சீனாவும் பிரேசிலும்: ஆழமடைந்து வரும் முதலாளித்துவ உடைவின்
இரண்டு வெளிப்பாடுகள்
By Nick Beams
4 March 2016
Print
version | Send
feedback
2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடி மற்றும் அதைத் தொடர்ந்து 2009
இல் உலகளாவிய பொருளாதாரத்தின் வேகமான கீழ்நோக்கிய சரிவுக்குப் பின்னர்,
பல்வேறு முதலாளித்துவ பொருளியல்வாதிகள் மற்றும் பண்டிதர்கள், பிரிக்ஸ்
(BRICS) பொருளாதாரங்கள் என்றழைக்கப்படும் பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா
மற்றும் தென் ஆபிரிக்கா உலக முதலாளித்துவ விரிவாக்கத்திற்கு ஒரு புதிய
அடித்தளத்தை வழங்கும் என்ற கூற்றை முன்வைத்தனர்.
இந்த கட்டுக்கதையின் கடைசி எச்சசொச்சங்களும், இந்த வாரம் வெளியான
செய்திகளுடன் பொறிந்து போயின. அதுவாவது, பரந்தளவிலான உபரிஉற்பத்திக்கு
இடையே அடிப்படை தொழில்துறைகளில் மில்லியன் கணக்கான வேலைகளை வெட்ட சீன
அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, மற்றும் பிரேசில் அதன் வரலாற்றிலேயே ஆழமான
பொருளாதார சுருக்கத்திற்கான (contraction) இருக்கக்கூடிய ஒரு
மந்தநிலைமைக்குள் நுழைந்துள்ளது.
ஏகாதிபத்திய நிதிய மூலதன மையங்களின் மேலாதிக்கம் மற்றும்
பொருளாதார பின்தங்கிய நிலைமை ஆகிய பிரச்சினைகளால் சூழப்பட்ட குறைந்த
மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளது இந்த பிரிக்ஸ் குழுமம், உலகளாவிய
முதலாளித்துவத்திற்கு ஏதோ ஒருவகையில் ஒரு புதிய அபிவிருத்தியை வழங்கும்
என்ற வலியுறுத்தல் எப்போதுமே பொருளாதார கட்டுக்கதையாக இருந்துள்ளது.
இது, ஓர் அரை ட்ரில்லியன் டாலர் அரசு செலவுகள் மற்றும் பொருளாதார
வரலாற்றிலேயே மிக வேகமான கடன் விரிவாக்கம் ஆகியவற்றுடன், சீன
அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பாரிய ஊக்கப்பொதியின் ஒரு சிறிய
காலப்பகுதியால் தாக்குப் பிடித்திருந்தது.
சீனாவின் கட்டுமானத்துறை வளர்ச்சி மற்றும் தொழில்துறை திறன்
விரிவாக்கம் பண்டங்களின் விலைகளை வீழ்ச்சியடையாது வைத்திருந்ததுடன்,
பண்டங்கள்-ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு ஒரு வளர்ச்சியை வழங்கியது. ஆனால்
2014க்குப் பின்னர் எண்ணெய் விலை வீழ்ச்சியில் மிக உடனடியாக பிரதிபலித்த
மற்றும் பல்வேறு தொழில்துறை மூலப்பொருட்கள் எங்கிலும் விரிவடைந்த
பண்டங்களின் "பெருஞ்சுழற்சி" (supercycle) என்றழைக்கப்படுவதன் பொறிவும்,
அத்துடன் "எழுச்சி பெற்றும் வரும் சந்தைகளில்" இருந்து மூலதன
வெளியேற்றமும், ஒரு பொருளாதார சீரழிவு அலையைக் கட்டவிழ்த்துவிட்டது.
சீனா மற்றும் பிரேசிலில் மோசமடைந்துவரும் பொருளாதார நிலைக்கு
மேலே, எண்ணெய் விலை வீழ்ச்சியின் விளைவாக ரஷ்யா மந்தநிலையில் உள்ளது. உலோக
விலைகளின் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் சுரங்கத்
தொழில்துறையில் ஆயிரக்கணக்கான வேலைகளை வெட்டியுள்ள தென் ஆபிரிக்கா,
விரைவிலேயே பின்னடைவுக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா 7 சதவீதத்திற்கும் கூடுதலான வளர்ச்சி விகிதத்துடன் இன்னமும் ஒரு
"பிரகாச புள்ளியாக" முன்வைக்கப்பட்டாலும், அதன் பொருளாதாரம்
திரும்பிவாராக் கடன்கள், ஏற்றுமதி சந்தைகள் வீழ்ச்சி மற்றும் சம்பள
உயர்வின்மை மற்றும் தனியார் முதலீட்டில் தேக்கநிலை ஆகியவற்றால் சுமையேறி
உள்ளது.
2015 இல் 3.8 சதவீதமாக இருந்த பிரேசிலின் பொருளாதார சுருக்கம்,
நேற்று வெளியான புள்ளிவிபரங்களுடன் தீவிரமடைந்து வருகிறது. “உள்நாட்டு
தேவையின் எல்லா கூறுபாடுகளும் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகின்ற"
நிலையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டுக்கான நான்காம்
காலாண்டில் பொருளாதாரம் 5.9 சதவீதம் சுருங்கியதை அந்நாட்டின்
புள்ளிவிபரங்கள் அமைப்பின் தகவல்கள் எடுத்துக்காட்டின. உத்தியோகபூர்வ
ஆவணப்பதிவு தொடங்கியதற்குப் பின்னர், அது அதன் படுமோசமான மந்தநிலையால்
பாதிக்கப்பட்டுள்ளது, இந்தாண்டு குறைந்தபட்சம் 3 சதவீத மற்றொரு பொருளாதார
சுருக்கம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா மற்றும் பிரேசிலை தனியாக பரிசீலிப்பதன் மூலமாக
இந்நாடுகளிலிருந்து வரும் அறிவிப்புகளின் முழு முக்கியத்துவத்தையும்
உள்ளீர்த்துக் கொள்ள முடியாது. இவை ஒட்டுமொத்தமாக ஆழமடைந்துவரும் உலகளாவிய
முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடுகளாகும் மற்றும் 2008
பொறிவுடன் தொடங்கிய உடைவு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்பதை
இவை அடிக்கோடிடுகின்றன.
1930களுக்கு பிந்தைய மிக மோசமான நிதியியல் நெருக்கடியை அடுத்து,
உலகளாவிய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த உருக்குலைவு, வங்கிகள் மற்றும் நிதி
அமைப்புகளுக்கு முட்டுக் கொடுப்பதற்காக உலகின் மத்திய வங்கிகளால்
நிதியியல் அமைப்பிற்குள் பாய்ச்சப்பட்ட ட்ரில்லியன் கணக்கான டாலர்
தொகைகளாலும், சீனாவின் பொருளாதார விரிவாக்கத்தாலும் மட்டுந்தான்
தடுக்கப்பட்டது.
இந்த நடைமுறை ஒரு திடீரென்று முடிவுக்கு வந்துள்ளது.
"வளர்ச்சிக்கான" பிரிக்ஸ் "முன்மாதிரி" சிதைந்து வருவதால், மற்றொரு
நிதியியல் பேரிடருக்கான நிலைமைகள் உருவாகி வருகின்றன. பேங்க் ஆஃப்
இங்கிலாந்தின் முன்னாள் ஆளுநர் மேர்வின் கிங் சமீபத்தில் எச்சரிக்கையில்,
2008 பொறிவு "ஓர் அமைப்புமுறையின் தோல்வி" என்றும், உலக பொருளாதாரத்தின்
"சமநிலை இன்மைக்கு" தீர்வு இல்லாமல் ஒரு புதிய பேரழிவு அனேகமாக "நீண்ட
நாட்களில் அல்ல விரைவிலேயே" நடக்கக்கூடும் என்றார்.
“வழமையான" நிலைமைகள் என்றழைக்கப்படுவதற்கு திரும்புவதற்கு மாறாக,
நிதியியல் அமைப்புமுறை "பணத்தைப் புழக்கத்தில் விடும்" திட்டத்துடன்
(அதாவது சந்தைகளுக்குள் பணத்தைப் பாய்ச்சுவதுடன்), இப்போது பத்திரங்கள்
மீது எதிர்மறை வட்டி விகிதங்கள் மற்றும் எதிர்மறை இலாபங்களை தொடங்கி
வைத்து விரிவடைந்து வருகிறது.
ஜனவரி மாத இறுதியில் பேங்க் ஆஃப் ஜப்பான் அதில் வைப்பு
வைக்கப்படும் பணத்திற்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்க முடிவெடுத்ததை
தொடர்ந்து, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஒரு கால் பங்கு
உற்பத்தி எதிர்மறை வட்டி விகிதங்களைக் கொண்ட நாடுகளிலிருந்து வருகிறது.
நிதியியல் அமைப்புமுறையை ஊக்குவிப்பதற்கு மாறாக, ஜப்பானின்
முடிவு சந்தைகளை கொந்தளிப்புக்குள் வீசியது. அரசு பத்திரங்களில் முதலீடு
செய்துள்ள பிரதான வங்கிகள், ஓய்வூதிய நிதியங்கள் மற்றும் காப்பீட்டு
நிறுவனங்களுக்கான இந்த வணிக மாதிரிகள் எத்தனை காலத்திற்கு உறுதியாக
நீடிக்க முடியும் என்பதன் மீது அங்கே கவலைகள் அதிகரித்துள்ளன, இதை
பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை ஒன்று எதிர்மறை வட்டி விகிதங்களின் "கனவுலகம்"
(Fanciful state) என்று குணாம்சப்படுத்தியது. “அபாயகரமாக பணயம் வைத்து
இழப்புகளை ஏற்கும் அபாயத்தை தவிர்க்க, முதலீட்டாளர்கள் மிகவும்
பாதுகாப்பான பங்குகள் என்று கருதுவதை வாங்குகிறார்கள். இப்போது ஓர்
உத்தரவாதமளிக்கப்பட்ட இழப்பை ஏற்படுத்தும் அந்த மிகவும் பாதுகாப்பான
ஆவணங்களுடன் வரிசையில் நிற்கிறார்கள்.” என அப்பத்திரிகை குறிப்பிட்டது.
அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடி,
வன்முறையான அரசியல் மேலெழுச்சிகளைக் கொண்டு வருகிறது. இந்த வாரம்,
பணச்சுருக்கம் மற்றும் தொடர்ச்சியான தேக்கநிலைக்கு மற்றொரு ஆதாரம் வந்ததை
அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான
சாத்தியக்கூறு உடன், Credit Suisse பொருளாதார நிபுணர்கள் “விளிம்பின்
நெருக்கத்தில்” என்று தலைப்பிட்ட ஓர் ஆய்வுக்குறிப்பில், ஐரோப்பாவில்
மந்தநிலை என்பது யூரோ மண்டலத்திற்கு ஏறத்தாழ பொறிவைக் கொண்டு வரும் என்று
எச்சரித்தனர். “யூரோ பகுதி திரும்பவும் மந்தநிலைக்குள் திரும்பினால், அது
தாங்குமா என்பது தெளிவாக தெரியவில்லை,” என்று அவர்கள் கூறினர்.
இலத்தீன் அமெரிக்காவில், பிரேசிலிய பொருளாதாரத்தின் கீழ்நோக்கிய
சுழற்சி முதலாளித்துவ அரசியலினது "இடது திருப்பத்தின்" உடைவின் பாகமாகும்,
அது சீனாவிற்கான ஏற்றுமதிகளை சார்ந்திருந்தது. அமெரிக்காவில், பொருளாதார
மற்றும் அரசியல் அமைப்புமுறையில் ஆழமடைந்துவரும் நெருக்கடி, ஒரு பாசிசவாத
போட்டியாளர், டோனால்ட் ட்ரம்ப், குடியரசு கட்சியின் முன்னணி ஜனாதிபதி
வேட்பாளராக உருவெடுக்க இட்டுச் சென்றுள்ளது.
முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் முழு திவால்தன்மையும், சீனாவை விட
அதிகமாக வேறெங்கும் இந்தளவுக்கு கண்காணக்கூடியதாக வெளிப்பட்டிருக்கவில்லை.
முதலாளித்துவ மீட்சி அந்நாட்டின் "சமாதானமான உயர்வுக்கும்" மற்றும்
தசாப்தகால பாரம்பரிய பொருளாதார பின்தங்கிய நிலைமையைக் கடந்து செல்வதற்கும்
பாதை அமைக்கும் என்று சீன ஸ்ராலினிச ஆட்சி சூளுரைத்து இருந்தது. அதன்
வேலைத்திட்டம் ஒரு பேரழிவாக திரும்பி உள்ளது.
ஒருபுறம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதை நேரடியாக அமெரிக்க
இராணுவ பலிபீடத்தின் மையத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது, அமெரிக்க
இராணுவம் சீனாவின் வளர்ச்சியை அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல்
மேலாதிக்கத்திற்கு ஓர் அச்சுறுத்தலாக கருதுகிறது. மறுபுறம், "சிறப்பு
குணாம்சங்கள்" எதுவும் அற்ற சீன முதலாளித்துவம், ஒட்டுமொத்தமாக
அமைப்புமுறையை பாதித்துள்ள அதே முரண்பாடுகளுக்கு வளைந்து கொடுக்க திரும்பி
இருந்தது, இப்போது அது நேரடியாக நூறு மில்லியன் கணக்கான வேலைகள் மற்றும்
வாழ்வாதாரங்களை அச்சுறுத்துகிறது.
கடந்த வார இறுதி ஜி-20 கூட்டம் எடுத்துக்காட்டியதைப் போல,
அதிகரித்துவரும் இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவ வர்க்கத்திடம் மற்றும்
அதன் அனைத்து அமைப்புகளிடமும் எந்த பொருளாதார தீர்வும் கிடையாது.
அதிகரித்து வரும் பிரச்சினைகளுக்கு முன்னால் ஒருங்கிணைவதற்கு மாறாக, உலக
முதலாளித்துவ அமைப்புமுறை ஒட்டுமொத்தமாக அதிகரித்த கசப்பான மோதல்களால்
குணாம்சப்பட்டுள்ளது. ஆனால் ஒரு விடயத்தில் அவர்கள் உடன்பட்டுள்ளனர்:
அதாவது அவர்கள் தலைமை தாங்கிய அமைப்புமுறையின் குழப்பங்களுக்கு தொழிலாள
வர்க்கத்தை விலை கொடுக்க செய்ய வேண்டும் என்பதில்.
இந்த தற்போதைய அரசியல் அமைப்புமுறைக்குள் இந்த பொருளாதார
உடைவுக்கு எந்த தீர்வும் கிடையாது. உலகளாவிய முதலாளித்துவம் ஒரு பேரழிவை
நோக்கி போய் கொண்டிருக்கிறது, இந்த உண்மையை ஆளும் பொருளாதார மற்றும்
அரசியல் வட்டாரங்களே கூட அதிகளவில் ஒப்புக் கொள்கின்றன. ஆனால் மார்க்ஸ்
விவரித்தவாறு, மனிதயின அபிவிருத்தி போக்கில் எழுகின்ற எந்த பிரச்சினையும்,
அதே நேரத்தில், அதன் தீர்வுக்கான சடரீதியிலான நிலைமைகளை உருவாக்காமல்
ஒருபோதும் எழுவதில்லை.
அதுதான் கடந்த மூன்று தசாப்தங்களில் —பூகோளமயப்பட்ட முதலாளித்துவ
உற்பத்தியின் விளைவாக— சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பாரிய வளர்ச்சியினது
முக்கியத்துவமாகும். 2000 மற்றும் 2010 க்கு இடையில் மட்டும், சீனா,
பிரேசில் மற்றும் இந்தியாவில் 265 மில்லியன் புதிய தொழிலாளர்களின்
எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் இதில் உள்ளடங்கும். ஆனால் ஒரு சர்வதேச சோசலிச
வேலைத்திட்டத்தினால் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அரசியல்
போராட்டத்தின் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய
புறநிலைரீதியிலான பலத்தை நடைமுறைப்படுத்தப்பட முடியும். இதை சோசலிச
புரட்சிக்கான உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை
கட்டியெழுப்புவதன் மூலமாகத்தான் முன்னெடுக்க வேண்டும்.
|