியடைந்துவரும் சந்தைகள் லெஹ்மன் நெருக்கடிக்குப் பின்னர் தீர்வின் பாகமாக இருந்தன. இப்போதோ அவை பிரச்சினையின் பாகமாக உள்ளன,” என்றார்.
இதே கண்ணோட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் துணை இயக்குனர் Zhu Min டாவோஸ் கூட்டத்தில் ஒரு குழுவிற்கு அளித்த கருத்துக்களிலும் பிரதிபலித்தன. முதலீட்டாளர்களும் சொத்து நிதியங்களும் ஒன்றோடு ஒன்றாக இணைந்தவை ஆகிவிட்டன, சொத்து சந்தைகள் அபாயகரமாக இடைத்தொடர்பு கொண்டுள்ளன என்றவர் எச்சரித்தார், அதாவது ஏதேனும் ஒரு பகுதியின் பிரச்சினைகள் ஒட்டுமொத்த நிதியியல் அமைப்புமுறைக்கும் வேகமாக பரவும் என்பதே இதன் அர்த்தம்.
“பரிவர்த்தனை வேகவேகமாக சரியக்கூடும் என்பது தான் முக்கிய சிக்கல்… எல்லோரும் ஒருசேர நகர்கையில், மொத்தத்தில் எந்த பரிவர்த்தனையும் இருக்காது,” என்றார். அதாவது முதலீட்டாளர்கள் அனைவரும் ஒரேநேரத்தில் விற்க முயலும் ஒரு சூழலில் அங்கே வாங்குவோர்கள் இல்லாமல் சந்தை பொறிவுக்குப் போகும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
முன்னாள் சர்வதேச நாணய நிதிய தலைமை பொருளாதார நிபுணரும் இப்போதைய ஹார்வர்டு பேராசிரியருமான கென்னித் ரோக்ஃப் டாவோஸில் ஒரு தொலைக்காட்சி குழு விவாதத்தில் பேசுகையில், சீன ஆணையங்கள் "மாயவித்தைக்காரர்கள்" இல்லை என்பதை சந்தைகள் உணர்கின்றன இதுவே அவற்றின் அச்சத்தை அதிகரிக்கிறது, அத்துடன் ஐரோப்பா மற்றும் ஜப்பானில் வட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கு நெருக்கமாக அல்லது அதற்கும் கீழே இருந்தாலும், பணத்தைப் புழக்கத்தில் விடும் நடைமுறை இப்போது பெரிதும் செயலிழந்து போயுள்ளது என்றார். “மத்திய வங்கிகள் மீட்சிக்கு வரவில்லை என்பது இதை வேகப்படுத்திக் கொண்டிருக்கிறது,” என்றார். ஆழமான கவலைகளும் மற்றும் கடந்த ஆண்டின் சம்பவங்களும் சீனா ஒரு "தொடர் வளர்ச்சி எந்திரம்" என்ற பிரமையை மறையச் செய்ததால், நிறுவனங்கள் முதலீட்டை நிறுத்திவிட்டன.
அதிகரித்துவரும் நிதியியல் நெருக்கடிக்கு அடியிலிருப்பது வெறுமனே எண்ணெய் மற்றும் பண்டங்களது விலை வீழ்ச்சியும் மற்றும் உலகளாவி வளர்ச்சி மெதுவாக இருப்பதும் மட்டுமல்ல, மாறாக இன்னும் அதிக ஆழமானது —அதாவது, 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் கடந்த கால் நூற்றாண்டில் உலகளாவிய முதலாளித்துவம் அபிவிருத்தி செய்துள்ள பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகள் சிதைந்து போயுள்ளன.
சோவியத் ஒன்றியத்தையும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தையும் சோசலிசம் என தவறாக அடையாளங்காட்டிய, முதலாளித்துவ அரசாங்கங்கள், அரசியல் பண்டிதர்கள், இதழாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், அந்த சம்பவத்தை முதலாளித்துவம் மற்றும் "சுதந்திர சந்தையின்" இறுதியான மற்றும் முறிக்கவியலாத வெற்றியாக மற்றும் ஒரு "புதிய உலக ஒழுங்கமைப்பின்" உதயமாக பிரகடனப்படுத்தினர்.
அது குறுகியகாலமே உயிர்வாழ்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதைக் குறித்து அங்கே இப்போது அதிகரித்த புரிதல் உள்ளது. இந்த மனோபாவம், "புதிய உலக ஒழுங்கமைப்பு" பிரமையை உயர்த்திப்பிடித்தவர்களில் பிரதானமானவர்களில் ஒருவரான நியூ யோர்க் கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மன் "What If?” என்ற தலைப்பின் கீழ் எழுதி பிரசுரமான ஒரு கட்டுரையில் பிரதிபலித்தது.
அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்பைச் சுட்டிக்காட்டி அவர் எழுதினார், “சர்வதேச சந்தைகளின் சமீபத்திய கொந்தளிப்பு வெறுமனே திடீர் அதிர்வுகளின் விளைபொருள் அல்ல என்று பார்த்து ஆச்சரியப்படுவது கடினமானதல்ல, மாறாக பெரிதும் முன்கணிக்கவியலாத விளைவுகளுடன் உலகளாவிய அமைப்புமுறையின் அடிக்கட்டுமான தூண்களில் அதிர்ச்சிகரமான மாற்றங்களைக் காண்பது தான் கடினமானது. பல சகாப்தங்கள் ஒருசேர மொத்தமாக முடிவுக்கு வந்தால் எப்படி இருக்கும்?”
இந்த மனஉலைச்சலுக்கான காரணங்கள் முன்பினும் அதிகமாக வெளிப்பட்டு வருகின்றன. பொருளாதார முகப்பில், சீனா உலக முதலாளித்துவத்தின் மலிவு-உழைப்பு தளத்திற்கு மாற்றப்பட்டதிலிருந்தும் மற்றும் சோவியத் ஒன்றியத்தைத் தீர்த்துக் கட்டியதிலிருந்து உலகின் புதிய பகுதிகளை முதலாளித்துவ சூறையாடலுக்குத் திறந்துவிட சாத்தியமானதில் இருந்தும் கிடைத்த உலகளாவிய இலாப பெருக்கம், ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
1991 க்குப் பின்னர் விரிவடைந்த ஐரோப்பிய ஒன்றியம், அதன் அங்கத்தவர்களுக்கு இடையே ஆழமான மோதல்கள் உருவாகியிருப்பதுடன் சேர்ந்து, சிதைந்து போவதற்கு ஒரு முதிர்ந்த நிலையில் உள்ளது. இத்தகைய முரண்பாடுகள் அகதிகள் நெருக்கடியால் தூண்டிவிடப்பட்டிருந்த போதினும், ஜேர்மனியின் சிக்கனத்திட்ட திணிப்பு மற்றும் ஒரே செலாவணியின் ஆழமடைந்துவரும் முரண்பாடுகள் ஆகியவை, அடிப்படையிலேயே, முதலாளித்துவ அடித்தளத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சுமூகமாக ஐக்கியப்படுத்துவது சாத்தியமே இல்லை என்பதை பிரதிபலிக்கின்றன.
சோவியத் ஒன்றியத்தின் முடிவு "ஒருதுருவமுனைப்பட்ட காலகட்டத்தை" தொடங்கி வைத்ததாகவும், அதில் மொத்த உலகின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கான ஆளும் வர்க்க அபிலாஷைகளை அமெரிக்கா இறுதியில் அடைய முடியும் என்றும் கூறி அது வரவேற்கப்பட்டது. இந்த மாதத்திலிருந்து 25 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் வளைகுடா போர் தொடங்கியதிலிருந்து கடந்த கால்-நூற்றாண்டு, முன்பினும் தெளிவாக ஒரு மூன்றாம் உலக போர் அபாயத்துடன், ஒரு போர் மாற்றி ஒரு போரைக் கண்டுள்ளது. அமெரிக்கா போல சக்திவாய்ந்ததாக இருக்கும் தனியொரு நாடு உலகையே ஆட்சி செலுத்தவியலும் என்ற அமெரிக்க ஆளும் உயரடுக்குகளின் பைத்தியக்காரத்தனமான சித்தபிரமைகள், ஒவ்வொரு முகப்பிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிரிகளை எதிர்கொண்டிருப்பதுடன் சேர்ந்து, ஓர் உலகளாவிய பேராபத்தாக திரும்பியுள்ளன.
இத்தகைய நிகழ்வுபோக்குகளும் மற்றும் ஏனையவையும் கூர்மையான நம்பிக்கை நெருக்கடிக்கு (crisis of confidence) இட்டுச் சென்றுள்ளன, அது இப்போது மோசமடைந்துவரும் நிதியியல் சந்தைகள் மற்றும் உலக பொருளாதாரத்தின் நிலைமையுடன் மிகவும் பரந்தளவில் குறுக்கிட்டு திரும்ப வந்து தாக்குகின்றன.
புதிய புவிசார்-பொருளாதார மற்றும் அரசியல் சூழலில் மிகவும் முக்கிய காரணியாக இருப்பது, இந்த அமைப்புமுறைக்கு எதிராக, பில்லியன் கணக்கான மக்களின் நனவில் வேரூன்றிய, அதிகரித்துவரும் சமூக எதிர்ப்பலையாகும்.
கடந்த கால் நூற்றாண்டாக, அரசாங்கங்கள் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களது நிர்வாக குழு என்றளவில் எதில் செயல்பட்டு வந்ததோ, அந்த போர், சமூக சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறையின் ஓர் அமைப்புமுறையாக, இந்த முதலாளித்துவத்தினது இன்றியமையாத உள்உறவுகள், மார்க்ஸ் விவரித்தவாறு, முன்பினும் மிக தெளிவாக பார்வைக்கு வந்துள்ளது.
ஏதேனும் உண்மையான அரசியல் நியாயத்தன்மையைக் கொண்டதாக கருதக்கூடிய ஒரேயொரு முதலாளித்துவ அரசாங்கம் கூட உலகில் எங்கும் கிடையாது. மேலும் உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவை விட முதலாளித்துவ ஆட்சியின் இந்த நெருக்கடி இந்தளவிற்கு வேறெங்கும் திரண்டிருக்கவில்லை.
ப்ரீட்மன் கருத்துரைத்ததைப் போல, இந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு அரசாங்கத்திடம் எந்த பதிலும் இல்லை என்ற நிலைமைகளின் கீழ், இந்த 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் "ஒரு சோசலிசவாதி (ஜனநாயக கட்சி பெர்னி சாண்டர்ஸ்) மற்றும் ஒரு வரம்புக்குட்பட்ட பாசிசவாதிக்கு (குடியரசு கட்சி டோனால்டு டஸ்க்) இடையே வந்து நின்றால்" “என்னாகும்"?
உலக சோசலிச வலைத் தளம் விளங்கப்படுத்தி உள்ளதைப் போல, சாண்டர்ஸ் எவ்விதத்திலும் ஒரு சோசலிசவாதி கிடையாது, மாறாக முழுமையாக அவர் ஒரு முதலாளித்துவ வர்க்க அரசியல்வாதியாவார், அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திடமான ஆதரவாளராவார். ஆனால் மில்லியன் கணக்கான மக்களால் அவர் வோல் ஸ்ட்ரீட் இன் ஒரு சோசலிச எதிர்ப்பாளராகவும், அந்த அடித்தளத்தில் ஆதரவைப் பெறுவது மிக மிக முக்கியமானதானதாகவும் கருதப்படுகிற உண்மை, சமூக மற்றும் அரசியல் நனவின் ஆழத்தில் நடந்துவரும் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. அத்தகைய மாற்றங்கள் ஏற்கனவே அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகளவில் வெளிப்பாட்டைக் கண்டு வருகிறது. வரவிருக்கும் காலத்தில் உலக முதலாளித்துவ பொருளாதாரம் உடையத் தொடங்குகையில் மற்றும் அதற்குள் செயல்படும் அரசியல் கட்டமைப்புகள் தீவிரமடையத் தொடங்குகையில், அந்த மாற்றங்களும் தீவிரமடையும்.
தற்போது, அரசியல் நனவு, நடப்பு ஒழுங்கமைப்பைப் பொறுத்துக் கொள்ளவியலாது என்றளவில் முன்பினும் ஆழமான அதிருப்தி உணர்வின் வடிவம் எடுத்துள்ளது. இந்த பாரிய அதிருப்தியைச் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான ஒரு நனவுப்பூர்வமான அரசியல் போராட்டத்திற்குள் திருப்பிவிடுவதே முக்கிய பணியாகும்.