ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை வெள்ளை அறிக்கையும்,
போருக்கான உந்துதலும்
James Cogan
1 March 2016
Back
to screen
version
கடந்த வாரம் ஆஸ்திரேலிய அரசாங்கம் வெளியிட்ட
பாதுகாப்புத்துறை வெள்ளை அறிக்கை, முதலாளித்துவத்தின் உலகளாவிய முறிவு,
மனிதகுலத்தை மூன்றாம் உலகப் போரின் படுகுழிக்குள் மூழ்கடிக்கிறது
என்பதற்கு மற்றொரு எச்சரிக்கையாக உள்ளது. ஆசியாவிலும் சர்வதேச அளவிலும்
பெரியளவில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான சீனாவின் முயற்சிகளால்,
அமெரிக்காவின் ஒரு முக்கிய மூலோபாய கூட்டாளியான ஆஸ்திரேலியா
அச்சுறுத்தப்பட்டுள்ளது என்ற வாதத்தினை அடித்தளமாக கொண்டுள்ளது.
“விதிமுறைகளுக்கு உட்பட்ட உலகளாவிய ஒழுங்குமுறை" என்று
அமெரிக்கா குறிப்பிடுவதைப் பேணுவதற்காக, பெய்ஜிங் மீது அமெரிக்கா
தலைமையிலான மோதலில் அந்த வெள்ளை அறிக்கை ஆஸ்திரேலியாவை பொறுப்பேற்க
செய்கிறது. இந்த “விதிமுறைகளுக்கு உட்பட்ட உலகளாவிய
ஒழுங்குமுறை” என்பது, கட்டுப்படுத்தவியலாத பொருளாதார
நெருக்கடிகள் மற்றும் புவிசார் அரசியல் கொந்தளிப்பு நிலைமைகளின் கீழ்,
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளது நிதியியல் மற்றும் பெருநிறுவன
உயரடுக்குகளின் நலன்களுக்கேற்ப சர்வதேச விதிமுறைகளை கட்டளை இடுவதற்கான
அவற்றின் தகமை ஆகும். ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம், தென் மேற்கு பசிபிக்
பகுதிக்கு அருகாமையில் உள்ள அதன் அதிகார எல்லையில் மட்டுமல்ல, இன்னும்
பரந்தளவில் ஆசியா மற்றும் உலகெங்கிலும், அதன் சொந்த பொருளாதார மற்றும்
மூலோபாய நலன்களை முன்னெடுப்பதற்கான வழிவகையாக அமெரிக்க போர் உந்துதலுடன்
இணைந்துள்ளது.
சீனாவிற்கு எதிரான போர் நிலைப்பாட்டில் ஆஸ்திரேலியா
நிறுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் ஆயுதப் படைகளின் ஒரு பாரிய
விரிவாக்கத்திற்கு நிதி வழங்குவதற்காக இராணுவ செலவினங்கள் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் குறைந்தபட்சம் 2 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. அடுத்த
தசாப்தத்தில், புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் கப்பல்கள், போர்
விமானங்கள் மற்றும் ஏனைய இராணுவ படைத் தளவாடங்களைக் குவிப்பதற்காக சுமார்
195 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட உள்ளது. இந்த கொள்முதல்களின் ஒரே
நோக்கம், “வான்வழி/கடல்வழி போர் திட்டம்" என்று பெண்டகன்
முத்திரை குத்தி உள்ள ஒரு திட்டத்தில் பங்கெடுக்க ஆஸ்திரேலிய இராணுவத்தை
சிறப்பாக ஆயுதமயப்படுத்துவதாகும் —இந்த "வான்வழி/கடல்வழி போர்
திட்டம்" என்பது சீனப் பொருளாதாரத்தை முடக்கும் ஒரு கடற்படை முற்றுகையுடன்
சேர்ந்து, சீன பெருநிலத்தின் மீது நாசகரமான வான் தாக்குதல்கள் மற்றும்
ஏவுகணைத் தாக்குதல்களுக்கான திட்டமாகும். சீனா போன்ற ஒரு பிரதான
போட்டியாளர் உடனான எந்தவொரு மோதலிலும், மொத்தத்தில், அணுஆயுதங்களை
பிரயோகிப்பதற்குச் சமாந்தரமான திட்டங்களை அமெரிக்க இராணுவம் கொண்டுள்ளது
என்பது ஓர் ஒளிவுமறைவற்ற இரகசியமாக உள்ளது.
ஓர் அணுகுண்டு பேரழிவுக்கான தயாரிப்புகளில் ஒத்துழைப்பதை
பைத்தியக்காரத்தனம் என்று குறிப்பிட வேண்டியதே இல்லை என்றாலும், இந்த
குற்றகரத்தன்மையை ஒரேயொரு அரசியல்வாதியோ, ஊடக விமர்சகரோ அல்லது பொது
பிரபல்யமான நபரோ கண்டிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்,
அம்பலப்படுத்தக் கூட முன்வரவில்லை என்றளவிற்கு உத்தியோகபூர்வ ஆஸ்திரேலிய
அரசியல் நிலை தரந்தாழ்ந்துள்ளது. எத்தனை மில்லியன் சீனர்கள்,
அமெரிக்கர்கள் மற்றும் ஏனையவர்கள் கொல்லப்படுவார்கள் என்பது ஒருபுறம்
இருக்கட்டும், ஐயத்திற்கிடமின்றி எத்தனை மில்லியன் ஆஸ்திரேலியர்கள்
கொல்லப்படுவார்கள் என்பதன் மீது திரைக்குப் பின்னால் நடந்துவரும் இராணுவக்
கணக்கீடுகளைக் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்களில் எந்த குறிப்பும் இல்லை.
இத்தகைய ஒரு பேரழிவுக்குச் சாத்தியமான தூண்டுதல்கள் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகள், தென் சீனக் கடலில் சீனா
உரிமைகோரும் கடல் எல்லைகளுக்குச் சவால் விடுத்து வருகின்றன; கொரிய
தீபகற்பத்தின் வெளியுறவுத்துறை விவகாரங்கள் மிகவும் கொந்தளிப்பாக உள்ளன;
மற்றும் கிழக்கு சீனக் கடலில் கூர்மையான சீன-ஜப்பான் பதட்டங்கள் தொடர்ந்து
கொண்டிருக்கின்றன.
ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் வெள்ளை அறிக்கையின் மத்திய
உந்துதலை ஆமோதிக்கின்றன. தென் சீனக் கடலில் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள
தீவுக்குன்றுகளை சுற்றிய கடல்எல்லைகளுக்குள் ஆத்திரமூட்டும் விதத்தில்
ஆஸ்திரேலிய போர் கப்பல்களை அனுப்புவதில் பழமைவாத கூட்டணி அரசாங்கம்
இன்னும் வாஷிங்டனைப் பின்தொடரவில்லையே என்பது தான் எதிர்கட்சியான தொழிற்
கட்சியின் ஒரே விமர்சனமாக உள்ளது. அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டத்தில்
உபரி உள்ள நிலைக்கு திரும்புவதை இவ்இராணுவ செலவின அளவுகளைத்
தாமதப்படுத்தக்கூடும் என்பதே பசுமை கட்சியினரின் ஒரே கவலையாகும்.
சிரியாவில் அமெரிக்க தலைமையிலான நவ-காலனித்துவ
தலையீட்டுக்கான எதிர்ப்பை "ஏகாதிபத்திய-விரோத துடைநடுங்கித்தனம்" என்று
கண்டித்த, போலி-இடது அமைப்பான Socialist Alternative, போர் அச்சுறுதலை
நனவுபூர்வமாக குறைத்துக் காட்டுகிறது. 2011 இல் முன்னாள் தொழிற் கட்சி
அரசாங்கம் அமெரிக்காவினது "ஆசிய முன்னெடுப்பை" ஆமோதித்ததில் இருந்து
ஒட்டுமொத்த போலி "இடதும்", தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஓர்
போர்-எதிர்ப்பு இயக்கம் அபிவிருத்தி அடைவதைத் தடுப்பதற்காக ஆஸ்திரேலியா
உட்பட அப்பிராந்தியம் எங்கிலும் அமெரிக்க இராணுவ கட்டமைப்பைக் குறித்து
மௌனமான சூழ்ச்சியைப் பேணி வந்தன.
உலக சோசலிச வலைத் தளத்தின் தொடர்ச்சியான பகுப்பாய்வுகள்
மூலமாக, பொதுக் கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் மூலமாக, போர்
அபாயம் குறித்து தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கின்ற ஒரே கட்சி,
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவான சோசலிச
சமத்துவ கட்சி (SEP) மட்டுமே ஆகும்.
ஆஸ்திரேலிய வெள்ளை அறிக்கை பிரசுரிக்கப்பட்டு இருப்பது,
பெப்ரவரி 18, 2016 இல் "சோசலிசமும்,
போருக்கு எதிரான போராட்டமும்" என்ற ICFI அறிக்கையில்
வழங்கப்பட்ட பகுப்பாய்வின் சரியானத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இந்த
போர் உந்துதல், "ஜனநாயக விவாதத்திற்கான பாசாங்குத்தனம் கூட இல்லாமல்,
அரசாங்கம், இராணுவ-உளவுத்துறை எந்திரம், பெருநிறுவன-நிதியியல் செல்வந்த
அடுக்கு மற்றும் ஊழல்பீடித்த வலதுசாரி ஊடகங்களின் உயர்மட்டங்களால்
முடுக்கிவிடப்பட்ட முதலாளித்துவ உயரடுக்குகளின் ஓர் சூழ்ச்சி" என்று அந்த
அறிக்கை அறிவித்தது.
இந்த வெள்ளை அறிக்கையில் கூறப்பட்ட இராணுவவாத
நிகழ்ச்சிநிரல், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுடன்
ஒத்து வராது. ஆயுதப் படைகளின் விரிவாக்கத்திற்கு, மருத்துவத்துறை, கல்வி
மற்றும் ஏனைய அத்தியாவசிய சமூக சேவைகளில் பேரழிவுகரமான செலவின வெட்டுக்கள்
மூலமாக நிதி வழங்கப்படும்.
சிக்கனத் திட்டங்கள் மற்றும் போர் மீதான
பித்துப்பிடித்தலுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு மேலெழும். அதனால் தான்
அகதிகளைத் தொல்லைக்கு உட்படுத்துவதன் மூலமாக வெளிநாட்டவர் விரோத உணர்வை
மற்றும் தேசியவாதத்தைத் தூண்டிவிடுவதற்கும் மற்றும் முதலாம் உலக போரில்
ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளைப் பெருமைப்படுத்துவதன் மூலமாக
குறும் பார்வையுள்ள தேசப்பற்றை ஊக்குவிப்பதற்கும், பாரிய ஆதாரவளங்களை
வழங்குவதன் மூலமாக ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் மக்களை தயார்ப்படுத்த
விரும்புகிறது. அதேநேரத்தில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற
வேஷத்தில், அது எந்தவித எதிர்ப்பையும் நசுக்க பொலிஸ் அரசு முறைகளுக்கு
தயாரிப்பு செய்து வருகிறது.
ஆஸ்திரேலியாவின் நிலைமை, ஏதோ விதத்தில், வட அமெரிக்கா,
ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் உள்ள சகல ஏகாதிபத்திய மையங்களை
எதிரொலிக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் முதலாளித்துவ வர்க்கம்
இராணுவவாதத்திற்கு திரும்புவதன் மூலமாக அதன் நெருக்கடிக்கு
விடையிறுக்கிறது. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற
பாசாங்குத்தனம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்து, வட மேற்கு
பாகிஸ்தான் மற்றும் யேமன் வரையில், லிபியா மற்றும் சிரியா வரையில்
ஒட்டுமொத்த நாடுகள் மற்றும் பிராந்தியங்களை அழிப்பதையும் மற்றும்
கூறவியலாத மனிதயின அவலங்களை ஏற்படுத்துவதையும் நியாயப்படுத்தப்
பயன்படுத்தப்படுகிறது. இப்போது, ரஷ்யா மற்றும் சீனாவினால்
முன்னிறுத்தப்படுகிற "அச்சுறுத்தல்" என்று கூறப்படுவது, அமெரிக்க மற்றும்
அதன் கூட்டாளிகளின் உலகளாவிய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த, புதிய
போர்களுக்குத் தயாரிப்பு செய்வதற்காக கைப்பற்றப்பட்டுள்ளது. ஊழல்
முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் அரசியல் பிரதிநிதிகளை கொண்ட மாஸ்கோ
மற்றும் பெய்ஜிங் ஆட்சிகளின் தேசியவாத வனப்புரைகளும் மற்றும் இராணுவ
பலப்படுத்தல்களும் வெறுமனே போர் அபாயத்தையே எரியூட்டுகின்றன.
ஒரு நூற்றாண்டுக்கு அதிகமான காலத்திற்கு முன்னர், லியோன்
ட்ரொட்ஸ்கி எழுதுகையில், முதலாம் உலக போரானது " வரலாற்றிலேயே அறியப்பட்ட
அதன் சொந்த உள்ளார்ந்த முரண்பாடுகளால் அழிக்கப்பட்ட ஒரு பொருளாதார
அமைப்புமுறையில் ஏற்பட்ட மிகவும் பாரிய உடைவைப்" பிரதிநிதித்துவம்
செய்வதாக குறிப்பிட்டார். இன்று, போட்டி முதலாளித்துவ உயரடுக்குகள்
மற்றும் எதிர்விரோத தேசிய-அரசுகளுக்கு இடையே இலாபகர ஆதாரங்களுக்கான மோதல்
மனிதகுல நாகரீகத்தின் உயிர்பிழைப்பையே மீண்டும் அச்சுறுத்துகிறது.
எவ்வாறிருப்பினும் அதே முரண்பாடுகள் வரலாற்றில் சர்வதேச
தொழிலாள வர்க்கத்தின் பிரமாண்ட புரட்சிகர இயக்கத்திற்கும் தூண்டுதல்களை
வழங்குகின்றன. ஆஸ்திரேலியாவில், அமெரிக்காவில், ஜப்பானில் மற்றும் ஆசியா
எங்கிலும், சீனா மற்றும் ரஷ்யாவில், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் போர்
மற்றும் பேரழிவுகளின் பெருஞ்சுழலுக்குள் தமது எதிர்ப்பினை காட்டாமல்
இழுக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு வர்க்க நலன்கள் உள்ளன, அதற்காக
அவர்கள் போராடுவார்கள். முதலாளித்துவம் மற்றும் அதன் காலங்கடந்த
தேசிய-அரசு அமைப்புமுறையை தூக்கியெறிந்து, உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதில்,
தொழிலாள வர்க்கத்திற்குத் தலைமை கொடுத்து இட்டுச் செல்ல அவசியமான
புரட்சிகர தலைமையை அபிவிருத்தி செய்வதுதான் அதிமுக்கிய பிரச்சினையாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அந்த தலைமையாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு அதன் பெப்ரவரி 18 அறிக்கையில், போர்
மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு சர்வதேச பெருந்திரளான மக்கள்
இயக்கத்திற்குள் தொழிலாள வர்க்கத்தின் அளப்பரிய சமூக பலத்தை
ஐக்கியப்படுத்துவதற்கு, இன்றியமையாத அரசியல் அடித்தளத்தை வழங்குகின்ற,
வரலாற்றுரீதியில் வழிநடத்தப்பட்ட மற்றும் நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகளை
அமைத்து கொடுத்தது. ஒவ்வொரு நாடுகளைப் போலவே, ஆஸ்திரேலியாவில் உள்ள
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அந்த அறிக்கையைச் சாத்தியமான அளவுக்கு
பரவலாக கொண்டு செல்வதற்கும் மற்றும் பரவலாக விவாதிப்பதற்கும் அவர்களால்
ஆனமட்டும் அனைத்தும் செய்ய வேண்டும் என்பதுடன், ஒரு சர்வதேச சோசலிச
முன்னோக்கிற்காக போராடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைய வேண்டும்.
|