பேர்னி சாண்டர்ஸூம், “ஸ்கன்டினேவிய மாதிரியும்"
By Jordan Shilton
26 February 2016
Print
version | Send
feedback
சமீபத்தில் நெவாடாவில் நடந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களது
விவாதத்தில் அவர் சோசலிசம் என்று எதை அர்த்தப்படுத்துகிறார் என்று வினவிய
போது, தன்னைத்தானே "ஜனநாயக சோசலிசவாதி" என்று பிரகடனப்படுத்திக் கொண்ட
ஜனாதிபதி வேட்பாளர் பேர்னி சாண்டர்ஸ் ஸ்கன்டினேவிய நாடுகளை உதாரணமாக
எடுத்துக்காட்டி விடையிறுத்தார்.
அந்த வெர்மாண்ட் செனட்டர் குறிப்பிட்டார்,
“ஜனநாயக சோசலிசவாதி என்று நான் பேசுகையில், நான் வெனிசூலாவைப்
பார்க்கவில்லை. கியூபாவைப் பார்க்கவில்லை. நான் டென்மார்க் மற்றும்
ஸ்வீடன் போன்ற நாடுகளைப் பார்க்கிறேன்...” என்றார்.
அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள
வர்க்கம் அரசியல்ரீதியில் தீவிரமயமாவதன் ஓர் ஆரம்ப அறிகுறியாக,
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அடுக்குகள் மத்தியில் சாண்டர்ஸ் கணிசமான
ஆதரவைப் பெற்றுள்ளார். ஆனால் டென்மார்க் மற்றும் ஸ்வீடனைச் சாண்டர்ஸ்
துணைக்கு இழுப்பது, அவரது "சோசலிச" வாய்ச்சவடால் எந்தளவிற்கு மோசடியானது
என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
டென்மார்க் மற்றும் ஸ்வீடன் இந்த இரண்டு ஸ்கன்டினேவிய
நாடுகளும் பல தசாப்தங்களாக ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவின்
"முற்போக்கான" வட்டாரங்கள் மத்தியில் ஏதோ ஒருவித பரிசுத்த இடத்தை
பிடித்துக்கொண்டுள்ளன. அத்தகைய கூற்றுகளின் போக்கில், இவ்விதமாக,
முதலாளித்துவம் மனிதத்தன்மை உள்ளதாக ஆக்கப்பட்டால் மற்றும் அதன் மோசமான
மிகுதேவைகளை அரசு நெறிமுறைகள், செல்வந்தர்கள் மீது அதிக வரிவிதிப்பு,
ஒப்பீட்டளவில் பரந்த சமூக சேவைகள் மற்றும் சமூக நல உதவிமுறைகளைக் கொண்டு
கட்டுப்படுத்தினால், இதே போன்ற சமூகங்களை ஏற்படுத்தலாம் என்பதாக மோசடியாக
எடுத்துக்காட்டப்படுகிறது.
உண்மையில் இந்த விடயம் அப்படியே நேரெதிரானது. 20 ஆம்
நூற்றாண்டில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பாக இரண்டாம் உலக
போருக்குப் பிந்தைய சகாப்தத்தில், தொழிலாள வர்க்கம் ஆளும்
வர்க்கத்திடமிருந்து சில குறிப்பிட்ட சலுகைகளைக் கைப்பற்றியது. அப்போது
ஆளும் வர்க்கம், தேசியளவிலான அரசு நெறிமுறையைக் கொண்ட கீன்சிய (Keynesian)
பொருளாதார கொள்கைகளையும், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும்
முதலாளிமார்களது அமைப்புகளுக்கு இடையே கூட்டு-நிர்வாக வடிவமைப்புகளையும்
ஏற்றிருந்தது. அந்த சீர்திருத்தங்கள் ஸ்வீடன், டென்மார்க், நோர்வே மற்றும்
பின்லாந்து ஆகியவற்றின் பெரும்பகுதிகளைக் கடந்து அதற்கு அப்பாலும்
சென்றிருந்தன. எவ்வாறிருந்தாலும் அவை தொலைநோக்குப் பார்வை கொண்ட
அரசியல்வாதிகளால் மேலிருந்து கீழே கொடுக்கப்பட்ட பிச்சை அல்ல, மாறாக
வர்க்க போராட்ட வழிவகைகளைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து அவை
பறிக்கப்பட்டிருந்தன. அதன் உச்சக் கட்டம் தான் 1917 ரஷ்ய புரட்சியின்
வெற்றியாகும்.
1930 கள் தொடங்கி, பல தசாப்தங்களாக ஸ்வீடன் சமூக
ஜனநாயகவாதிகளால் மேலாளுமை பெற்றிருந்தது. வேலைநிறுத்தம் செய்த
தொழிலாளர்கள் மீது அரசு படைகள் துப்பாக்கி சூடு நடத்தி, அதில் ஐந்து பேர்
உயிரிழந்த 1931 பொது மோதல்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் போர்குணமிக்க
போராட்டங்களுக்கு விடையிறுப்பதற்காக, சமூக ஜனநாயகவாதிகள் சமூக நல
சீர்திருத்தங்களை நிறைவேற்றியதுடன், தேசிய மருத்துவக் காப்பீட்டு
முறையையும் நிறுவினர்.
இரண்டாம் உலகப் போரின் போது ஸ்வீடன் முதலாளித்துவ
வர்க்கம், ஜேர்மன் போர் எந்திரத்திற்கு மூலப் பொருட்களை வினியோகித்ததோடு
பெருமளவிலான நடவடிக்கைகளில் "நடுநிலை" நிலைப்பாட்டை ஏற்றிருந்த நிலையில்,
அப்போருக்குப் பின்னர் சமூக ஜனநாயகவாதிகளும் தொழிற்சங்கங்களும்
கூட்டு-நிர்வாக முறையை நிறுவினர். இந்த தேசியளவிலான கூட்டு
உடன்படிக்கைகள், தங்களது இலாபங்களில் பெரும்பகுதியை பொருளாதார
நடவடிக்கைக்குள் மீள்முதலீடு முதலாளித்துவவாதிகளுக்கு ஒரேசீரான மற்றும்
தடையில்லாமல் உழைப்பு வினியோக உத்தரவாதம் அளிக்க சேவையாற்றின. அதற்கு
பிரதி உபகாரமாக, தொழிலாளர்களுக்கு கணிசமான கூலி உயர்வுகள், ஒப்பீட்டளவில்
தாராள மருத்துவ விடுப்புகள் மற்றும் மகப்பேறுகால சலுகைகள் மற்றும்
ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டன. ஸ்வீடனில் தொழிலாளர் உறவுகளின் வடிவத்தைக்
குறித்து 1988 இல் தொழிலாளர்நல ஆய்வுகளுக்கான சர்வதேச அமைப்பால்
நடத்தப்பட்ட ஓர் ஆய்வறிக்கை, அப்போருக்குப் பிந்தைய உடனடியான பல
தசாப்தங்களின் போது தொழில் வழங்குனர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும்
இடையிலான உறவுகளின் குணாம்சத்தைத் தொகுத்தளித்தது. அப்போது அது,
“விவாகரத்துக்கான சாத்தியக்கூறு இல்லாமல் சௌகரியமான ஒரு
திருமணத்தைப் போல ஏதோவிதத்தில் கட்சிகள் ஒன்றுகூடி வாழ்ந்து
வந்தன,” என்று குறிப்பிட்டது.
நோர்டிக் நாடுகள் அனைத்திலும் ஏதோ ஓரளவுக்கு இதேபோன்ற
நிலைமைகள் மேலோங்கி இருந்த நிலையில், இவை இந்த ஒட்டுமொத்த காலகட்டம்
முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதியான கூட்டாளிகளாக இருந்தன.
நோர்வே, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை நேட்டோவின் ஸ்தாபக
அங்கத்தவர்களாக இருந்தன. போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் பொதுமக்கள்
மத்தியில் விதைக்கப்பட்டிருந்த அதன் நடுநிலை பிம்பத்திற்கு இடையிலும்,
ஸ்வீடன் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அமெரிக்க உளவுத்துறை
நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக சேவையாற்றியது. இது, 2013 இல் NSA
இன் இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளியிட்ட
ஆவணங்களால் நிரூபிக்கப்பட்டது. ஸ்கன்டினேவிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை
போன்ற ஏகாதிபத்திய-சார்பு அமைப்புகளுக்குச் சேவையாற்ற, பொருத்தமற்ற
விகிதாசாரத்தில், பெரும் எண்ணிக்கையிலான தூதர்களையும் மற்றும் ஏனைய
அதிகாரிகளையும் அனுப்பின.
இந்த நோர்டிக் தேசங்கள், குறைவின்றி வேறெந்த நாட்டைப்
போலவே, அவை உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு இயைந்து கொடுக்கும் என்பதை
நிரூபித்தன. 1980 களில் இருந்து பூகோளமயப்பட்ட உற்பத்தி, சகல தேசிய
சீர்திருத்த திட்டங்களைப் பலவீனப்படுத்தியதுடன், அமெரிக்க ஜனாதிபதி
ரோனால்ட் ரீகன் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சர்
தலைமையில் முதலாளித்துவ வர்க்கம் அதன் எதிர்தாக்குதலை தொடங்கியதும்,
அடுத்தடுத்து வந்த ஸ்வீடன் அரசாங்கங்கள் பொதுச் சேவைகள் மற்றும் சுகாதார
தனிவகைமுறைகளை திரும்பப் பெறத் தொடங்கின. அதன் உற்பத்திப் பொருட்களது
விற்பனை மற்றும் நிதியியல் ஊக வணிகத்திற்காக பூகோளமயப்பட்ட பொருளாதாரத்தை
அதிகரித்தளவில் சார்ந்திருந்த ஆளும் உயரடுக்கு, போருக்குப் பின்னர்
இருந்து மேலாதிக்கம் செலுத்தி வந்த தேசியளவில் நெறிமுறைப்படுத்தப்பட்ட
தொழிலாளர் உறவுகளை அதற்கு மேல் பேணுவதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.
1990 களில் இருந்து, பொது சேவைகளை அழிப்பதில்
தொழிற்சங்கங்களின் முழு ஒத்துழைப்புடன் சமூக ஜனநாயக அரசாங்கங்கள் முன்னிலை
ஏற்றன. ஸ்வீடனில், 1990களின் ஆரம்பத்தில் நோர்டிக் வங்கியியல்
நெருக்கடிக்குப் பின்னர் அதிகாரத்திற்கு வந்த சமூக ஜனநாயக அரசாங்கம், 1994
இல் இருந்து 2006 வரையில் பதவியில் இருந்தது. அது சுகாதார செலவின
வெட்டுக்களுடன் சேர்ந்து கல்வி மற்றும் மருத்துவக் காப்பீட்டைப்
பெருமளவில் தனியார்மயமாக்குவதை மேற்பார்வையிட்டது. அதன் வலதுசாரி
முன்வரலாறு, மிதவாதக் கட்சி (Moderate Party) பிரதம மந்திரி பிரேடரிக்
றைன்வெல்ட் இன் கீழ் பழமைவாத கூட்டணி அரசாங்கம் அமைய வழி வகுத்தது. இந்த
அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஸ்வீடன் வரலாற்றில் இல்லாதளவிற்கு மிகப்
பெரியளவில் தனியார்மயமாக்கலை தொடங்கியது.
அதைப் போலவே, டென்மார்க்கிலும், சமூக ஜனநாயகம் கூர்மையாக
வலதிற்குத் தாவியது. 1990 களில் போல் நிரூப் ராஸ்முஸன் இன் அரசாங்கம்
சுகாதார செலவினங்களில் வெட்டுக்களை திணித்ததுடன், யூரோவை ஏற்க
டென்மார்க்கிற்கு அழுத்தமளித்தது, இது அக்கண்டம் முழுவதிலும் கூலிகள்
மற்றும் தொழிலாளர்களது வாழ்க்கை நிலைமைகளைக் குறைப்பதற்கான ஒரு
இயங்குமுறையாக சேவையாற்றியது. இந்த அரசாங்கம், யூரோ மீதான ஒரு வெகுஜன
வாக்கெடுப்பில் தோல்வியடைந்திருந்த நிலையில், 2001 இல் பதவியிலிருந்து
வாக்களிப்பின் மூலமாக வெளியேற்றப்பட்ட போது, சமூக ஜனநாயகவாதிகள்
அந்திரேயாஸ் வொக் ராஸ்முஸன் வென்ஸ்டர் அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளைத்
தழுவினர். இந்த அரசாங்கம் ஆதரவிற்காக தீவிர வலது தேசியவாத டேனிஷ் மக்கள்
கட்சியைச் (DF) சார்ந்திருந்தது. ஐரோப்பாவில் கடுமையான புலம்பெயர்வு
முறையை நடைமுறைப்படுத்திய இது, ஈராக்கில் அமெரிக்க-தலைமையிலான ஏகாதிபத்திய
போருக்கு ஆதரவளித்தது.
ஸ்வீடன், கடந்த இரண்டு தசாப்தங்களாக, முந்தைய அதன்
நடுநிலைமை தடங்கள் அனைத்தையும் கைவிட்டுள்ளது. அது 2011 இல் கடாபி
ஆட்சியைக் கவிழ்த்த அமெரிக்க-தலைமையிலான கூட்டணியின் பாகமாக லிபியாவிற்கு
போர் விமானங்களை அனுப்பியதுடன், பாரியளவில் அதன் பாதுகாப்பு செலவினங்களை
அதிகரிக்க மற்றும் அதன் நோர்டிக் அண்டைநாடுகளுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு
எதிரான அமெரிக்க-தலைமையிலான போர் உந்துதலுக்குள் தன்னைத்தானே
ஒருங்கிணைத்துக் கொள்ள (பார்க்கவும், “Nordic countries sign
defence cooperation agreement aimed at Russia”), கியேவில்
வாஷிங்டன் மற்றும் பேர்லின் முன்னெடுத்த பாசிசவாத-தலைமையிலான
ஆட்சிக்கவிழ்ப்பு சதியால் தூண்டிவிடப்பட்ட உக்ரேனிய நெருக்கடியைக்
கைப்பற்றியது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அந்நாடு போரில் ஈடுபட்டிருக்கக்
கூடும் என்று இந்தாண்டு ஆரம்பத்தில் ஒரு மூத்த ஸ்வீடன் இராணுவ தளபதி
எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்
படையெடுப்பில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆற்றிய மிக மோசமான குற்றங்கள்
சிலவற்றை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் மீது,
அமெரிக்க தலைமையிலான வேட்டையாடலிலும் ஸ்வீடன் ஒரு முக்கியம் பாத்திரம்
வகித்து வருகிறது.
ஸ்கன்டினேவியா அதிரடியாக வலதிற்குத் தாவியமை, உலகளாவிய
நிதியியல் உயரடுக்கின் முன்னணி பிரதிநிதிகள் மத்தியில் ஓர் உற்சாக
விடையிறுப்பைக் கண்டுள்ளது. சுதந்திர சந்தை பொருளியல் இதழின் முன்னாள்
ஆசிரியர்கள் John Micklethwait மற்றும் Adrian Wooldridge, அவர்களது
நான்காம் புரட்சி: அரசைப் புதுப்பிப்பதற்கான உலகளாவிய போட்டி என்ற 2014
நூலில், ஸ்வீடனை எதிர்காலத்திற்கான ஒரு முன்மாதிரியாக பாராட்டி இருந்தனர்.
தாட்சர் மற்றும் ரீகனால் தொழிலாள வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட
தாக்குதல் போதியளவிற்கு இல்லை என்று அவர்கள் வாதிட்டதிலிருந்தே அவர்களின்
வலதுசாரி அரசியல் நிலைநோக்கு வெளிப்படையாக தெளிவாகிவிடும், அந்த
எழுத்தாளர்கள் குறிப்பிடுகையில், “ஸ்டாக்ஹோமின் வீதிகள் புனித
பசுக்களின் இரத்தத்தால் நிரம்பியுள்ளது. உள்நாட்டு சிந்தனைக் குழாம்கள்,
சமூக நல தொழில்வழங்குனர்களுக்கான மற்றும் பலவீனமான நிர்வாகத்திற்கான புதிய
புதிய கருத்துக்களால் நிரம்பி உள்ளன. உண்மையில் அவர்கள் செய்ய வேண்டிய
கடமைகளாக அரசியல்வாதிகள் அறிந்திருந்ததை செய்வதற்கான தைரியம் அவர்களுக்கு
அரிதாகவே இருந்த நிலையில், ஸ்வீடன் அவற்றைச் செய்துள்ளது,”
என்றனர்.
உள்நாட்டு தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள்
மற்றும் வெளிநாடுகள் மீதான போர் என இந்த இரட்டை கொள்கைகளால் ஸ்வீடன்
மற்றும் டென்மார்க் இரண்டிலும் அதிகரித்தளவில் துருவமுனைப்பட்ட சமூகங்கள்
ஏற்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில் மிக வேகமான சமூக சமத்துவமின்மை உயர்வைக்
கண்ட OECD நாடுகளில் ஒன்றாக ஸ்வீடன் இருந்தது, அதேவேளையில் 2014 ஆய்வு
ஒன்று டென்மார்க்கில் மேலே உள்ள 1 சதவீதத்தினர் மொத்த செல்வ வளத்தில்
ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கைச் சொந்தமாக்கி இருப்பதை எடுத்துக்காட்டியது.
வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை, புலம்பெயர்ந்த மக்கள்
மத்தியில் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஸ்வீடனில், Malmö மற்றும்
ஸ்டாக்ஹோம் போன்ற சில பெருநகர்புறங்களில் வேலையின்மை விகிதங்கள் தேசிய
சராசரியை விட இரண்டு மடங்காகும். ஒரு போர்ச்சுகீசிய புலம்பெயர்ந்தவரை
பொலிஸ் அதிகாரி சுட்டதும், சமூக கோபம் 2013 கோடையில் கலகங்களாக வெடித்தன.
தொழிற் சங்கங்களோ, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருவதைத் தடுக்க
அரசாங்கங்களுக்கு அழைப்புவிடுத்ததன் மூலமாக, தேசியவாத உணர்வுகளைத்
தூண்டிவிட்டு விடையிறுத்தன.
டென்மார்க் எல்லையை ஒட்டி, ஐரோப்பாவின் மிகவும் மூர்க்கமாக
புலம்பெயர்வோர் தடுப்பு முறை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய வரலாற்றின்
இருண்ட காலங்களை நினைவூட்டும் ஒரு நடவடிக்கையாக, 10,000 குரோனர் (1,340
யூரோ) க்கு அதிகமான தனிப்பட்ட உடைமைகளை அகதிகள் வைத்திருந்தால் அவற்றை
எல்லை பாதுகாப்பு படைகள் பறிமுதல் செய்ய அனுமதிக்கும் ஒரு சட்டத்தை டேனிஷ்
நாடாளுமன்றம் ஜனவரியில் நிறைவேற்றியது. அப்போதிருந்து பாதுகாப்புப் படைகள்
அகதிகளின் கைத்தொலைபேசிகளைப் பறிமுதல் செய்கிறார்கள் என்றும், பாதுகாப்பு
என்ற அடித்தளத்தில் பல வாரங்களுக்கு அவற்றை வைத்திருந்த பின்னரும் திரும்ப
தர மறுக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களின்
நடவடிக்கைகள் நேரடியாக அதிதீவிர வலதின் கரங்களில் விளையாடுகிறது. அவ்விரு
நாடுகளிலும் அதிதீவிர வலது முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டின் டேனிஷ்
தேர்தல்களில் புலம்பெயர்வு-விரோத பேரினவாதம் மற்றும் டேனிஷ்
தேசியவாதத்திற்கு அழைப்புவிட்டதன் அடிப்படையில் இரண்டாவது மிகப் பெரிய
கட்சியாக டேனிஷ் மக்கள் கட்சி மேலெழுந்தது. ஸ்வீடனில் தற்போதைய சமூக
ஜனநாயக-பசுமை கட்சி அரசாங்கத்தின் ஸ்ரெபான் லோவ்வென் தலைமையில் சகல ஸ்தாபக
கட்சிகளும் அகதிகள் குறித்து பீதியூட்டும் சூழலை முடுக்கி விட்டதைத்
தொடர்ந்து, வெளிப்படையான பாசிசவாத தோற்றுவாய்களைக் கொண்ட ஒரு கட்சியான
ஸ்வீடன் ஜனநாயகவாதிகள் (Sweden Democrats), கருத்துக்கணிப்புகளில் சுமார்
20 சதவீதம் பெற்றுள்ளனர்.
சாண்டர்ஸ் ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கை “ஜனநாயக
சோசலிசத்தின்” முன்னுதாரணமாக காட்டுவதால், அவ்விதத்தில் அந்த
வெர்மாண்ட் செனட்டர் அனேகமாக அவர் விரும்புவதைக் காட்டிலும் அதிகமானதை
வெளிப்படுத்துகிறார். அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மத்திய கிழக்கு
போர்கள் உட்பட அதன் வெளியுறவு கொள்கையை முழுமையாக ஆமோதிப்பதாக அவரது
பிரச்சாரம் முழுவதிலும் தெளிவுபடுத்தி உள்ளார், அதேவேளையில் உள்நாட்டில்
ஒரு தேசியவாத பொருளாதார கொள்கையை ஊக்குவிக்கிறார். ஆழமடைந்துவரும் பூகோள
முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளின் கீழ், இத்தகைய ஒரு வேலைத்திட்டத்தின்
வலதுசாரி, தொழிலாள வர்க்க விரோத இயல்பு ஸ்கன்டினேவிய நாடுகளில் என்ன
நடந்து வருகிறது என்பதாலேயே எடுத்துக்காட்டப்படுகிறது. மொத்தத்தில் என்ன
சேர்க்க வேண்டியுள்ளது என்றால் இராணுவவாதம், புலம்பெயர்வோர்-விரோத
பேரினவாதம் மற்றும் பொலிஸ் அரசு ஒடுக்குமுறையின் பிற்போக்குத்தனமான
சக்திகள், உலகின் மிகவும் பலமான ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒப்பிடுகையில்
ஒரு சிறிய பாத்திரம் வகிக்கும் ஸ்வீடன் அல்லது டென்மார்க்கில் இருப்பதை
விட சாண்டர்ஸ் ஜனாதிபதி பதவியின் கீழ் அமெரிக்காவில் பல மடங்கு பலமாக
அதிகரிக்கும்.
ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கை முற்போக்கான கலங்கரை
விளக்கமாக காட்டும் சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் திறமைக்கு, அவரது போலி-இடது
ஊக்குவிப்பாளர்கள் உதவியுள்ளனர். இவை அத்தகைய கூற்றுகளுக்கு ஒரு "சோசலிச"
மூடிமறைப்பை வழங்க அழுத்தம் கொடுக்கின்றன.
“சோசலிசம்: ஸ்வீடனில் இருப்பதைப் போன்றதை
நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்" என்று தலைப்பிட்ட சர்வதேச சோசலிச
அமைப்பின் (ISO) socialistworker.org வலைத் தளத்தில் வெளியான கட்டுரை
ஒன்று குறிப்பிடத்தக்கதாகும். அது "ஸ்கன்டினேவிய சமூக ஜனநாயகத்தின்
நன்மதிப்புகளுக்கு" ஒரு "புத்துயிரூட்டி" அழைப்பு கொடுத்ததற்காக
சாண்டர்ஸைப் பாராட்டியது. “ஸ்கன்டினேவிய சமூக ஜனநாயகம் தொழிலாள
வர்க்கத்திற்கு பல சலுகைகளைக் கொண்டுள்ளது,” என்று எழுதிய அந்த
ஆசிரியர்கள், “மேலும் அது அதன் மையப் பகுதியில் அமெரிக்க
தொழிலாளர்கள் ஒருசில சீர்திருத்தங்களை ஜெயிப்பதற்கு பரந்தளவிலான
முன்னேற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும்,” என்று தொடர்ந்து
குறிப்பிட்டனர்.
யதார்த்தம் என்னவென்றால், 20 ஆம் நூற்றாண்டின் போது
ஸ்கன்டினேவியாவில் தொழிலாளர்களால் வென்றெடுக்கப்பட்ட தற்காலிக சலுகைகள்,
விதிவிலக்கான பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளால் சாத்தியமாகி
இருந்தது: அதாவது, அக்டோபர் புரட்சியை அடுத்து முதலாளித்துவ
வர்க்கத்திடையே ஏற்பட்டிருந்த சோசலிச புரட்சி குறித்த அச்சம் மற்றும்
தொழிலாள வர்க்கதின் போர்க்குணம் மிக்க போராட்டங்கள் மீதும் அச்சம்
நிலவியது, அத்துடன் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொழிலாள வர்க்க
இயக்கங்களை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்த உதவியுடன் உலகளாவிய
முதலாளித்துவத்தை மீள-ஸ்திரப்படுத்துவதற்கான அமெரிக்காவின் நிதியுதவிகளும்
அதில் சேர்ந்தன. இது குறிப்பிட்ட தேசியவாத சீர்திருத்த நடவடிக்கைகளை
சாத்தியமாக்கி இருந்தன.
அதேபோன்ற சீர்திருத்தங்களை இன்று எட்டிவிடலாம் என்ற
எந்தவொரு பிரமையும் பேராபத்தானது என்பதை நிரூபிக்கும். 1930 களின் பெரு
மந்தநிலைமைக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிக ஆழமான முதலாளித்துவ நெருக்கடி
நிலைமைகளின் கீழ், இந்த இலாபகர அமைப்புமுறைக்கு ஒரு முற்போக்கான வர்ணம்
அளிக்க முயலும் எல்லா முயற்சிகளும் சிக்கனத் திட்டங்கள் மற்றும் போரை
நோக்கிய உந்துதலுக்கு உதவ மட்டுமே சேவையாற்றுகின்றன.
|