அமெரிக்கா சீனாவிற்கு சவால் விடுக்க தென் சீனக் கடலுக்கு
விமானந்தாங்கி போர்க்கப்பலை அனுப்புகிறது
By Peter Symonds
5 March 2016
Back
to screen
version
சீனாவிற்கு ஒரு நேரடி எச்சரிக்கையாக அமெரிக்கா இரண்டு
சிறுபோர்க்கப்பல்கள் (destroyers) மற்றும் இரண்டு விரைவு போர்க்கப்பல்கள்
(cruisers) ஆகியவற்றுடன், ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பலான USS ஜோன் சி.
ஸ்டென்னிஸ் ஐ தென் சீனக் கடலுக்கு அனுப்பி உள்ளது. இது வழமையான ஒன்று தான்
என்று கூறி, இந்த பாரிய படைபல காட்சிப்படுத்தலின் முக்கியத்துவத்தைப்
பெண்டகன் குறைத்துக் காட்டிய போதினும், “அமெரிக்கா சீனாவை எதிர்கொள்ள
இப்போது ஒரு தாக்கும் போர்க்கப்பல் குழுவை அனுப்பியது" என்று அதன்
கட்டுரைக்குத் தலைப்பிட்டு, Navy Times, அந்நடவடிக்கையின் நோக்கத்தை
வெளிப்படுத்தியது.
சிறுபோர்க்கப்பல்கள், யுஎஸ்எஸ் சங்-ஹூன் (USS Chung-Hoon)
மற்றும் யுஎஸ்எஸ் ஸ்டாக்டேல் (USS Stockdale), மற்றும் விரைவு
போர்க்கப்பல் யுஎஸ்எஸ் மொபைல் பே (USS Mobile Bay) ஆகியவை இந்த ஸ்டென்னிஸ்
தாக்குதல் குழுவில் உள்ளடங்கும். அப்பகுதியில் மற்றொரு விரைவு
போர்க்கப்பல் யுஎஸ்எஸ் ஏண்டிடம் (USS Antietam), பிலிப்பைன்ஸிற்கு சென்று
கொண்டிருக்கிறது, அதேபோல ஸ்டென்னிஸ் தென் சீனக் கடலுக்குள் நுழைவதற்கு
முன்னதாக அதைச் சந்தித்த கட்டளையகக் கப்பல் யுஎஸ்எஸ் ப்ளூ ரிட்ஜ் (USS
Blue Ridge) உம் அங்கே உள்ளது. வெறுமனே அப்பிராந்தியத்திற்குள் கடந்து
செல்வது என்றில்லாமல், ஸ்டென்னிஸ் தாக்குதல் குழு நான்கு நாட்கள்
ஒத்திகைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன, இதில் அந்த
விமானந்தாங்கி போர்க்கப்பலில் இருந்து 266 முறை போர்விமானங்கள் பறந்து
சென்றதும் உள்ளடங்கும்.
இந்தவொரு தாக்கும் விமானந்தாங்கிய போர்க்கப்பல் குழுவின்
அனுப்புதலுக்கு முன்னதாக, சீனாவின் கடந்த ஆண்டு நில உரிமைகோரல் மற்றும்
தென் சீனக் கடலில் சீன நிர்வாகத்தில் இருக்கும் தீவுக்குன்றுகளில்
சட்டவிரோத இராணுவமயமாக்கலுக்கு எதிரான கண்டனங்கள் மற்றும்
ஆத்திரமூட்டல்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்த கடல்
எல்லைகளில், சீனாவிற்கும் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான
கடல்போக்குவரத்து சர்ச்சைகளுக்குள் வாஷிங்டன் தலையிடுவது அதன் பரந்த
"ஆசியாவை நோக்கிய முன்னிலையின்" மற்றும் பெய்ஜிங்கிற்கு எதிராக
அப்பிராந்தியம் எங்கிலும் இராணுவ தயாரிப்பின் பாகமாகும்.
ஸ்டென்னிஸ் மற்றும் அத்துடன் இணைந்திருக்கும் போர்க்கப்பல்கள்
தென் சீனக் கடலில் சீன நிர்வாகத்தில் இருக்கும் கடல் தீவுக்கூட்டங்களைச்
சுற்றி 12 கடல்மைல் தொலைவிற்குள் ஊடுருவியதாக இதுவரையில் தெரியவில்லை.
இருப்பினும், Navy Times குறிப்பிடுவதைப் போல, சீனா உரிமைகோரும் கடல்எல்லை
பகுதிக்குள் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளின் சுதந்திரம்
என்றழைக்கப்படுவதன் அடிப்படையில் அமெரிக்க கடற்படை ஏற்கனவே கடந்த
அக்டோபரில் யுஎஸ்எஸ் லாசென் மற்றும் ஜனவரியில் யுஎஸ்எஸ் கர்டிஸ் வில்பர்
ஆகிய ஏவுகணை-ஏந்திய இரண்டு சிறுபோர்க்கப்பல்களை ஆத்திரமூட்டும் விதத்தில்
அனுப்பி உள்ளது.
ஸ்டென்னிஸ் தாக்குதல் குழுவின் வருகைக்கு முன்னதாக,
பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்டர் மற்றும் அமெரிக்க பசிபிக்
கட்டளையகம் PACOM இன் தளபதி அட்மிரல் ஹாரி ஹாரீஸ் உட்பட கடந்த வாரம்
அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் அறிக்கைகள்
வந்தன. இவர்கள் காங்கிரஸ் குழுக்களின் முன்னால் கூடுதல் இராணுவ
செலவுகளுக்காக வாதிட்டிருந்தனர். இந்த "முன்னிலையின்" பாகமாக பெண்டகன்
அதன் போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவ போர்விமானங்களில் 60 சதவீதத்தை 2020
க்குள் ஆசிய பசிபிக் இல் நிலைநிறுத்த திட்டமிடுகிறது.
சீன இராணுவம் வூடி தீவுக்கு போர்விமான எதிர்ப்பு ஏவுகணைகள்
மற்றும் போர்விமானங்களை அனுப்பி இருந்ததை மற்றும் மற்றொரு கடல்குன்றில்
ராடார் நிலைநிறுத்தல்களைக் கட்டமைத்து வருவதை சரியான நேரத்தில் பெரிதும்
ஊதிப் பெரிதாக்கிக் காட்டிய ஊடக வெளிப்பாடுகளுடன் அவர்களது விளக்கவுரைகள்
பொருந்தி இருந்தன.
செவ்வாய்கிழமை உரையில் பாதுகாப்பு செயலர் கார்ட்டர், “ஒரு
சர்ச்சைக்குரிய தீவில் அணுகுவதை-தடுக்கும் அமைப்புகள் மற்றும் இராணுவ
போர்விமானங்களை நிலைநிறுத்துவதற்காக" சீனாவை விமர்சித்ததுடன், “இத்தகைய
நடவடிக்கைகள் பிழையான கணக்கீடுகளின் அபாயத்தை மற்றும் உரிமைகோரும்
நாடுகளுக்கு இடையிலான மோதலை உயர்த்தும் சாத்தியக்கூறைக் கொண்டிருப்பதாக"
எச்சரித்தார். அந்த எச்சரிக்கையை அடிக்கோடிடும் வகையில், அவர்
திட்டவட்டமாக பின்வருமாறு கோரினார்: “சீனா தென் சீனக்கடலில்
இராணுமயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். குறிப்பிட்ட நடவடிக்கைகள்
குறிப்பிட்ட விளைவுகளைக் கொண்டிருக்கும்,” என்றார்.
புதனன்று புது டெல்லியில், அட்மிரல் ஹாரி ஹாரீஸ் சீனாவிற்கு
எதிராக "இப்பிராந்தியத்தில் சிறப்பாக நடைமுறையில் இருந்து வந்துள்ள
விதிமுறைகள் அடிப்படையிலான உலக ஒழுங்கைப்" பாதுகாக்க, அமெரிக்கா, இந்தியா,
ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய நான்முக மூலோபாய கூட்டணியை
உருவாக்க முன்மொழிந்தார். சர்வதேச விதிமுறைகள் அடிப்படையிலான அமைப்பு
என்பது வாஷிங்டன் அமைக்கும் விதிமுறைகளுடன் அமெரிக்காவின் மேலாதிக்கம்
கொண்ட ஓர் உலக ஒழுங்கிற்காக திரும்ப திரும்ப கூறப்படும் பிரபல சுலோகமாக
மாறியுள்ளது. (பார்க்கவும்: “US presses India to join anti-China
alliance”)
தென் சீனக் கடலுக்குள் ஸ்டென்னிஸ் தாக்குதல் குழுவின் நுழைவு,
சீனாவின் வருடாந்த தேசிய மக்கள் மாநாடு இன்று தொடங்குவதுடனும் சரியாக
பொருந்தி உள்ளது. சீனா இராணுவமயப்படுத்துகிறது என்ற அமெரிக்க வாதத்தைச்
சீன அதிகாரிகள் நிராகரித்தனர். அந்த மாநாட்டு செய்தி தொடர்பாளர் இஃபூ யிங்
பின்வருமாறு அறிவித்தார்: “இந்த குற்றச்சாட்டு சூழ்நிலையைக் குறித்த ஒரு
பிழையாக கணக்கீட்டுக்கு இட்டுச் செல்லக்கூடும். விடயத்தை நீங்கள்
நெருக்கமாக பார்ப்பீரானால், அமெரிக்கா தான் மிகவும் அதிநவீன
போர்விமானங்கள் மற்றும் இராணுவ வாகனங்களைத் தென் சீனக் கடலுக்கு அனுப்பி
வருகிறது,” என்றார்.
அரசுக்கு சொந்தமான சின்ஹூவா செய்தி நிறுவனம் நேற்று பிரசுரித்த
ஒரு கருத்துரை, தென் சீனக் கடலில் பதட்டங்களை அதிகரிப்பதற்காக
அமெரிக்காவைக் குற்றஞ்சாட்டியதுடன், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்குடன்
வர்த்தகம் செய்வதற்காக அதன் கடல் எல்லைகள் எங்கிலும் கடற்போக்குவரத்து
சுதந்திரத்தைச் சீனா சார்ந்திருக்கிறது என்ற வெளிப்படையான புள்ளியைக்
குறிப்பிட்டது. “இந்த முக்கிய கடல்பாதையைப் பலமாக சார்ந்திருக்கின்ற ஒரு
நாடு என்பதால், தென் சீனக் கடலில் குழப்பத்தை விரும்புவதில் உலகிலேயே சீனா
கடைசியாக தான் இருக்கும்,” என்றது குறிப்பிட்டது.
தென் சீனக் கடலில் அதன் போர்கப்பல்களுக்கான "கடற்போக்குவரத்து
சுதந்திரம்" பேணுவதில் வாஷிங்டனின் தீர்மானம், சீனாவுடன் அதன் போருக்கான
தயாரிப்புகளுடன் பிணைந்துள்ளது. பெண்டகனின் வான்வழி/தரைவழி போர்
மூலோபாயம், சீனாவின் அத்தியாவசிய மூலப் பொருட்கள் மற்றும் எரிபொருள்
இறக்குமதிகளை வெட்டும் ஒரு பொருளாதார முற்றுகை உடன் சேர்ந்து,
போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் மேற்கு பசிபிக்கில் உள்ள
இராணுவ தளங்களில் இருந்து சீனப் பெருநிலத்தின் மீது பாரிய வான்வழி மற்றும்
ஏவுகணை தாக்குதல்களைக் கருத்தில் கொண்டுள்ளது.
ஹைனன் தீவின் மீது கடற்படை நிலைநிறுத்தல்கள் உட்பட தெற்கு
சீனாவின் முக்கிய இராணுவ தளங்களுக்கு அருகில் தென் சீனக் கடல்
அமைந்துள்ளது; அதே நேரத்தில், தென் கிழக்கு ஆசியா எங்கிலும் ஆபிரிக்கா
மற்றும் மத்திய கிழக்குக்கான அகன்று விரிந்த கப்பல் போக்குவரத்து பாதைகள்
அதன் ஊடாக செல்கின்றன, ஆகவே இந்த இந்த இரண்டு கூறுபாடுகளால் அந்த போர்
மூலோபாயத்திற்குத் தென் சீனக் கடலின் கட்டுப்பாட்டைப் பெறுவது
அத்தியாவசியமாகிறது.
அமெரிக்க "முன்னிலைக்கு" சீனத் தலைமையின் விடையிறுப்பானது, அது
பிரதிநிதித்துவம் செய்யும், அதாவது முதலாளித்துவ மீட்சி
நிகழ்வுபோக்கினூடாக தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்து தன்னைத்தானே
செழிப்பாக்கிக் கொண்ட ஒரு பெருஞ்செல்வந்த அடுக்கின் வர்க்க நலன்களால்
வழிநடாத்தப்படுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்க
ஏகாதிபத்தியத்துடன் தொடர்ந்து சமரசம் கோருகின்ற அதேவேளையில், அதன் சொந்த
இராணுவத்தை மேலெழுப்புகிறது மற்றும் சீனாவின் தொழிலாளர்களை ஆசியாவில் வேறு
இடங்களில் உள்ள மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களிடமிருந்து
பிளவுபடுத்துகின்ற சீனத் தேசியவாதத்தைத் தூண்டிவிடுகிறது.
அந்த விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழு, தென்
கொரியாவில் Key Resolve/Foal Eagle எனும் வருடாந்தர கூட்டு போர்
சாகசங்களில் பங்கெடுக்க அமெரிக்க மேற்கு கடற்கரையில் இருந்து தென்
கொரியாவிற்கு செல்லும் வழியில் அப்பகுதிக்குள் திருப்பிடப்பட்டது என்ற
உண்மையே, தென் சீனக் கடலில் ஸ்டென்னிஸ் தலையீட்டின் திட்டமிட்ட
குணாம்சத்தை எடுத்துக்காட்டுகிறது. நூறாயிரக் கணக்கான இராணுவ சிப்பாய்கள்
அவர்களுக்கு ஒத்துழைப்பாக ஆயுதங்கள், தளவாடங்கள், போர்க்கப்பல்கள் மற்றும்
இராணுவ போர்விமானங்கள் ஆகியவற்றுடன் இந்தாண்டின் அமெரிக்க-தென் கொரிய
பயிற்சிகள், வட கொரியாவின் உயர்மட்ட தலைவர்களைப் படுகொலை செய்வது உட்பட
அதன் மீது ஒரு முன்கூட்டிய தாக்குதல்களை உள்ளடக்கிய ஒரு புதிய கூட்டு
மூலோபாயத்தை ஒத்திகை பார்க்கும்.
ஒரு ஆத்திரமூட்டல் மாற்றி ஒன்றாக, அந்த விமானந்தாங்கி
போர்க்கப்பலைத் தென் கிழக்கு ஆசியாவின் ஒரு வெடிப்புப்புள்ளியிலிருந்து வட
கிழக்கு ஆசியாவின் மற்றொரு வெடிப்புப்புள்ளிக்குக் கொண்டு செல்வது,
சீனாவிற்கு எதிரான போருக்கான அமெரிக்க தயாரிப்புகளின் தொலைதூர அளவும்
மற்றும் அதன் பொறுப்பற்ற குணாம்சம் ஆகிய இரண்டுக்கும் ஒரு வெளிப்பாடாகும்.
ஒரு பிழையான கணக்கீடோ அல்லது தவறோ, ஒட்டுமொத்தமாக மனிதயினத்திற்கே
பயங்கரமான விளைவுகளைக் கொண்ட ஒரு மோதலைத் தூண்டிவிடும் சாத்தியக்கூறு
நிலவுகிறது.
|