Print Version|Feedback
The mass beheadings in Saudi Arabia
சவூதி அரேபியாவில் பாரியளவில் தலைதுண்டிப்பு தண்டனைகள்
Bill Van Auken
4 January 2016
அரபு உலகில் வாஷிங்டனின் மிக நெருக்கமான கூட்டாளியான சவூதி அரேபியாவின் சர்வாதிகார முடியாட்சி, ஒரேதடவையில் 47 கைதிகளைக் கொன்று, இரத்தஆற்றுடன் இந்த புத்தாண்டை வரவேற்றது.
அரச படுகொலைகளின் இந்த அலை, அவ் அரசராட்சியில் 12 வெவ்வேறு சிறைசாலைகளில் நடத்தப்பட்டன. அவற்றில் எட்டு இடங்களில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தலைதுண்டித்துக் கொல்லப்பட்டார்கள், அதேவேளையில் வேறு நான்கு இடங்களில் துப்பாக்கிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆளும் அரச குடும்பத்தின் முற்றுமுழுதான அதிகாரத்தை எதிர்க்க நினைக்கும் எவரொருவருக்குமான ஒரு பயங்கர எச்சரிக்கையாக, பின்னர் அந்த தலையற்ற சடலங்கள் சிலுவையில் அறையப்பட்டு பொதுவிடத்தில் தொங்கவிடப்பட்டன.
சவூதி அரேபியாவின் ஒடுக்கப்பட்ட ஷியைட் சிறுபான்மையின் ஒரு முன்னணி செய்தி தொடர்பாளரும் மற்றும் ஒரு முஸ்லீம் மதகுருவும் ஆன நிம்ர் அல்-நிம்ர், கொல்லப்பட்டவர்களில் மிக முக்கியமானவராக இருந்தார். சித்திரவதையின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் ஒரு கட்டப்பஞ்சாயத்து நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்ட நிம்ர், “ஆட்சியாளர்களை மதிக்கவில்லை" மற்றும் "ஆர்ப்பாட்டங்களை ஊக்குவித்து, தலைமை வகித்து, பங்குபற்றினார்" ஆகியவற்றை உள்ளடக்கிய குற்றச்சாட்டுக்களுக்காக தண்டிக்கப்பட்டிருந்தார்.
2011 இல் சவூதி அரேபியாவின் ஷியைட் மக்கள் பெரும்பான்மையாகவுள்ள கிழக்கு மாகாணத்தை மூழ்கடித்த பாரிய போராட்டங்களிலிருந்து முளைத்திருந்த இத்தகைய "குற்றங்கள்", ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான மக்கள் கோரிக்கைகளையும் மற்றும் சுன்னி முடியாட்சியின் பாகுபாட்டை மற்றும் ஷியைட் மக்கள் மீதான ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கைகளையும் வெளிப்படுத்தி இருந்தன.
நிம்ர் உடன் சேர்ந்து ஏனைய மூன்று ஷியைட் கைதிகளும் கொல்லப்பட்டனர், அதில் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டபோது பருவ வயதடையாத சிறாராக இருந்தவர். கொல்லப்பட்டவர்களில் ஏனையவர்கள் சுன்னி இனத்தவர்கள், இவர்கள் 2003 மற்றும் 2006 க்கு இடையே சவூதி அரேபியாவில் நடந்த அல் கொய்தா தாக்குதல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
ரியாத் ஆட்சியால் நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமான கொலை வெறியாட்டம், உள்நாட்டு மற்றும் சர்வதேச நோக்கங்களால் உந்தப்பட்ட ஒரு கணிப்பிடப்பட்ட அரசியல் நடவடிக்கையாகும். சவூதி முடியாட்சி அதன் ஆட்சிக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக அடையாளப்படுத்தும் அதன் உள்நாட்டு நடவடிக்கைக்காகவே, நிம்ர் இன் மரண தண்டனையை அல் கொய்தா அங்கத்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் சேர்த்து நடத்தியது. முதல் சான்றாக, அதன் நோக்கம் மக்கள்தொகையில் அண்ணளவாக 15 சதவீதத்தை உள்ளடக்கிய, ஒரு முக்கிய எண்ணெய்-உற்பத்தி பிரதேசமாக விளங்கும் கிழக்கு மாகாணத்தில் ஒருங்குவிந்துள்ள ஷியைட் சிறுபான்மையை பீதியூட்டுவதாகும்.
அதேவேளையில், ஒருவிதமான இஸ்லாமிய பயங்கரவாதத்தை உள்நாட்டிற்குள் கொண்டு வரும் எந்தவொரு முயற்சியையும் அது இரக்கமின்றி ஒடுக்கும் என்பதற்கு சவூதி அரசகுடும்பத்தின் ஓர் இரத்தந்தோய்ந்த சமிக்ஞையை வழங்கியது. ஆனால் அத்தகைய பயங்கரவாதத்தை அதுவே தான் வேறு பல இடங்களில், குறிப்பாக சிரியாவில் கொடூரமான விளைவுகளுடன், தூண்டிவிட்டு, நிதியுதவி வழங்கி மற்றும் சித்தாந்தரீதியில் ஊக்குவித்தது. ISIS மற்றும் அல் நுஸ்ரா போன்ற குழுக்களின் வடிவில், இவற்றின் வஹாபி (Wahabi) மத சித்தாந்தமும் மற்றும் பாரிய தலைத்துண்டிப்பு நடவடிக்கைகளும் சவூதி அரேபியாவால் நடத்தப்படும் அரச கொடூரத்தை அடுத்தே முன்மாதிரியாக ஏற்கப்பட்டிருந்த நிலையில், அது கட்டவிழ்த்துவிட்ட பிரங்கன்ஸ்ரைன் அசுரனுக்கு (Frankenstein monster) அதுவே இரையாகக்கூடும் என்ற அதிகரித்த அச்சம் அந்த முடியாட்சியில் நிலவுகிறது.
மிகவும் பொதுவாக, சவூதி அரேபிய ஆளும் குடும்பத்தின் சொந்த தலைகளை தலைத்துண்டிக்கும் இடங்களாக முந்தைய அரச மாளிகைகளை கொண்டு வந்துவிடக்கூடிய சமூக வெடிப்புக்கான நிலைமைகள் கட்டமைந்து வருகின்றன என்று சவூதி அரேபிய ஆளும் குடும்பங்களின் தரங்கெட்ட எஜமானர்களும் ஒட்டுண்ணிகளும் அஞ்சுகின்றனர். ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டு பொருளாதாரங்களையும் பலவீனப்படுத்தும் நோக்கில், வாஷிங்டனால் ஆதரிக்கப்பட்டு, எண்ணெய் உற்பத்தியில் எந்த குறைப்பையும் நிராகரிக்கும் ஒரு முடிவின் விளைவாக, வீழ்ச்சியடைந்துவரும் எண்ணெய் விலைகள் சவூதி பொருளாதாரத்தையே அதன் கணக்கில் எடுக்கத் தொடங்கியுள்ளது.
2015 வரவு-செலவு திட்ட கணக்கில் 98 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை இருந்ததாகவும், இந்தாண்டும் அதேபோன்றவொரு வீழ்ச்சியை எதிர்நோக்குவதாகவும் சவூதி ஆட்சி கடந்த ஆண்டின் இறுதியில் தகவல் வெளியிட்டது. வருவாயை அதிகரிக்கும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியாக, அது எரிவாயு விலைகளில் 50 சதவீத உயர்வைக் கொண்டு வந்தது, மேலும், பொது செலவினங்களை, குறிப்பாக சவூதி சமூகத்தின் மிகப்பெரும் வறிய அடுக்குகளது வாழ்க்கையை குறைநிரப்ப அனுமதித்துள்ள பொருளாதார மானியங்களைக் கூடுதலாக வெட்டவதை நோக்கி அது பயணிக்கத் தொடங்கி உள்ளது. புதிய வரவு-செலவுத் திட்டக்கணக்கை "தீவிர சிக்கனத் திட்டத்தின்" ஒரு நடைமுறையாக பைனான்சியல் டைம்ஸ் விவரித்தது.
இத்தகைய நிலைமைகளின் கீழ், 2015 இல் தலைத்துண்டிப்பு தண்டனைகள் மூலமாக குறைந்தபட்சம் 158 பேராவது கொல்லப்பட்டிருக்கின்ற நிலையில், இந்நடவடிக்கைகள் கூர்மையாக உயர்ந்திருப்பதென்பது மக்களைப் பயமுறுத்தும் ஒரு வழிவகையாக சேவையாற்றுகிறது.
சர்வதேச முகப்பில், ஷேக் நிம்ர் இன் அரச படுகொலை ஒரு கணக்கிட்ட ஆத்திரமூட்டலையும் மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் வகுப்புவாத குழப்பங்களைத் தீவிரமாக தீவிரப்படுத்த வடிவமைக்கப்பட்டிருப்பதையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. அந்நடவடிக்கை ஈரானைத் தூண்டிவிட நோக்கம் கொண்டுள்ளது, அதன் ஷியைட் முஸ்லீம் தலைமை "பழிக்குப்பழி வாங்கும் புனித செயல்" எச்சரிக்கையைக் கொண்டு விடையிறுத்தது. தெஹ்ரானில் சவூதி தூதரகத்தின் மீதான மற்றும் ஈரானிய மஸ்ஹத் நகரத்தில் ஒரு தூதரக அலுவலகம் மீதான நெருப்புக்குண்டு தாக்குதல்கள் உட்பட அந்த படுகொலைகள் கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டன. இராஜாங்க உறவுகளைக் கடுமையாக்கியதன் மூலமாக ரியாத் விடையிறுத்துள்ளது.
சவூதி முடியாட்சி, அதனுடைய மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளின் உடைய, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நிஜமான நோக்கத்தை முதலில் எட்டாமல், அந்நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டுவரும் எந்தவொரு முயற்சியையும் தகர்க்க தீர்மானகரமாக உள்ளது. சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் இன் பிரதான நேசநாடான ஈரானுடன் பதட்டங்களை அதிகரிப்பதன் மூலமாக, அத்தைகய எந்தவொரு தீர்வையும் தடுக்க மற்றும் ஈரானுடனேயே கூட போருக்கான நிலைமைகளை உருவாக்க முடியுமென சவூதியர்கள் நம்புகின்றனர்.
அந்த பாரிய மரண தண்டனைகளின் அதே நாளில் மிக அரிதாக பொருந்தி இருந்ததென்னவென்றால், யேமன் போர்நிறுத்தம் என்று கூறப்பட்டதை ரியாத் நிறைவு செய்து கொள்வதாக அறிவித்ததாகும், யேமனில் ஷியா மக்களிலில் இருந்து திரட்டப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு கிளர்ச்சி இயக்கமான ஹோதியர்களது எழுச்சியை ஒடுக்க நோக்கங்கொண்ட ஒரு சட்டவிரோத மற்றும் மரணகதியிலான தலையீட்டிற்குச் சவூதி இராணுவம் தலைமை கொடுத்து வருகிறது.
சவூதி ஷியைட் மதகுருவின் மரண தண்டனை நிறைவேற்றம், மத்திய கிழக்கில் ஏற்கனவே சுழன்று கொண்டிருக்கும் பிராந்திய மோதலை இன்னும் விரிவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. 1914 இல் ஆஸ்திரிய இளவரசர் ஆர்ச்ட்யூக் பெர்டினான்ட் இன் படுகொலையைப் போலவே, இச்சம்பவம் இறுதியில் பிரதான சக்திகளை அதைவிட இரத்தந்தோய்ந்த உலகளாவிய மோதலுக்குள் இழுத்துவரக்கூடிய சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது.
சவூதி ஆட்சியின் குற்றங்களுக்கான முக்கிய பொறுப்பு அதன் பிரதான ஆதரவாளரான அமெரிக்க ஏகாதிபத்தியதின் மீது தங்கியுள்ளது. சவூதி அரேபியாவில் காட்டுமிராண்டித்தனமான முடியாட்சி வெறுமனே நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனத்தின் ஏதோ சில எச்சசொச்சங்கள் அல்ல. மாறாக அது 1930 கள் மற்றும் 1940 களில் டெக்சகோ மற்றும் ஸ்டாண்டர்ட் நிறுவனத்தால் பெறப்பட்ட விட்டுக்கொடுப்புகளிலிருந்து தொடங்கி சவூதி முடியாட்சியை இன்று அமெரிக்காவின் இராணுவ-தொழில்துறை கூட்டின் ஒரு முதன்மையான வாடிக்கையாளராக மாற்றியுள்ள தற்போதைய பாரிய ஆயுத விற்பனைகள் வரையில், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டின் நேரடியான விளைவாகும்.
சவூதி அரேபியாவின் பாரிய தலைத்துண்டிப்பு தண்டனைகள் ஒரு சிறிய விளைவுகளைக் கொண்ட ஒரு சம்பவம் என்றும், அதற்கும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதாகவும் வாஷிங்டன் விடையிறுத்துள்ளது. வெள்ளை மாளிகை மற்றும் வெளியுறவுத்துறை இரண்டும் ஷேக் நிம்ர் இன் அரசியல் படுகொலையை நேரடியாக கண்டிக்காமல், மனித உரிமைகளை மதிக்குமாறு சவூதி ஆட்சிக்கு விசன அறிக்கைகளை "மீள-வலியுறுத்தும்" ஒரு சம்பிரதாயமான அழைப்புகளை விடுத்தன.
சவூதி முடியாட்சியின் உள்நாட்டு ஒடுக்குமுறையில் பெண்டகன் மற்றும் சிஐஏ முழு பங்காளிகளாகும், அதேவேளையில் அமெரிக்கா குண்டுகளையும் மற்றும் இலக்குகள் குறித்த தகவல்களையும், அத்துடன் சவூதி குண்டுவீசிகளுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்புதல்களையும் வழங்கியுள்ளது, இது தான் யேமனில் ஒன்பது மாத போரைச் சாத்தியமாக்கியது—அந்த குற்றகரமான தாக்குதல் ஆயிரக் கணக்கான யேமனிய அப்பாவி மக்களைக் கொன்றுள்ளதுடன், நூறாயிரக் கணக்கானவர்களை வீடற்ற அகதிகளாக ஆக்கியுள்ளது.
இரத்தத்தில் ஊறிய சவூதி முடியாட்சி, மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்பற்றும் சூறையாடும் கொள்கையின் ஒரு வெளிப்பாடாகும். இந்த அதிதீவிர-பிற்போக்குத்தன ஆட்சியை வாஷிங்டன் பாதுகாப்பதும் மற்றும் அதைச் சார்ந்திருப்பதும், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்றழைக்கப்படுவதில் தொடங்கி "ஜனநாயகம்" மற்றும் "மனித உரிமைகளை" ஊக்குவிக்கிறோம் என்று கூறப்படுவது வரையில், அப்பிராந்தியத்தின் அடுத்தடுத்த அமெரிக்க இராணுவ தலையீடுகளுக்கு வழங்கப்படும் எல்லா சாக்குபோக்குகளையும் அம்பலப்படுத்துகிறது.
பகுப்பாய்வின் இறுதியாக, சவூதி அரசகுடும்பத்தினுடனான கூட்டணி மீது ஏற்றப்பட்ட எந்தவொரு கொள்கையும் ஒரு சீட்டுக்கட்டு மாளிகை தான், அது மத்திய கிழக்கின் வர்க்க போராட்டம் மறுமலர்ச்சி பெறுகையில் உடைந்து நொருங்கிப் போகும்.