சீன-விரோத “திருப்பத்திற்கு” ஏற்ப
இந்தியாவை பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்கிறது
By Keith Jones
8 March 2016
Print
version | Send
feedback
அமெரிக்க பசிபிக் படையணியின் தலைவரான அட்மிரல் ஹாரி
ஹாரிஸ், சென்ற வாரத்தில் புது டெல்லியில் வழங்கிய கடும் ஆத்திரமூட்டலான
ஒரு பேச்சில், இந்தியாவுக்கான அமெரிக்காவின் மூலோபாயத் திட்டநிரலில்
”அடுத்த அடியெடுப்புகள்” என்னவாக இருக்கும் என்பதை
அவர் வரைந்து காட்டினார். “இந்தியாவுடனான ஒரு மூலோபாயக் கூட்டு
வழங்குகின்ற வாய்ப்புகளைக் கண்டு ஒரு கணம் மலைத்துப் போவதாக”
கூறிக்கொண்ட ஹாரிஸ், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் அமெரிக்க
மற்றும் இந்தியக் கடற்படைகள் இணைந்து ரோந்து சுற்றும் காட்சி
“மிகவும் தூரத்தில் இல்லை” என்று தன் மனக்கண்ணில்
தோன்றுவதாகக் கூறினார்.
அமெரிக்காவுடனும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதன் மிக
நெருங்கிய இராணுவக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன்
இணைந்து ஒரு நாற்கர பாதுகாப்பு “பேச்சுவார்த்தை”யை
உருவாக்கவும் அவர் இந்தியாவை வலியுறுத்தினார்.
சமீபத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் வருடாந்திர முக்கூட்டு
இந்திய-அமெரிக்க-ஜப்பானிய கடற்படை ஒத்திகையை தென்சீனக் கடலுக்கு
— சர்ச்சைக்குரிய இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தனது
கூட்டாளிகளை சீனாவுடனான அவற்றின் பிரதேச உரிமை கொண்டாடல்களை
வற்புறுத்துவதற்கு ஊக்குவித்து வருகிறது— சற்று வெளியே,
பிலிப்பைன்ஸின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் நடத்துவதற்கும் அதே நாளின்
பிற்பகுதியில் அட்மிரல் ஹாரிஸ் ஆலோசனை வைத்தார்.
மொத்தத்தில், சீனாவை மூலோபாயரீதியாக தனிமைப்படுத்தவும்,
சுற்றிவளைக்கவும் அத்துடன் சாத்தியமான போரை நடத்தவுமான அமெரிக்காவின்
முனைப்பில் இந்தியா ஒரு “முன்னிலை அரசாக” ஆவதற்கு
ஹாரிஸ் வலியுறுத்தினார்.
ஏறக்குறைய எந்த அளவுகோலைக் கொண்டு பார்த்தாலும், இந்தியா
ஒரு ஏழை நாடாகும். ஆனால் பென்டகனின் போர் திட்டமிடலாளர்கள் உள்ளிட்ட
அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் இருபத்தியோராம் நூற்றாண்டின்
தொடக்கம் முதலாகவே அதனை ஒரு “மூலோபாய பரிசு” என்று
போற்றி வந்திருக்கின்றனர். மிரட்டல்கள் மற்றும் விஷம்-தோய்ந்த
தூண்டில்களின் ஒரு கலவையின் மூலமாக இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
வேட்டையாடும் உலகளாவிய திட்டநிரலுக்கு பட்டைதீட்டுகின்ற அமெரிக்காவின்
முயற்சிகள், 2011 இல் ஒபாமா நிர்வாகம் தனது சீன-விரோத
“திருப்ப”த்தை அறிவித்ததன் பின்னர் மிகப்பெருமளவில்
தீவிரமடைந்திருக்கின்றன.
இந்தியா மீது அமெரிக்க மூலோபாயவாதிகள் காட்டுகின்ற
நாட்டத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உலகின் “வளரும்
பொருளாதாரங்களில்” இது இரண்டாவது பெரியதாக இருக்கிறது. இதனிடம்
அணு ஆயுதங்கள் மற்றும் துரிதமாய் விரிவடைந்து வருகின்ற கடற்படை சகிதம் ஒரு
மிகப்பெரும் இராணுவம் இருக்கிறது. புவிமூலோபாய கோணத்தில், இது
தெற்காசியாவில் (இந்தியத் துணைக்கண்டத்தில்) மேலாதிக்கம் செலுத்துவதானது
அண்டையிலிருக்கும் சீனா மற்றும் எரிசக்தி வளமிக்க மத்திய கிழக்கு மற்றும்
மத்திய ஆசியா ஆகியவை உள்ளிட யூரோ-ஆசியாவின் பெரும்பகுதியில் அமெரிக்க
அதிகாரத்தை முன்தள்ளுவதற்கு நடவடிக்கைகளின் ஒரு களத்தை அளிப்பதற்கான ஒரு
சாத்தியத்தை தருகிறது.
இறுதியானதாய் என்றாலும் முக்கியத்துவத்தில் சளைக்காததாய்,
இந்தியா இந்திய பெருங்கடலுக்குள் ஆழ ஊடூருவி அமைந்து, இக்கடலின்
ஒட்டுமொத்த வடபகுதிக்கும், அதாவது அமெரிக்க கடற்போர் கல்லூரி மேற்கொண்ட
ஒரு ஆய்வு “ உலக வர்த்தகத்தின் மைய நரம்பாக வட அட்லாண்டிக்கை
பிரதியீடு செய்திருக்கின்ற” ஒரு பகுதியாகக் குறிப்பிடுகின்ற
பகுதிக்கு, எளிதான அணுகலை வழங்குகிறது.
இந்திய பெருங்கடலில் மேலாதிக்கம் செலுத்துவது
அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான ஒரு அத்தியாவசியமாக அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகளால் பார்க்கப்படுகிறது. அதற்கு முதலாவதும்
முதன்மையானதுமான காரணம், சீனாவுடனான ஒரு போர் அல்லது போர் நெருக்கடியின்
சமயத்தில் மூலோபாயரீதியான கடல்வழி “சந்திகள்” மூலமாக
சீனா மீது ஒரு பொருளாதாரத் தடையைத் திணிப்பதற்கான அமெரிக்க திட்டங்களுக்கு
இருதயத்தானமான ஒரு இடத்தில் அது அமைந்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும்
கிழக்கு ஆபிரிக்காவில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு
முக்கியமான அரங்கேற்ற களமாக இந்தியப் பெருங்கடல் திகழ்வதும் ஒரு காரணம்.
சட்டவிரோதப் போர்களை நடத்துகின்றதாக, தேசிய இறையாண்மையை
மீறுவதாக, அத்துடன் சர்வதேச சட்டத்தை தன் இஷ்டத்திற்கு வளைத்துக்
கொள்கின்றதாக இருக்கின்ற ஒரு தீவைப்பு சக்தியாக அமெரிக்கா
எழுந்திருக்கின்றது என்ற சமயத்திலும் கூட, இந்திய முதலாளித்துவமானது, தனது
சொந்த வல்லரசு இலட்சியங்களை பின்பற்றி, முன்னெப்போதினும் தீர்க்கமான
வகையில் அமெரிக்காவை நோக்கி சாய்ந்திருக்கிறது.
இந்தியாவில் 2004 முதல் 2014 வரையிலும் ஆட்சி செய்த
காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கமானது அமெரிக்காவுடன் ஒரு
“உலகளாவிய மூலோபாயக் கூட்டிற்குள்” நுழைந்தது;
ஈரானைத் தனிமைப்படுத்துவதற்கும் அதனைச் சீண்டுவதற்குமான அமெரிக்காவின்
முயற்சிகளுக்கு அங்கீகரிப்பு கிட்ட உதவியது; அத்துடன் ஆயுதக் கொள்முதல்கள்
உட்பட இந்திய இராணுவத்திற்கும் பென்டகனுக்கும் இடையிலான உறவுகளை துரிதமாக
விரிவுபடுத்தியது.
நரேந்திர மோடியும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா
கட்சியும் இந்தியாவின் அரசாங்கத்தினை நடத்தியிருக்கின்ற இந்த 22
மாதங்களில், இந்தியா முன்னெப்போதினும் முழுமையாக தன்னை சீனாவுக்கு எதிரான
அமெரிக்காவின் மூலோபாயத் தாக்குதலுக்குள் ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது.
இதில் இடம்பெற்றவை பின்வருமாறு:
- ”உலாவலுக்கான சுதந்திரம்” என்ற
பேரில், சீனாவின் கடலெல்லைப் பகுதிகளில் ரோந்து சுற்றுவதற்கும் மலாக்கா
ஜலசந்தி மற்றும் பிற மூலோபாய சந்திப்புப் புள்ளிகளை துரிதமாய்
கைப்பற்றுவதற்கு தேவையான கடற்படை வலிமையை நிலைநிறுத்துவதற்கும் தனக்கு
உரிமை இருப்பதாக அமெரிக்கா தான் கூறிக் கொண்டிருக்கின்றது என்ற நிலையில்,
தென் சீனக் கடலிலான மூர்க்க நாடாக சீனாவை சித்தரிப்பதில் அமெரிக்காவுடன்
இந்தியா கைகோர்த்துக் கொண்டமை;
- அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இராணுவ
ஒத்திகைகள் மற்றும் மூலோபாயத் திட்டமிடல் உட்பட, இருதரப்பு மற்றும்
முத்தரப்பு இராணுவ-பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தியமை;
- சீனாவின் செல்வாக்கை எதிர்த்து நிற்பதில்
தெற்காசியாவெங்கும் ஒத்துழைப்பு அளிப்பமை. இலங்கையில் மஹிந்த இராஜபக்சவினை
அகற்றி விட்டு சீன-இலங்கை உறவுகளை பலம்குன்றச் செய்து அமெரிக்காவுடன் ஒரு
பாதுகாப்பு “பேச்சுவார்த்தை”யைத் தொடக்குவதற்கு
தயாராய் இருக்கின்ற ஒரு ஜனாதிபதியை அமர்த்திய 2015 ஜனவரி ஆட்சி-மாற்ற
நடவடிக்கையும் இதில் அடங்குவதாகும்.
ஹாரிஸின் புதுடெல்லி உரையானது இந்தியாவுக்கும்
சீனாவுக்கும் இடையில் சந்தேகங்களை விதைப்பதையும் பதட்டங்களை
பற்றவைப்பதையும் கொண்டு இந்தியாவை அமெரிக்காவின் மூலோபாயத் திட்டநிரலுடன்
மேம்பட்ட வகையில் பிணைக்கின்ற நோக்கம் கொண்டிருந்தது. அமெரிக்காவின் உலக
மேலாதிக்கத்தை எந்தவிதத்திலும் சவால் செய்வதை கைவிடச் செய்ய சீனாவை
நிர்ப்பந்திக்கின்ற ஒரு இடைவிடாத பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இதுவாகும்.
சென்ற வாரத்தின் ஆரம்பத்தில், விமானம் தாங்கி கப்பலின்
தலைமையில் அமெரிக்காவின் கடல்வழித் தாக்குதல் படை தென்சீனக் கடலில்
நுழைவதற்கு ஹாரிஸ் உத்தரவிட்டார். இந்த வாரத்தில் அமெரிக்காவும் தென்
கொரியாவும் தங்களது இதுவரையிலானதில் பெரிய கொரியத் தீபகற்ப போர் ஒத்திகையை
தொடக்கின. வடகொரியாவின் மீது வலிந்து தாக்குதல் நடத்துவது மற்றும் சீன
எல்லை வரையில் வடக்கை ஆக்கிரமிப்பது ஆகியவற்றுக்கான வழிவகையளிக்கும் ஒரு
புதிய நடவடிக்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒத்திகை
தொடக்கப்பட்டிருக்கிறது.
ஹாரிஸின் உரைக்கு பதிலளிப்பதற்கு இந்திய பாதுகாப்பு
அமைச்சரான மனோகர் பாரிக்கர் முழுமையாக இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டார்
என்பது, இந்தியாவிடம் இருந்தான அமெரிக்காவின்
“எதிர்பார்ப்புகளை” அட்மிரல் பகிரங்கமாகப் பேசியதில்
பாஜக அரசாங்கம் திகைத்துப் போயிருந்ததை சுட்டிக்காட்டியது. இந்தியா
அமெரிக்காவுடன் இணைந்து கடற்படை ரோந்து நடவடிக்கைகளை நடத்தும் என்பதான
கருத்தை பாரிக்கர் கண்டித்தார், ஆனால் வருங்காலத்தில் அத்தகையதொரு
சாத்தியத்திற்கு கதவு அகலத் திறக்கப்பட்டிருக்கிறது என உணர்த்துகின்ற ஒரு
வகையிலேயே அந்த மறுப்பு இருந்தது.
வெளிநாட்டு இராணுவங்களுடனான கூட்டு நடவடிக்கைக்கு
“அடித்தளம் அமைத்துத் தரக் கூடியதாக” பென்டகன்
கருதுகின்ற மூன்று உடன்பாடுகளை நிராகரிப்பதற்கு இந்தியாவின்
இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகங்களின் ஆதரவுடன் முந்தைய அரசாங்கம் எடுத்திருந்த
முடிவினை பாஜக ஏற்கனவே திரும்பப் பெற்று விட்டது. அந்த உடன்படிக்கைகள்
இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக
விளங்கியதாகக் கூறப்பட்டதன் பேரில் நிராகரிக்கப்பட்டிருந்தன.
அமெரிக்க பாதுகாப்புச் செயலரான ஆஷ்டன் கார்ட்டர் அடுத்த
மாதம் இந்தியாவுக்கு வருகை தரும்போது இவற்றில் குறைந்தபட்சம் ஒரு
உடன்படிக்கையிலேனும் - இந்தியத் துறைமுகங்களுக்கும் கடற்படைத்
தளங்களுக்கும், எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்கு அமெரிக்க
இராணுவத்திற்கு தொடர்ச்சியான அணுகலைத் தரக்கூடிய தளவாட ஆதரவு உடன்படிக்கை
(LSA) - அவர் கையெழுத்திடுவார் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
“போர் வந்தால் என்னவாகும்?” என்பது தான் அமெரிக்க
இராணுவத்திற்கு ஆதரவளிக்க இந்தியத் தளங்களுக்கு இன்னும் இருக்கக் கூடிய
ஒரே உறுத்தலாக இருந்தது என்று உயர்மட்ட இந்திய அதிகாரி ஒருவர் சென்ற
டிசம்பரில் வெளியிட்ட கருத்தில் இந்த LSA உடன்படிக்கையின் முக்கியத்துவம்
அடிக்கோடிடப்படுகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய
முதலாளித்துவத்திற்கும் இடையில் துளிர்விடுகின்ற இராணுவ-மூலோபாயக்
கூட்டானது தெற்காசியா மற்றும் உலகெங்குமான வெகுஜனங்களுக்கு ஒரு
மிகப்பெரும் அச்சுறுத்தலை உள்ளடக்கியதாக இருக்கிறது.
இந்தியாவிடம் இருந்து பெறுகின்ற அரசியல் மற்றும் இராணுவ
ஆதரவைக் கொண்டு அணுஆயுத வல்லமை கொண்ட சீனாவுடன் ஒரு மோதலை பொறுப்பற்ற
முறையில் அமெரிக்கா பின்பற்றிக் கொண்டிருக்கிறது. திட்டமிட்டோ அல்லது
தவறான கணக்குகளாலோ இந்தப் பாதையானது ஒரு உலகப்போரை பற்றவைக்க
அச்சுறுத்துகிறது.
இந்திய முதலாளித்துவ வர்க்கமானது, தனது பங்கிற்கு,
அமெரிக்காவின் இளைய கூட்டாளியாக இருப்பதன் மூலம் அது பெறக் கூடிய மேம்பட்ட
இராஜதந்திர, இராணுவ, மற்றும் புவியரசியல் சக்தியைக் கொண்டு தெற்காசியாவில்
பிராந்திய மேலாதிக்க சக்தியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் தனது நீண்டகால
இலட்சியத்தைப் பின்பற்றி வருகிறது. பாஜகவின் கீழ், இந்தியா தனது அத்தனை
அண்டைநாடுகளுடன் தனது நலன்களை மூர்க்கமாக திட்டவட்டம் செய்திருக்கிறது.
பாகிஸ்தானுடன் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் புதிய இராணுவ
நிலைநிறுத்தங்களை அமைப்பது, சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில்
கூடுதலாய் இராணுவரீதியான கறார்தனத்தைக் காட்டும்படி இராணுவத் தளபதிகளுக்கு
குறிப்பளிப்பது ஆகியவையும் இதில் அடங்கும். சென்ற ஆண்டில்
இந்தியாவிற்கும், அதன் அணுஆயுத வல்லமை கொண்ட எதிரியான பாகிஸ்தானிற்கும்
இடையில் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தின் மிக மோசமான எல்லை
மோதல்கள் மூண்டன.
மூலோபாயரீதியாக இந்தியாவுடனான அமெரிக்காவின் கூட்டு
தெற்காசியாவில் அதிகாரச் சமநிலையை குலைத்து ஆயுதப் போட்டியைத்
தூண்டியிருப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறது, இந்த
எச்சரிக்கைகளை அமெரிக்கா அகம்பாவத்துடன் உதாசீனம் செய்திருக்கிறது. சென்ற
ஆண்டில் இந்திய-அமெரிக்க கூட்டணி வலுப்பட்டதற்கும் பாகிஸ்தானை
வம்பிழுப்பதற்கான மோடியின் முயற்சிகளுக்கும் மத்தியில் இந்த எச்சரிக்கைகள்
தீவிரப்பட்டிருக்கின்றன. இராணுவரீதியாக, தந்திரோபாய அணு ஆயுதங்களை
நிலைநிறுத்துவதை அறிவித்ததன் மூலமும், அரசியல்ரீதியாக, சீனாவுடன்
நெருக்கமான உறவுகளுக்கு எதிர்பார்த்ததன் மூலமும், பாகிஸ்தான் பதிலிறுப்பு
செய்திருக்கிறது.
இந்தியாவை தனக்கு எதிராகத் தயாரிக்க அமெரிக்கா நோக்கம்
கொண்டிருப்பதை நன்கு அறிந்திருக்கும் சீனா, நீண்டகாலமாகவே இந்தியாவிடம்
குரோதம் காட்டுவதை தவிர்க்க முனைந்து வந்திருக்கிறது என்பதோடு தனது நில
மற்றும் கடல்வழி யூரோ-ஆசிய போக்குவரத்து முன்முயற்சிகளில் அதனை ஒரு
கூட்டாளியாகவும் ஆக்க முனைந்து வந்திருக்கிறது. ஆனால் மோடி இந்தியாவை
அமெரிக்காவின் சீன-விரோத
“திருப்பத்திற்குள்”ஒருங்கிணைக்கின்ற நிலையில்,
சீனாவானது அமெரிக்காவின் ”மூச்சை நிறுத்தும்”
மூலோபாயத்தில் இருந்து தப்பிப்பதற்கான தனது திட்டங்களின் மையத்தில்
பாகிஸ்தானை வைப்பதை நோக்கி நகர்ந்திருக்கிறது. மேற்கு சீனாவை பாகிஸ்தானி
அரபிய கடல் முனையான க்வடார் உடன் இணைக்கின்ற பாகிஸ்தான் பொருளாதார
வளாகத்தில் (Pakistan Economic Corridor) 46 பில்லியன் டாலரை தான் முதலீடு
செய்யவிருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானிய உயரடுக்கையும் பாகிஸ்தான் இராணுவத்தையும்
கடந்த ஆறு தசாப்தங்களாக தனது புவியரசியல் சூழ்ச்சிகளுக்கான கீழ்ப்படிந்த
ஆளுநர்களைப் போல பயன்படுத்தி வந்திருக்கக் கூடிய அமெரிக்காவானது, அவ்வளவு
எளிதாக பாகிஸ்தானை சீனாவிடம் கையளித்து விடப் போவதில்லை. பென்டகனுக்கும்
பாகிஸ்தானின் இராணுவத்திற்கும் இடையிலான அச்சானது புதுடெல்லிக்கும்
வாஷிங்டனுக்கும் இடையிலான தொடர்ச்சியான அவநம்பிக்கை மற்றும் உரசலின்
மூலவளமாக இருந்து கொண்டிருக்கிறது.
எப்படியிருந்தபோதிலும், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின்
மூலோபாயத் தாக்குதலும் இந்தியாவை தனது சீன-விரோதத்
”திருப்பத்தின்” தென்மேற்குத் தூணாக ஆக்குவதற்கான
அதன் முனைப்பும் ஒரு தீகொளுத்தக் கூடிய புவியரசியல் தர்க்கத்தைக்
கொண்டுள்ளது: அமெரிக்கா-சீனா மோதலானது இந்தியா பாகிஸ்தான் இடையிலான
பிற்போக்குத்தனமான புவியரசியல் மோதலுடன் மேலும் மேலும் பின்னிக்கொண்டு
வருவதோடு, இரண்டு மோதல்களுக்கும் அது மிக வெடிப்புவாய்ந்த புதியதொரு
பரிணாமத்தைக் கொண்டுசேர்க்கிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சென்ற மாதத்தில்
வெளியிட்ட “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்”
என்ற அதன் அறிக்கையில் விளக்கியதைப் போல, மூர்க்கத்தனம் மற்றும் போரின்
மூலமாக அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தைத் தாங்கிப் பிடிப்பதற்கு
அமெரிக்கா செய்கின்ற கிறுக்குத்தனமான முயற்சிகளை எதிர்ப்பதற்கான ஒரே
முற்போக்கான அடிப்படை என்னவென்றால் ஏகாதிபத்தியவாதிகளின் போர்
வரைபடத்திற்கு எதிராய் வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தை - அதாவது
போருக்கு எதிராய் ஒரு உலகளாவிய தொழிலாள-வர்க்க இயக்கத்தை ஒரு சோசலிச
மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கட்டியெழுப்புவதை -
முன்நிறுத்துவதே ஆகும்.
|