வட கொரியா மீது முன்கூட்டிய திடீர் தாக்குதல்களுக்கு
அமெரிக்க-தென் கொரிய இராணுவங்கள் ஒத்திகை பார்க்கின்றன
By Peter Symonds
8 March 2016
Back
to screen
version
ஜனவரியில் நடத்தப்பட்ட வட கொரியாவின் நான்காவது அணுகுண்டு சோதனை
மற்றும் கடந்த மாதம் அனுப்பப்பட்ட ராக்கெட் ஆகியவற்றைத் தொடர்ந்து கொரிய
தீபகற்பத்தில் பதட்டங்கள் அதிகரித்திருக்கும் நிலைமைகளின் கீழ், நேற்று
பாரியளவிலான அமெரிக்க-தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சிகள் தொடங்கின.
வாஷிங்டனிடம் இருந்து வந்த அழுத்தத்தின் கீழ், கடந்த வாரம் ஐக்கிய நாடுகள்
பாதுகாப்பு சபை இதுவரையில் இல்லாத மிகப் பெரும் தாக்கங்களைக் கொண்ட
தடையாணைகளைப் பியொங்யாங் மீது திணித்தது. அவை அதன் கனிமவள ஏற்றுமதிகளை
மட்டுப்படுத்துடன், அந்த ஸ்திரமற்ற ஆட்சியை மோசமடைய செய்துகொண்டிருக்கும்
பொருளாதார நெருக்கடியை இன்னும் இறுக்கமாக்கும்.
இந்த வருடாந்தர போர் சகாசங்கள் (Key Resolve மற்றும் Foal Eagle)
எப்போதுமே மிகவும் ஆத்திரத்துடன் இருந்துள்ளன. வட கொரியாவுடன் போருக்கான
ஒரு முன்னோட்ட ஒத்திகையாக இருக்கும் இவை, தென் கொரிய இராணுவம் மற்றும்
அந்நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க படைகளின் குறிப்பிடத்தக்க ஆதாரவளங்களை
ஒன்றுதிரட்டுகின்றன. நடந்து வரும் இந்த பயிற்சிகள் ஒருபோதும்
இல்லாதளவிற்கு மிகப் பெரியதாக இருக்கும். இவற்றில் 300,000 தென் கொரிய
துருப்புகள் மற்றும் 17,000 அமெரிக்க சிப்பாய்கள், அவர்களுக்கு
ஒத்துழைப்பாக அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள், அத்துடன் வான்
மற்றும் கடற்படை ஆகியவை உள்ளடங்கி இருக்கும்.
எவ்வாறிருப்பினும் மிக முக்கியமாக, இந்தாண்டின் ஒத்திகைகள்,
OPLAN 5015 என்ற ஒரு புதிய கூட்டு நடவடிக்கை திட்டத்தின் அடிப்படையில்
அமைந்துள்ளது—இது வட கொரியாவிற்கு எதிரான ஒரு போரின் முக்கியத்துவத்தை ஒரு
பெயரளவிற்கான தற்காப்பு நிலைப்பாடு என்பதிலிருந்து ஒரு தாக்குதல்
நிலைப்பாடாக மாற்றுகிறது. ஊடகங்களில் கசிந்த விபரங்களின்படி, ஒட்டுமொத்த
கொரிய தீபகற்பத்தைக் கைப்பற்றுவதற்கான முன்னறிவிப்பாக, வட கொரியாவின்
அணுஆயுத மற்றும் ஏவுகணை தளங்கள் மீதான முன்கூட்டிய தாக்குதல்கள், மற்றும்
கிம் ஜொங் வுன் உட்பட வட கொரிய முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்ய சிறப்பு
படை பிரிவுகளின் "தலைமையை அழிக்கும்" தாக்குதல்கள் ஆகியவற்றை இத்திட்டம்
உள்ளடக்கி உள்ளது.
தென் கொரிய செய்தி நிறுவனம் Yonhap Post குறிப்பிடுகையில், அந்த
கூட்டு படைகள் வட கொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை தளவாடங்களைக்
கண்டறிய, நாசப்படுத்த, அழிக்க மற்றும் அவற்றிற்கு எதிராக தற்காப்பு செய்து
கொள்ள ஒரு புதிய "4D” நடவடிக்கை திட்டம் ஒன்றையும் பயிற்சி செய்யும் என்று
குறிப்பிட்டது.
பியொங்யாங் ஆட்சியின் ஓர் அரசியல் பொறிவு அல்லது வட கொரியாவில்
ஓர் உள்நாட்டு கிளர்ச்சி போன்ற திடீர் நெருக்கடிகள் மீது ஒருமுனைப்படும்
Concept Plan (CONPLAN) 5029 திட்டமும், கடந்த நவம்பரில் கையெழுத்தான இந்த
OPLAN 5015 திட்டத்துடன் சேர்ந்துள்ளது. அமெரிக்க மற்றும் தென் கொரிய
இராணுவம், ஏற்கனவே குறிப்பாக வட கொரியாவின் பாரிய பேரழிவுகரமான ஆயுதங்களை
அழிப்பதற்காக பணிக்கப்பட்ட ஒரு கூட்டு பிரிவை உருவாக்கி உள்ளது. தென்
கொரியாவில் 28,500 துருப்புகளைக் கொண்டுள்ள மற்றும் தற்போது அதன் இராணுவத்
தளங்களை மேம்படுத்தி வருகின்ற அமெரிக்கா, போர் சம்பவத்தின் போது, தென்
கொரிய இராணுவ படைகளின் முழு செயல்பாட்டிற்கு கட்டளையிடும் பொறுப்பேற்கும்.
OPLAN 5015 இல் விவரிக்கப்பட்ட ஆக்ரோஷமான நடவடிக்கைகளுடன் இணைந்த
வகையில், பெண்டகன் அணுஆயுத தாக்குதல் நடத்தக்கூடிய நீர்மூழ்கி கப்பல்
மற்றும் செய்திகளின்படி ஒரு B-2 மூலோபாய குண்டுவீசி ஆகியவை உட்பட இந்த
ஆண்டின் போர் சாகசங்களில் பங்கெடுக்க, அணுஆயுத தகைமை கொண்ட இராணுவ
இருப்புக்களை அனுப்பி உள்ளது. கடந்த வாரம் தென் சீனக் கடலில் சீனாவிற்கு
எதிராக திருப்பிவிடப்பட்டிருந்த ஓர் ஆத்திரமான தலையீட்டிலிருந்து நேரடியாக
இங்கு வந்திருந்த விமானந்தாங்கி கப்பல் ஜோன் சி. ஸ்டென்னெஸ் உம்
பங்கெடுக்க உள்ளது, அத்துடன் போர்க்கப்பல்களின் இருக்கும் தாக்கும்
குழுவும் இணைந்திருக்கும்.
அமெரிக்க படைகளின் கொரிய கட்டளையகம், “இந்த பயிற்சி
ஆத்திரமூட்டும் இயல்பைக் கொண்டதல்ல" என்று அப்பட்டமாக வலியுறுத்தி,
வருடாந்தர ஒத்திகைகளின் தேதிகள் குறித்து பியொங்யாங்கிற்கு ஓர்
உத்தியோகபூர்வ குறிப்பை அனுப்பி இருந்தது. தென் கொரியாவை விடுவிக்க
மற்றும் அமெரிக்க பெருநிலத்தைத் தாக்குவதற்கு அதனிடம் அதன் சொந்த செயல்
திட்டம் இருப்பதாக அறிவித்து, வட கொரிய இராணுவம் ஒரு போர் நாடும் அறிக்கை
உடன் விடையிறுத்தது. "ஆத்திரமூட்டும் சகல இராணுவத் தளங்களையும் … ஒரு
கணத்தில் கடலில் எரித்து சாம்பலாக்கும்" "தாக்குதலுக்கான கருவிகளை"
நிலைநிறுத்தி இருப்பதாக அது வாதிட்டது.
கடந்த வாரம் வட கொரிய தலைவர் கிம் ஜொங் வுன், எந்நேரத்திலும்
அதன் அணுஆயுதங்களைப் பிரயோகிக்க தயாராக இருக்குமாறு அந்நாட்டின்
இராணுவத்திற்கு உத்தரவிட்டதுடன், “நமது இராணுவ எதிர்நடவடிக்கை
நிலைப்பாட்டை எதிரிகளை நோக்கி முன்கூட்டிய தாக்குதல் நடத்தும் நிலைப்பாடாக
மாற்றுவதற்கு" இதுவே தருணம் என்று அறிவித்தார். ஏற்கனவே இருக்கும் அணுஆயுத
கையிருப்புகளைப் ஒன்று குவிப்பதற்கான முயற்சிகளும் மற்றும் இந்த
போர்நாடும் தோரணையும் ஆழமாக பிற்போக்குத்தனமானவை ஆகும். தேசியவாதம்
மற்றும் இராணுவவாதத்தை தூண்டிவிடுவதன் மூலமாக மக்கள் ஆதரவைப் பெறுவதற்கான
அதன் முயற்சிகள் மூலமாக கன்னைகளாக பிளவுபட்டுள்ள அந்த ஆட்சி, வட கொரிய
தொழிலாளர்களைத் தென்கொரிய, ஆசிய மற்றும் உலகெங்கிலும் உள்ள அவர்களது
சகோதரர்களிடம் இருந்து பிளவுபடுத்துகிறது, அத்துடன் இந்நடவடிக்கை நேரடியாக
அமெரிக்க ஏகாதிபத்தியம் அதனை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள வழிவகுக்கின்றது.
நேரத்திற்கேற்ப மீண்டும் மீண்டும் கடந்த கால் நூற்றாண்டாக,
வாஷிங்டன், அதிகமாக வட கொரியாவிற்கு அல்ல, மாறாக சீனாவிற்கு
அழுத்தமளிப்பதற்கு ஒரு வழிவகையாக கொரிய தீபகற்பத்தின் மீது வேண்டுமென்றே
பதட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளது. பியொங்யாங் இன் அணுசக்தி திட்டங்கள்
மீது பேரம்பேசலாம் என்று ஒபாமா நிர்வாகம் உதட்டளவில் தெரிவித்தாலும், வட
கொரியா முன்கூட்டியே பிரதான விட்டுக்கொடுப்புகளை செய்தால் ஒழிய, சீனா
தலைமையிலான ஆறு-தரப்பினர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதை
நிராகரிக்கிறது.
சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அணுஆயுத போருக்கான பெண்டகனின்
திட்டங்களில் ஒரு முக்கிய கூறுபாடான, தென் கொரியாவில் Terminal High
Altitude Area Defence (THAAD) எனும் தரையிலிருந்து வானில் சென்று
தாக்கும் ஏவுகணை அமைப்புமுறையை நிலைநிறுத்துவதற்கு இப்போது நடந்து வரும்
பேச்சுவார்த்தைகள் உட்பட வடகிழக்கு ஆசியாவில் அதன் இராணுவ
ஆயத்தப்படுத்தல்களை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்கா தற்போதைய பதட்டங்களைச்
தனக்கு சாதகமாக சுரண்டி வருகிறது. வட கொரியா மீது அழுத்தங்களைச்
செலுத்துவதற்காக தென் கொரியாவில் "முன்னுதாரணமற்ற" கூட்டு இராணுவ
பயிற்சிகளையும், அத்துடன் பியொங்யாங்கின் அச்சுறுத்தும் அறிக்கைகளையும்
மாஸ்கோ கண்டித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகள், அதன்
"ஆசியாவை நோக்கிய முன்னிலையின்" ஒரு அம்சம் தான். இந்த முன்னிலை என்பது
சீனாவை அடிபணியச் செய்ய மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும்
நோக்கில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் எங்கிலும் இராஜாங்க, பொருளாதார
மற்றும் மூலோபாய தாக்குதலை முழுமையாக தழுவுவதாகும். தென் கொரியாவில்
அமெரிக்க படைகளின் மறுகட்டமைப்பானது, அமெரிக்க வான்வழி மற்றும் கடல்வழி
சக்தியில் 60 சதவீதத்தை 2020 க்குள் ஆசியாவில் நிலைநிறுத்துவது, அத்துடன்
சீனாவைச் சுற்றி வளைக்க கூட்டணி, மூலோபாய பங்காண்மைகள் மற்றும் இராணுவ தள
ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதைக் கருத்தில் கொண்டுள்ள ஒரு மிகப் பரந்த
இராணுவ ஆயத்தப்படுத்தலின் பாகமாக உள்ளது.
கொரிய தீபகற்பத்தில் பதட்டங்களை முறுக்கிவிடும் வாஷிங்டனின்
முடிவு முற்றிலும் பொறுப்பற்றது. இரண்டு தரப்பிலும் இராணுவமயமற்ற பகுதியை
ஒட்டிய ஒரு சிறிய தற்செயலான நடவடிக்கை மற்றும் பிழையான கணக்கீடானது,
முழுமையான போரை உண்டாக்கும் ஓர் அபாயகரமான வெடிப்புப்புள்ளியாக எது
எப்போதும் இருந்து வருகிறதோ அதை தீவிரப்படுத்துவதற்கான சாத்தியக்கூறைக்
கொண்டுள்ளது. ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் பியொங்யாங்கிடம் இருந்து
மட்டும் வரவில்லை, மாறாக சியோலில் அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகாரி Park
Chung-hee இன் மகள், ஜனாதிபதி Park Geun-hye இன் வலதுசாரி அரசாங்கத்திடம்
இருந்தும் வருகிறது. “வடக்கு எங்களின் எச்சரிக்கையை நிராகரித்து ஓர்
ஆத்திரமூட்டலை முயற்சித்தால், நாங்கள் உறுதியுடன் மற்றும் ஈவிரக்கமின்றி
விடையிறுப்போம்,” என்று தென் கொரிய இராணுவம் நேற்று அறிவித்தது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜோன் கெர்பி
விடையிறுக்கையில், “நாங்கள் அத்தகைய அச்சுறுத்தல்களை நிச்சயமாக தீவிரமாக
எடுத்துக் கொள்வோம்… மேலும் இந்த ஆத்திரமூட்டும் பேச்சுக்களை
நிறுத்துமாறு, அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு நாங்கள் மீண்டும்
பியொங்யாங்கிற்கு அழைப்பு விடுக்கிறோம்,” என்று அறிவித்து வட கொரிய
அறிக்கைக்கு விடையிறுத்தார். வட கொரியா அதன் மோசமான நிலையிலுள்ள அணு
ஆயுதங்கள் மற்றும் அவற்றை ஏவுகணைகளாக்குவதற்கான திறன் குறித்து
பகுப்பாய்வு நிபுணர்கள் ஐயப்படுகின்றனர். வாஷிங்டனைப் பொறுத்த வரையில்
கூறுவதானால், அது அந்த வெற்று அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக் கொள்வதால்
அது என்ன திட்டமிட்டு வருகிறது என்பதன் மீது கேள்வி எழுகிறது. ஆக்ரோஷமான
புதிய OPLAN 5015 திட்டத்தைக் கொண்டு அது அதன் சொந்த போக்கில் ஓர் இராணுவ
ஆத்திரமூட்டலைத் தயாரிப்பு செய்து வருகிறதா?
கொரிய தீபகற்பத்தில் போர் என்பது உடனடியாக சீனா மற்றும் ரஷ்யா
உட்பட ஏனைய சக்திகளை உள்ளிழுக்கும் என்பது பெண்டகனுக்கு நன்றாக தெரியும்.
அமெரிக்க-தென் கொரிய இராணுவ கூட்டணியின் மாறிவரும் பாத்திரம் குறித்து
புரூகிங்ஸ் பயிலகம் ஜனவரியில் பிரசுரித்த ஒரு அறிக்கையில், கொரிய
தீபகற்பத்துடன் மட்டுப்பட்டு இருந்த போரை அடிப்படையாக கொண்ட கடந்தகால
மூலோபாயங்கள் "போதுமானதாக இருக்காது அல்லது வழக்கற்று போய்விட்டன” என்று
குறிப்பிட்டது. அது, அமெரிக்க முப்படை தளபதிகளின் தலைமை தளபதி ஜெனரல்
ஜோசப் டன்ஃபோர்ட் டிசம்பரில் கூறிய கருத்துக்களை மேற்கோளிட்டது. வட கொரியா
உடனான எந்தவொரு மோதலும், "பிராந்தியங்களுக்கு இடையிலான, பல்முனை தளத்தில்
மற்றும் பன்முக நடவடிக்கைகளுடன்" இருப்பதைத் தவிர்க்க முடியாது என்று அவர்
கூறி இருந்தார்.
டன்ஃபோர்ட்டின் கருத்துக்களை இராணுவ பேச்சாக மொழிபெயர்த்து
நோக்கினால், பெண்டகன் ஒரு "பிராந்தியங்களுக்கு இடையிலான" மோதலுக்கு,
அதாவது அணுஆயுதங்கள் உட்பட நடப்பிலிருக்கும் ஒவ்வொரு இராணுவ வசதிகளை
பிரயோகித்து, நிலம், கடல், வான்வழி, விண்வெளி மற்றும் இணையவழி என ஒவ்வொரு
களத்திலும் ஓர் உலக போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதையே
அர்த்தப்படுத்துகிறது.
|